Published : 13 Mar 2020 08:47 AM
Last Updated : 13 Mar 2020 08:47 AM
இணையத்தில் இருபது லட்சம் பார்வைகளைக் கடந்து வரவேற்பைப் பெற்றுள்ளது ஜெயம் ரவி நாயகனாக நடித்துள்ள ‘பூமி’ படத்தின் முன்னோட்டம். உற்சாகத்தில் இருந்த அப்படத்தின் இயக்குநர் லக்ஷ்மண், ஜெயம்ரவியுடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார். அவருடன் உரையாடியதிலிருந்து...
இது விவசாயிகளின் இன்றைய நிலை, அவர்களது பிரச்சினைகள் ஆகிவற்றைப் பேசும் படமா?
டிவி, மொபைல் போன் போன்றவை இல்லாமல் நம்மால் வாழ்ந்துவிட முடியும். ஆனால், உணவு இல்லாமல் வாழ முடியாது. தங்கள் உழைப்பால் உணவைத் தரும் விவசாயிகள் தற்கொலைசெய்துகொள்வது சாதாரணம் ஆகியிருக்கிறது. அது ஏன் என்பதுதான் ‘பூமி’. இவ்வளவு பெரிய நாட்டுக்கு இப்போதும் மூன்று வேளை சாப்பாடு போட்டுக்கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள்.
அவ்வளவு அவமானத்தையும் சகித்துக்கொண்டு வாழ்த்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், நாமோ சாப்பாட்டைக் கொட்டிக்கொண்டிருக்கிறோம். இந்தியாவில் உணவகத் தொழில்துறை வருமானத்தில் கொழிக்கிறது. ஆனால், அந்தத் துறைக்கான மூலப் பொருட்களை விளைவித்துக் கொடுக்கும் விவசாயின் நிலை என்ன என்ற கோபத்தின் வெளிப்பாடுதான் ‘பூமி’.
இந்தக் கதைக் களத்தை எடுக்க வேண்டும் என்று ஏன் நினைத்தீர்கள்?
நான் விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவன் கிடையாது; ஆனால் சோற்றில் உப்புப் போட்டு சாப்பிடுபவன். அந்தச் சொரணை கொஞ்சமாவது சினிமாவில் இருப்பவர்களுக்கும் இருக்கவேண்டும் அல்லவா.. இப்போது நானும் விவசாயி என்று துணிந்து கூறும் அளவுக்கு இந்தப் படத்துக்காக அவ்வளவு படித்தேன், களத்தில் இறங்கிப்போய் பார்த்தேன். வரப்பிலும் சேற்றிலும் நடந்தேன். நிறைய விவசாயிகளைச் சந்தித்தேன்.
என்ன பிரச்சினை, எதனால் பிரச்சினை, விவசாயிகள் அல்லாத மக்களிடம், ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்களிடம் எவ்வளவு அலட்சியம் இருக்கிறது என்பதெல்லாம் முழுமையாகத் தெரிந்துகொண்டுதான் திரைக்கதையை எழுதினேன். விவசாயிகளுக்காக நானும் ஒரு படமெடுத்தேன் என்றில்லாமல், என்ன பண்ணினால் அவர்களது வலி நீங்கும் என்ற தீர்வையும் படத்தில் வைத்திருக்கிறேன். எனது முந்தைய இரண்டு படங்களிலிருந்தும் முற்றிலும் மாறுபட்ட ஒரு படம்.
கதையைக் கேட்டுவிட்டு ஜெயம் ரவி என்ன சொன்னார்?
‘பூமி’ கதையின் ஒரு ஐடியாவை மட்டும் முதலில் சொன்னேன். மிரண்டுவிட்டார். ‘எங்கிருந்து இந்தக் கதையைப் பிடித்தீர்கள்’ எனக் கேட்டார். சொன்னதும் உடனே உற்சாகமாகி, ‘இதைப் பண்ணலாமே’ என்று தெரிவித்தார். படம் முடிவானதுமே “எனக்குக் கிடைக்காத ஒன்று, உனக்குக் கிடைச்சிருக்கு. 25-ம் படம் என்னை நம்பிக்கூட அவன் கொடுக்கவில்லை. உன்னை நம்பி கொடுத்திருக்கான். நல்லா பண்ணனும்” என்று வாழ்த்துச் சொன்னார் இயக்குநர் ராஜா அண்ணா.
தொடர்ச்சியாக ஜெயம் ரவியுடன் மட்டுமே பயணிப்பது ஏன்?
‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ படங்களை முடித்து அவை வெளியானதும், “வேறொரு நாயகனை வைத்துப் படம் பண்ணிட்டு வா, அப்புறமாக நாம ஒரு படம் பண்ணுவோம்” என்று தான் ஜெயம் ரவி சார் சொன்னார். இங்கே படங்களுக்குக் கதை எழுதுவதே ஒரு சுமை. பின்பு ஒரு நாயகனைப் பார்த்துச் சொல்லி, அந்தக் கதை அவர்களுக்குப் பிடித்து படம் தொடங்குவது பெரிய வேலை. அந்தச் சுமையைக் கொஞ்சம் குறைக்கலாமே என்றுதான் ஜெயம் ரவியிடமே மீண்டும் மீண்டும் சரணடைகிறேன்.
ஜெயம் ரவியின் வளர்ச்சிக்கு என்ன காரணம்?
இப்போது ஜெயம் ரவி முன்னணி நாயகன். வெளியே இருந்து பார்ப்பவர்கள் அவரை அதிர்ஷ்டக்காரர் என்று சொல்லிவிட்டுக் கடந்துவிடுவார்கள். ஆனால், ஒவ்வொரு கதைக்கும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மெனக்கெடுவார். உடல்ரீதியாக பிரச்சினைகள் இருந்தாலும், அதையெல்லாம் கடந்து ஒரு காட்சிக்காக என்ன வேண்டுமானாலும் பண்ணுவார். அப்படி வாழ்பவர்கள் வளர்வதில் தவறில்லையே. அதுதான் அவருடைய வளர்ச்சிக்குக் காரணம். இந்தப் படத்தில் நிறையக் காட்சிகளில் எனக்கு உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார். அவர் சொன்ன மாற்றங்கள் எல்லாம் காட்சிகளாகவும் வந்துள்ளன.
‘பூமி’ படக்குழுவினர் பற்றி…
பொள்ளாச்சி, பாங்காக், சென்னை, மும்பை உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். ஜெயம் ரவிக்கு அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் இதுவரை நடித்ததே இல்லை. மற்ற அனைத்து நாயகர்களுக்கும் அம்மாவாக நடித்துவிட்டார். அவரது ஆசை இந்தப் படத்தில் நிறைவேறியுள்ளது. நண்பராக சதீஷ், நாயகியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார்கள். மதன் கார்க்கியின் வசனமும் இமானின் இசையும் படத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக்கின்றன.
உங்களுடைய குரு எஸ்.ஜே.சூர்யா, இப்போது ஹீரோ, வில்லன் எனப் போய்விட்டாரே…
அவர் வந்தது நடிக்கத்தான். அவருடைய ஆசையில் இப்போது பயணித்துக்கொண்டிருக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவை இப்போது அனைவருக்கும் பிடிக்கும். அவருக்கான சரியான விஷயங்கள் அமைந்தால் கண்டிப்பாகக் கொண்டாடப்படுவார். இங்கு வில்லன்களுக்கு பற்றாக்குறை இருக்கிறது. ஒரு படம் அவரை வைத்து பண்ணலாம் எனப் பேசினேன். அதற்குள் ‘பூமி’யில் ஒப்பந்தமாகி விட்டேன். குருவை ஒரு படத்திலாவது இயக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT