Published : 11 Sep 2015 12:02 PM
Last Updated : 11 Sep 2015 12:02 PM
புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் ஸ்ரீகிருஷ்ண அலனஹல்லி எழுதிய நாவல் ‘பரசங்கட கெண்டதிம்மா’. கல்வியறிவு கொண்ட பட்டணத்துப் பெண், கிராமத்து வியாபாரியைத் திருமணம் செய்துகொண்ட பின்னர் எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சிக்கல்களையும், திருமண பந்தத்துக்கு வெளியில் மலரும் காதலையும் அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இந்நாவல், 1978-ல் அதே பெயரில் கன்னடத் திரைப்படமாக எடுக்கப்பட்டது. இப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம், சிவகுமார், தீபா நடித்த ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’(1979). சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் மலையடிவார கிராமம் ஒன்றில் நிகழும் கதையாக உருவாக்கப்பட்ட படம் இது.
இளையராஜாவின் இசையில் வாணி ஜெயராம் பாடிய பாடல்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால், நுட்பமான உணர்வுகளின் தொகுப்பாகத் தான் இசையமைத்த பாடல்களை வாணி ஜெயராமுக்கு வழங்கியிருக்கிறார் இளையராஜா. அவற்றில் ஒன்று, இப்படத்தில் இடம்பெறும் ‘என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்’. ரவிக்கை, உள்பாவாடை போன்ற பட்டணத்து உடைகளை அணியும் பழக்கம் கொண்ட தீபா, நாகரிகத்தின் மாற்றங்களை விரும்பாத கிராமத்தினரின் கடும் எதிர்ப்பை எதிர்கொள்வார்.
ஆங்கிலேய அதிகாரியின் உதவியாளரான சிவச்சந்திரன் அணியும் உடை, பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகள், பழக்க வழக்கங்களால் கவரப்படும் தீபா ஒரு கட்டத்தில் திருமண உறவைத் தாண்டும் சூழல் உருவாகும். மருகும் மனமும், புதிய துணையைத் தேடும் பேராவலும் ஒன்றுடன் ஒன்று மோத, சிவச்சந்திரனுடன் மோட்டார் சைக்கிளில் தீபா அமர்ந்து செல்லும்போது பின்னணியில் ஒலிக்கும் பாடல் இது. மனதின் விசித்திரப் போக்கைப் பிரதிபலிக்கும் இசையால் இப்பாடலுக்கு அமரத்துவத்தை வழங்கியிருப்பார் இளையராஜா.
திருமணமான பெண்ணும், அந்நிய ஆணும் பழகுவதை மவுனமாகப் பார்த்துக்கொண்டிருக்கும் இயற்கையின் ஒலி வடிவம் என்றும் இப்பாடலைச் சொல்லலாம். முதல் நிரவல் இசையில், தவறு செய்யத் தயங்கும் பெண் மனதின் ஊசலாட்டத்தைக் கண்டு பரிதாபம் கொள்ளும் இயற்கையின் ஓலமாக சாரங்கியை ஒலிக்கவிட்டிருப்பார் இளையராஜா. அதைத் தொடர்ந்து ஒலிக்கும் புல்லாங்குழல், புலம்பித் தீர்க்கும் பெண்ணின் மன அதிர்வுகளை உருவகித்திருக்கும். கஜல் பாணியில் மென்மையாக அதிரும் தபேலா தாளத்தின் மீது வாணி ஜெயராமின் குரலும், இசைக் கருவிகளின் படலமும் பரவிச் செல்லும். இரண்டாவது நிரவல் இசையும் அது காட்சிப்படுத்தப்பட்ட விதமும், தமிழ் சினிமாவில் மிக அரிதாக நிகழும் அதிசயங்கள் எனலாம்.
சாலையோர மரங்களின் ஊடே பாயும் மாலைச் சூரியனின் கதிர்களைக் கடந்து அந்த மோட்டார் சைக்கிள் முன்னேறிச் செல்லும். அந்தப் பயணம் எதை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதை முடிவுசெய்துவிட்ட விதி, சில சமயம் அவர்களுக்கு முன்னால் சென்று வழிகாட்டுவது போலவும், சில சமயம் பின்தொடர்ந்து சென்று கண்காணிப்பதைப் போன்றும் அமைக்கப்பட்ட காட்சி அது. அமானுஷ்யமான அந்தச் சூழலைத் தனது இசை மூலம் உணர்த்தியிருப்பார் இளையராஜா.
வயலின் இசைக் கற்றையும் புல்லாங்குழலின் முணுமுணுப்பும் கலந்து நீளும் அந்த இசைக்கோவை வாழ்க்கையின் மர்மத்தை பூடகமாகச் சொல்வது போல் இருக்கும். மர்மமான அந்தச் சூழலைத் தணிக்கும் தொனியில், அந்த இசைக்கோவையின் முடிவில் சிதார் இசை சேர்ந்துகொள்ளும். ‘போதையிலே மனம் பொங்கி நிற்க’ எனும் ஒரு வரியில் அந்தச் சூழலின் சாரத்தைப் பதிவுசெய்திருப்பார் கங்கை அமரன்.
மலையோர கிராமங்களின் வழியே பட்டணத்துக்குச் சென்று பொருட்களை வாங்கிவந்து விநியோகிக்கும் செம்பட்டை (சிவகுமார்), களைப்பு தீர பாடும் பாடல், ‘வெத்தல வெத்தல வெத்தலயோ’. ‘விவரம் அறிந்த’வர்களின் குதர்க்கப் பேச்சுகளைப் புரிந்துகொள்ள முடியாத அப்பாவிக் குரலில் இப்பாடலைப் பாடியிருப்பார் மலேசியா வாசுதேவன். அதேபோல், தயிர் விற்கும் பெண் பாடும் பாடலைப் பிரதியெடுத்து ஊர் மக்கள் முன் செம்பட்டை பாடிக்காட்டும் ‘மாமே(ன்) ஒரு நா மல்லியப்பூ கொடுத்தான்’ பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியமும், எஸ்.பி. ஷைலஜாவும் பாடியிருப்பார்கள். நகரங்களிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் கிராமத்தின் காட்சிகளைக் கண்முன் நிறுத்தும் பாடல்கள் இவை.
தன் மனைவியைப் பற்றிய அவதூறு களைக் கேட்டு உடைந்து போயிருக்கும் செம்பட்டையனைப் பாடச் சொல்லிக் கேட்பான், ஊர்ப் பெரியவரின் மகன். மனதைக் குடைந்துகொண்டிருக்கும் வலியைக் கரையவிட்டபடி அவன் பாடும் பாடல் ‘உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி.’ மலையடிவாரக் குளிரைப் போர்த்தியிருக்கும் அந்தக் கிராமத்தின் இரவைத் துளைத்துக்கொண்டு ஒலிக்கும் அப்பாடலைக் குறைவான இசைக் கருவிகளைக் கொண்டு உருவாக்கியிருப்பார் இளையராஜா. உடுக்கை ஒலியின் பின்னணியில் எஸ்.பி.பி. தரும் ஹம்மிங் இரவில் ஊரைக் கடந்து செல்லும் ஒற்றை ஓலத்தைப் போல் ஒலிக்கும். மனதிலிருந்து வேதனைகளைப் பிடுங்கியெறிய முயற் சிக்கும் அப்பாவியின் மனப் பிரதி அது.
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
படங்கள் உதவி: ஞானம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT