Published : 13 Mar 2020 08:26 AM
Last Updated : 13 Mar 2020 08:26 AM

பாம்பே வெல்வெட் 26: இரட்டைக்குழல் துப்பாக்கி!

அறுபதுகளின் இந்திப் படங்கள் பலவற்றுக்கு கதை வசனம் எழுதியவர்களில் அப்ரார் அல்வி முக்கியமானவர். அன்றைய தினம் சலீம்கான் என்ற அவருடைய உதவியாளர் கேட்ட ஒரு கேள்விக்குத் திணறிப்போனார். “சினிமாவில் நாயகனுக்கு இணையான ஊதியத்தை நம்மைப் போன்ற எழுத்தாளர்களும் பெறுவது எப்போது சாத்தியமாகும்?” என்பதே அந்தக் கேள்வி. கதை-வசனம் எழுதியவர்கள் கதை இலாகா என்ற பெயரில் இருட்டடிப்பு செய்யப்பட்ட அக்காலத்தில் இந்தக் கேள்விக்கு எவரிடமும் பதில் இல்லை.

ஆனால், கேள்வி கேட்ட சலீம்கான் அடுத்த பத்து வருடங்களில் சத்தமின்றி தானே பதிலானார். ஜாவேத் அக்தருடன் ஜோடி சேர்ந்து பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பேனா முனையில் இந்தி சினிமாவை ஆட்சி செய்தார். இருவரும் பணியாற்றிய ‘தோஸ்தானா’(1980) படத்தின் கதாநாயகன் அமிதாப் பச்சனைவிட அதிகமான ஊதியம் கதை - வசனம் எழுதிய சலீம்-ஜாவேத்துக்குக் கிடைத்தபோது, சலீம்கான் தன் குரு அல்வியைச் சந்தித்து ஆசி பெற்றார். அது மட்டுமல்ல, போஸ்டரில் ‘கதை வசனம்’ எனப் பெயர் பொறித்தது, திரைப்படத்தின் லாபத்தில் கால் பங்கு பெற்றது என இந்தியாவில் கதை வசனகர்த்தாக்கள் தொடாத உயரத்தை சலீம்-ஜாவேத் ஜோடி அடைந்தது.

இவர்கள் இருவரும் பாலிவுட்டில் ஒன்று சேர்ந்தது, அடுத்தடுத்துச் சாதித்தது, திடீரெனப் பிரிந்தது, தனிப் பாதைகளில் சாதனைப் பயணத்தைத் தொடர்ந்தது என அவர்கள் எழுதிய திரைக்கதைகளுக்கு நிகரான சுவாரசியம் கொண்டது அவர்களது திரைப் பயணம்.

‘சலீம்கான் – ஜாவேத் அக்தர்’

அறுபதுகளில் ஒரு நடிகராகத் தனது திரைவாழ்வைத் தொடங்கிய சலீம்கான், ‘தீஸ் ரீ மன்ஜில்’, ‘தீவானா’ உட்படப் பல திரைப்படங்களில் சிறிதும் பெரிதுமான வேடங்களில் தலைகாட்டி வந்தார். இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த அவருக்கு, வாசிப்பும் அதையொட்டிய கற்பனையுமே ஆறுதலாக இருந்தன. சினிமாவில் நுழைந்தபோது அந்தக் கற்பனைகளுக்குப் புதிய சிறகுகள் முளைத்தன. நடிப்பைவிட சினிமாவின் கதைசொல்லலிலும், கதாபாத்திரங்களின் சித்தரிப்புகளிலும் மட்டுமே அவரது கவனம் சென்றது. ஒரு நடிகராகப் பெயர் பெற முடியாத தோல்விமுகமும் சேர்ந்துகொள்ள, சினிமாவுக்கான எழுத்துப் பணிகளில் ஆறுதல் தேடத் தொடங்கினார்.

அப்போது படப்பிடிப்புத் தளத்தில் கிளாப் அடிப்பது தொடங்கி, நடிகர்களுக்கான வசன ஒத்திகை வரை புயலாகச் சுழன்ற ஜாவேத் அக்தர் என்ற இளைஞரின் அறிமுகம் கிடைத்தது. ஜாவேத்தின் தந்தை, தாத்தா ஆகியோர் உருது மொழியில் வித்தகர்கள். அந்த வகையில் ஜாவேத் ரத்தத்தில் மொழிப் புலமை ஊறியிருந்தது. சலீமின் கதைகளுக்கு ஜாவேத் தனது உருது வசனங்களால் உயிர் கொடுத்தார். இந்திய இலக்கிய மரபுகளிலிருந்து உருவியும், மேற்குத் திரைப்படங்களில் குறுக்குசால் ஓட்டியும் புதிய கதைகளைப் படைத்தார்கள். அவற்றுக்குத் திரைக்கதை, வசனம் அமைத்தபோது, பாலிவுட்டின் புது மாதிரி கதைப்போக்கு உருவானது.

தேவர் காட்டிய வழி

தேவர் பிலிம்ஸ் எம்ஜியாரை வைத்து எடுத்த ‘நல்ல நேரம்’ வெற்றி பெற்றது. அந்தப் படத்தின் இந்தி மறு ஆக்கத்துக்காக ராஜேஷ் கன்னாவை அணுகினார் சாண்டோ சின்னப்பா தேவர். இரண்டு ஆண்டுகளில் தொடர்ந்து பதினைந்து வெற்றிப் படங்களைத் தந்த ராஜேஷ் கன்னாவுக்கு தேவரின் கதையில் திருப்தியில்லை. ஆனால், அவர் அதுவரை பெறாத ஒரு தொகையை தேவர் முன்வைத்ததும், சிறு நிபந்தனையுடன் பட ஒப்பந்தம் முடிவானது.

அதன்படி தனது முந்தைய ‘அந்தாஸ்’ திரைப்படத்தின் வெற்றியைத் தீர்மானித்திருந்த சலீம்-ஜாவேத் இரட்டையர், தேவரின் கதையைத் திருத்தும் பணியைத் தொடங்கினர். கதையின் மையக்கருவை மட்டும் எடுத்துக்கொண்டு, இந்திக்காக முற்றிலும் வேறாகச் செதுக்கிய திரைக்கதையில் தேவரும் பின்னர் திருப்தியடைந்தார். அப்படி உருவான ‘ஹாத்தி மேரே ஸாத்தி’யில் (1971), சலீம்-ஜாவேத் கூட்டணியின் ‘நல்ல நேரம்’ தொடங்கியது. முன்னதாக ‘அதிகார்’, ‘அந்தாஸ்’ ஆகிய திரைப்படங்களின் கதை - திரைக் கதையை உருவாக்கிய போதும், ‘ஹாத்தி மேரே ஸாத்தி’ வெற்றியே சலீம்-ஜாவேத் கூட்டணியை முரசு கொட்டி அறிவித்தது.

பாலிவுட்டைப் புரட்டிய போக்கு

‘ஜஞ்ஜீர்’, ‘தீவார்’ படங்களின் மூலமாக ‘கோபக்கார இளைஞன்’ அத்தியாயத்தைத் தொடங்கிய சலீம்-ஜாவேத் ஜோடி, வேறு பல அலைகளையும் அவ்வப்போது பாலிவுட்டில் உருவாக்கினார்கள். இந்தத் திரைப்படங்களே பம்பாய் நிழலுலக தாதாக்கள் கதைகளைக் கொண்ட பின்னாளைய திரைப்படங்களுக்கும் வித்திட்டன. ‘யாதோன் கீ பாராத்’ திரைப்படம் எண்பதுகளின் பாலிவுட் மசாலா படங்களுக்குக் காரணமானது.

அதுவரை பாலிவுட் பார்த்திராத வெற்றியைத் தந்த ‘ஷோலே’, கொள்ளைக் கூட்டத்தை மையமாகக் கொண்ட கதைகளுக்கு முன்மாதிரியானது. ஷோலேவின் அமிதாப் மட்டுமன்றி, சலீம்-ஜாவேத் அறிமுகம் செய்த ‘கப்பார்சிங்’ அம்ஜத் கானும் பாலிவுட்டின் பிரபல வில்லனானார். இந்தி பரிச்சயமில்லாத ஹேமமாலினிக்கு என சலீம்-ஜாவேத் பிரத்யேகமாய் உருவாக்கிப் பயிற்சி தந்த, தடதடக்கும் வேக வசனங்களால் ஷோலேவின் ‘பசந்தி’ கதாபாத்திரமும், ஹேமமாலினியும் ஒருசேரப் பிரபலமானார்கள்.

தனிப்பாதைகளில் தொடரும் வெற்றி

சலீம்-ஜாவேத் திரைவாழ்வில் அமிதாப் பச்சனுக்கு முக்கிய இடமுண்டு. இருவரும் இணைந்து பணியாற்றிய பத்தாண்டுகளின் 22 இந்தித் திரைப்படங்களில், அமிதாப்புடன் மட்டுமே 12 திரைப்படங்கள் வெளியாகின. அமிதாப்பில் தொடங்கி அவருடனே சிகரம் தொட்ட சலீம்-ஜாவேத் இரட்டையரின் பிரிவும் அமிதாப்பை முன்வைத்தே நிகழ்ந்தது.

அனில்கபூர் பின்னாளில் நடித்த ‘மிஸ்டர் இந்தியா’ கதையில் முதலில் நடிக்கவிருந்தவர் அமிதாப். ஆனால், அப்போது சூப்பர் ஸ்டாராக வளர்ந்திருந்த அவருக்கு, ‘கண்ணுக்குப் புலப்படாத நாயகனாக’ தோன்றுவதில் உடன்பாடில்லை. கூட்டாக அமிதாப்புடன் கருத்து வேற்றுமை கொண்ட சலீம்-ஜாவேத், அடுத்து வந்த நாட்களில் தனித்தனியாக அமிதாப்புடன் நெருங்கத் தொடங்கினர். இந்த முரண்போக்கு இருவருக்கும் இடையில் விரிசலை அதிகமாக்கியது.

அதன் பின்னர் கதைகளை எழுதுவதைவிட ஒரு பாடலாசிரியராக ஜாவேத் ஆர்வத்தைச் செலுத்தத் தொடங்கினார். அமிதாப்பின் ‘சில்சிலா’வில் தொடங்கிய ஜாவேத் அக்தர், தனது பாடல்களுக்காக ஐந்து முறை தேசிய விருது பெற்றார். சலீம்கான் தனது மீள் பிரவேசத்துக்கு அதிக இடைவெளி விட்டதில் பழைய பெயரைத் தக்கவைக்கத் தடுமாறினார்.

ஒரு நடிகராக முழுமையான தோல்வியை ருசித்திருந்த சலீம்கான், தன் மூத்தமகன் சல்மான்கான் பாலிவுட்டில் அறிமுகமானதும் அதில் மூழ்கிப்போனார். இன்றைய சல்மான்கானின் உயரத்தில் அவருடைய தந்தை சலீம்கானின் உழைப்பும் இருக்கிறது. ஜாவேத் அக்தரின் மகன் ஃபர்ஹன் அக்தர், மகள் ஸோயா அக்தர் ஆகியோர் பாலிவுட்டின் வெற்றிகர இயக்குநர்களாகி உள்ளனர்.

சலீம்-ஜாவேத் ஜோடி பாலிவுட்டில் முத்திரை பதித்தபோதும், தமிழ் சினிமாவிலும் ஊடாடி உள்ளனர். இந்தியில் வெற்றியடைந்த சலீம்-ஜாவேத் கதைகள் முறையாக உரிமம் பெறப்பட்டு தமிழில் வெளியாகி உள்ளன. அந்த வரிசையில், ‘சீதா அவுர் கீதா’ (ஹேமமாலினி) – ‘வாணி ராணி’ (வாணி), ‘யாதோன் கீ பாராத்’ (தர்மேந்திரா) - ‘நாளை நமதே’ (எம்ஜிஆர்), ‘ஜஞ்ஜீர்’ (அமிதாப் பச்சன்) - ‘சிரித்து வாழ வேண்டும்’ (எம்ஜிஆர்), ‘மஜ்பூர்’ (அமிதாப்) - ‘நான் வாழ வைப்பேன்’ (சிவாஜிகணேசன்), ‘மிஸ்டர்.இந்தியா’ (அனில்கபூர்) - ‘என் ரத்தத்தின் ரத்தமே’ (கே.பாக்யராஜ்) ஆகியவை வருகின்றன. ரஜினிகாந்த், கமல்ஹாசன் வளர்ச்சியிலும் சலீம்-ஜாவேத் கதைகளுக்குப் பங்குண்டு. கமலுக்கு ‘சவால்’ (‘ஹாத் கீ சஃபாய்’), ‘சட்டம்’ (‘தோஸ்தானா’) ஆகியவையும், ரஜினிக்கு ‘தீ’ (‘தீவார்’), ‘மிஸ்டர்பாரத்’ (‘த்ரிசூல்’), ‘பில்லா’ (‘டான்’) எனவும் அவை நீள்கின்றன.

தொடர்புக்கு: leninsuman4k@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x