Published : 01 May 2020 09:09 AM
Last Updated : 01 May 2020 09:09 AM
ஆர்.சி.ஜெயந்தன்
சிவாஜி, சாவித்திரி காலத்திலிருந்து விஜய் சேதுபதி, சமந்தா காலம்வரை வெவ்வேறு திறமையான நடிகர்களை, நடிப்பு பாணிகளைப் பார்த்துவருகிறோம். அவர்களில் பலரும், கதாபாத்திரத்துக்கான ‘கூடு பாயும்’ நடிப்பின் மீது, தத்தமது பாணியின் சாயலை ஊடுருவ விட்டுவிடுகிறார்களே என்ற எண்ணம் தோன்றிக்கொண்டே இருக்கும். ஆனால், ‘லன்ச் பாக்ஸ்’ படத்தில் மனைவியை இழந்து தனிமையில் வாழும் மனிதராக எனக்கு அறிமுகமான சாஜன் ஃபெர்னாண்டஸ் அந்த எண்ணைத்தை சுக்குநூறாக உடைத்தெறிந்தார். சாஜன் ஃபெர்னாண்டஸாக உணர்வுகளின் வழியாக உருமாறிக் காட்டியிருந்த அந்த உயரிய நடிப்பு கலைஞன் இர்ஃபான் கான்.
குடும்ப வாழ்க்கையை இழந்துவிட்ட ஒரு நடுத்தர வயதுக்காரர். அவர் கடந்துகொண்டிருக்கும் விவரிக்க இயலாத வெறுமை எனும் கொடிய உணர்வை இர்ஃபான் எப்படி வெளிப்படுத்தியிருப்பார் என்று நினைக்கிறீர்கள்? அழுது புரண்டா? நரைகூடிய உடல் தோற்ற ஒப்பனையின் துணையுடனா? இல்லவே இல்லை! ஓர் இரவு உணவு வேளையில் மாடியில் வந்து புகைத்துக்கொண்டிருப்பார் சாஜன். அப்போது பக்கத்து வீட்டில் ஒரு குடும்பம் சிரித்து மகிழ்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும்.
இர்ஃபானின் வெளிப்படுத்துதலில் வசனம், ஆதீத உடல்மொழி என எதுவும் இருக்காது. அந்தக் குடும்பத்தைப் பார்ப்பார். ‘தனக்கு குடும்பம் இல்லையே; அப்படியொன்று இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்’ என்ற ஏக்கத்தை பார்வை வழியாக நமக்குக் கடத்திவிட்டு இறங்கிப்போவார். படிகளில் தவழ்ந்து இறங்கும் அவரது கால்களின் துவண்டுபோன வேகம் தனிமையின் வெறுமையைச் சொல்லும்.
ஷேக், இலா, சாஜன்
விரைவில் ஓய்வுபெறவிருக்கும் அவரது பொறுப்புக்கு பணியில் அமர்த்தப்பட்ட இளைஞனான ஷேக்கை, பார்வைகளாலேயே அமைதியாக நிராகரித்தபடியிருப்பார் சாஜன். ஷேக் ஒரு ஆதரவற்றவன் எனத் தெரிந்ததும் அவனது தனிமை தன்னையொத்தது அல்லவா என துடித்துணர்ந்து அரவணைத்துக்கொள்வார். அந்த நொடிப்பொழுதில் இர்ஃபான் வெளிப்படுத்திய சாஜன், இந்தி சினிமா இருக்கும்வரை நடிப்பின் இலக்கணம் கூற உயிருடன் இருப்பார்.
உடலாலும் மனதாலும் விலகிச் செல்லும் கணவனை, தனது கைச் சமையல் மூலம் மீட்டுவிட முடியாதா என முயற்சிக்கும் நொறுக்கப்பட்ட பெண்களின் பிரதியாக வருகிறது ‘லன்ச் பாக்’ஸின் இலா கதாபாத்திரம். அவள் அனுப்பிய ‘லன்ச் பாக்ஸ்’ அவளது கணவனிடம் செல்வதற்கு பதிலாக, இடம் மாறி சாஜனிடம் வந்துவிடுகிறது. பலகாலம் இழந்த வீட்டுணவின் ருசியை, முதன்முதலாக மாறிப்போகும் லன்ச் பாக்ஸை திறந்து ருசிபார்க்கும் காட்சியில், பதற்றமில்லாமல், ஆனால், பரிமாறப்பட்ட விபத்தின் சுவையை நமது நாக்கிலும் உணர வைக்கும் நடிப்பையல்லாவா வெளிப்படுத்திக்காட்டினார் இந்த அரிய நடிகர்!
நிராகரிப்பின் ரணங்களால் வாடும் முகமறியா தோழியுடன் உரையாடும் வாய்ப்பைத் தந்து, இருவருக்குமான தனிமையின் தந்திகளில் நம்பிக்கை எனும் தூய ராகத்தை மீட்டுகின்றன லன்ச் பாக்ஸ் சுமந்துவரும் கடிதங்கள். இலாவிடமிருந்து வரும் சாப்பாட்டுக் கேரியர் அடுக்கின் முதல் டப்பாவில் அவளிடமிருந்து கடிதம் வந்திருக்கிறதா என சாஜன் கேரியரை பிரிக்காமல் முகர்ந்து பார்க்கும் காட்சியில், சாப்பாட்டின் வாசனையை அல்ல; கடிதத்தின் வாசனையை நமக்கு உணர வைத்த மாபெரும் கலைஞன் இர்ஃபான் கான். கடிதம் என்பது வெறும் காகிதம் அல்ல; அதை எழுதும் மனிதர்களின் சாயல் என்று உணர வைக்கும் நடிப்பில், கடிதத்தை எடுத்து வாஞ்சையுடன் வாசிக்கும் காட்சிகளில் இர்பான் எங்கே தெரிந்தார்; சாஜன் ஃபெர்னாண்டஸ் அல்லவா?
இதையெல்லாம்விட உச்சமாக, அதுவரை கடித வரிகளிலும் உணவின் சுவையிலும் கண்ட முகத்தை நேராகக் கண்டு, ஆதரவாய் தன் தோள்களை இலாவுக்குத் தந்துவிடலாம் என அவரை வரச்சொன்ன உணவு விடுதிக்குச் செல்கிறார் சாஜன். அங்கே தூரமாய் இருந்து இலாவைக் காண்கிறார். அவரது இளமை, அழகு இரண்டையும் கொண்டே அவளுக்கும் தனக்குமான வயது வேறுபாட்டை சில நொடிகளில் உணர்ந்துகொள்ளும் அவர், தன் மனசாட்சியின் முன்னால் மண்டியிட்டுத் திரும்பிச் செல்வார். அந்தக் காட்சியில் அறத்தின் கைகளில் தவழும் ஒரு முதிய குழந்தையாக, எந்தவித ஆர்பாட்டமும் அதிர்ச்சியும் காட்டாத இயல்பின் உச்சத்தில் நின்று, சாஜனை புடம்போட்ட நடிப்பால் ஒளிரச் செய்துவிட்ட தங்கக் கலைஞன் இர்ஃபான் கான்.
தேசிய நாடகப் பள்ளியின் பெருமிதம்
“ஒரு நடிகனின் மரணம் என்பது வெகுமக்களின் கலாச்சாரத்தில் ஆழ்ந்த துயரங்களை உருவாக்குவது. ஏனென்றால் நடிகன் என்பவன் ஒரு தனிமனிதனாக இல்லாமல், அவன் தனது நடிப்புத்திறன் வழியே உருவாக்கிக் காட்டிய கதாபாத்திரங்களின் நினைவுகளாகத் தங்கிவிடுகிறான். இர்ஃபான் கான் போன்று ஆழ்ந்த கண்களும், அழுத்தமான நடிப்பும் கொண்ட இன்னொரு இந்தி நடிகர் ராஜ் குமார்” என்று சுட்டிக்காட்டுகிறார் நவீன நாடகக் கலைஞர் வெளி.ரங்கராஜன். முற்றிலும் உண்மைதான்.
திரையுலகப் பின்னணி எதுவும் இல்லாத குடும்பத்தில் பிறந்து, கிரிக்கெட் விளையாட்டின் மீது கல்லூரிக் காலம்வரை காதல் கொண்டிருந்த இர்பான், முதுகலைப் பட்டம் முடித்ததும் தேசிய நாடகப் பள்ளியில் சேர்ந்தார். ஓம் பூரி, அனுபம் கெர், நசீருதின் ஷா, நவாசுதின் சித்திக்கி, ரோகிணி ஹட்டங்காடி, மனோஜ் பாஜ்பாய் என முன்னாள் மாணவர்களைப் பட்டியலிட்டாலே தேசிய நாடகப்பள்ளியின் தரம் புரிந்துவிடும். அங்கே படித்து வெளியே வந்த இர்பானை தொலைக்காட்சி உலகமே முதலில் வரவேற்று உள்ளிழுத்துக் கொண்டது.
அதன்பின் இந்தி சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் குணச்சித்திரம் காட்டிக்கொண்டிருந்தவரை வில்லனாக்கிப் பார்த்தது பாலிவுட். சிறந்த வில்லன் நடிகர் என்ற விருதையும் வென்று காட்டிய இர்பானை, மீட்டெடுத்தது புத்தாயிரத்தின் பாலிவுட். தன்னை மறுவரையறை செய்துகொள்ளத் துடித்த புத்தாயிரத்தின் பாலிவுட்டில், அப்போது, நடிக்காமல் நடிக்கும் கலைஞர்களைத் தேடிய இயக்குநர்களுக்கு பரிசாகக் கிடைத்த மாற்றுக் கலைஞன்தான் இர்ஃபான் கான். நடிப்புக்கான தேசிய விருதைப் பெற்றுக்கொடுத்த ‘பான் சிங் தோமர்’ தொடங்கி, ‘ஹாசில்’, ‘மக்பூல்’, ‘ஹைதர்’, ‘பிக்கூ’, ‘கார்வான்’,’ ‘அங்ரேசி மீடியம்’ வரை மாற்று நடிப்பின் வழியான கதாபாத்திரங்களாக மட்டும் நம் நினைவுகளில் சஞ்சரித்துக்கொண்டிருப்பவர்.
சக நடிகர்கள் ஏற்கும் கதாபாத்திரங்களுடன் இரண்டறக் கரைந்துவிடும் ஜாலத்தை நிகழ்த்திக்கொண்டே இருந்தவர். “எனக்கு இர்ஃபானுடன் எப்போதும் சிறந்த கெமிஸ்ட்ரி உண்டு. ஆண் நடிகரோ, பெண் நடிகரோ திரைவெளியைப் பகிந்துகொள்ளும் சக நடிகருடன் இணைந்துவிடுவதில் இர்ஃபானுக்கு இணை அவர் மட்டும்தான். அவரது திறனை வியந்து ரசிப்பவள் நான்” எனும் கொங்கணா சென், அவருடன் இணைந்த பல படங்களில் ‘லைஃப் இன் ஏ மெட்ரோ'வை மறக்கவே முடியாது என இர்ஃபானின் ரசிகையாக உருகிப்போகிறார்.
சம காலத்தின் மற்றொரு திறமையான நட்சத்திரமான கொங்கணா மட்டுமல்ல; ஹாலிவுட் காரர்களுக்கும் இன்று, இந்தியச் சந்தையை வெற்றிக்கொள்ள இர்ஃபானின் முகமும் திறமையுமே தேவைப்பட்டது. சசி கபூர், ஓம்பூரி, நசீருதின் ஷா, அமிதாப் பச்சன் வரிசையில் இர்ஃபான் நடித்த ஹாலிவுட் வசூல் வெற்றிகளின் பட்டியலில் ஆஸ்கரை அள்ளிய படங்களுக்கும் இடம் உண்டு. இந்த விருதுகளையெல்லாம் தாண்டி, மிகச் சிறந்த மனித நேயர் என்ற மக்களின் விருதைச் சம்பாதித்த இர்ஃபான் “ மக்கள் என் நடிப்பையே பார்க்க விரும்புகிறார்கள்; முகத்தை அல்ல” எனக் கூறிய மகா கலைஞன்.
தொடர்புக்கு:jesudoss.c@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT