Published : 11 Sep 2020 09:50 AM
Last Updated : 11 Sep 2020 09:50 AM
திரைப்பட இயக்கத்துக்கு வெளியே ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ ஆகிய மாறுபட்ட படங்களைத் தயாரித்து வெற்றி கண்டவர் இயக்குநர் பா.இரஞ்சித். தற்போது ‘குதிரை வால்’ என்ற படத்தைத் தனது நீலம் புரொடக் ஷன்ஸ் மூலம் வெளியிடுகிறார். ‘மெட்ராஸ்’ படப் புகழ் கலையரசன், ’காலா’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான அஞ்சலி பாட்டீல் இணைந்து நடித்திருக்கும் இந்தப் படத்தை, யாழி பிலிம்ஸ் சார்பில் விக்னேஷ் சுந்தரேசன் தயாரித்திருக்கிறார். மனோஜ் லியோனல் ஜாசன் - ஷ்யாம் சுந்தர் ஆகிய இருவர், இந்தப் படத்தின் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகிறார்கள். அவர்களிடம் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி...
தற்காலத்தில் 2 பேர் சேர்ந்து ஒரு படத்தை இயக்குவது அபூர்வம். உங்கள் கூட்டணி எப்படி உருவானது?
மனோஜ்: நானும் ஷ்யாமும் நாடகத் துறையிலிருந்து வந்தவர்கள். பிறகு எல்.வி.பிரசாத் திரைப்படப் பள்ளியில் சினிமா இயக்கம் பயின்றபோது இணைந்து எழுதி, நடித்து, இயக்கிய எங்களது குறும்படங்கள் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றன. எல்.வி.பிரசாத்தில் ஒளிப்பதிவு பயின்ற கார்த்திக் முத்துக்குமார், எடிட்டிங் பயின்ற எம்.கே.பி.கிரிதரன் ஆகியோரை இணைத்துக்கொண்டோம்.
ஷ்யாம்: திரைப்படப் பள்ளியிலிருந்து வெளியே வந்ததுமே, ‘கல்யாண சமையல் சாதம்’ படத்தில் இணை இயக்குநராக மனோஜ் பணியாற்றினார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து, இயக்கிய ‘இனம்’ படத்தில், நான் எழுத்தாளராகவும் உதவி இயக்குநராகவும் பணியாற்றினேன். கள அனுபவத்துக்குப் பின், முதல் பட முயற்சியைத் தொடங்கினோம். அது ‘டேக் ஆஃப்’ ஆகவில்லை.
மனோஜ்: அப்போது அறிமுகமானவர்தான் ‘குதிரை வால்’ படத்தின் எழுத்தாளர் ராஜேஷ். அவரது திரைக்கதையைப் படித்த பின்பு, அதையே முதல் படமாக இயக்குவது என்ற முடிவுக்கு வந்தோம். அந்த வேளையில், இயக்குநர் பா.இரஞ்சித்தை சந்தித்து இக்கதையைச் சொன்னோம். ‘இந்தப் படத்தைத் தயாரிக்க நான் உதவிசெய்கிறேன்’ என்று உறுதியளித்தார். இன்று படத்தை அவரே வெளியிடுவது எங்களுக்குப் பெருமை. நானும் ஷ்யாமும் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்கள். குழுவில் உள்ள மற்ற அனைவரும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். ரசனையும் திறமையும் இலக்கியமும் எங்கள் குழுவை இணைத்தன.
கதாநாயகனின் நிழல் சுவரில் விழும்போது, அவருக்கு வால் ஒன்று இருப்பதுபோல் வெளியிடப்பட்டிருக்கும் படத்தின் முதல் தோற்றம், தமிழின் முதல் ‘மேஜிக்கல் ரியலிச சினிமா’ என்ற அறிவிப்பு ஆகிய இரண்டுமே, இது வேறு வகைப் படம் என்று சொல்கின்றனவே..
ஷ்யாம்: இலக்கியத்தில் மேஜிக்கல் ரியலிசம் சோதனை செய்து பார்க்கப்பட்ட
அளவுக்கு, சினிமாவில் பரிசோதனை செய்யப்படவில்லை. மேஜிக்கல் ரியலிச உத்தியில் நாவல் ஒன்றை எழுத, ஓர் எழுத்தாளருக்கு சில வருட உழைப்பு போதும். அதுவே சினிமாவில் மேஜிக்கல் ரியலிசம் ஜானரில் கை வைத்தால், வி.எஃப்.எக்ஸ். காட்சிகளுக்கு செலவழிக்க அதிக அளவில் பணம், காலம், குறைந்தது 150 பேர் கொண்ட படக்குழு தேவை. திரைக்கதையின் சுவாரஸ்யத்தை உணர்ந்து, இதைத் தயாரிக்க முன்வந்த யாழி பிலிம்ஸ் விக்னேஷ் சுந்தரேசன், படத்தை வெளியிடும் பா.இரஞ்சித் ஆகிய இருவருக்கும் இந்த நேரத்தில் நன்றி கூறுகிறோம்.
படத்தில் எவ்வளவு வி.எஃப்.எக்ஸ். ஷாட்கள் உள்ளன; கதை என்ன?
மனோஜ்: 72 நிமிடங்களுக்கு சுமார் 145 ஷாட்களை வி.எஃப்.எக்ஸ். செய்திருக்கிறோம். வி.எஃப்.எக்ஸ். செய்துமுடிக்க மட்டுமே ஒன்றரை வருடம் ஆனது. வி.எஃப்.எக்ஸ். நம்பகமாக இல்லை என்றால், ‘என்ன இது ஹாலிவுட் மாதிரி இல்லையே’ என்று ரசிகர்கள் ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள்.
அதற்கு இடம் கொடுக்கவே கூடாது என்று, தரத்தில் துளி சமரசமும் செய்துகொள்ளவில்லை. கதையைப் பொறுத்தவரை, கதாநாயகன் ஒரு வங்கி ஊழியர்; தனித்து வாழ்பவர். புலன்களை அடக்கிக்கொண்டு வாழப் பழகியிருக்கும் ஒரு முதலாளித்துவ சமூகத்தில், கடிகார முள்களுடன் ஓடிப் பழக்கப்பட்ட இளைஞன். அவர் தனக்கொரு வால் முளைத்திருப்பதாக எண்ணிக்கொள்கிறார்.
அது உளவியல் சிக்கலா அல்லது அரசியல் சிக்கலா என்பதே கதை. நகைச்சுவையைத் தவிர்த்துவிட்டு, ‘மேஜிக்கல் ரியலிசத் த்ரில்லராக’ எடுத்துச் சென்றிருக்கிறோம். ரசிகர்களின் நேரத்தையும் பணத்தையும் மதிக்கும் ஒரு பிரம்மாண்ட ‘கேன்வாஸாக’ ‘குதிரை வால்' உருவாகியிருக்கிறது என்று எங்களால் உறுதியாகச் சொல்லமுடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT