Last Updated : 09 May, 2014 12:32 PM

 

Published : 09 May 2014 12:32 PM
Last Updated : 09 May 2014 12:32 PM

மாற்றுக் களம்: ஒரு படைப்பாளியின் நிஜ முகம்!

இந்தியாவின் சமகாலப் பிரச்சினைகளைக் கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தனது ஆவணப்படங்களால் சளைக்காமல் பதிவு செய்துவருபவர் ஆனந்த் பட்வர்தன். இந்த மூத்த படைப்பாளியைப் பற்றி ஓர் ஆவணப்படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்று ஆர்.வி. ரமணி யோசித்ததன் விளைவுதான் ‘இந்துஸ்தான் ஹமாரா’ ஆவணப்படம். ஆவணப்படங்களை உருவாக்குவதைப் பற்றி இரண்டு இயக்குநர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல் இந்த ஆவணப்படத்தின் ஈர்ப்பு மிக்க வடிவம் எனலாம்.

பட்வர்தனின் சமீபத்திய படைப்பான ‘ஜெய் பீம் காம்ரேட்’ திரையிடல்கள் நடந்த பல்வேறு இடங்களில் 2008-லிருந்து 2013 வரை ‘இந்துஸ்தான் ஹமாரா’ ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார் ரமணி. பட்வர்தன் தன்னைப் பின்தொடர்வதற்கும், திரையிடல்களின்போது அவர் பேச்சுக்களைப் பதிவு செய்வதற்கும் ரமணிக்கு அனுமதி அளித்திருப்பது அவரைப் பற்றிய முழுமையான ஆவணப்படம் கிடைப்பதற்கு உதவியிருக்கிறது.

பதினான்கு ஆண்டுகளாகத் தான் எடுத்துக்கொண்டிருந்த ‘ஜெய் பீம் காம்ரேட்’ ஆவணப்படத்தை, தலைமறைவாக இயங்கிவரும் ‘கபீர் கலா மஞ்ச்’ கலைக் குழுவினரை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தவே உடனடியாக வெளியிட்டதாகப் பட்வர்தன் கூறுவது அவருடைய சமூக அக்கறையையும், மனித நேயத்தையும் பளிச்சென்று வெளிப்படுத்துகிறது.

‘ஜெய் பீம் காம்ரேட்’ திரைப்படம் உருவாகக் காரணமாக இருந்தது கவிஞர் விலாஸ் கோக்ரேவின் தற்கொலை. இந்த ஆவணப்படத்தின் ஒரு பொதுத் திரையிடலுக்குப் பின், விலாஸ் கோக்ரேவின் தாயார் பட்வர்தனையும், ஒளிப்பதிவாளர் சிமான்தினி துருவையும் கண்ணீர் மல்கக் கட்டியணைத்து நன்றி கூறும் அந்த ஒரேயொரு நெகிழ்ச்சியான காட்சி, ஒரு தூய படைப்பாளிக்குக் கிடைக்கும் எல்லா விருதுகளையும்விட உயர்வானது என்பதை உணர்த்திவிடும் நேரடி சாட்சியாகப் பதிவாகியிருக்கிறது.

ஆனந்த் பட்வர்தன் தன் குடும்பத்தினர்கள் ஒவ்வொருவரைப் பற்றிக் கூறுவதையும், அவர்களுடைய பண்ணை வீட்டில் 1930களில் அம்பேத்கர் மூன்று மாதங்கள் தங்கியிருந்தார் என்று கூறுவதையும் கேட்கும்போது இயக்குநர் ரமணி - பட்வர்தன் இடையிலான கார் பயண உரையாடல் இன்னும் நீண்டிருக்கக் கூடாதா என்ற ஏக்கம் ஏற்படுகிறது.

அதேபோல ஒவ்வொரு முறை ஆவணப்படத் திரையிடல்கள் முடிவடைந்த பிறகும் பட்வர்தனிடம் மக்கள் கேட்கும் கேள்விகளும், அதற்கு அவர் அளிக்கும் பதில்களும் சமூகத்தைப் பற்றிய பல புரிதல்களைப் பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துவது திண்ணம்.

நீங்கள் எடுக்கும் இந்த ஆவணப்படங்கள் சமூகத்தில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்ற கேள்விக்கு பட்வர்தன், “உண்மையைச் சொல்ல வேண்டு மென்றால் எதுவும் மாறவில்லை” என்று கூறும்போது ஒரு படைப்பாளியின் ஏக்கங்களும் ஏமாற்றங்களும் நம் முகத்தில் அறைகின்றன. ‘இந்துஸ்தான் ஹமாரா’ ஆவணப்படத்தைப் பார்த்த பிறகு ஆனந்த் பட்வர்தன் என்ற தனிமனிதரைப் பற்றித் தெரிந்து கொள்வதைவிட இந்தியாவின் சமகால வரலாற்றையும், ஆவணப்படங்கள் எப்படி உருவாகுகின்றன என்பதையும் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x