Published : 27 Mar 2020 08:34 AM
Last Updated : 27 Mar 2020 08:34 AM

பாம்பே வெல்வெட் 28: வைரல் வெற்றிகளின் ஜிகினா நாயகன்!

‘ஹிம்மத்வாலா’(1983) படத்தில் ஸ்ரீதேவி, ஜிதேந்திரா

எஸ்.எஸ்.லெனின்

ரவி கபூர் என்ற அந்த இளைஞன் அன்றும் பதைபதைப்புடன் காத்திருந்தான். அவனுடைய குடும்பம், பம்பாய் சினிமா ஸ்டுடியோக்களுக்காக செயற்கை நகைகளை தயாரித்து வழங்கிவந்தது. அவற்றை சுமந்துகொண்டு படப்பிடிப்புகளை நேரில் காணும் ஆசையுடன், கல்லூரி மாணவனான ரவி கபூர் அடிக்கடி ஸ்டுடியோக்களுக்கு வலியச் செல்வதுண்டு. ஆனபோதும் அவனுடைய ஆவல் ஈடேறியபாடில்லை.

அன்றைய தினம் படக்குழுவில் நடுநாயகமாய் வீற்றிருந்தவரிடம் வெளிப்படையாகவே கேட்டுவைத்தான். அவனை ஏற இறங்கப் பார்த்தவர், அடுத்த நாள் வரச் சொன்னார். எதிர்பார்ப்புடன் அடுத்த நாள் அங்கே காத்திருந்தவனுக்கு, எதிர்பாராத விதமாக சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சினிமா ஆசையெனும் சிறு பொறி அங்கே அவனைப் பற்றிக்கொண்டது. வாய்ப்பு தந்த வி.சாந்தாராம் என்ற அந்த பிரபலத் தயாரிப்பாளர் தனது அடுத்த திரைப்படத்தில் ரவி கபூரின் பெயரை ஜிதேந்திரா என்று மாற்றினார்.

பொழுதுபோக்கின் நாயகன்

இப்படித்தான் வேடிக்கை பார்க்கச் சென்று, அதிர்ஷ்டக் காற்று அடித்ததில் ஜிதேந்திரா என்ற நடிகர் உருவானார். தனது நாற்பதாண்டு திரைப் பயணத்தில் சுமார் 200 திரைப்படங்களில் கதாநாயகனாகத் தோன்றியிருக்கிறார். அவற்றில் 120 படங்கள் ‘வைரல் ஹிட்’ என்று இன்று பாலிவுட் வர்ணிக்கும் பெரிய அளவிலான வெற்றியைப் பெற்றவை. வயதான நட்சத்திரங்களுக்குக் கிடைக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு அப்பால், நடிப்புக்கென தனியாக விருதுகள் எதுவும் அவருக்கு வாய்த்ததில்லை. அவற்றை ஜிதேந்திரா எதிர்பார்த்ததும் இல்லை.

சினிமா என்பது மக்களை மகிழ்விக்கும் பொழுதுபோக்கு என்ற நிலைபாட்டில் அவர் உறுதிகொண்டிருந்தார். நம்பிவரும் ரசிகனை சில மணி நேரம் இன்னொரு ஜிகினா உலகில் சஞ்சரிக்க வைத்து அனுப்புவது மட்டுமே ஜிதேந்திரா படங்களின் நோக்கமாக இருந்தன. நிகழ்கால நிதர்சனங்களின் துயரிலிருந்து தப்பிக்க விரும்பிய சாமானியனுக்கு, ஜிதேந்திராவின் திரைப்படங்கள் வடிகாலாக இருந்தன. பொழுதுபோக்கை முதன்மையான நோக்கமாகக் கொண்ட தனது திரைப்படங்களின் தொடர் வெற்றிகளின் வாயிலாக எண்பதுகளின் பாலிவுட் போக்கைத் தீர்மானிக்கும் நட்சத்திரமாகவும் ஜிதேந்திரா உயர்ந்திருந்தார்.

‘ஜம்பிங் ஜாக்’ ஜிதேந்திரா

துக்கடா கதாபாத்திரங்களில் தலைகாட்டி வந்த ஜிதேந்திராவுக்கு ‘ஃபர்ஜ்’(1967) திரைப்படம் திருப்புமுனையானது. ஜேம்ஸ்பாண்ட் கதையை அப்பட்டமாகத் தழுவிய த்ரில்லர் கதையில் துடிப்பான நாயகனாகத் தோன்றினார். நாயகி பபிதாவுடன் கைகோத்து ஏகப்பட்ட நடனக் காட்சிகளும் அதில் நிறைந்திருந்தன. பாலிவுட்டில் அப்போதைக்கு நடனம் என்றால் ஷம்மி கபூர் மட்டுமே ரசிகர்களை ஈர்த்திருந்தார். மற்றவர்களெல்லாம் கைகால் வீச்சு, வாயசைப்பை நடனம் என்று நம்பிக்கொண்டிருந்தார்கள். நடனத்தில் பரிச்சயமில்லாத ஜிதேந்திராவுக்கும், அது பெரும் தடுமாற்றம் தந்தது.

ஆனால், அதைச் சவாலாக எதிர்கொண்டவர், ஒவ்வொரு நடனக் காட்சிக்கும் பல நாட்கள் பயிற்சியெடுத்தார். ஓயாத பயிற்சியால் ஒருவித உடற்பயிற்சியின் ஓட்டம் நடனத்தில் ஒட்டிக்கொண்டது. அதை அப்போதைய மேற்கத்திய அசைவுகளில் இழைத்து ஆட ஆரம்பித்தார். அதன் விளைவாக உடற்பயிற்சியின் சார்புகொண்ட ‘ஜம்பிங் ஜாக்’ என்ற பட்டம் ஜிதேந்திராவுக்கு முன்னொட்டாக முளைத்தது. பருத்த உடல் ஒத்துழைக்கவில்லை என ஷம்மி கபூர் நடனத்திலிருந்து விலகத் தொடங்கிய சூழலில், அந்த இடத்தை தனது பிரத்யேக நடன அசைவுகளுடன் ஜிதேந்திரா ஆக்கிரமித்தார்.

குல்சாரின் மோதிரக் குட்டு

நடனத்தின் அசைவுகள் மட்டுமல்ல, ஜிதேந்திரா அணிந்த காலணி உட்பட, ஆடைகள் அத்தனையும் வெள்ளை வெளேர் எனக் கவனம் பெற்றன. தொடக்கத்தில் ஜிதேந்திராவின் உடற்பயிற்சி நடனத்துக்கு ரசிகர்கள் நகைத்தார்கள். தொடர்ந்து நகைப்பு மாறாது, ரசிக்கத் தொடங்கினார்கள். ‘ஃபர்ஜ்’ தொடங்கி, ‘காரவான்’, ‘ஹம்ஜோலி’ உள்ளிட்ட திரைப்படங்களில் ஜிதேந்திராவின் நடனம் பேசப்பட்டது.

நடனத்தை துருப்புச் சீட்டாக்கி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றதும், அடுத்து நடிப்பின் மூலம் தனக்கான இடத்தைத் தக்கவைக்க ஜிதேந்திரா முயன்றார். இதற்கு குல்சார் என்ற மகத்தான மோதிரக் கையின் தொடர் ‘குட்டு’கள் உதவின. ‘கினாரா’, ‘பரிசய்’, ‘குஷ்பூ’ என எழுபதுகளில் பெயர் பெற்ற குல்சாரின் படங்கள் ஜிதேந்திராவுக்கு கைகொடுத்தன. தனது வழக்கமான நடனப் பாடல்களுக்கு மாற்றாக சாத்விக இசையிலான ‘முசாஃபிர் ஹூன் யாரோன்..’, ‘ஓ மஜி ரே..’ பாடல்கள் மூலம் ஜிதேந்திராவின் ரசிகப் பரப்பு மேலும் விரிவடைந்தது.

தெக்கத்திக் காத்து

எண்பதுகளின் தடம்மாறிய பாலிவுட் போக்கும், ஜிதேந்திராவின் தனிப் பாணியும் ஒரே புள்ளியில் சந்தித்தன. பம்பாய்க்கு வெளியே ஹைதராபாத், சென்னையில் தயாரான பல இந்திப் படங்களில் ஜிதேந்திராவே நாயகனாக இருந்தார். டி.ராமராவ், கே.ராகவேந்திர ராவ் எனத் தெலுங்கு ‘டைரக்டரு காரு’களின் ஆஸ்தான நடிகரானார். தோதாக தேவி, ரேகா, ஹேமமாலினி என தெக்கத்திக் கதாநாயகிகளே ஜோடியாகவும் தோன்றினார்கள்.

‘ஜஸ்டிஸ் சௌத்ரி’, ‘மவாலி’, ‘ஹிம்மத்வாலா’(1983), ‘மஜால்’(1987) என வரிசை கட்டிய அவருடைய படங்கள், அப்போதைய பாலிவுட் வர்த்தகத்தை பெரிதும் தீர்மானித்தன. சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா உள்ளிட்ட தெலுங்குக் கதாநாயகர்களின் திரைப் படங்களின் மறுஆக்கமாக ஜிதேந்திராவின் படங்கள் இருந்ததால், தெலுங்கு சினிமாவின் தாக்கம் இந்தியில் அதிகம் எதிரொலித்தது. ஜிதேந்திராவை பின்பற்றி புதுமுகங்கள் நடித்த தெலுங்குக் கதைகள் ஏராளமாக வெளியானதும் அப்போது நடந்தது. ஆனபோதும் ஒரே நாளில் நான்கைந்து படப்பிடிப்புகளில் ஜிதேந்திரா ஓடியோடி நடித்தார். ரசிகர்களும் அப்படங்களை சமரசமின்றி வெற்றிபெறச் செய்தனர்.

ஜிதேந்திராவின் சாம்ராஜ்யம்

எண்பதுகளின் முடிவில் பாலிவுட்டின் போக்கு மாற்றம் கண்டது. ஜிதேந்திரா நாயகனாக நடித்த ‘காகரி சால்’ என்ற திரைப்படத்தில் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அமிதாப் பச்சன், அப்போது உச்ச நட்சத்திரமாக வளர்ந்திருந்தார். இளம்வயது தோழியாகப் பழகி, மனைவியாக கரம் பிடித்த ஷோபாவின் துணையுடன் தனது திரையுலக சரிவை திறந்த மனதுடன் ஜிதேந்திரா ஏற்றுக்கொண்டார்.

திரைக்கு முன்னிற்காமல், திரைக்குப் பின்னே தாவினார். அவர் உருவாக்கிய பாலாஜி டெலிஃபிலிம்ஸ் இந்தியா முழுக்க பல்வேறு மொழிகளில் புகழ்பெற்றத் தொலைக்காட்சித் தொடர்களை தயாரித்துவருகிறது. அவற்றுக்கு பொறுப்பேற்ற ஜிதேந்திராவின் மகள் ஏக்தா கபூர் பாலிவுட் சினிமா தயாரிப்பிலும், இந்திய இணையத் திரைத் தயாரிப்புகளிலும் ஆதிக்கம் செலுத்திவருகிறார். மகன் துஷார் கபூர் சொந்தமாகப் படங்கள் தயாரிப்பதுடன் பாலிவுட் நடிகராகவும் வலம்வருகிறார்.

அறுபதாண்டு பாலிவுட் பயணத்தில் திரைக்குமுன்னும் பின்னுமாக ஜிதேந்திரா தொட்டதெல்லாம் பொன்னாகி வருகிறது. தான் உச்சத்திலிருந்த 15 ஆண்டுகளில் பாலிவுட்டின் போக்கை தீர்மானித்ததுடன், அதன் பின்னரும் தனது வாரிசுகள் மூலம் கோலோச்சிவருகிறார். ஜிதேந்திராவுக்கு நடிப்புக்கென பெரிய அங்கீகாரமோ விருதோ கிடைக்காமல் போயிருக்கலாம். அவை இல்லாமலேயே திரையுலகில் வெற்றிபெறலாம் என்ற நம்பிக்கையை, இன்றைக்கும் படப்பிடிப்புகளை எட்டிப்பார்க்கும் புதிய ‘ரவி கபூர்’களுக்கு ஜிதேந்திரா உணர்த்திவருகிறார்.

தொடர்புக்கு: leninsuman4k@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x