Published : 15 May 2020 09:29 AM
Last Updated : 15 May 2020 09:29 AM
திரை பாரதி
ஊரடங்கு காலத்தில் ஸ்மார்ட் போன், இணைய வசதி ஆகியவற்றை மட்டுமே வைத்துக்கொண்டு, திரையுலகில் பலரும் தங்கள் திறமையை வீடியோக்கள் வழியாகக் காட்டி வருகிறார்கள். ஆனால், எல்லா முயற்சிகளும் ரசிகர்களின் இதயத்தைத் தொடுவதில்லை. வீட்டிலிருந்தபடியே த்ரிஷாவைக் குறும்படத்தில் நடிக்க வைத்த இயக்குநர் கௌதம் மேனனின் முயற்சி, தமிழ் சினிமாவின் ஸ்டண்ட் கலைஞர்கள், கரோனாவுக்கு எதிராக உருவாக்கி வெளியிட்டிருக்கும் சண்டை வீடியோ ஆகியவற்றைக் கண்டு ரசிகர்கள் மூக்கின் மேல் விரல் வைத்தார்கள். தற்போது மூன்றாவதாக ‘யுத்தம் வெல்வோம்’ என்ற வீடியோ பாடலையும் வைரலாக்கியிருக்கிறார்கள். அதற்குக் காரணமும் இல்லாமல் இல்லை.
‘போர் பல கண்டு... எதிரியை வென்று... சரித்திரம் படைத்தது நம் இந்தியா’ எனத் தொடங்கும் அந்தப் பாடலின் நம்பிக்கையும் எழுச்சியும் தரும் ஒவ்வொரு வரிக்கும் இசையமைப்பாளர் தக்ஷின் தந்திருக்கும் உணர்வுபூர்வமான மெட்டும் இசைக்கோப்பும் அதன் வீடியோவை எடிட் செய்திருக்கும் விதமும் மீண்டும் மீண்டும் அந்தப் பாடலைக் கேட்கவும் பார்க்கவும் வைத்துவிடுகின்றன. பாடலை முழுவதுமாகப் பார்த்து முடித்தபிறகோ, கரோனா மீதான அச்சம் எதுவும் மிச்சம் இல்லாமல் தொலைந்துபோய்விடுகிறது.
இந்தப் பாடலுக்கு இசையமைத்திருக்கும் தக்ஷின் என்ற இளைஞர் யார் என்று தேடியபோது எதிர்பாராத திருப்பம். மலையாளத் திரையிசையின் பிதாமகர், இளையராஜா குருநாதர் என்று போற்றப்படும் வி.தக்ஷினாமூர்த்தி சுவாமியின் மகள் வயிற்றுப் பேரன். சுயாதீன இசையமைப்பாளராகப் பல தனிப்பாடல்களை இசையமைத்துப் பாராட்டுக்களைப் பெற்றிருக்கும் இவர், ஒரு பன்முகத் திறமையாளர். முதலில் மென்பொருள் துறையில் சில ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, இசையின் மீதிருந்த ஆர்வத்தால் வேலையிலிருந்து வெளியேறி முழுநேர இசையமைப்பாளராக மாறியிருக்கிறார்.
‘யுத்தம் வெல்வோம்’ பாடலுக்கு இசையமைத்தது மட்டுமல்லாமல் அதை வீடியோ எடிட்டும் செய்திருப்பது பற்றிக் கேட்டோம். “மென்பொருள் துறையில் இருந்ததால் எடிட்டிங் கற்றுக்கொண்டேன். அதேபோல நான் ஒரு நடனக் கலைஞனும் தான். கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகப் பல நிகழ்ச்சிகளை நடத்தியும் மேடை நாடகங்களுக்கு இசையமைத்தும் இருக்கிறேன். ஒன்று கைவிட்டாலும் மற்றொரு திறமை கைகொடுக்கும் அல்லவா?” என்று சொல்லும் பன்முகத் திறமையாளர் தக்ஷினைத் தமிழ் சினிமாவில் விரைவில் இசையமைப்பாளராகச் சந்திக்கலாம்.
அதேபோல ‘யுத்தம் வெல்வேம்’ என்ற இந்தப் பாடலை எழுதியிருக்கும் பிரபல நாடக இயக்குநர் இளங்கோ குமணன், இவருடன் இணைந்து இந்தப் பாடலின் கருத்தாக்கம், உருவாக்கம் இரண்டிலும் முதன்மைப் பங்காற்றியிருக்கும் கார்த்திக் கௌரி சங்கர், சூரஜ் ராஜா ஆகியோருடன் பாடலைப் பாடியிருக்கும் இசைக்கவி ரமணன் உள்ளிட்ட பிரபல நாடகக் கலைஞர்களும் இணைந்து இந்தப் பாடலை எழுச்சி கீதமாக்கியிருக்கிறார்கள்.
பாடலைக் காண இணையச் சுட்டி: https://bit.ly/3dIbRNn
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT