Published : 16 May 2014 09:47 AM
Last Updated : 16 May 2014 09:47 AM
ராதாவின் மகள்கள் மீண்டும் சிறகுகளை விரித்து பறக்கத் தொடங்கிவிட்டனர். அருண் விஜயுடன் ‘டீல்’ படத்தில் நடித்து முடித்த கையோடு இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனின் ‘புறம்போக்கு’ படத்தில் ஆர்யாவுடன் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் கார்த்திகா. தங்கை ‘கடல்’ துளசி, ரவி. கே. சந்திரன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘யான்’ படத்தில் நடித்திருக்கிறார். அம்மா, தங்கை, படிப்பு, நடிப்பு என்று எதைப் பற்றிக் கேட்டாலும் பளிச்சென்று பதில் வருகிறது கார்த்திகாவிடமிருந்து.
‘புறம்போக்கு’ படத்துக்காகக் குளு குளு குலுமணாலிக்கும் அப்படியே அதற்கு நேர்மாறாக ராஜஸ்தான் பாலை வனத்துக்கும் போய் வந்திருக்கிறீர்களே?
சினிமான்னு வந்துட்டாலே கொஞ்சம் வெயில், கொஞ்சம் மழை மாதிரி கஷ்டமும் இருக்கும், புகழும் கிடைக்கும். எவ்வளவு கஷ்டப்பட்டாலும் நெட் ரிசல்ட் குலுமணாலி மாதிரி குளு குளுன்னு இருந்தா கசக்கவா செய்யும்.
முதல் கட்டப் படப்பிடிப்புக்காக நாங்க போன நேரம் குலுமணாலியில் கடுமையான குளிர். பொதுவாகவே எல்லோரும் கோடையைத் திட்டமிட்டுத்தான் போவோம். ஜனநாதன் சார்தான் கடுமையான பனிப்பொழிவு இருக்குறப்போதான் ஷூட் பண்ணணும்னு சொல்லிட்டார். அங்கே நானும் ஆர்யாவும் ஆடின டேப் டான்ஸ (Tap Dance) படமாக்கினாங்க. குலுமணாலின்னதும் கனவுப் பாடல்னு நினைக்காதீங்க. ஒரு இசைக் கலைஞனே நடனக் கலைஞனாவும் மாறி பிரதிபலிக்கிற மாதிரி நடனக் காட்சி. அப்போ கோரியோகிராஃபி எவ்ளோ க்யூட்டா இருக்கும்னு யோசிச்சுப் பாருங்க. அங்கிருந்து ராஜஸ்தான் போனப்போ எனக்கான ஸ்டண்ட் காட்சிகளைப் படமாக்கினாங்க. பெரிய சுவரை இடிச்சுக்கிட்டு நுழையறது போல ஒரு காட்சி. ஜீப்ல ஆர்யா பக்கத்தில் அமர்ந்திருப்பார். அந்த ஸ்டண்ட் சீக்வென்ஸ் எடுத்து முடிக்கிற வரைக்கும் ஒருவித பயத்தோடவே இருந்தேன்.
இந்தப் படத்துல உங்களுக்கு என்ன ரோல்?
இந்தப் படத்துல ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம் அப்புறம் நான். நீங்க நாலு பேருமே கதையில ஹீரோதான்னு ஜனநாதன் சார் சொல்லிக்கிட்டே இருப்பார். அதுக்காகப் படத்துல காதல் இல்லைன்னு நினைக்காதீங்க. பயங்கர ஆக்ரோஷம், சேலஞ்ஜிங்னு கதை நகரும்போது அதுல காதலும் சூழ்ந்துக்கிட்டா எப்படியிருக்கும் யோசிச்சுப் பாருங்க. ஆனா, எனக்கு ஹீரோவுக்கு இணையான ரோல்.
நீங்க சொல்றதைப் பார்க்கும்போது படத்துக்காக நிறையப் பயிற்சிகள் எடுத்திருப்பீங்க போல?
குறைவான நாட்களில் திட்டமிடப்பட்டு படப்பிடிப்புக்குக் கிளம்பினதால என்னால அதிகமாக பயிற்சி எடுத்துக்க முடியல. கியர் பைக் ஓட்டிக்கிட்டே ஒரு சண்டைக் காட்சியில வருவேன். அதுக்காகக் கொஞ்சம் பயிற்சி எடுத்துக்கிட்டேன். ஸ்கூட்டி மட்டுமே ஓட்டியிருக்கேன். கியர் பைக் கத்துக்கிட்ட அனுபவம் ரொம்பவும் புதுசா இருந்துச்சு. குலுமணாலியில பனிப்பொழிவுல நடந்து போறதும் வர்றதுமே பெரிய சவாலா இருந்துச்சு. அப்போதான் அங்கே வாழ்ற மக்களை நினைச்சுப் பார்த்தேன்.
அதேபோல ஒட்டகத்தை ஜூவுலயும், சர்க்கஸ்லயும் பார்த்திருக்கிறேன். அந்த ஒட்டகத்துல நானே டிராவல் பண்ற காட்சிகள் இருக்கு. அதெல்லாம் இப்போ ரஷ்ல பார்க்கும்போது நாமதான் இதுல நடிச்சாமான்னு பெரிய விஷயமாக இருக்கு. படம் பார்த்தா என்னோட ஃபீல் உங்களுக்கும் கிடைக்கும்.
மலையாளத்தில் நீங்க நடிப்பதாக இருந்த ‘கோல்டு’ படம் என்னாச்சு?
‘டிராபிக்’ இயக்குநர் ராஜேஷ் பிள்ளை சார் படம் அது. இப்போ கைவிட்டாச்சு. முழுக்க ஃபீமேல் ஓரியண்டட் படம். அதுக்காக ரன்னிங் பயிற்சி எல்லாம் எடுத்துக்கிட்டேன். ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி. உஷா எனக்கு நிறைய டிப்ஸ் கொடுத்தாங்க. ஏதோ சில காரணத் தால் அது இப்போ படமாக வில்லை. அது மனசுக்கு கொஞ்சம் வருத்தம்தான்.
உங்களோட முதல் மலையாளப் படமான ‘மகரமஞ்சு’ இங்கே தமிழ்ல ‘அப்சரஸ்’ என்ற தலைப்போட ரிலீஸ் ஆகப் போகுதாமே, உங்களுக்குத் தெரியுமா?
அப்படியா! நீங்க சொல்லித்தான் எனக்குத் தெரியும். தமிழில் ‘கோ’ படத்தில் நடிப்பதற்கு முன்னாடியே நடிச்ச படம். அது ஒரு ஆர்ட் ஃபிலிம். தி கிரேட் சந்தோஷ் சிவன் சார் நடிச்சு இயக்கின படம். ஒவ்வொரு ஹீரோயினுக்கும் டபுள் ரோல் நடிக்கணும்னு ஒரு கனவு இருக்கும். அதை நான் உணர்றதுக்கு முன்னாடியே கிடைச்ச அழகான வாய்ப்பு. ரம்பா, மேனகா, ஊர்வசின்னு கலக்கியிருந்தேன். அந்தப் படம் தமிழுக்கு வருவதில் ஹேப்பி.
தங்கையோட ‘யான்’ படம் பற்றி ஏதாவது ஸ்டேடஸ் தெரியுமா?
ஆமாம், சீக்கிரம் ரிலீஸ் ஆகுது. என்னோட படம் ரிலீஸாகிற மாதிரி ஒரு ஃபீல். ஹாரிஸ் மியூஸிக்ல ஒவ்வொரு பாட்டும் லட்டு மாதிரி இருக்கு. பணம் கொடுத்து ஆன் லைன் மூலமா ஐ டியூன்ல மொத்தப் பாடல்களையும் டவுன்லோடு செய்தாச்சு. இப்போ என்னோட காலர் ட்யூனே என் தங்கையோட படப் பாடல்தான்.
‘டீல்’ படத்தில் எதிர்பார்ப்பு இருந்தும் ஏன் படம் தாமதமாகிக்கொண்டே போகுது?
இசையமைப்பாளர் தமன் கொஞ்சம் பிஸியா இருக்கார் போல. ரீ ரெக்கார்டிங் வேலைகள் இன்னும் பாக்கி இருக்குன்னு நினைக்கிறேன். தமிழ்ல எனக்கு கிடைத்த இன்னொரு அழகான படம். அருண் விஜயை இன்னும் பெரிய ஹீரோவா ஆக்கப்போற படம். ரிலீஸை நானும் எதிர்பார்க்கிறேன்.
உங்க படிப்பு எந்தக் கட்டத்துல இருக்கு?
கல்லூரிக் காலத்தோட இறுதி நாட்கள்ல இருக்கேன். எக்ஸாம் நேரம். பேச்சுலர் இன் பிசினஸ் மேனேஜ்மென்ட். ரொம்பவே விருப்பப்பட்டு எடுத்த படிப்பு. இது மட்டும் போதாது. எம்.பி.ஏ படிப்பை வெளிநாட்ல போய்ப் படிக்கணும்னு திட்டம் வெச்சிருக்கேன். ஷூட்டிங், டிராவலிங் இதெல்லாம்தான் அந்தக் கனவுக்கு வழி விடணும். பார்க்கலாம்.
தெலுங்குல நடிக்கிறீங்களா இல்லையா?
சின்னி கிருஷ்ணா இயக்கத்துல அல்லெரி நரேஷ் ஜோடியா ஒரு படத்துல நடிக்கிறேன். படத்துல நாங்க டிவின்ஸ். இது பிரதர், சிஸ்டர் கதை. தலைப்பு இன்னும் முடிவாகல.
மும்பையில பிறந்து வளர்ந்துட்டு, பாலிவுட்ல ஏன் கவனம் செலுத்தவில்லை?
தென்னிந்தியப் படங்கள்ல நடிக்கும் போது கிடைக்குற சுதந்திரம் இந்திப் படங்கள்ல கிடைக்குமான்னு தெரியல. அதுவும் தென்னிந்தியா என்னோட வீடு மாதிரி. மற்றபடி இந்தி வாய்ப்பு அதுவா தேடி வந்தா பார்க்கலாம்.
அடுத்து உங்களை சென்னையில எப்பப் பார்க்கலாம்?
மே இறுதியில என்னோட தேர்வுகள் முடியுது. ஜூனில் மறுபடியும் ‘புறம்போக்கு’ ஷூட்டிங் சென்னையில. அதுவரைக்கும் சென்னைக்கு பை பை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT