Last Updated : 21 Aug, 2015 12:43 PM

 

Published : 21 Aug 2015 12:43 PM
Last Updated : 21 Aug 2015 12:43 PM

என் மகள் வந்திருக்கிறாள்!

19 ஆகஸ்ட் 1965: செம்மீன் 50 ஆண்டுகள் நிறைவு

தேசத்தின் தென்முனையில் வாழும் மலையாள சினிமா மீது அழுத்தமான தாக்கத்தைச் செலுத்தின சத்தியஜித் ராய் படைத்த வங்காளத் திரைப்படங்கள். இதனால் ஆறுபதுகளின் ஆரம்பத்திலேயே மலையாள சினிமா கலையுணர்வின் வண்ணத்தை பூசிக்கொண்டது. நவீன மலையாள இலக்கியமும் செழித்து நின்ற அக்காலகட்டத்தில் ஓர் அசலான இலக்கியப் படைப்பு அங்கே திரைவடிவம் பெற்றது. அதுதான் தென்னிந்தியாவுக்கு முதல் ஜனாதிபதி விருதைப் பெற்றுத் தந்த ‘செம்மீன்’ திரைப்படம்.

தகழி எனும் தலைமகன்

நவீன மலையாள இலக்கியத்தில் யதார்த்த வகை எழுத்தைத் தொடங்கி வைத்தவர் என்று புகழப்படும் தகழி சிவசங்கரன் பிள்ளை, ஒடுக்கப்பட்ட மற்றும் பட்டாளி மக்களுக்காக தன் படைப்புகளில் தந்த இடம் மலையாள இலக்கியத்தின் போக்கை யதார்த்தம் நோக்கித் திருப்பியது. இவரது ‘செம்மீன்’ நாவல் இந்தியாவின் சிறந்த இலக்கியப் படைப்புக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றது. அதேபோல் யுனெஸ்கோவால் தேர்ந்தெடுக்கப்பட்ட செம்மீன் 50க்கும் அதிகமான உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது.

இதனால் தகழி உலகப்புகழ் எழுத்தாளர் ஆனார். தமிழில் செம்மீனை சுந்தர ராமசாமி மொழிபெயர்த்தார். இடதுசாரி கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நாடகப் பட்டறையான ‘கேரள மக்கள் கலைக்கூட’த்தில் பயிற்சிபெற்று மலையாள சினிமாவில் நுழைந்து பல தரமான படங்களை இயக்கியவர் ராமு காரியத். அவர் செம்மீன் நாவலைப் படமாக்க விரும்பினார். இதற்காகத் தகழிக்கு 8000 ரூபாய் கொடுத்துக் கதை உரிமையைப் பெற்றார். மீனவர்களின் போராட்ட வாழ்க்கையை, அவர்களது அசைக்க முடியாத நம்பிக்கைகளை, அவர்களது பழக்கவழக்கங்களை, மிக நுட்பமாகவும் நேர்த்தியாகவும் நாவலில் படைத்திருக்கிறார் தகழி. அதன் ஆன்மா சிறிதும் கெட்டுவிடாமல் திரைக்கதை அமைக்கும்படி தனது திரைக்கதை எழுத்தாளர் எஸ்.எல்.புரம் சதாநந்தனைக் கேட்டுக்கொண்டார் இயக்குநர் ராமு காரியத்.

செம்மீன் கதை

கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் பத்திரமாகத் திரும்பி வருவதும் அவர்கள் வறுமையின்றி வாழ்வதும் வீட்டிலிருக்கும் அவர்களது மனைவிமார்களின் கற்பு நெறி தவறாமையில்தான் இருக்கிறது. தவறினால் கடலம்மா அந்தப் பெண்ணின் கணவனையும் அந்தக் குடும்பத்தையும் அழித்துவிடுவாள் என்பது மீனவர்களின் நம்பிக்கை. கணவன் கடலுக்குச் செல்லும்போது அவரது கற்புள்ள மனைவி கரையி லிருந்துகொண்டு கடலம்மாவிடம் வேண்டிக்கொள்வாள். இதுவே செம்மீன் நாவலின் மையக் கரு.

கேரளத்தின் அழகிய கடற்கரை ஊர் அது. அங்கே வசிக்கும் செம்பன்குஞ்சு கூலிக்கு மீன் பிடிக்கும் ஏழை மீனவன். அவனது மனைவி சக்கி. இவர்களது மூத்த மகள் கருத்தம்மா. பெயர்தான் கருத்தம்மாவே தவிர கடற்கரை நந்தவனத்தின் ரோஜா அவள். மீன்களை மொத்தமாகக் கொள்முதல் செய்து விற்கும் பரிக்குட்டியின் மீது காதல் கொள்கிறாள். பரிக்குட்டி ஒரு முஸ்லிம். செம்பன்குஞ்சு தன் கனவை நிறைவேற்றிக்கொள்ளத் தன் மகளின் காதலைப் பகடைக்காயாகப் பயன்படுத்திக்கொள்கிறார்.

கருத்தம்மாவை அனுப்பி, தனக்கொரு படகும் வலையும் வாங்குவதற்குப் பரிக்குட்டியிடம் உதவி கேட்கிறான். செம்பன்குஞ்சு பிடித்துவரும் மீன்களைத் தனக்குத்தான் விற்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் உதவுகிறான் பரிக்குட்டி. ஆனால் நிபந்தனையை மீறி அதிக விலைக்கு வேறு வியாபாரிகளிடம் மீன்களை விற்றுவிடுகிறான் செம்பன். இதைக் கண்டு கருத்தம்மாவும் சக்கியும் அவனிடம் சண்டையிடுகிறார்கள்.

இதற்கிடையில் பழநி என்னும் மீனவ இளைஞனைச் செம்பனுக்குப் பிடித்துவிடுகிறது. சொந்தமாகப் படகும் வலையும் வைத்திருக்கும் நிராதரவான அவனுக்குத் தன் மகள் கருத்தம்மாவைத் திருமணம் செய்துகொடுத்து அவனைத் தன் வீட்டோடு வைத்துக்கொள்ள திட்டமிடுகிறான். ஆனால் செம்பனின் இந்த சுயநலப்போக்கு சக்கிக்குப் பிடிக்கவில்லை. ஆனால் செம்பனின் கையே ஓங்குகிறது. திருமணத்திற்கு முன்தினம் கருத்தம்மா பரிக்குட்டியைச் சந்திக்கிறாள். “ தனக்கு வேறு வழியில்லை” என்று கூறி, தன்னை மன்னித்து, மறந்து வேறொரு பெண்ணை மணந்துகொள்ளும்படி கூறுகிறாள். பரிக்குட்டியோ மறுத்துவிடுகிறான்.

திருமணம் முடிந்ததும் நிலைமை மாறுகிறது. செம்பனின் விருப்பதுக்கு மாறாகக் கருத்தம்மாவைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடுகிறான் பழநி. செம்பனின் கனவு தகர்கிறது. பழநி மீதுள்ள கோபத்தால் கருத்தம்மாவைச் சென்று பார்க்க விரும்பும் சக்கியைத் தடுத்துவிடுகிறான். கருத்தம்மா ஒரு குழந்தைக்குத் தயாகிறாள்.

மகளைக் காண முடியாத சக்கி நோய்வாய்ப்பட்டு இறந்துபோகிறாள். சக்கி இறந்த செய்தியைச் சொல்லக் கருத்தம்மாவின் வீட்டுக்குச் செல்கிறான் பரிக்குட்டி. தாயின் இழப்பை எண்ணிக் கதறி அழுகிறாள் கருத்தம்மா. பரிக்குட்டியைப் பார்த்து பழநியும் அவரது ஊர்க்காரர்களும் சந்தேகப்படுகிறார்கள். அன்றிரவு பரிக்குட்டியைக் காதலித்தைக் கணவன் பழநியிடம் சொல்லிவிடுகிறாள் கருத்தம்மா.

“உன் மனைவி ஒழுக்கங்கெட்டவள்” என்று கூறி, பழநியுடன் கடலுக்குச் சென்றால் தங்கள் குடும்பத்துக்கு ஆபத்து வரும் என்று சக மீனவர்கள் அவனைப் புறக்கணிக்கிறார்கள். இதனால் தனியே கடலுக்குச் செல்கிறான் பழநி.

இதற்கிடையில் செம்பன் இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறான். அது பிடிக்காமல் அவனது இளைய மகள் பஞ்சமி, அக்கா கருத்தம்மாவின் வீட்டில் அடைக்கலமாகிறாள். பழநி கடலுக்குச் சென்றிருக்கும் நாளின் இரவில் கருத்தம்மாவைக் காணப் பரிக்குட்டி வருகிறான். பரிக்குட்டியும் கருத்தம்மாவும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

பேச்சு கனிந்து காதல் உணர்வு மீள்கிறது. கருத்தம்மாவை ஆரத் தழுவுகிறான் பரிக்குட்டி. அப்போது கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த பழநி, நீர்ச்சுழலில் சிக்கி இறந்துபோகிறான். பொழுது புலர்கிறது. கண்விழித்துப் பார்க்கிறாள் கருத்தாம்மாவின் தங்கை பஞ்சமி.

கடலுக்குச் சென்ற மாமாவும் திரும்பவில்லை. அக்காவையும் காணவில்லை என்ற பதைபதைப்புடன் கருத்தம்மாவின் குழந்தையைத் தூக்கிக்கொண்டு கடற்கரையில் அழுதபடி அக்காவைத் தேடி நடக்கிறாள். கருத்தம்மாவின் உடலும் பரிக்குட்டியின் உடலும் கட்டிப் பிடித்த நிலையில் கரையொதுங்கிக் கிடக்கின்றன. படம் முடிகிறது.

காவியத்தின் பின்னணியில்

செம்மீன் நாவலாக வெளிவந்த பிறகும் பின்னர் அது திரைப்படமாக வந்தபோதும் மீனவ மக்களின் எதிர்ப்பையும் கண்டனத்தையும் சந்தித்தது. ஆனால் வெள்ளிவிழாப் படமாக வெற்றி வாகை சூடியது.

கான் படவிழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதையும் சிக்காகோ படவிழாவில் நற்சான்றிதழையும் வென்று வந்தது. இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெற்றிபெற்றது. தமிழ்நாட்டிலும் செம்மீனுக்குச் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. நாயகன் பரிக்குட்டியாக நடித்த மதுவுக்கு வழங்கப்பட்ட சம்பளம் 2000 ரூபாய்.

பழனியாக நடித்த சத்யனுக்கு 12,000 ரூபாய் சம்பளம் கொடுத்தார் தாயாரிப்பாளர் பாபு இஸ்மாயில் சயித். காரணம் சத்யன் அப்போது மிகப் பெரிய நடிகர். 7 லட்சம் ரூபாயில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் 44 லட்சம் வசூல் செய்தது. செம்மீன் வெற்றிக்குப் பிறகு பாபு இஸ்மாயில் சயித் ‘செம்மீன்’ பாபு என்று அழைக்கப்பட்டார். கிடைத்த வசூல் பணத்தில் கோட்டயம் நகரில் ‘கவிதா’ என்ற நவீனத் திரையரங்கைக் கட்டினார்.

தயாரிப்பாளரைப் போலவே கருத்தம்மாவாக நடித்த ஷீலா, ‘செம்மீன் ஷீலா’ என்று அழைக்கப்பட்டார். ஷீலாவுக்கு இந்திப் படவுலகிலிருந்து வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் ஒரு வாய்ப்பைக்கூட ஏற்றுக்கொள்ளாத அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் இதுவரை 490 படங்களில் நடித்திருக்கிறார்.

செம்மீன் படத்தின் ஒளிப்பதிவைப் போலவே அதன் இசை இன்றும் மறக்க முடியாததாக இருக்கிறது. வங்காளக் கவிஞரும் இசையமைப்பாளருமான ஷலில் சௌத்ரியை இந்தப் படத்துக்காக முதன்முதலில் தென்னிந்தியாவுக்கு அழைத்துவந்தார் ராமு கரியத். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘மானச மைனே வரு’, ‘புதன் வழக்காறே’, ‘கடலினக்கர போனோரே’உட்பட அனைத்துப் பாடல்களும் பின்னணி இசையும் செம்மீனைத் தென்னிந்தியாவின் முதல் காவியமாக்கின. ஷலில் சௌத்ரி ‘மானச மைனே வரு’ என்ற துயரப் பாடலின் மெட்டை மறக்க முடியாமல் 1979-ல் வெளியான ‘ கண்டர்’ என்ற வங்காளப் படத்தில் அதைப் பயன்படுத்தினார்.

என் மகள் வந்திருக்கிறாள்

செம்மீன் தேசிய விருது பெறும் முன்பே திரையரங்குகளில் வெளியானபோது ‘தகழியின் செம்மீன்’ என்று கொட்டை எழுத்துக்களின் அச்சடிக்கப்பட்ட சுவரொட்டிகள் திரையரங்குகளில் ஒட்டப்பட்டன. அந்த அளவுக்கு எழுத்தாளருக்கு மலையாள சினிமாவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தகழி தனது 88 வயதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரைக் காணச் சென்றார் செம்மீன் ஷீலா. அத்தனை முதுமையிலும் “என் மகள் என்னைக் காண வந்திருக்கிறாள்” என்று நெகிழ்ந்து கூறினார் தகழி. இந்திய சினிமாவுக்குப் பெருமிதம் சேர்த்த படைப்பு செம்மீன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x