Published : 07 Aug 2015 12:17 PM
Last Updated : 07 Aug 2015 12:17 PM
எதிர்மறையான கதாபாத்திரங்களைப் பிரதானப் பாத்திரங்களாக வைத்து திரைப்படம் எடுப்பதற்கு அசாத்தியமான துணிச்சல் வேண்டும். இயக்குநர் மகேந்திரனிடம் அந்தத் துணிச்சல் உண்டு. அவர் இயக்கிய ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ திரைப்படம் ஒரு உதாரணம்.
படத்தில் மோகன், பிரதாப் போத்தன், சுஹாசினி ஆகியோரின் பாத்திரங்கள் மனத் தெளிவு கொண்டவை அல்ல. ஆனால், சூழல் கைமீறிச் செல்லும்போது தவறுகளைத் திருத்திக்கொள்ள அத்தனைப் பிரயத்தனப்படும் பாத்திரங்கள் அவை. நகரப் பின்னணியில் எடுக்கப்பட்ட இப்படத்துக்கு மேற்கத்திய இசைப் பாணியில் அற்புதமான இசையைத் தந்திருந்தார் இளையராஜா.
பருவத்தின் முதல் பாடல்
நகரத்தின் சாலையில் அதிகாலையில் ஜாகிங் செல்லும் நாயகிக்கு வழித்துணையாகச் சேர்ந்துகொள்கிறான் நாயகன். இருவரும் ஜாகிங் செல்லும் காட்சியின் பின்னணியில் ஒலிக்கும் பாடல் ‘பருவமே… புதிய பாடல் பாடு’. காலடிச் சத்தங்களைத் தாளமாக வைத்து இளையராஜா இசையமைத்த பாடல் இது. இப்பாடல் பதிவுசெய்யப்பட்ட விதம் பற்றி இசை நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துகொண்டார் இளையராஜா. ஜாகிங் செல்லும் ஜோடியின் காலடிச் சத்தங்களை உருவாக்கப் பல்வேறு முயற்சிகளைச் செய்தும் திருப்தியடையாததால், கடைசியில் இசைக் கலைஞர்கள் இருவர் தங்கள் தொடைகளில் கைகளால் தட்டி எழுப்பிய ஒலியே பொருத்தமானதாக இருக்கும் என்று முடிவுசெய்தாராம்.
கிராமம் அல்லது வனப் பிரதேசம் பின்னணியிலான நிலப்பரப்புகளின் சித்திரத்தை உருவாக்குவதற்கும், நகரத்தின் பூங்காக்கள், நெடுஞ்சாலைகளின் இருபுறமும் விரியும் நிலப்பரப்புகள் போன்றவற்றைச் சித்தரிப்பதற்கும் இடையிலான நுட்பமான வேறுபாட்டை இளையராஜாவின் இசையில் உணர முடியும். அந்த வகையில் நகரம் சார்ந்த இயற்கை நிலப்பரப்பின் காட்சிகளைச் சித்தரிக்கும் இசையைக் கொண்ட பாடல் இது. ஓடிச் செல்லும்போது மாறிக்கொண்டே வரும் காட்சிகளுக்கு ஏற்ப, இசைக் குறிப்புகளை எழுதியிருப்பார் இளையராஜா.
காலடிச் சத்தத்தின் அதிர்வுகளால் பூச்செடிகளில் அமர்ந்திருக்கும் பட்டாம்பூச்சிகள் மேலெழுந்து பறப்பதைப் போல் முதல் நிரவல் இசையின் கிட்டார் இசை ஒலிக்கும். தொடர்ந்து ஒலிக்கும் வயலின் இசைக் கோவைக்கும் சரணத்துக்கும் இடையில் சில நொடிகளுக்கு ஹார்மோனியத்தின் இசையைக் கரைய விட்டிருப்பார் இளையராஜா.
அக்காட்சியில் சுள்ளிப் பொறுக்கிக் கொண்டு செல்லும் ஏழைச் சிறுமியைக் காட்டுவார் மகேந்திரன். மேன்மையான ரசனை கொண்ட இரு கலைஞர்களின் கூட்டுப் பங்களிப்புக்கு உதாரணம் அக்காட்சியும் இசையும். இரண்டாவது நிரவல் இசையில், அதிகாலைப் பனியில் உடலை வருடும் குளிர் காற்றைப்போல் தழுவிச் செல்லும் வயலின் இசைக் கோவையைத் தந்திருப்பார் இளையராஜா. மென்மையான இப்பாடலின் சுவை எஸ்.பி.பி. – எஸ். ஜானகி குரல்களில் மேலும் கூடியிருக்கும்.
காதலின் மர்மம்
விவரிக்க இயலாத உணர்ச்சிகளை எழுப்பும் மர்மமான உறவு காதல். குறிப்பாக, நட்பு காதலாக மலர்வதற்கு முன்னதான இடைவெளியில் ஏற்படும் உணர்ச்சிகள் விவரணைகளுக்கு அப்பாற்பட்டவை. கலைப்படைப்புகளில் அவற்றைப் பதிவுசெய்ய நுட்பமான பார்வை தேவை. மர்மங்கள் நிறைந்த அந்தப் பக்கங்களை அற்புதமாகப் பதிவுசெய்த படைப்புகளில் ஒன்று ‘உறவெனும் புதிய வானில்’ பாடல்.
புதிரான விஷயத்தை அணுகும் மனது, மர்மமான உலகில் சஞ்சரிப்பது போன்ற உணர்வைத் தரும் பாடல் இது. எதிர்பாராத திகைப்பில் உறைந்திருக்கும் மனதைப் பிரதிபலிக்கும் முகப்பு இசையுடன் பாடல் தொடங்கும். சஞ்சலமான மனதின் படபடப்பும், பரவசம் ததும்பும் காதல் உணர்வும் கலந்த குரலில் ‘பா..பபப்பா…’ எனும் ஹம்மிங்குடன் பாடத் தொடங்குவார் ஜானகி. ‘கனவிலும்… நினைவிலும் புது சுகம்’ என்று அவர் பாடும்போது, அதே உணர்வு கொண்ட காதலனின் குரலாக எஸ்.பி.பி.யின் ஹம்மிங் இணைந்துகொள்ளும்.
கிட்டார், எலெக்ட்ரிக் கிட்டார், வயலின், பியானோ என்று மேற்கத்திய இசைக்கருவிகளைப் பயன்படுத்தி, வெவ்வேறு அடுக்குகளில் விரிந்துசெல்லும் இசைக் கோவையை உருவாக்கியிருப்பார் இளையராஜா. பனி படர்ந்த நிலப்பகுதி, நகருக்கு வெளியே புதர்களில் புதைந்திருக்கும் பழைய கட்டிடங்கள், அறையின் இருளை ஊடுருவிச் செல்லும் ஒளிக்கீற்று என்று வெவ்வேறு கற்பனை அடுக்குகளின் மேல் பாடல் மிதந்துகொண்டே செல்லும். ‘பார்வை ஒவ்வொன்றும் கூறும் பொன் காவியம்’ எனும் வரிகளைப் பாடும்போது எஸ்.பி.பி.யின் குரலில் இருக்கும் காதல் கலந்த கம்பீரம் தனி அழகு.
திருமண உறவின் சிக்கலில் தவிக்கும் நாயகியின் மனப்பதிவாக ஒலிக்கும் ‘ஏ.. தென்றலே’ எனும் பாடலை பி. சுசீலா பாடியிருப்பார். ஜானகியை ஒப்பிட சுசீலாவுக்குக் குறைவான பாடல்களையே வழங்கியிருந்தாலும், அவருக்கென தனிச் சிறப்பான பாடல்களை வழங்கத் தவறவில்லை இளையராஜா.
இப்பாடல் அவற்றுள் ஒன்று. பாடலின் தொடக்கத்திலும், இடையிலும் வரும் சோக தேவதைகளின் கோரஸ் இப்பாடலின் உணர்வைக் கூட்டிவிடும். ’மம்மி பேரு மாரி’ என்று ஒரு பாடலும் படத்தில் உண்டு. ‘கீச்சு’ எனும் செல்லப் பெயரில் அழைக்கப்படும் பதின்பருவ இளைஞன் பாடுவதாக அமைக்கப் பட்ட அப்பாடலைப் பாடியவர் எஸ். ஜானகி!
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
படம் உதவி: ஞானம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT