Published : 03 Apr 2020 09:32 AM
Last Updated : 03 Apr 2020 09:32 AM

கோடம்பாக்கம் சந்திப்பு: ஷெரின் நினைவுகள்

கரோனாவால் திரையுலகம் முடங்கியிருக்கும் நிலையில் நட்சத்திரங்களும் திரைத்துறைப் பிரபலங்களும் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டுக் களைத்துப்போய்விட்டனர். இதனால் பலர், ரசிகர்களுடன் உரையாடுவதுடன், மலரும் நினைவுகளில் மூழ்கி வருகிறார்கள். அந்தப் பட்டியலில் இணைந்திருக்கிறார் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மறுவரவை மேற்கொண்ட ஷெரின்.

தற்போது சமூக வலைத்தளங்களில் ஊக்கத்துடன் பதிவிடுவதில் அதிக நேரத்தைச் செலவிட்டுவரும் அவர், தனது அறிமுகப்படமான ‘துள்ளுவதோ இளமை’ படப்பிடிப்பின் போது ஊட்டியில் எடுக்கப்பட்ட ஒளிப்படத்தைப் பகிர்ந்து அதற்கு லைக்குகளை அள்ளி வருகிறார் ஷெரின். அந்தப் படம் வெளியாகி 18 ஆண்டுகள் ஆகின்றன.

ஜூலிக்கு நேரமில்லை!

மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது உற்சாகம் கொப்பளிக்க முழக்கங்கள் எழுப்பி பிரபலமானவர் ஜூலி. பின்னர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமடைந்த இவர், அடிப்படையில் ஒரு மருத்துவச் செவிலி. ஆனால், அந்தப் பணியை விட்டுவிட்டு முழுநேர நடிகையாக மாறினார். தற்போது வீட்டிலிருக்கும் அவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார்.

அப்போது அவரிடம், ‘நீங்கள் மீண்டும் உங்கள் நர்ஸ் பணிக்குத் திரும்பவில்லையா: இதுதானே உங்களை நிரூபிப்பதற்கான தருணம்?’ என்று ரசிகர் ஒருவர் கிடுக்கிப்பிடியாகக் கேட்டார். அதற்குப் பதிலளித்த ஜூலி, “இதே கேள்வியை எத்தனைபேர்தான் கேட்பீர்கள்... செவிலிப் பணி என்பது புனிதமானது. அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் அதற்குத் தேவை. ஒருநேரத்தில் ஒரு வேலையைத்தான் செய்ய முடியும். தற்போது சினிமா நடிப்பு மட்டுமே. நோயாளிகளின் உயிரை என்னால் பணயம் வைக்க முடியாது” என்று கூறி அந்த ரசிகரை வாயடைக்கச் செய்திருக்கிறார்.

அர்த்தம் தந்த பிறந்தநாள்

மார்ச் 26 அன்று தனது பிறந்த நாளை மனித நேயத்துடன் அர்த்தபூர்வமாகக் கொண்டாடியிருக்கிறார் பிரகாஷ்ராஜ். பாண்டிச்சேரி, சென்னை, கம்மம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் பலர் தங்க இடமின்றித் தவித்துக்கொண்டிருக்க, அதை அறிந்த பிரகாஷ்ராஜ், அவர்களுக்குத் தங்க ஒரு பாதுகாப்பான இடத்தைக் கொடுத்ததுடன், அவர்களுக்குப் பணமும் உணவுப்பொருட்களும் கொடுத்து அடைக்கலம் கொடுத்திருக்கிறார்.

இதைத் தனது ட்விட்டரில் குறிப்பிட்டிருக்கும் அவர், “நீங்களும் ஒரு குடும்பம் அல்லது ஒருவருக்கு உதவ வேண்டும் என்று கோருகிறேன்” எனக் கேட்டிருக்கிறார். முன்னதாக, கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியபோது தன் பணியாளர்கள் அனைவருக்கும் மே மாதம் வரை சம்பளம் கொடுத்து விடுமுறை அளித்துவிட்டதாகப் பதிவிட்டிருந்த அவரது ட்வீட்டுக்கும் பலமான பாராட்டுகள் கிடைத்திருக்கின்றன.

பூனையுடன் ஸ்ருதி

பதினைந்து நாட்களுக்கு முன்னர் லண்டனிலிருந்து மும்பைக்குத் திரும்பியிருந்தார் ஸ்ருதிஹாசன். குடும்பத்தினரின் பாதுகாப்புக்காகத் தற்போது தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் அவர், ‘தற்போது என்னுடன் யாரும் இல்லை, கிளாரா என்ற பூனை மட்டும் இருக்கிறது’ என்ற தகவலுடன் அந்தப் படத்தையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். இதற்கிடையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யாவுடன் ஸ்ருதிஹாசன் இனைந்து நடித்த ‘ஏழாம் அறிவு’ படத்தை வைத்துப் பலரும் மீம்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்தப் படத்தின் வில்லன் வெளிநாட்டிலிருந்து தமிழகத்துக்கு வந்து, நாயின் மூலம் வைரஸ் பரப்புவார். அப்போது அவரிடமிருந்து மக்களைக் காப்பாற்ற சூர்யாவை உயிர்பிழைக்க வைப்பார் ஸ்ருதிஹாசன். இதையே மீம் ஆக்கி ‘இந்தக் கொடிய வைரஸை அழிக்க போதி தர்மரை மீண்டும் உயிர்ப்பிக்க வைத்து அனைவரையும் காப்பாற்றுமாறு ஸ்ருதிஹாசனைக் கிண்டல் செய்து வருகின்றனர். ‘இவ்வாறு செய்யாதீர்கள்’ என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.

சோதனையில் ராதிகா

தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான ராதிகா ஆப்தேவும் பத்து நாட்களுக்கு முன் லண்டனிலிருந்து மும்பை திரும்பியிருக்கிறார். ஆனால், வந்தவர் வீட்டுக்குச் செல்லாமல் நேரே ஒரு வி.ஐ.பி. மருத்துவமனைக்குச் சென்று அங்கேயே தங்கிவிட்டார். “எனக்கு கரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதைப் பரிசோதனை செய்துகொள்ள மருத்துவமனைக்கு வந்திருக்கிறேன்.

பரிசோதனையின் முடிவு இன்னும் வரவில்லை. என்றாலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருத்துவமனையிலேயே இரண்டு வாரங்களுக்கு என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x