Published : 03 Apr 2020 09:09 AM
Last Updated : 03 Apr 2020 09:09 AM
கோபால்
குழந்தைகளைக் கடவுளுக்கு இணையான இடத்தில் வைத்துப் பேசும் சமூகம் நம்முடையது. ஆனால், அந்தக் கடவுளர் சின்னதாகச் சேட்டை செய்தாலோ பிடிவாதம் பிடித்தாலோ நம்மால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. கொஞ்சுதல், கெஞ்சுதல், அதட்டுதல், வசைபாடுதல், அடித்தல் இன்னபிற வகைகளில் துன்புறுத்தல் என அவர்களைப் படாதபாடுபடுத்தி நம்முடைய வழிக்குக் கொண்டுவந்து விடுகிறோம். நாம் வகுத்துக்கொண்ட விதிகளின் சட்டகத்துக்குள் அவர்களை அடைத்துவிடுகிறோம்.
என்ன செய்தாலும் அமைப்புக்குள் அடங்க மறுக்கும் குழந்தைகள் பிரச்சினைக்குரியவையாகவும் சீர்திருத்தப்பட வேண்டியவையாகவும் பார்க்கப்படுகின்றன. ஆனால், இவை போன்ற எதற்கும் அடிபணியாமல் அமைப்பை உடைத்துக்கொண்டே இருக்கிறாள் ஒன்பது வயதுச் சிறுமியான பென்னி. 17-ம் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஜெர்மானியத் திரைப்படமான ‘சிஸ்டம் கிராஷர்’ (System Crasher), அந்த பென்னியின் கதையைக் கூறுகிறது.
கண்காணிக்கப்படும் சிறுமியின் கதை
பென்னியின் தாய் வேறொருவரைத் திருமணம் செய்துகொண்டவர். தாய் மீது அளவுகடந்த பாசம் கொண்ட பென்னியால், அவரது புதிய துணையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எளிதில் உணர்ச்சிவசப்பட்டு வன்முறையைக் கையிலெடுக்கும் அவளைத் தன்னுடன் வைத்திருப்பது தன்னுடைய மற்ற குழந்தைகளுக்கு ஆபத்து என்று உணர்கிறார் அவளுடைய தாய்.
பென்னியின் பிரச்சினைகளைச் சரிசெய்வதற்கான பொறுப்பை ஏற்கும் அரசு, அவளைக் குழந்தைகள் நலக் காப்பகங்களுக்கு அனுப்பி பிரத்யேகக் கவனிப்பு, சிறப்புப் பயிற்சிகளின் மூலம் இயல்பான குழந்தையாக அவளை மாற்ற முயல்கிறது. ஆனால், பென்னியின் அதிதீவிரமான செயல்பாடுகளால் இப்படிப்பட்ட காப்பகங்களில் இருக்கும் மற்ற குழந்தைகளும் பாதிக்கப்படுவதற்கு அஞ்சி, அவளது பிரச்சினை சரிசெய்யப்படுவதற்கு முன்பே அவளை வெளியேற்றிவிடுகின்றன.
வேறு வார்த்தைகளில் சொல்வ தானால் இப்படிப்பட்ட காப்பகங்களில் வைத்துச் சமாளிக்க முடியாதவளாக பென்னி இருக்கிறாள். அவளுடைய பராமரிப்பைக் கண்காணிப்பதற்கான அரசு அதிகாரி, அவளுடைய தாயுடன் அவளை சேர்த்துவிட முயல்கிறார். அந்த முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன.
கனிவைப் பெறும் கண்காணிப்பாளன்
பள்ளியிலும் பென்னியின் செயல்பாடுகளால் மற்ற குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன. பள்ளிக்கு அவளை அழைத்துச் சென்று, அவளுடன் பள்ளியில் இருந்து அவளைக் கவனித்துக் கொள்வதற்கும் நிலைமை கட்டுமீறிப் போகும்போது கையாளவும் மைக்கேல் ஹெல்லர் என்ற அதிகாரி நியமிக்கப்படுகிறார். மின்சாரம், தொலைக்காட்சி போன்ற நவீன வசதிகள் எதுவுமில்லாத காட்டுப் பகுதிக்கு பென்னியை அவர் அழைத்துச் செல்கிறார். அவளுடன் அங்கே சில நாள் தங்கி, அவளுடைய பிரச்சினையைச் சரிசெய்ய முயல்கிறார். அந்த முயற்சியும் தோல்வியடைகிறது. ஆனால், பென்னிக்கு மைக்கேல் மீதான பிணைப்பு அதிகரித்துவிடுகிறது.
தன் தாயுடன் இணைவது தாமதமாகிக்கொண்டே போகும் சூழலில், மைக்கேலுடன் இருந்துவிட அவள் விரும்புகிறாள். பென்னியின் வயதுகொண்ட பெண்ணை, ஆண் அதிகாரி ஒருவர் தன்னுடைய பராமரிப்பில் வைத்துக்கொள்வது சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தலாம். அத்துடன் பணி நிமித்தமாகக் கையாளும் சிறார்கள் அனைவருட னும் உணர்வுபூர்வமான பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுவிட்டால், மைக்கேலைப் போன்ற அதிகாரிகளால் வாழ்க்கை நடத்த முடியாது. ஆனால், மைக்கேலுக்கும் பென்னியுடன் உணர்வுபூர்வமான ஒட்டுதல் ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை. இதனால் பென்னியைக் கண்காணிக்கும் பணியிலிருந்து விலகுகிறார்.
ஆனால், தடைகளை மீறி மைக்கேலின் வீட்டுக்குத் தப்பிச் சென்றுவிடுகிறாள் பென்னி. அங்கு மைக்கேலின் மனைவி அவளை அன்புடன் வரவேற்கிறார். அங்கே தங்கியிருக்கையில் அவர்களுடைய கைக்குழந்தை மீது அளவு கடந்த பாசம் காட்டுகிறாள் பென்னி. அதுவே அந்தக் குழந்தைக்கு ஆபத்தாக முடிகிறது. இவற்றால் பென்னியை மீண்டும் காப்பகத்தில் விட்டுவிடுகிறார் மைக்கேல்.
இறுதியில் ‘பென்னியை வெளிநாட்டுக்கு அனுப்பி, அவளுடைய பிரச்சினைகளைச் சரிசெய்யலாம்’ என்ற குழந்தைகள் மனநல மருத்துவரின் பரிந்துரையைச் செயல்படுத்த முடிவெடுக்கிறார்கள். விமான நிலையத்துக்கு அவளை அழைத்துச் செல்லும்போது கைகளை விடுவித்துக்கொண்டு வேகமாக ஓடும் பென்னி, விமானங்களுக்கு செல்வதற்கு முன்னால் கண்ணாடிச் சுவரை மோதி உடைக்கும் காட்சியுடன் படம் நிறைவடைகிறது. திட்டமிடப்பட்ட விதிகளைப் பின்பற்றும் எந்த ஒரு அமைப்புக்குள்ளும் பென்னியை அடக்க முடியாது என்பதே நிதர்சனமாக இருக்கிறது.
அசெளகர்யமான கேள்விகள்
நோரா ஃபிங்ஸ்ஷீட் (Norah Fingscheidt) எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தைப் பார்க்கும்போது இந்தியர்களாகிய நாம் குழந்தைகளை அணுகும் விதம் குறித்த அசெளகர்யமான கேள்விகள் எழுகின்றன. பென்னியை அவளுடைய தாயுடன் அனுப்பிவைக்கும் முயற்சி தோற்றுப்போகும் தருணத்தில், கையறு நிலையில் கட்டுப்படுத்த முடியாமல் அழுகிறார், அவளுக்குப் பொறுப்பேற்றிருக்கும் அரசு அதிகாரி. அப்போது அவருடைய கண்ணீரைத் துடைத்துவிடும் பென்னியின் விரல்கள், நம் இதயத்தையும் வருடுவதாக அமைகிறது.
அதேநேரம், தான் கேட்டது மறுக்கப்படும்போது வரவேற்பறையில் சிறுநீர் கழித்துத் தன் கோபத்தை அவள் வெளிப்படுத்தும்போது, இப்படிப்பட்ட குழந்தையை நாம் எப்படிக் கையாள்வோம் என்ற கேள்வி எழுகிறது. நம் வீட்டுக் குழந்தையாக இருந்தால் ஒரு விதமாகவும் ஊரார் பிள்ளையாக இருந்தால் ஒரு விதமாகவும் அணுகுவோம் அல்லவா? ஊரார் வீட்டுப் பிள்ளை என்றால், அதைப் பற்றி மற்றவர்களிடம் புரணி பேசுவோம் இல்லையா? அப்படி இல்லாமல் அனைத்துக் குழந்தைகளையும் அன்புடனும் நிதானத்துடனும் அணுக வேண்டும் என்று நினைப்பவர்கள்கூட, பென்னி போன்ற குழந்தைகளுடைய செய்கைகளைப் பொறுமையுடன் கையாள முடியுமா? இந்தக் கேள்விகளை நமக்குள் எழுப்பிக்கொள்ள வழிவகுக்கிறது இந்தப் படம்.
மறுபுறம் ஜெர்மானிய அரசும் சமூகமும் இப்படிப்பட்ட குழந்தை களுக்குக் கூட்டுப்பொறுப்பு ஏற்றுக்கொள்ளும் விதம், நமக்கான படிப்பினை. இந்தக் குழந்தைகள் குறித்த முடிவுகளை யாரும் தனியாக எடுப்பதில்லை. குழந்தையின் பெற்றோர், மனநல, உடல்நல மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், குழந்தை உளவியல் ஆலோசகர்கள் என அனைத்துத் தரப்பினரும் சேர்ந்து விவாதித்தே முடிவுகளை எடுக்கிறார்கள். எந்த நேரத்திலும் குழந்தை மீது வன்முறை பிரயோகிக்கப்படுவதில்லை.
இதையெல்லாம் பார்க்கும்போது நாமும் குழந்தைகளை ஏன் இப்படிக் கையாளக் கூடாது என்று தோன்றுகிறது. அதற்கேற்ற பக்குவத்தைப் பெற நாம் மனத்தளவில் கடக்க வேண்டிய தொலைவு மிக அதிகம் என்ற உண்மையை, இந்தப் படம் நமக்கு உணர்த்திச் செல்கிறது. இந்தப் படத்தைப் பார்த்தபிறகு முரட்டுக் குழந்தைகள் மீதான உங்கள் அணுகுமுறையில் ஏற்படும் மாற்றம்தான் இதன் வெற்றியும்கூட.
தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT