Published : 11 Sep 2020 11:02 AM
Last Updated : 11 Sep 2020 11:02 AM

திரை நூலகம்: சினிமா வரலாற்றுக்கு ஒரு சாளரம்

ஒரு சமுதாயத்தின் நவீனப் பண்பாட்டு வரலாற்றில் திரைப்பட வரலாறு ஒரு முக்கிய இழை என்று கருதுகிறேன். தமிழ்ச் சமுதாயத்தைப் புரிந்துகொள்ள சினிமாவின் வரலாற்றுப் போக்கை நம் அறிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும். தமிழக மக்களின் சகல பரிமாணங்களையும் சினிமா நிரப்பிக்கொண்டிருக்கும் காரணம் ஒன்றே போதும்.

இதன் வரலாறு என்னவோ நூறாண்டுகளைக் கொண்டதுதான். நவீனத் தமிழ் இலக்கியத்துக்கும் ஏறக்குறைய அதே வயதுதான். ஆனால், சினிமாவின் தொடக்கக் கால வரலாற்றைப் பற்றி, நமக்கு ஒரு விவரமும் கிடைக்கவில்லை. முதல் 15 ஆண்டுகளில், சென்னையிலிருந்து வெளிவந்த 124 மௌனப் படங்களில் ஒன்றுகூட இப்போது நம்மிடம் இல்லை. அதேபோல், முதல் 10 ஆண்டுகளில் (1931 -1941) வெளிவந்த 371 தமிழ்ப்பேசும் படங்களில், ‘அம்பிகாபதி’யைப் போன்ற இரண்டு, மூன்று படங்களே எஞ்சியுள்ளன.

இந்தப் பின்புலத்தில் திரைப்படங்கள் கிடைக்காத நிலையில், அவை குறித்த பத்திரிகைக் கட்டுரைகள், பாட்டுப் புத்தகம் போன்ற அச்சுப் பிரதிகளே நமக்கு அந்த காலகட்டப் படங்களைப் பற்றி லேசான புரிதலைத் தருகின்றன. இந்நூலின் ஆசிரியர்கள் சொர்ணவேல் ஈஸ்வரன், 'நிழல்' திருநாவுக்கரசு இருவரும், தமிழ்ப் பேசும்படத்தின் முதல் 30 ஆண்டுகளில் எழுதப்பட்ட 152 விமர்சனக் கட்டுரைகளை தொகுத்து தந்திருக்கின்றனர். பல நூலகங்களிலும் தனியார் சேகரிப்புகளிலும் இருந்து நல்ல தேர்வு அடிப்படையில் கட்டுரைகளை அவர்கள் சிரத்தையுடன் தொகுத்துள்ளார்கள்.

புரிதலற்ற விமர்சகர்கள்

மணிக்கொடி போன்ற பிரபலமான இலக்கிய இதழ்களில் பி.எஸ். ராமையா, தி.க.சி., கல்கி, வல்லிக்கண்ணன், விந்தன் போன்ற எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன. 'பிரசண்ட விகடன்', 'கிராம ஊழியன்' இதழ்களில் வெளியான கட்டுரைகளும் உள்ளன. எழுத்தாளர்கள் முற்றிலும் புதியதொரு கலையை, அதிலும் காட்சி ஊடகமாகத் தோன்றிய சினிமாவை எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்று பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சுகின்றது. ஒரு சிலரைத் தவிர மற்ற விமர்சகர்களுக்கு சினிமாவைப் பற்றிய புரிதல் இல்லை என்பது தெளிவாகிறது. எழுத்தாளர்கள் என்று அறியப்பட்டோரைத் தவிர, மற்றவர்கள் ஒரு படத்தின் கதையையே விவரிக்கின்றார்கள்.

இது, ஒரு சிறுகதையை மதிப்புரை செய்வதைப் போலிருக்கிறது. இந்தப் பழக்கம் இன்றுவரையும் தொடர்கின்றது. அதிலும் இயக்குநர்களைப் பற்றி குறிப்பிடுவதே இல்லை. சினிமாவின் இயல்புகள், நியதிகள், அழகியல் ஆகியவை பற்றி எந்தப் பரிச்சயமும் அவர்களுக்கு இல்லை என்பது தெரிகிறது. தமிழர்களிடையே சினிமா ரசனை வளராததற்கு இந்த விமர்சனக் குறைபாடுகளும் ஒரு காரணம்.

புதுமைப்பித்தன் ஒரு விதிவிலக்கு

1938-ம் ஆண்டில் வெளிவந்த ‘ஈழகேசரி’ மலரில், புதுமைப்பித்தன் எழுதிய ‘சினிமா உலகம்’ என்ற கட்டுரை ஒன்றும் இந்தத் தொகுப்பில் சேர்க்கப்பட்டிருக்கிறது. சினிமாவைப் பற்றிய புதுமைப்பித்தனின் பார்வை, இதில் நமக்குக் கிடைக்கிறது. சினிமாவைப் புரிந்துகொண்ட வெகு சில எழுத்தாளர்களுள் புதுமைப்பித்தனும் ஒருவர். சினிமாவுக்கும் நாடகத்துக்கும் உள்ள வேறுபாடுகளை உணர்ந்தவர். திரையில் நாடகத்தனமாக நடிப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். “இப்போது சினிமாவில் நடிக்கவரும் நாடக மேடை நடிகர்கள், பழைய கொள்கைகளையே அனுஷ்டிப்பதால், படக் காட்சிகள் சோபிப்பதில்லை” என்று விமர்சித்திருக்கிறார்.

சில விமர்சனங்களோ அரிய தகவல்களைத் தருகின்றன. ‘விஸ்வாமித்ரா’ படத்தின் ஒலிப்பதிவாளர் மீனா நாராயணன், இந்தியாவின் முதல் பெண் ஒலிப்பதிவாளர். இவரது கணவர் நாராயணன்தான் அந்தப் படத்தைத் தயாரித்து இயக்கியவர். அதேபோல், 1936இல் வந்த ‘லீலாவதி சுலோசனா’ என்ற திரைப்படத்தில் 56 பாடல்கள் இருந்ததாக அறிகின்றோம்.

கல்கியின் பார்வை

திராவிடத் திரைப்படங்கள் என்று அறியப்படும் ‘நல்லதம்பி’, ‘வேலைக்காரி’, ‘பராசக்தி’, ‘சொர்க்க வாசல்’ போன்ற படங்களின் விமர்சனங்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. ‘வேலைக்காரி’ படத்தின் இரண்டு விமர்சனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதில் கல்கி எழுதியிருக்கும் ஒரு கட்டுரை, அவர் இப்படத்தை எவ்வாறு எதிர்கொண்டார் என்பதைக் காட்டுகிறது.

‘ராஜா தேசிங்கு’ (1936) போன்ற பல முக்கியமான படங்களைப் பற்றிய கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. இந்தப் படத்துடன், ருக்மிணிதேவி அருண்டேலின் நடனக்காட்சி காட்டப்பட்டதைப் பற்றிய விவரம் இந்த மதிப்புரையில் இருக்கிறது. அது மட்டுமல்ல, அருண்டேல் பரதநாட்டியத்தைப் பற்றி ஒரு பிரசங்கம் செய்தார் என்றும் இருக்கின்றது. அவர் தமிழில் பேசினாரா என்று விமர்சகர் கூறவில்லை. நாம் இதுவரை தலைப்பை மட்டுமே அறிந்திருந்த சில படங்களின் விமர்சனங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. தமிழ்த் திரையின் முதல் சமூகப்படமான ‘கெளசல்யா’ (1936), இசை வித்வான் வி.வி.சடகோபன் நடித்த ‘நவயுவன்’, ‘மகாத்மா கபீர்தாஸ்’ போன்ற படங்களைப் பற்றிய அரிய விவரங்கள் நமக்குக் கிடைக்கின்றன.

தேவைப்படும் செம்மை

நூலின் உள்ளடக்கம் அமர்க்களமாக இருந்தாலும் உருவாக்கத்தில் பல விடுபடல்கள் காணப்படுகின்றன. சொல்லடைவு இந்நூலின் பயனை பன்மடங்கு உயர்த்தியிருக்கும். இது, ஒரு நூலின் முக்கியமான அங்கம். நூல் பிரதி செப்பனிடப்படவில்லை என்று தெரிகிறது. பல அரிய ஒளிப்படங்கள் புத்தகத்தின் மதிப்பை கூட்டுகின்றன. ‘மகாத்மா கபீர்தாஸ்’ (1936) படத்திலிருந்து ஒரு நிலைப்படம் எடுத்துக்காட்டு. ஆனால், பல நிலைப்படங்களில் அடிக்குறிப்பு இல்லை.

படத்திலிருப்பது யார் என்று தெரியவில்லை. ‘துக்காராம்’ (1937) நிலைப்படத்தில் முசிறி சுப்பரமணிய அய்யரும் சிறுமியாக பாலசரஸ்வதியும் காட்டப்பட்டிருக்கிறார்கள்; ஆனால் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை (‘நீல வண்ணக் கண்ணா வாடா’ போன்ற காலத்தால் அழியாத பாடல்களைப் பாடிய பாலசரஸ்வதி, இன்றும் நம்முடன் இருக்கின்றார், ஹைதராபாதில் வசிக்கிறார்). பி.எஸ். செட்டியாரின் கோட்டோவியம் பிரபல ஓவியர் ஆதிமூலம் வரைந்தது என்பதைக் குறிப்பிடப்பிட்டிருக்க வேண்டும்.

தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றின் ஒரு முக்கிய பரிமாணத்தின் மீது, இந்நூல் வெளிச்சம் பாய்ச்சுகிறது. ஆய்வாளர்களுக்குப் பல புதிய தளங்களைத் திறக்கிறது. தமிழ் சினிமாவின் நூற்றாண்டு நிறைவைப் போற்றி வந்துள்ள அருமையான, வரவேற்கத்தக்க உழைப்பு இந்நூல்.

தமிழ் சினிமா விமர்சனங்கள்: 1931-1960
விலை: ரூ.590
தொகுப்பு: சொர்ணவேல் ஈஸ்வரன்
‘நிழல்' திருநாவுக்கரசு
வெளியீடு: நிழல் - பதியம் பிலிம் அகாடமி,
சென்னை - 600 078.
தொடர்புக்கு: 94444 84868
nizhalbooks@gmail.com

கட்டுரையாளர் தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com

படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x