Published : 06 Mar 2020 09:06 AM
Last Updated : 06 Mar 2020 09:06 AM
சு.சுபாஷ்
வாழ்வின் தேடல்கள் பல புறவயமானதாக அமைந்தாலும், இறுதியிலான கண்டடைவு என்னவோ உள்முகமாக நிகழ்கிறது. தாயின் மிதமிஞ்சிய அரவணைப்பில் குழந்தையாக வளரும் ஓர் இளம்பெண்ணின் வாழ்வில் அப்படியான தேடல் தொடங்குகிறது. அந்தத் தேடலின் பாதையும் அதன் கண்டடைதலுமாக ஓர் உண்மைக் கதையை, நெட்ஃபிளிக்ஸின் ‘37 செகண்ட்ஸ்’ என்ற ஜப்பானியத் திரைப்படம் விவரிக்கிறது.
பிறக்கும்போது 37 விநாடிகள் தாமதமாகச் சுவாசித்ததால் மூளைமுடக்குவாத (செரிப்ரல் பால்ஸி) பாதிப்புக்கு ஆளான பெண் யூமா. 23 வயதிலும் அவளுடைய தாயால் சிறு குழந்தையாகவே பராமரிக்கப்படுகிறாள். குளிப்பது முதல் இதர பராமரிப்புகள்வரை யூமாவுக்கு அவளுடைய தாய் பார்த்துப் பார்த்து செய்கிறாள்.
முடக்குவாதத்திலிருந்து தப்பிய ஒரு கரத்தின் உதவியால் தனக்கான எதிர்காலத்தைக் கட்டமைக்க யூமா முயல்கிறாள். வரைகலை உத்திகளும் கற்பனை வளமும் நிரம்பிய யூமா, ஜப்பானிய காமிக்ஸான ‘மங்கா’ துறையில் புகழ்பெற விரும்புகிறாள்.
யூமாவின் திறமையை தனதாக்கி சமூக ஊடகங்களில் பிரபலமாகிறாள் அவளுடைய பால்ய தோழி சயாகா. அனைத்தையும் அறிந்தும் யூமா கையறு நிலையில் தவிக்கிறாள். தன்னுடைய படைப்புகளை வெளியாரிடம் சமர்ப்பிக்கும்போதும், அவை சயாகாவின் சாயலில் இருப்பதாகவும், சொந்த பாணியை வளர்த்துக்கொள்ளுமாறும் கிடைக்கும் அறிவுரைகள் யூமாவுக்குக் கசப்பைத் தருகின்றன.
கடைசியில் வயதுவந்தவர்களுக்கான காமிக்ஸ் வெளியீட்டாளர்கள் யூமாவின் வரைகலை திறமையை அங்கீகரிக்கிறார்கள். ஆனால், அந்த படைப்புகளில் ‘இயல்பான அனுபவங்கள்’ அவசியமென அறிவுறுத்துகிறார்கள். அவர்களின் ஆலோசனைப்படி, ‘அனுபவம்’ பெறுவதற்கான தேடலை யூமா தொடங்க வேண்டியதாகிறது. அதுவரை நிதானமாகவும் சாதாரணமாகவும் செல்லும் திரைப்படம், அதன் பின்னர் வேறொரு வடிவமெடுக்கிறது.
‘டேட்டிங்’ தளங்கள், டோக்கியோவின் சிவப்பு விளக்குத் தெருக்கள் என அனுபவத்தைத் தேடி தனியே சக்கர நாற்காலியில் யூமா பயணிக்கிறாள். பலரக மனிதர்களின் மகிழ்ச்சியான சந்திப்புகளை எதிர்கொள்கிறாள். புதிய நண்பர்கள் யூமா தரிசித்திருக்காத இன்னொரு உலகைத் திறந்து காட்டுகிறார்கள்.
இதற்கிடையே மகளின் விநோதப் போக்கைத் தாய் கண்டுகொள்ளும்போது, இருவருக்குமிடையே பூசல் வெடிக்கிறது. இருவரும் உரசிக்கொள்ளும் இடங்களில், பகிர்ந்துகொள்ளும் உணர்வுகள், வசனங்கள் படத்தின் உன்னதமான இடங்களாக வெளிப்பட்டிருக்கின்றன. ஒரு கட்டத்தில் தாயின் தளைகளை அறுத்துக்கொண்டு யூமா வெளியேறுகிறாள்.
யூமாவின் தேடல் சிறுவயதில் பிரிந்த தந்தையை நோக்கியும், தாயின் துயரம் மகளைத் தேடியும் அலைகின்றன. யூமாவின் பயணம் நாடு கடந்து தாய்லாந்துவரை நீள்கிறது. அங்கே தனது உயிரான இன்னோர் உறவைக் கண்டுகொள்கிறாள். நீண்ட பயணமும் புதிய நிலப்பரப்புகளின் கிளர்ச்சியும் யூமாவுக்குப் புதிய திறப்புகளைத் தருகின்றன.
தாய், தந்தை, தனது உடல் பாதிப்பு என சகலத்திலும் புதிய புரிதல்களைப் பெறுகிறாள். படத்தின் நிறைவாக, ‘அனுபவம்’ தேடச் சொன்ன காமிக்ஸ் வெளியீட்டாளரைச் சந்தித்து அதற்காக நன்றி கூறுகிறாள். தனது பயணத்தில் யூமா தொடங்கிய புள்ளி வேறாயினும், சுயம் உட்பட அவள் கண்டடைந்தவை அனைத்தும் பூரணமாக மின்னுகின்றன.
மங்கா காமிக்ஸ் வரைகலையாளர் ஒருவரின் உண்மைக் கதையை, நிஜமான மூளைமுடக்குவாதம் பாதித்த ‘கயமா’ என்ற பெண்ணைக் கொண்டே படமாக்கி உள்ளனர். தானியங்கி சக்கர நாற்காலியே கதியென்றும், தரையில் தவழ்ந்துமாய் யூமாவின் பெரும்பாலான காட்சிகள் கடந்தாலும், அவையனைத்திலும் அங்கஹீனம் முன்னிற்காது கதாபாத்திரத்தின் முனைப்புகள் மட்டுமே பளிச்சிடுகின்றன.
மகள் தன்னைப் பிரிந்துவிட்டாள் என்ற துயரமும், இதுநாள்வரை தனது அரவணைப்பில் இருந்தவள் இன்று சுயமாக வெளியுலகில் பயணிக்கிறாள் என்ற பெருமிதத்தில் அந்தத் தாய் உருகிப்போகிறாள். திரைப்படத்தின் இறுதியில் தாய்-மகள் இடையிலான மீள்சந்திப்பும், அதையொட்டிய உணர்வுப் பிரவாகங்களும் நெகிழ்ச்சியூட்டுபவை.
ஹாலிவுட்டின் ‘தி செசன்ஸ்’ தொடங்கி கோலிவுட்டின் ‘பேரன்பு’ வரை பல திரைப்படங்கள் நினைவில் எழுந்தாலும், ‘37 செகண்ட்ஸ்’ தனி அனுபவத்தைத் தரும். உடல் பாதிப்புடன் பிறப்பவர்களை மையமாகக் கொண்டு கதைகளை வடிப்பதிலும், அவர்களுக்கான பரிவு முதல் பாலீர்ப்பு வரையிலானவற்றைப் புரிந்துகொள்ளவும் ‘37 செகண்ட்ஸ்’ வழிகாட்டலாம்.
ஆவணப்படங்கள், குறும்படங்களில் பெயர் பெற்ற பெண் இயக்குநர் ஹிகாரியின் முதல் முழுநீளத் திரைப்படமான இது, திரைவிழாக்களின் விருதுகள் பலவற்றைக் கண்டுள்ளது.
‘37 செகண்ட்’ஸில் யூமாவின் தேடலைப் பின்தொடரும் பார்வையாளர்களும் தங்களுக்கான திறப்புகளை அடையாளம் காணலாம். இதுநாள் வரை தனது அரவணைப்பில் இருந்தவள் இன்று சுயமாக வெளியுலகில் பயணிக்கிறாள் என்ற பெருமிதத்தில் அந்தத் தாய் உருகிப்போகிறாள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT