Published : 27 Mar 2020 09:00 AM
Last Updated : 27 Mar 2020 09:00 AM

70 நாட்கள் ஜெயிலில் இருந்தேன்! - சாக் ஷி அகர்வால் பேட்டி

ஆர்.சி.ஜெ.

பல சிறு முதலீட்டுப் படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தாலும் ‘காலா’ படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து கவனம் பெற்றார் சாக் ஷி அகர்வால். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்குக் கூடுதல் வெளிச்சம் தந்தது. தற்போது ஜி.வி.பிரகாஷுடன் ‘ஆயிரம் ஜென்மங்கள்’, ஆர்யாவுடன் ‘டெடி’ என அசத்திவரும் அவருடன் உரையாடியதிலிருந்து...

‘பிக்பாஸ் பொண்ணு’ - ‘காலா பொண்ணு’ இந்த இரண்டில் எது உங்களுக்குப் பிடித்தமான அடையாளம்?

‘காலா’தான் எனக்கு பளிச்சென்று அடையாளத்தைக் கொடுத்தது. ரஜினி சாரின் மருமகளாகச் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், அது தந்திருக்கும் புகழுக்கு எதுவும் இணையில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை, எனக்கு மிகச் சிறந்த பாடங்களை அது கற்றுக்கொடுத்தது. நானும் என் தங்கைகளும் வீட்டில் செல்லப்பெண்களாகச் செல்வாக்குடன் வளையவருபவர்கள். வீட்டில் நமக்குக் கேட்டது கிடைக்கும். அம்மா, அப்பாபோல் பாதுகாப்பு வளையமாக உலகில் யாருமே இருக்க முடியாது.

ஆனால், பிக்பாஸ் வீட்டுக்குள் போன் கிடையாது. வெளியுலகுடன் தொடர்பு கிடையாது என்ற நிபந்தனைக்கு ஒத்துக்கொண்டு போய்விட்டாலும், மூன்றாவது நாளிலிருந்து மன அழுத்தம் உருவாகிவிட்டது. நிறைய விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது. நிறைய எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருந்தது. விதவிதமான மனிதர்களை முதல்முறையாக ஒரு பூட்டிய வீட்டுக்குள் சந்தித்தபோது அவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதைப் பார்த்தேன். அங்கே நான் நானாக இருக்கப்போய் அனுபவித்த நெருக்கடிகள் கொஞ்சநஞ்சமல்ல. அங்கே இருந்த 70 நாட்களும் ஜெயிலில் இருந்ததுபோன்ற உணர்வுதான். மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வீர்களா என்று கேட்டால், நிச்சயமாகப் போகமாட்டேன் என்பதுதான் எனது பதில்.

‘காலா’, ‘பிக்பாஸ்’ இரண்டிலும் மறக்கமுடியாத அனுபவம்?

காலா வசிக்கும் பகுதியை வில்லனின் ஆட்கள் கொளுத்திவிடுவார்கள். ஊரே எரிந்துகொண்டிருப்பதுபோல் விடிய விடிய ஷூட் செய்துகொண்டிருந்தார் இயக்குநர் இரஞ்சித் சார். அன்று எனக்குப் பிறந்தநாள். அதை யாரிடமும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன். அதிகாலை 6 மணிக்கு கேக் வரவழைத்து படக்குழுவைக் கூட்டி, ‘ஹேப்பி பர்த் டே’ பாடல் பாடி என்னை வெட்டவைத்து முதல் துண்டு கேக்கை எடுத்து எனக்கு ஊட்டிவிட்டு சர்பிரைஸ் கொடுத்தார் ரஜினி சார். அடுத்துவந்த ஆண்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உலகநாயகன் கமல் சாருடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினேன். இந்த பிறந்த நாட்களை மறக்கவே முடியாது.

‘விஸ்வாசம்’ படத்தில் நடித்தபோது அஜித்துக்கு சமையல் சொல்லிக்கொடுத்தீர்களாமே?

‘தல’ என்ற பெயருக்கு பொருத்தமானவர் அஜித். பெண்களை மதிப்பதிலும் அவரை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. திரை நடிப்பில் மட்டுமல்ல; ரேஸிங், ஏரோகிராஃப்ட், போட்டோகிராபி, குக்கிங் என எதைச் செய்தாலும் முழுமையாகவும் சிறப்பாகவும் செய்யவேண்டும் என்பதையும் அவரிடம் கற்றுக்கொள்ளலாம். ‘விஸ்வாசம்’ படத்தில் எனக்கு சிறிய வேடம் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் நடித்தது இதற்காகத்தான். அவருக்கு நான் சமையல் சொல்லிக்கொடுக்கவில்லை. ஆனால், எங்கள் வீட்டுச் சமையலில் எவையெல்லாம் செம ருசியாக இருக்கும் என்று கூறினேன்.

அதில் ‘தால் பாட்டி சுர்மா’ என்ற டிஷ் அவருக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. எனது அம்மாவிடம் அதைச் செய்வது எப்படி என்பதை வாட்ஸ் ஆப் வழியே கேட்டு வாங்கி, படப்பிடிப்பில் அதைச் செய்து முதலில் எனக்குப் பரிமாறி ‘எப்படியிருக்கிறது?’ என்று கேட்டார். எனது அம்மா எப்படிச் செய்வாரோ, அதேபோன்ற சுவையைக் கொண்டுவந்துவிட்டார் அஜித். அதுதான் அவரது திறமை. எதையும் அர்ப்பணிப்புடன் செய்வதால், இது அவருக்குச் சாத்தியமாகிறது.

‘ஆயிரம் ஜென்மங்கள்’, ‘சிண்ட்ரெல்லா’ ஆகிய இரண்டு படங்களிலும் பேய் வேடம் போடுகிறீர்களா?

இல்லவே இல்லை. ‘சிண்ட்ரெல்லா’ படத்தில் ராய் லட்சுமிதான் டைட்டில் ரோலில் நடிக்கிறார். நான் அவருக்கு நேரெதிர் கதாபாத்திரத்தில் இருள் சூழ்ந்த உலகின் தேவதையாக வருகிறேன். ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தில் பாவாடை - தாவணியில் கிராமத்துப் பெண்ணாக வட்டார வழக்கில் பேசி நடித்திருக்கிறேன். முதலில் என்னை விரும்பும் ஜி.வி.பி. வெளிநாட்டுக்குப் போய் வந்ததும் மாறிவிடுவார். அப்போது நான் அவரை எப்படிப் பழிவாங்குகிறேன் என்பதுதான் என்னுடைய கதாபாத்திரம்.

ஆர்யா நடித்த ‘ராஜா ராணி’யில் சிறு வேடத்தில் வந்தீர்கள்; இப்போது ‘டெடி’யில் இரண்டாவது கதாநாயகி அல்லவா?

ஆமாம். நடிப்பின் மீது இருந்த காதலால் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று, அங்கே மெத்தட் ஆக்டிங் கற்றுத்தரும் மிகச் சிறந்த நடிப்புப் பள்ளியான லீ ஸ்ட்ராபெர்கின் ஆக்டிங் ஸ்டுடியோவில் இந்திய மதிப்பில் 18 லட்சம் ரூபாய் கட்டி ஆறு மாதம் படித்தேன்.

தங்கும் செலவு, உணவு எல்லாவற்றுக்கும் சேர்த்து அப்பா 30 லட்சம் ரூபாய் செலவுசெய்தார். அப்போது ஹாலிவுட்டில் ஒரு ஸ்டுடியோவையும் விட்டுவைக்கவில்லை. வகுப்பு நேரம் போக சுற்றிக்கொண்டே இருப்பேன். நடிக்க வேண்டும் என்ற வெறியுடன் இந்தியா வந்தபோது மாடலிங் வாய்ப்புகள் கிடைத்தன.

அதன்மூலமே ‘ராஜா ராணி’. இப்போது ‘டெடி’யில் ஆர்யாவுடன் நெருக்கமாக நடிக்கும் கதாபாத்திரம். ‘டெடி’ பொம்மையுடனும் பல காட்சிகளில் நடித்திருக்கிறேன். என்னை நடிகை என்று சொல்வதை நான் விரும்பவில்லை. ஆக்டர் என்ற பொதுப்பெயரால் குறிப்பிடுங்கள். எனக்கு அவ்வளவு நடிப்புத் தாகம் இருக்கிறது.

ஒரு நிமிடம் வரும் கதாபாத்திரம் என்றாலும் ‘ஆக்டர்ஸ் மேஜிக்’ என்ற தருணத்தை நடிப்பில் தர, அதில் எனக்கு இடமிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சிறந்த ‘பெர்ஃபாமர்’ என்று பெயர் வாங்க வேண்டும் என்பதைத் தவிர, எனக்கு வேறு எந்த ஆசையும் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x