Published : 13 Mar 2020 09:24 AM
Last Updated : 13 Mar 2020 09:24 AM

வங்கப் பெண்ணே... சிங்கர் பெண்ணே...

டோட்டோ

மார்ச் 12: ஸ்ரேயா கோஷல் பிறந்த நாள்

அது 2002-ம் ஆண்டு. தங்கர் பச்சான் இயக்கத்தில் ‘சொல்ல மறந்த கதை’ வெளியாகியிருந்தது. அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ‘குண்டுமல்லி... குண்டுமல்லி’ என்ற பாடலை முதல் முறை கேட்டபோது, அதன் குழைவில் கரைந்துபோய், ‘யார் குரல் இது!’ எனத் தேடத் தொடங்கினேன்.

மல்லிகைப் பூவின் வாசத்தைக் குரலில் உணரவைத்த அந்த மேற்கு வங்கத்திலிருந்து வந்த குரல் ஸ்ரேயா கோஷலுடையது என அறிந்துகொண்டேன். திரையிசைப் பாடல்களின் ஸ்வரக் கோடுகள், பிரதேச எல்லைக் கோடுகளைக் கடந்தவை. அதே போல், ஸ்வரம் பாடிய திரைப்படப் பாடகர்களும் எல்லை கடந்தவர்களே.

1984-ல் மேற்கு வங்கத்தில் பிறந்து, ராஜஸ்தானிலும் மும்பையிலும் வளர்ந்தவர். நான்கு வயதில் இசை கற்கத் தொடங்கி, பதினான்கு வயதில் முதல் தனி ஆல்பம் வெளியிட்டார். பதினாறாம் வயதில் ‘ஜீ’ தொலைக்காட்சியின் ‘ச ரி க ம’ நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் பரிசைப் பெற்றார். இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியுடைய தாயார் அந்த நிகழ்ச்சியைப் பார்த்து ஸ்ரேயாவைப் பரிந்துரைக்க, இவருக்கு பன்சாலியின் ‘தேவதாஸ்’ படத்தில் ஐஸ்வர்யா ராய்க்குப் பின்னணிக் குரலாக முதல் பாடல் வாய்ப்பு கிடைத்தது.

உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த ஸ்ரேயா, பள்ளிக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு பாடல் பதிவுக்கு வந்தார். ‘தேவதாஸ்’ படத்தில் ஒன்றல்ல; ஐந்து பாடல்களைப் பாடினார். இவர் பாடிய ஐந்து பாடல்களுமே இவரை நட்சத்திரப் பாடகியாக்கியது என்றால், அவற்றில் ‘பைரி பியா’ பாடலுக்கு அந்தச் சிறிய வயதில் தேசிய விருது இவரைத் தேடி வந்தது. இவரின் தமிழ் உச்சரிப்பு தாளாத ஆச்சர்யம் என்றால் அதே ஆச்சரியம்… இந்தி ரசிகர்களுக்கும். இந்தியும் இவர் பின்னாளில் கற்றுக்கொண்ட ஒரு மொழியே!

முன்பே வராது போனவர்

‘பிதாமக’னில் ‘இளங்காத்து வீசுதே’வில் கொஞ்சமும் ‘விருமாண்டி’யில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து பாடிய ‘ஒன்னவிட’, ‘7ஜி ரெயின்போ காலனி’யில் ‘நினைத்து நினைத்துப் பார்த்தால்’ என வளர்ந்துவந்தார். யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் ‘தாஸ்’ படத்தில் ‘சாமிகிட்ட’, ‘சண்ட கோழி’யில் ‘தாவணி போட்ட தீபாவளி’யிலும் பயணத்தைத் தொடர்ந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தொடக்கத்தில் சில பாடல்கள் பாடியிருந்தாலும் ‘சில்லுன்னு ஒரு காதல்’ படத்தில் இடம்பெற்ற ‘முன்பே வா..’ இவர் இன்னும் இன்னும் முன்பே வந்து தமிழ்ப் பாடல்களைப் பாடியிருக்கக் கூடாதா என்ற ஏக்கத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியது.

இதே காலகட்டத்தில், இந்தி சினிமாவுலகத்தில் இவரின் வளர்ச்சி அபாரமானது. ஒரு மலையில் இருந்து உருவாகும் நதி தன் வழியையும் கரைகளையும் தானே தீர்மானிப்பது போல், தொடர்ந்து இந்தியின் எல்லா இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடினார். 2002-ல் தெலுங்கிலும் 2003-ல்கன்னடத்திலும் இதே வேகத்தில் பாடிக்கொண்டிருந்தார்.

மலையாளத்தில் மட்டும் சற்றே தாமதமாக 2007-ல் தொடங்கிய வேகத்தில் நான்கு முறை கேரள அரசின் மாநில விருதுகளைப் பெற்றிருக்கிறார். இவர் எந்த மாநில மொழியில் பாடுகிறாரோ அந்த மாநிலத்தின் பாடகியாகவே மாறிவிடுவதும், அந்தந்த மொழி ரசிகர்கள் இவரின் குரலைத் தங்களுக்கு உடைமையான குரலாகவே முழுமையாக ஏற்றுக்கொள்வதும் தொடர்ந்து நடந்துவருகிறது.

இமானின் இசையில்

தமிழைப் பொறுத்தவரை, இளைய தலைமுறை இசையமைப்பாளர்களான ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் ‘வெயில்' படத்தில், இவர் பாடிய முதல் பாடல் ‘உருகுதே மறுகுதே’. பாடலின் இசையமைப்பு, வரிகள் தந்த தாக்கங்களை மீறி ஸ்ரேயாவின் குரல் உருகி, ‘அங்காடித் தெரு’வில் ‘உன் பேரைச் சொல்லும்போதே’ என ஈரநதியாக நனைத்துச் சென்றது. ‘ஆனந்தத் தாண்டவம்’ படத்தில் ‘பூவினைத் திறந்து கொண்டு’ பாடலைச் சொல்லலாம்.

இன்னுமொரு குறிப்பிடத்தக்க தமிழ் இசையமைப்பாளரைச் சொல்ல வேண்டும். அவர் டி.இமான். அவரது இசையில் சில சாதாரணப் பாடல்களைப் பாடியிருந்தாலும், ‘மைனா’வில் ‘நீயும் நானும்’ எனச் சிறப்பாகத் தொடங்கி, ‘சாட்டை’ படத்தில் ‘சஹாயனே’ பாடலில் உன்னதம் தொட்டிருப்பார். பின்னாளில், ‘சீமராஜா’வில் ‘ஒன்னை விட்டா’, ‘தேசிங்குராஜா’வில் ‘அம்மாடி’, ‘ஜில்லா’வில் ‘கண்டாங்கி... கண்டாங்கி’ ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ யில் ‘மைலாஞ்சி’ வரை கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, இமானின் இசையில் மென்மையாய் இழையும் மெட்டுக்களில் கூட்டணிப் பயணத்தைத் தொடர்கிறார்.

தெற்கிலிருந்து தென்றலாய் வீசிய குரல்களைப் போலவே, வடக்கிலிருந்து வீசிய வாடைக் குரல்களுக்கும் தமிழ் சினிமாவில் பஞ்சமில்லைதான். கான்பூரைப் பூர்விகமாகக் கொண்ட கே.ராணி, கொல்கத்தாவில் பிறந்து, வளர்ந்த பாம்பே ஜெயஸ்ரீ, மதுஸ்ரீ, இந்தியாவின் வானம்பாடி சகோதரிகள் லதா மங்கேஷ்கர் - ஆஷா போஸ்லே, சாதனா சர்கம், மால்குடி சுபா, மகாலஷ்மி ஐயர், டெல்லியில் பிறந்த கவிதா கிருஷ்ணமூர்த்தி எனத் தமிழ் தெரிந்த, தெரியாத பாடகியர் பலர் இருந்தாலும், பாடல்களின் எண்ணிக்கை, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத ஒருவர் தமிழ்ச் சொற்களை உச்சரிக்கும் விதம், விருதுகளின் எண்ணிக்கை ஆகிய அளவுகோல்களில் ஸ்ரேயா கோஷல் தொட்ட உயரத்தைத் தொட்டதில்லை என்பதே உண்மை. தமிழில் மட்டுமே 200 பாடல்களைப் பாடி முடித்துவிட்டார்.

இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு தவிர ஒoயா, மராத்தி, போஜ்புரி தவிர, ஜார்க்கண்ட் மாநிலத்தின் அங்கிகா மொழி, நேபாளி, பஞ்சாபி, துளு, ஆங்கிலம், பிரெஞ்சு எனப் பல மொழிகளில் சுமார் 5,000 பாடல்களைப் பாடியிருக்கும் இவருக்கு வயது 34. தனிப்பட்ட வாழ்வில், 2015-ல் தன் இளவயது நண்பரான ஷைலாதித்யாவை மணந்தார். இது வரையிலும் நான்கு தேசிய விருதுகள் (அதிக முறை கணக்கில் பாடகி சித்ரா ஆறு முறை வென்றுள்ளார்), ஆறு மாநில விருதுகள் ஆகியவற்றுடன் 160 ஊடக நிறுவனங்களின் விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

இந்த விருதுகளுக்கு வெளியே அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் ‘ஸ்ரேயா கோஷல்’ நாள், லண்டனில் நாடாளுமன்ற விருது, மூன்று முறை ‘போர்ப்ஸ்’ பத்திரிகையின் புகழ் பெற்றோர் பட்டியலில் இடம்பெற்றது மட்டுமல்லாது, உலகப் புகழ்பெற்ற மேடம் டுஸாட் மெழுகுச்சிலைக் காட்சியகத்தின் டெல்லி கிளையில் ஸ்ரேயாவுக்குச் சிலை அமைந்ததும் தனித்த கௌரவம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x