Published : 25 Sep 2015 10:33 AM
Last Updated : 25 Sep 2015 10:33 AM
முதல் படம் என்பது எந்த இயக்குநருக்கும் ஒரு மகத்தான கனவு. அதில் தன் திறமையை, ஆளுமையைக் காட்டிவிட வேண்டும் என்று நினைப்பது இயல்பு. வாய்ப்பே கிடைக்காமல் எத்தனையோ திறமைசாலிகள் ஆண்டுக் கணக்கில் அல்லாடும் சூழலில் இள வயதிலேயே வாய்ப்பு கிடைப்பது என்பது அரிது. அத்தகைய அரிய வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றுதான் யாரும் நினைப்பார்கள். ஆதிக் ரவிச்சந்திரனின் மனதில் என்ன இருந்திருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் அவர் படம் அவரது கனவின் வெளிப்பாடு என்றால் அவரைக் குறித்து அனுதாபமும் எச்சரிக்கையும் கொள்ள வேண்டியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கும் அவரது முதல் படமான ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் தரத்தை அலசுவதற்கு முன்பு அதன் கதையை, அதாவது கதை என்ற பாவனையை பார்த்துவிடுவோம். படத்தின் தலைப்பு ஒரு ஆணின் பார்வையின் வெளிப்பாடு. ஆணின் பார்வையில் மட்டுமே ஒரு விஷயத்தைப் பார்ப்பது தமிழ்ச் சூழலுக்குப் புதிதல்ல. எனவே அதை விட்டுவிடுவோம். தலைப்பின் பொருள் சொல்லும் சேதி முக்கியமானது. பெண்களைப் பண்டங்களைப் போலத் தேர்வுசெய்யும் ஒரு ஆணின் மனப்பான்மையை அது வெளிப்படுத்துகிறது.
படத்தின் கதை அல்லது அதுபோன்ற ஒன்று இதுதான்: விடலைப் பருவத்தில் இருக்கும் ஒரு பையன் தன்னுடைய இரண்டு தோழிகளில் ஒருத்தியைத் தன் காதலியாகத் தேர்ந்தெடுக்க விரும்புகிறான். சித்தப்பாவின் வழிகாட்டுதலின்படி ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்கிறான். அவளும் காதலை ஏற்கிறாள். அந்தக் காதல் தோல்வியில் முடிய, அவன் உடனே இன்னொரு தோழியைச் சந்தித்துத் தன் காதலைச் சொல்கிறான். அந்தக் காதலும் முறிந்துபோக, அவன் மீண்டும் தன் பழைய காதலியிடம் திரும்புகிறான். அதற்குள் இன்னொரு காதலில் விழுந்து எழுந்திருக்கும் அந்தப் பெண் இவன் காதலை ஏற்றுக்கொள்கிறாள். ஆனால் அதிலும் ஒரு சிக்கல் வர, இந்தப் பையன் முற்றிலும் புதிய பெண்ணிடம் தன் காதல் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கத் தயாராகிறான்.
காதல் ஏற்படுவது, பிரிவது, புதிய துணை கிடைப்பது என எதையும் நம்பகமாகவோ நேர்த்தியாகவோ சித்தரிக்க இயக்குநர் துளியும் மெனக்கெடவில்லை. காதல் உணர்வைக் காட்டுவதற்கோ பிரிவின் வலியைச் சொல்வதற்கோ ஒரு வலுவான காட்சியைக்கூட இயக்குநரால் யோசிக்க முடியவில்லை. காதல் சமாச்சாரம் இருக்கட்டும். நாயகனின் சித்தப்பாவின் கடை (மதுக் கடைதான்) அவர் கையை விட்டுப் போகிறது. இதை நாயகன் மீட்டுத் தருகிறான். நாயகன் தன் பழைய காதலியை மீண்டும் நெருங்க, காதலியின் உறவினரின் துணையை நாடுகிறான். அந்த உதவிக்குப் பதிலாக அவருக்கு ஒரு உதவி செய்கிறான். இதுபோன்ற காட்சிகளிலும் துளியும் நம்பகத்தன்மை இல்லை.
அப்படியானால் படத்தில் என்னதான் இருக்கிறது? காதல் என்னும் பாவனையில் ஆண் பெண் உறவுக்கான ஏக்கம் காட்சி ரீதியாகவும் வசனங்களின் மூலமாகவும் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. இவற்றை எந்த அளவுக்குச் சில்லறைத்தனமாகவும் ஆபாசமாகவும் வெளிப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு இயக்குநர் வெளிப்படுத்தியிருக்கிறார். நேரடியான, நெருக்கமான காட்சிகள் எதுவுமே இல்லாமல் ஒரு ஆபாசப் படம் எடுக்கும் திறமை இயக்குநருக்குக் கைவந்திருக்கிறது. சொல்லப்போனால், பெண் உடலைக் காட்சிப் பொருளாக மாற்றாமலேயே, உறவின் நெருக்கத்தைக் காட்சிப்படுத்தாமலேயே ஆபாசத்தின் உச்சத்தைத் தொட்டிருக்கிறார் இயக்குநர்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் பாலுறவைத் தவிர வேறு எந்த உறவும் சாத்தியமில்லை என்னும் பார்வையை வசனங்கள் மூலமும் காட்சிகளாலும் திரும்பத் திரும்பச் சொல்கிறது இந்தப் படம். பாலுறவைத் தவிர வேறு சிந்தனையற்ற விடலைச் சிறுவனின் பார்வையிலேயே படம் நகருகிறது. திரையரங்கில் விசில் சத்தம் காதைக் கிழிக்கிறது என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை! பெண்கள் சார்ந்தும் பாலுறவு சார்ந்தும் பல இளைஞர்களுக்கு இருக்கும் ஆழ் மன ஆசைகளுக்கும் பாவனைகளுக்கும் திரையில் ஒரு வடிவம் கிடைக்கும்போது அவர்கள் அதைக் கொண்டாடத்தானே செய்வார்கள்?
நான் கன்னி கழியாதவன், எனக்கு அப்படிப்பட்ட பெண்தான் வேண்டும் என்கிறான் நாயகன். அதெல்லாம் டைனோசர் காலத்திலேயே முடிந்துபோன விஷயம் என்கிறார் சித்தப்பா. திரையரங்கம் அதிர்கிறது! இப்படிப் பல வசனங்களை ஆண்களும் பெண்களும் பேசுகிறார்கள். பெண்களை நம்பாதே, நம்பாதே என்று படம் திரும்பத் திரும்பச் சொல்கிறது. பெண்ணை நம்பி உருகும் அப்பாவியாக ஆணைச் சித்தரிக்க முயல்கிறது. ஆனால் படத்தின்படியே பார்த்தாலும் அந்தப் பையன் வாய்ப்புக் கிடைக்காததாலேயே ‘சுத்தமாக’ இருக்கிறான். ஓயாமல் வாய்ப்புக்காக ஏங்குகிறான். இவனை மட்டும் எப்படி நம்புவது? பெண்களை நம்பாதே என்று சொல்ல இவனுக்கும் இவன் சித்தப்பாவுக்கும் என்ன யோக்யதை இருக்கிறது? (மேற்கொண்டு படத்தின் காட்சிகளையோ வசனங்களையோ உதாரணம் காட்டுவது நோய்க் கிருமிகளைப் பரப்புவதற்கு ஒப்பானது என்பதால் அது இங்கே தவிர்க்கப்படுகிறது.)
பாலுறவு விழைவும் பெண்ணின வெறுப்பும் படத்தின் ஆதாரமான அம்சங்கள். கூடவே போதை நாட்டம். போதையிலும் பாலுறவு தொடர்பான பேச்சே இடம்பெறுகிறது. படத்தில் வரும் ஆண்(கள்) விரும்புவது பாலுறவை. ஆனால் சமயம் கிடைக்கும்போதெல்லாம் பெண்களின் ஒழுக்கத்தையும் நேர்மையையும் சாடுகிறார்கள். பெண் வெறுப்பைக் காட்டிக்கொள்கிறார்கள். பாலுறவை நாடுவோம், ஆனால் பெண்களை மதிக்க மாட்டோம் என்றால் என்ன பொருள்? பெண்ணின் உடல் மட்டுமே எங்களுக்கு வேண்டும் என்று பொருள். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சொல்ல விரும்பும் செய்தியும் இதுதான் என்றுதான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
படம் தன்னை அறியாமலேயே ஒரு நன்மையைச் செய்திருக்கிறது. படம் பார்க்க வரும் ஆண்களின் உளவியலை அம்பலப்படுத்துகிறது. பாலுறவு விழைவும் பெண் வெறுப்பும் வெளிப்படும்போதெல்லாம் அவர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடுகிறார்கள். இத்தகைய இளைஞர்களைக் குறிவைத்துப் படம் எடுத்திருக்கும் இயக்குநர், அவர்களது உளவியலை, அடி மன ஆசைகளை நன்கு புரிந்துகொண்டு அதற்குத் தீனிபோடுகிறார். இதன் மூலம் பார்வையாளர்களின் மலினமான இயல்புகளை வெட்கமின்றிச் சுரண்டுகிறார்.
பாலுறவு வேட்கை கொண்ட விடலைச் சிறுவனின் கதையைப் படமாக்கக் கூடாது என்பதல்ல. ஆனால் விடலைச் சிறுவன் என்றாலே அவனுடைய ஒட்டுமொத்த உளவியலும் பெண் உடல் சார்ந்ததாகத்தான் இருக்கும் என்னும் தோற்றத்தை ஏற்படுத்துவதுதான் பிரச்சினை. பாலுறவு சார்ந்த உணர்வுகளை ‘அழியாத கோலங்கள்’, ‘துள்ளுவதோ இளமை’, ‘பாய்ஸ்’ முதலான பல படங்களில் தமிழ்த் திரையுலகம் பார்த்திருக்கிறது. அந்தப் படங்கள் விடலைச் சிறுவர்களின் வாழ்வின் வேறு பரிமாணங்களையும் காட்டின. இந்தப் படமோ அவர்களை முழுக்க முழுக்கப் பாலியல் பிண்டங்களாகச் சித்தரிக்கிறது.
இதே விடலைப் பருவத்தில்தான் பெரும்பாலான இளைஞர்கள் கல்வியை மிகத் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள். இதே விடலைப் பருவத்தில்தான் பல இளைஞர்கள் கலை, விளையாட்டு, பயணம் ஆகியவற்றில் ஆர்வம் காட்டுகிறார்கள். இதே விடலைப் பருவத்தில் பல்வேறு துறைகளில் உலக சாதனை செய்தவர்களும் இருக்கிறார்கள். உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றுபவர்களும் இருக்கிறார்கள். இயக்குநர் ஆதிக்கின் விடலைகளுக்கோ பாலுறவு, மது ஆகியவற்றைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை. முதிரா இளைஞர்களின் அரைவேக்காட்டுத்தனமான குரலையே தன் முதல் படத்தின் அடையாளமாக ஆக்கிக்கொண்டிருக்கிறார் ஆதிக்.
கார்த்திக் சுப்பராஜ், நலன் குமரசாமி, மணிகண்டன், பிரம்மா போன்ற பல இளைஞர்கள் தங்கள் முதல் படத்தில் தமிழ் சினிமாவின் எல்லைகளை தொழில்நுட்ப ரீதியாகவும் அர்த்தபூர்வமாகவும் விரிவுபடுத்தியிருக்கிறார்கள். இத்தகைய முயற்சிகளுக்கு நடுவே இப்படி ஒரு முதல் படம் வருவது சூழலை மாசுபடுத்தும் முயற்சி. ஆதிக் இப்போதுதான் திரை உலகில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவரது பார்வை விசாலமாகி, திறமையும் கலை உணர்வும் வளர்ந்து செழித்து அவரால் பல நல்ல படங்களைத் தர முடியலாம். அப்படி நேரும் பட்சத்தில் தன் முதல் படத்தை நினைவுகூரும்போது அவருக்குக் கட்டாயம் கூசும்.
தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT