Last Updated : 21 Aug, 2015 12:39 PM

 

Published : 21 Aug 2015 12:39 PM
Last Updated : 21 Aug 2015 12:39 PM

நான் விஷால் பக்கம்!- விக்ராந்த் சிறப்பு பேட்டி

நாயகனாக நடித்துக்கொண்டிருந்த விக்ராந்த், ‘பாண்டிய நாடு’ படத்தில் விஷாலின் நண்பனாக வந்து கவனிக்க வைத்தார். தற்போது ‘தாக்க தாக்க’, ‘கெத்து’ ஆகிய படங்களுக்கான வேலைகளில் பிஸியாக இருக்கிறார். அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து…

அண்ணன் இயக்குநர், தம்பி ஹீரோ - எப்படி இருவரும் இந்த ஆக்‌ஷன் ஆட்டத்துக்கு தயாரானீங்க?

சஞ்சீவ் அண்ணா கதையை எழுதி முடித்த பின் ‘இந்தக் கதையில் நீயே நடியேன்’ என்றார். நட்பு, ஆக்‌ஷன், காதல் எல்லாமே கலந்திருக்கும் கலவையாக இந்தக் கதை விரிந்தது. பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல், கதைக்கான நல்ல நடிகன் என்ற பெயர் வாங்க வேண்டும் என்று போராடிக்கொண்டிருந்த நேரத்தில் நிச்சயம் இது எனக்குப் பொருந்தும் என்று மனம் சொன்னது. கடின உழைப்பைக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில் மட்டும்தான் இப்போது என் கவனம் இருக்கிறது. படத்தின் கதையே முதல் 20 நிமிடம்தான். அதிலிருந்து தொடரும் புதுமையான திரைக்கதை நிச்சயம் ரசிகர்களைக் கவரும்.

அண்ணன் இயக்குநராக இருந்ததால் நிறைய சுதந்திரம் கிடைத்திருக்குமே?

வளர்ந்துவரும் சூழலில் மற்ற இயக்குநர்களின் படம் என்றால் நம் ஐடியாவை அழுத்தமாக வலியுறுத்த வாய்ப்பு குறைவுதான். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே செய்ய வேண்டும். வாயை மூடிக்கொண்டு நடித்துவிட்டு வந்துவிடுவோம். இது அண்ணன் கதை என்பதால் இப்படி நடிக்கலாமா என்று கேட்டு சின்னச் சின்ன ஐடியாக்களை தைரியமாகக் கொடுக்க முடியும். நன்றாக இருந்து அவர் ஏற்றுக்கொள்ளும்போது ரொம்பவே சந்தோஷப்பட்டிருக்கிறேன்.

ஆர்யா, விஷால், விஷ்ணு விஷால், விக்ராந்த் கிரிக்கெட் கூட்டணி இந்தப் படத்திலும் சேர்ந்து ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார்களே?

விஷால், ஆர்யா இருவரும் நான் டான்ஸ் கத்துக்கிட்ட நாட்கள்லேர்ந்து 12 வருடப் பழக்கம். விஷ்ணுவுடன் ஐந்து ஆண்டுகளாகப் பழகிவருகிறேன். இவர்கள் எனக்கு குடும்பம் மாதிரி. எங்களோட நட்பை மேலும் கெட்டியாக்கியது கிரிக்கெட்தான். இந்தப் படத்தோட போஸ்ட் புரடெக்‌ஷன் வேலைகள் நடந்துகொண்டிருந்தபோதுதான் வித்தியாசமாக முயற்சித்துப் பார்க்கலாம் என்று ஒரு யோசனை. சேர்ந்து ஒரு பாட்டுக்கு ஆட்டம் போடுவோமே என்று நண்பர்கள்கிட்ட தயக்கத்தோடுதான் கேட்டேன். ‘மச்சி என்னைக்கு ஷூட்டிங் வரணும். நாலு நாளைக்கு முன்னாலயே சொல்லிடுடா’ என்று சொன்னவர்கள், அதே வேகத்தோடு வந்து நடித்துக்கொடுத்துவிட்டு போனார்கள். அந்தப் பாடல் படத்துக்கு அழுத்தமான ஓபனிங்கைக் கொடுத்திருக்கிறது.

‘தாக்க தாக்க’ படத்தில் இரண்டு நாயகிகளாமே?

‘டிமான்டி காலணி’ கேமராமேன் அரவிந்த் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். அபிநயா அவருக்கு ஜோடி. படத்தில் பார்வதி என்ற மற்றொரு நாயகி அறிமுகமாகிறார். அவங்க என் ஜோடி.

படத்தைப் பார்த்து விஜய் பாராட்டினாராமே?

பாராட்டியதோடு படத்தின் செகண்ட் ஆஃப் பற்றி விரிவாகவே பேசினார். ‘நம்பிக்கையோடு உழைக்கிற. நிச்சயம் நீ ஜெயிப்ப’ என்று சொன்னார். அண்ணாகிட்ட இருந்து இந்த ஒரு வார்த்தை போதாதா…? அவ்வளவு சந்தோஷம். படத்தைப் பார்த்துட்டு தாணு சார் பாராட்டினார். இந்தப் படத்தை வெளியிடும் பொறுப்பைக் கையில் எடுத்துக்கொண்டார். அவருக்கு நன்றி.

நடிகர் விஷால், அவரது தயாரிப்பில் உங்களை நடிக்க வைக்கப்போவதாக ஒரு தகவல் வெளியானதே?

பின்னோக்கி நகர்ந்துகொண்டிருந்த என்னோட கேரியரை மாற்றிய படம் ‘பாண்டிய நாடு’. பெரிய ஓபனிங்கை கொடுத்தது. இந்தப் படத்திற்கு பிறகுதான் தொடர்ந்து என்னைப் பற்றி பாசிடிவாக எழுதினார்கள். ‘கண்டிப்பா இவன் நல்லா வருவான்’ என்று நண்பன் விஷால் நினைக்கிறார். நல்ல கதை அமைந்ததும் எங்க கூட்டணி இயல்பாகத் தொடரும்.

நடிகர் சங்க கட்டிட விவகாரம், தேர்தல் என்று விஷால் பரபரப்பாகி விட்டாரே? உங்கள் ஆதரவு நிச்சயம் அவருக்குத்தான் இல்லையா?

எனக்கு விஷாலை ‘இப்போ பிடிக்கும், அப்போ பிடிக்கும்’ என்று ஒரு அளவுகோல் வைத்துச் சொல்ல முடியாது. 12 ஆண்டு கால நட்பு. நல்ல விஷயத்துக்குப் போராடுகிறவர் என்பதால்தான் எல்லோரும் உடன் நிற்கிறார்கள். அவரோட யதார்த்தம், உண்மை இதெல்லாம் தெளிவாக இருப்பதால் நாங்கள் எல்லோரும் அவர் பின்னால் இருக்கிறோம்.

உதயநிதியின் ‘கெத்து’ படத்தில் அவருக்கு வில்லனாக நடித்துவருகிறீர்களே?

‘பாண்டிய நாடு’ படத்துக்குக் கிடைத்த பாராட்டுக்களை அடுத்து இனி நம் கேரியரை வித்தியாசமான பயணமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த ஒரு நாளில்தான் உதயநிதிகிட்ட இருந்து போன் வந்தது. ‘உனக்கு நெகடிவ் ரோல்தான். ஓ.கே ஆகும் என்று நினைக்கிறேன். கதையை கேளு. பிடித்தால் நடி’ என்றார். கேட்டேன். ரொம்பவே பிடித்திருந்தது. தமிழ் சினிமாவுக்கு இந்தக் கதாபாத்திரம் புதுசா இருக்கும். இந்த நெகடிவ் ஸ்டைல் நடிப்பும் சவாலாகவே இருந்தது. உதய், சத்யராஜ், எமி ஜாக்‌ஸன், ஹாரீஸ் ஜெயராஜ் என்று பெரிய டீம். நல்ல ரோல். 70 சதவீதம் படம் ரெடி. இந்த ரோலுக்காக உதய்க்கு நன்றி சொல்லியே தீர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x