Published : 23 May 2014 03:25 PM
Last Updated : 23 May 2014 03:25 PM

கதை இல்லாத படத்தில் காஸ்ட்லி நடிகர்கள்!: இயக்குநர் பார்த்திபன் பேட்டி

மகளிர் கிறித்துவ கல்லூரி மாணவிகள் 100 பேர், தங்களது தலைமுடியை புற்றுநோயாளிகளுக்கு விக் செய்வதற்காக கேன்சர் மையத்திற்கு கொடுத்தார்கள். பார்க்கும்போது ரொம்ப உணர்ச்சிவசப் பட்டேன். உடனே, அவங்க அனைவருக்கும் எனது சொந்த செலவில் விக் கொடுக்க இருக்கேன். இந்த படத்தோட இசை வெளியீட்டு விழாவில் கடவுள் வாழ்த்துக்கு பதிலாக அதைக் கொடுக்கப் போறேன் என்று உணர்ச்சிகரமாகத் தொடங்கினார் பார்த்திபன்.

'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' என்னும் படத்தின் மூலம் இயக்குநர் நாற்காலிக்குத் திரும்பியிருக்கிறார். இசை வெளியீட்டு விழாவிற்காகச் சுழன்றுகொண்டிருந்தவரிடம் பேசியபோது..

படத்தோட தலைப்பே வசீகரிக்குதே, என்ன மாதிரியான படம் இது?

நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். காரணம், எப்போதுமே கதை எடுத்துக்கிட்டு படப்பிடிப்பிற்கு போறப்போ சந்தோஷமா இருக்கும். சில சமயங்களில், மொத்த படப்பிடிப்பும் முடிஞ்சு வரும்போது, நாம் நினைச்ச மாதிரியே படம் பண்ணிட்டோமா அப்படினு கேள்வி வரும். பல தடவை ஏதோ கம்மியா பண்ணியிருக்கோம்னுதான் தோணும்.

ஆனால், இந்தப் படம் அப்படி கிடையாது. நான் எடுத்துட்டுப் போன கதை மேலே, என்னைத் தவிர வேறு யாருக்கும் நம்பிக்கையே கிடையாது. இதுக்கு முன்னாடி 25 முதல் 30 கதைகள் பண்ணிட்டேன். உதவியாளர்கள்கிட்ட சொல்லுவேன், நல்லாயிருக்குனு சொல்லுவாங்க. ஆனா ஷூட்டிங் போக மாட்டேன். இந்தக் கதையையும் அப்படித்தான் நம்பியிருக்காங்க. ஏன்னா, இந்தக் கதை அவ்வளவு நுட்பமா இருக்கும் கதை கிடையாது. அடுத்த அடுத்த நிமிடங்களோட சுவாரசியம்தான் படம். நிறைய சவால்க ளோட படப்பிடிப்பை முடிச்சிட்டு, இப்போ படம் பார்க்குறப்போ அவ்வளவு திருப்தி. இந்தப் படத்தோட பலம் நகைச்சுவை. சீன் பை சீன் சிரிக்கலாம்.

கதையே இல்லாமல் படமா? எப்படி சாத்தியம்?

அதுதான் புதுமை. வழக்கமான கதையே இல்லாமல் ஒரு படம் எப்படி அப்படிங்கிறது உங்களுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது. அதுதான் புதுமையான விஷயம்.

கதை இல்லாத படத்திற்கு எதுக்கு ஆர்யா, விஷால், அமலா பால், தப்ஸி?

சுவாரசியமான சம்பவங்களின் தொகுப்பா எடுத்துட்டு போறதுக்கு நிறைய நடிகர்கள் தேவைப்பட்டாங்க. படம் ஒரு இயக்குநரின் பார்வையில் இருக்கும். அவர் எப்போ எல்லாம் கதை சொல்றாரோ, அப்போ எல்லாம் காட்சியா நடிகர்கள் வருவாங்க. நடிகர்கள் வந்துட்டு போறது ரொம்ப அத்தியாவசியமா இருக்கும்.

நிறைய புதுமுகங்கள், 5 இசையமைப்பாளர்கள்… நிறைய புதுசா ட்ரை பண்றீங்க போல?

படத்துல 7 புதுமுகங்களை அறிமுகப்படுத்துறேன். மூணு பெண்கள். நாலு ஆண்கள். தம்பி ராமையா முக்கியமான பாத்திரத்துல நடிக்கிறாரு. அவரை வைச்சு நிறைய காமெடி காட்சிகள் வைச்சிருக்கேன். புதுமுகங்கள் எல்லாருமே கம்மியா வந்தாலும் லேசா மனசை உலுக்கிடுவாங்க.

தமன், விஜய் ஆண்டனி, சரத், அல்போன்ஸ் ஜோசப், சத்யானு 5 இசையமைப்பாளர்கள் பணியாற்றி இருக்காங்க. ஆங்கில படங்கள் மாதிரி பின்னணி இசைக்கு மட்டும் ஒருத்தர்னு புதுசா ட்ரை பண்ணி யிருக்கேன். 15 பின்னணிப் பாடகர்கள் பாடியிருக்காங்க. நகுல், சாந்தனு எல்லாம் பாடியிருக்காங்க.

முன்னணி நடிகர்களை அணுகினப்போ, அவங்களோட அணுகுமுறை எப்படி இருந்தது?

விஜய் சேதுபதிகிட்ட இந்த மாதிரி ஒரு கேரக்டர் இருக்கு, ஒரே ஒரு சீன் மட்டும்தான்னு சொன்னேன். அவரு உடனே என்ன சார் சீன் அப்படின்னு கேட்டார். நாளைக்கு எப்போ சார் வரணும்னு கேட்டார். சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி எல்லாருமே அவங்களுக்கான திறமைகளோட இருக்காங்க. இந்த படத்துல விஷயம் இருந்தது, அதனால நடிச்சாங்க. ஆர்யாவிற்கு ஷூட்டிங் வந்து, வசனம் சொல்ற வரைக்கும் என்ன கேரக்டர்னு சொல்லவே இல்லை. அவரும் கேட்கவில்லை. ஏன்னா நம்பிக்கை. எல்லாருமே சின்னச் சின்ன பாத்திரங்கள் பண்ணியிருந்தாலும் ஒரு தனித்துவம் இருக்கும்.

ஏன் முன்னணி நடிகர்களை வைத்து படம் பண்ணவே இல்லை?

எனக்கு ஒரு நாள் கால் மேல் கால் போட்டுக்கிட்டு, ரொம்ப ரிலாக்ஸா ஸ்டார்ட் ஆக் ஷன் சொல்லணும்னு ஆசை. அது, இதுவரைக்கும் நடக்கவே இல்லை. சினிமாவிற்கு வந்து 20 வருஷத்திற்கு மேல ஆச்சு. எல்லா படமுமே கஷ்டப்பட்டுதான் பண்றேன். அது மாறுகிற மாதிரி, அடுத்து ஒரு பெரிய நடிகரோட படம் பண்ணலாம். இந்த படம் பண்ணும்போது ஆர்யா, விஷால் இரண்டு பேருமே சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்னு சொன்னாங்க. நான் இதுவரைக்கும் அவங்ககிட்ட இதைப் பற்றி பேசல.

விஜய்யோட ‘நண்பன்' நான் பண்ணியிருக்க வேண்டிய படம். என்கிட்ட பேசி, சம்பளம் எல்லாம் முடிவாயிடுச்சு. எனக்கு ஒரு சின்ன குழப்பம் இருந்தது. இந்தப் பாத்திரம் விஜய்யைவிட சூர்யாவிற்குதான் நல்லாயிருக்கும். ஆமிர் கான் வேற விஜய் வேற. ஆனா என்னை பரிந்துரை செய்ததே விஜய்தான். சூர்யா இருந்தா நல்லாயிருக்கும்னு நான் யோசிச்சுக்கிட்டு இருந்தேன். அப்புறம் ஷங்கர் சார் வர்றார்னு சொன்ன உடனே, அது பெரிய காம்பினேஷன். சினிமா அப்படிங்கிறதே பெயர்களை விற்பனை செய்வதுதான். ஷங்கர் - விஜய் - 3 இடியட்ஸ் அப்படின்னாலே அதுக்கு ஒரு பெரிய வியாபாரம் இருக்கு. எனக்கு ஒரு ரீமேக் படத்தை விஜய்யை வைத்து பண்ணுவதில் விருப்பமில்லை. என்னோட படம் அப்படிங்கிறது என்னோட படமாதான் இருக்கும்.

இனிமேலாவது முன்னணி நாயகர்களை வெச்சு படம் பண்ணலாமே...

பெரிய ஹீரோ வைச்சுக்கிட்டு ரொம்ப ரிலாக்ஸா ஒரு படம் பண்ணலாம்னு இப்போ தோணுது. நிறைய விஷயங்கள் ஒத்து வரணும் இல்லயா? ஒத்து வரும்போது கண்டிப்பா, பெரியா ஹீரோவிற்கான மரியாதையோடு அந்த படம் இருக்கும். சூர்யாவை சந்திக்கும்போதெல்லாம் படம் பற்றி பேசிக்கிட்டுதான் இருக்கேன். அவர் ஒப்பந்தமாகி இருக்கிற படங்கள் எல்லாம் முடிச்சுட்டு பண்ணலாம்.

மகள் கீர்த்தனா இயக்கம் மீது ஆசை அப்படின்னு சொல்லியிருந்தாங்க. இந்த படத்துல இருக்காங்களா?

அவங்க இல்லாமலா? படைப்பில் பங்களிப்பு அப்படினு அவங்க பேர் வரும். அடுத்த வருடத்தில் பண்ணுவாங்கனு நினைக்கிறேன். ரொம்ப சந்தோஷமான விஷயம் என்னவென்றால் அவங்களுக்கு ரெண்டு, மூணு தயாரிப்பாளர்கள் தயாரா இருக்காங்க. என்கிட்டயே வந்து “சார்.. நீங்க வேண்டாம், கீர்த்தனா மேடம் படத்தை நான் தயாரிக்கிறேன்”னு சொல்றாங்க. அவங்க யோசிச்சு சொல்றேன்னு சொல்லி இருக்காங்க. எனக்கும் கீர்த்தனாவுக்குமான வித்தியாசம் இதுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x