Published : 24 Apr 2020 10:22 AM
Last Updated : 24 Apr 2020 10:22 AM
சிறந்த ஒளிப்பதிவாளர், எழுத்தாளர் ஆகிய அடையாளங்களைத் தாண்டி ‘டுலெட்’ படத்தை எழுதி, இயக்கியதன் மூலம் 50-க்கும் அதிகமான சர்வதேச விருதுகளையும் தேசிய விருதையும் பெற்றவர் செழியன். கரோனா பேரிடரில் திரையுலகம் முடங்கியிருக்கும் வேளையில் அவர் எழுதிய ‘தனித்திரு’ என்றக் கட்டுரை சமூகத்தின் குறுக்குவெட்டை அப்பட்டமாகப் படம்பிடித்துக் காட்டியது.
‘இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால், நாடுகளின் பெயரால், சாதிகளின் பெயரால் நாம் கொண்டிருந்த பெருமைகள் எதுவும் நம்மைக் காப்பாற்றாது. விஞ்ஞானத்திலும், மருத்துவத்திலும் நாம் செய்த கண்டுபிடிப்புகளையெல்லாம் பார்த்து இயற்கை புன்னகைக்கிறது. வல்லரசுகளே தடுமாறுகின்றன. தனித்திருப்பதைத் தவிர தப்பிக்கும் வழிகள் இல்லை’ என்பது உட்பட அக்கட்டுரையின் ஒவ்வொரு வரியும் சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வரும் நிலையில் அவருடன் உரையாடியதிலிருந்து...
போர்கள் வழியான அரசியல், அதன்வழியாகத் திணிக்கப்படும் சர்வாதிகார மேலாதிக்கம் ஆகியன உலக அளவில் இனி நெகிழவும் அர்த்தம் இழக்கவுமான வாய்ப்பை கரோனா வழங்கிய இருக்கிறதா?
போர் என்கிற வார்த்தையைப் பல வருடங்களுக்கு எந்த நாடும் பேசமாட்டார்கள் என்று நினைக்கிறேன். போரின் அடிப்படையே யார் பெரியவர் என்கிற தன்முனைப்புதான். அதை இந்தக் கிருமி தற்காலிகமாகத் துடைத்துவிட்டது. இதற்கு முன்பு, இதற்குப் பின்பு என்று நம்மை நாமே தகவமைத்துக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக இந்த பேரிடரைப் பார்த்தால் யுவால் நோவா ஹராரி தனது ‘சேப்பியன்ஸ்’ நூலில் குறிப்பிடுகிற மனிதக்குலத்தின் அடுத்த பரிணாமம் தொடங்குகிறதோ என எண்ணத் தோன்றுகிறது.
அதேபோல், ‘செய்வதையே திரும்பத் திரும்பசெய்துவிட்டு விளைவுகளை மட்டும் வேறு வேறாகக் கற்பனை செய்யாதீர்கள்’ என்ற ஐன்ஸ்டைனின் மேற்கோள் ஒன்று இருக்கிறது. இந்த பேரிடருக்குப் பின்னும் நாம் செய்வதையே திரும்பச் செய்வோம் என்றால், இந்த உலகை யாரால் காப்பாற்ற முடியும்? ஒரு கிருமி வந்துவிட்டது ஓடுங்கள், ஒளிந்துகொள்ளுங்கள் என்று சொல்வதற்கா இத்தனை வருட விஞ்ஞானம்?
அனுப்பிய செயற்கைக்கோள்கள் எல்லாம் தொலைக்காட்சியில் படம் பார்ப்பதற்கும் உளவு சொல்வதற்கும் மட்டுமா? எந்தக் கோளில் நீர் இருந்தால் இப்போது என்ன? ஒருவேளை அங்கு மனிதன் வாழ்வதற்கான சூழல் இருந்தாலும் அங்கு யாரெல்லாம் போக முடியும்? இந்தத் தலைமுறை வாழப்போகிறதா? அடுத்த சந்ததிக்குத்தான் அது கிடைக்கும் என்றால், அதுவரைக்கும் பூமியில் யாரெல்லாம் எஞ்சி இருப்பார்கள்? அடுத்தடுத்த வருடங்களில் வேறு சில கிருமிகள் வராது என்பதற்கு எதாவது உத்தரவாதம் இருக்கிறதா? வந்தால் திரும்பவும் ஓடி ஒளிய வேண்டுமா?
இந்த முறை நாம் கற்றுக்கொண்டிருப்பது நம் முழு வாழ்க்கைக்குமான பாடம். மரண பயத்தைக் காட்டி ‘வெளியில் வராதே, வீட்டை விட்டு வெளியேறினால் உலகிலிருந்தே வெளியேற்றப்படுவாய்’ என்பது இயற்கை முன்வைத்திருக்கும் சவால். விரைவில் மீண்டு வந்துவிடுவோம். வந்ததும் என்ன செய்யப் போகிறோம்? திரும்பவும் நமது வழக்கமான வாழ்க்கையையே தொடங்குவோம் எனில் ஐன்ஸ்டைன் சொன்னதைத் திரும்ப ஒருமுறை படித்துப் பாருங்கள்.
பல லட்சம் கோடி ராணுவ பட்ஜெட்டுகள், நமது கல்வி, மருத்துவம், பேரிடர் நிதி மேலாண்மை ஆகியவற்றை நடுத்தெருவில் கொண்டுவந்து நிறுத்தி இருப்பதை வளரும் நாடுகள் உணர்ந்துகொண்டதாகத் தெரியவில்லையே?
குறைந்தது இன்னும் ஐந்து வருடங்களுக்காவது நாங்கள் யாருடனும் போர் புரிய மாட்டோம் என்ற புரிந்துணர்வுக்கு உலக நாடுகள் வரமுடிந்தால் அடுத்த ஐந்து வருடங்களுக்கு ராணுவத்துக்கு நிதி எதற்கு? தீவிரவாதத் தடுப்புச் செயலுக்கு மட்டும் தேவையானதை வைத்துக்கொண்டு பாதுகாப்புக்காக ஒதுக்கப்படும் பணத்தை மருத்துவக் கண்டுபிடிப்புகளுக்கும், அடிப்படையான கட்டுமானத்துக்கும், விவசாயத்துக்கும் செலவிடலாம்.
பதவியில் இருப்பவர்கள், இல்லாதவர்கள், உயர் அதிகாரிகள், ஓய்வுபெற்றவர்கள், மரபு சார்ந்த, சாராத மருத்துவர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், கதைசொல்லிகள், சமூகவியல், சூழலியல் அறிஞர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் எனத் தகுதியானவர்கள் அனைவரும் கூடி எதிர்வரும் காலத்துக்கான தீர்வுகளை கண்டடைய வேண்டும். உலக சுகாதார நிறுவனம் இதை ஒருங்கிணைக்க வேண்டும். அதெல்லாம் சாத்தியமே இல்லை என்றால், அடுத்து காற்றில் பரவும் ஒன்று வரலாம். அப்போது மனித இனத்தை ஊரடங்காலும் காப்பாற்ற முடியாது.
கரோனாவுக்கு பிறகான இந்தியாவின் காட்சிகளில் உங்களை அதிகமும் பாதித்தது என எதைச் சொல்வீர்கள்?
தலையில் சுமையோடு குழந்தைகளை அழைத்துக்கொண்டு குடும்பம் குடும்பமாக மனிதர்கள் நெடுஞ்சாலைகளில் நடந்து செல்கிற காட்சிதான்.
வளர்ந்த நாடுகளே அதிக பாதிப்பையும் உயிரிழப்பையும் சந்தித்துவருகின்றன. அவர்கள் எதில் கோட்டை விட்டார்கள் என நினைக்கிறீர்கள்?
அலட்சியம்தான். உதாரணத்துக்கு வாகனம் பழகும்போது யாருக்கும் பெரிய விபத்துக்கள் நேர்வதில்லை. அப்போது நாம் யார் மீதும் இடித்துவிடக் கூடாது என்று முழுக் கவனத்துடன் வண்டியை ஓட்டுவோம். கொஞ்சம் பழகியதும் என்ன நடக்கிறது? நமக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கும்போதுதான், தவறு நடக்கிறது. இந்த பேரிடரில் தைவான் என்கிற சிறிய நாடு என்ன செய்தது என்று படித்துப்பார்க்கும்போது பெரிய நாடுகள் என்ன செய்திருக்க வேண்டும் என்பது புரிகிறது.
‘வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்’ எனும் ஊரடங்கு காலத்தில் தொழில்நுட்பம் மட்டும் இல்லாது போயிருந்தால் மனித இனம் என்ன செய்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
தொழில் நுட்ப சாதனங்கள் இல்லையென்றால் இன்னும் நன்றாகத்தான் இருந்திருக்கும். நான் சிறுவயதில் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு இருபத்து நான்கு நாட்கள் தனியாக வீட்டிலிருந்தேன். மாலையில் அம்மா வாசிக்கும் மாரியம்மன் தாலாட்டைத் தவிர, வேறு எதையும் கேட்க முடியாது. கண்ணாடி யைக்கூட பார்க்க முடியாது.
அப்படி ஒரு சூழல் வந்தால், அதையும் நாம் பழகிக்கொள்ள முடியும். சென்னையில் வெள்ள நாட்களில் மின்சாரம்கூட இல்லாமல் நான்கு நாட்கள் இருந்தோமே. இதுபோல பேரிடர்கள் வருகிற ஒவ்வொரு முறையும், தொழில்நுட்ப சாதனங்களிலிருந்து விலகி இருப்பதையும் இயற்கைக்குத் திரும்பும் வழிகளையும்தான் காலம் முன்வைக்கிறது. இந்தக் கேள்வியில் ஒரு திரைப்படத்திற்கான கதை இருக்கிறது.
போலியான கொண்டாட்டங்கள், ஹோட்டல் உணவு, மது ஆகிய மூன்றையும் ஊரடங்கு முடிந்ததும் சமூகம் மீண்டும் மீட்டுக்கொள்ளும் அல்லவா?
நிச்சயம் நீங்கள் சொல்வதுதான் நடக்கும். இத்தனை நெருக்கடியில் உங்களுக்காக இத்தனை காலம் உதவிவந்த ஒரு மருத்துவர், தொற்றினால் இறந்துவிடுகிறார். அவரை அடக்கம்செய்ய இடம் கொடுக்காமல் சண்டை நடக்கிறது. இந்தியாவில் எங்கோ ஒரு கிராமத்தில் இல்லை. தமிழகத்தின் தலைநகரில் நடக்கிறது. இதைவிடத் தலைகுனிவு வேறெதுவும் இருக்க முடியுமா?
இந்த ஊரடங்கு முடிந்ததும் மதுக்கடைகளிலும், அழகு நிலையங்களிலும்தான் கூட்டம் இருக்கும். கொண்டாட்டங்களுக்குக் குறைவிருக்காது. இவ்வளவு பாடம் படித்தபிறகு நாம் மாற்றிக்கொள்ள எத்தனையோ நல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன. அதில் ஒரு சில நடந்தாலே போதும். திருமணங்களை வீட்டில் எளிமையாக நடத்தலாம். கிருமி நம்மை சமமாகப் பார்த்ததுபோல், சக மனிதனைச் சமமாக நடத்தலாம். இந்த இரண்டு விஷயங்கள் நடந்தாலே போதும்.
இந்த பேரிடருக்குப் பின்னால் அன்றாட வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும்?
ஊரடங்கைத் தளர்த்தினாலும் முகக்கவசம் அவசியம். குறைந்தது ஆறு மாதத்திற்கு இடைவெளி அவசியம். இதெல்லாம் வசதியானவர்கள் பின்பற்ற முடியும். பேருந்தில் சமூக இடைவெளி சாத்தியமா? தெரியவில்லை. சீனாவில் இரண்டாம் சுற்று வந்துவிட்டது என்கிறார்கள்.இந்த வருடம் முழுக்க மிகவும் கவனமாகத்தான் இருக்கவேண்டும்.
இணையத்தில் திரைப்படங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் பார்க்கப்படும் படங்களின் எண்ணிக்கையும் இந்த ஊரடங்கால் அதிகரிக்கிறது. இந்தப் பழக்கம், ஊரடங்குக்குப் பின்னரும் தொடரும் என்று நினைக்கிறீர்களா?
இந்த பேரிடர், மக்களின் பொழுதுபோக்குப் பழக்கத்தில் மிகப்பெரிய மாறுதலை ஏற்படுத்தும். நான் கேள்விப்பட்டவரை நண்பர்கள் பலரும் குடும்பத்தோடு சேர்ந்து தினமும் படம் பார்க்கிறார்கள். அது பெரும்பாலும் வேற்று மொழிப்படங்கள்.
‘நேத்து என்ன படம்?’
‘பாரசைட் பெருசா ஒண்ணும் இல்லப்பா’ இதெல்லாம் பெண்களின் தொலைபேசி உரையாடல். வருஷத்துக்கு ஆயிரம் ரூபாய் கட்டி இத்தனை படம் பார்க்கமுடியுமா? இந்த ஆச்சர்யம் கிராமங்களுக்குள்ளும் வந்துவிட்டது. ஸ்மார்ட்போனும் ஹெட்போனும் இணையதளங்களும் படம் பார்க்கும் தன்மையை மாற்றிவிட்டன.
எனவே இதையெல்லாம் கடந்து தியேட்டர்களுக்குப் பார்வையாளர்களை ஈர்க்கவேண்டும். இந்த சூழலில் இன்னும் எத்தனை மாதங்கள் கழித்து திரையரங்குகள் திறப்பார்கள்? திறந்தாலும் மக்கள் பயம் இல்லாமல் குடும்பத்தோடு எப்போது வருவார்கள்? இது மிகவும் சவாலான காலம்தான்.
கரோனாவுக்குப் பிறகான உலகில் சர்வதேச திரைப்பட விழாக்களின் நிலை என்னவாக இருக்கும்?
இந்த வருடம் நடக்கவிருந்த உலகப் பட விழாக்கள் பெரும்பாலும் நிறுத்தப்பட்டுவிட்டன. அடுத்த ஆறு மாதங்களுக்குத் தயாரிப்பு நிலை என்னவாக இருக்கும் என்பது ஜூலை மாதத்துக்குப் பிறகுதான் தெரியும். அடுத்த வருடம் இயல்பு நிலை திரும்பிவிடும் என்று நம்புகிறேன்.
கரோனா கால கதைகளைப் படமாக்க விரும்புவீர்களா?
இது மன அளவிலும் பொருளாதார அளவிலும் நமக்குத் தரப்போகிற அழுத்தம் அதிகம். எனவே உலகப் போர் குறித்த படங்கள் இப்போதும் வந்துகொண்டிருப்பதைப் போல் இந்தப் பேரிடர் காலம் குறித்த படங்கள் உலகெங்கிலும் நிறைய வரும். இந்த இருபது நாட்களாக தொலைபேசியில் பேசும் நண்பர்கள் இதை ஒரு படமாக எடுக்கப்போகிறோம் என்கிறார்கள்.
ஈரானிய இயக்குநர் ஜாபர் பனாஹியை வீட்டுச்சிறை வைத்தார்கள். அவர் வீட்டை விட்டு வெளியே வாராமல் ‘திஸ் இஸ் நாட் எ பிலிம்’ என்றொரு படம் எடுத்துவிட்டார். அர்மீனிய இயக்குநர் பரஜ்னோவ் சிறையில் இருந்தபோது தனக்குத் தரப்படும் பால் பாட்டில்களின் தகர மூடிகளில் நகத்தைக்கொண்டே சித்திரங்கள் தீட்டி இருக்கிறார். ‘ஷோபா வழக்கில் சிறையில் இருந்த நாட்களில்தான் ‘மூன்றாம் பிறை’ திரைக்கதையை எழுதினேன்’ என்று பாலுமகேந்திரா ஒரு சந்திப்பில் சொன்னார். படைப்பாளிகளைச் சிறை வைக்கும்போது, அது வீரியமான படைப்புகளாகத்தான் மாறும். எனக்கும் ஒரு திட்டம் இருக்கிறது. n ஆர்.சி.ஜெயந்தன் n
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT