Published : 28 Aug 2015 12:35 PM
Last Updated : 28 Aug 2015 12:35 PM
தமிழ் சினிமாவில் பிரபலமான படத்தொகுப்பாளர்களில் ஒருவர் ஆண்டனி. தற்போது அவர் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். அவரிடம் இயக்குநர் அனுபவத்தைக் கேட்டபோது, எடிட் செய்ததுபோலக் கச்சிதமான பதில்கள் வந்து விழுந்தன.
மலையாளத்தில் வெளியான ‘ஷட்டர்' படத்தின் மறுஆக்கம்தான் நீங்கள் இயக்கியிருக்கும் 'நைட் ஷோ' என்று தெரியும். இப்படம் உருவான விதத்தைப் பற்றி சொல்லுங்கள்.
‘ஷட்டர்' படத்தின் ரீமேக் உரிமையை இயக்குநர் விஜய் வாங்கி வைத்திருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. ஒருநாள் அவருடைய படத்தின் எடிட்டிங் வேலைகளில் இருந்தபோது, “நீங்க படம் இயக்குறீங்களா?” என்று கேட்டார். இவ்வளவு படங்கள் எடிட் பண்ணிட்டோம், இயக்குநர் படுற கஷ்டத்தை நாமளும் பட்டுத்தான் பார்ப்போமே என்று நினைத்து “சரி” என்றேன். உடனே 'ஷட்டர்' ரீமேக் என்றார், “நானும் பார்த்திருக்கிறேன், எனக்கு ரொம்ப பிடித்த படம்” என்று ஆரம்பித்த படம்தான் 'நைட் ஷோ'.
சத்யராஜிடம் பேசுவதற்கு மட்டும்தான் நான் இயக்குநர் விஜயுடன் சென்றேன். மற்ற நடிகர்கள், எத்தனை நாட்கள் படப்பிடிப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் பார்த்தது இயக்குநர் விஜய்தான். நான் தினமும் காலையில் போய் இன்றைக்கு என்ன காட்சி எடுக்கிறோம் என இயக்கிட்டு வருவேன் அவ்வளவுதான்.
முதல் படமே மறுஆக்கம் பண்ணலாம் என்று தோன்றியது ஏன்?
ரீமேக் படமாக இருந்தாலும் நடிகர்களிடம் அந்தப் படத்தைப் போலவே வேலை வாங்க வேண்டும். முதல் படத்தை ஏற்ககெனவே ஹிட் அடிச்ச படத்தோட ரீமேக்காக பண்ணுவது சேஃப்டி என்றுகூடச் சொல்லலாம்.
இயக்குநர் அனுபவத்தைப் பற்றி சொல்லுங்கள்..
எடிட்டிங்கில் எப்போதும் ஏ.சி. அறையிலேயே உட்கார்ந்திருப்பேன். இயக்குநரானதும் முதல் நாள் காலை 7:30 மணிக்குப் படப்பிடிப்பு தளத்துக்குப் போனேன். படப்பிடிப்புக்கு அப்பப்போ போயிருக்கிறேன். ஒருமுறை நடித்தும்கூட இருக்கிறேன். அப்போதெல்லாம் எனது தோளில் பாரமில்லை. இயக்குநராகப் படப்பிடிப்பு தலத்துக்குப் போனவுடன் தான் கேரவாவேன், நடிகர்கள், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட், ஒவ்வொரு துறையைச் சார்ந்தவர்கள் என மொத்த பாரமும் தெரிந்தது. இவ்வளவு பேரிடம் நாம்தான் வேலை வாங்கப் போகிறோமா என்று தயக்கம் இருந்தது. முதல் ஒரு இரண்டு மணி நேரம்தான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது, அதற்கு பிறகு ஒன்றும் தெரியவில்லை.
உங்களது இயக்குநர் நண்பர்கள் என்ன சொன்னார்கள்?
நான் வெளிப்படையாப் பேசக் கூடியவன். அவர்கள் படங்கள் என்னிடம் வரும்போது இந்தக் காட்சி வேண்டாம், அந்தக் காட்சி வேண்டாம் என்று வெட்டிவிடுவேன். இவ்வளவு கஷ்டப்பட்டு செலவு பண்ணி எடுத்தோமே என்று இயக்குநர்களுக்கு ஜீரணிக்க முடியாத ஒரு நிலை இருக்கும். அப்போது சில இயக்குநர்கள் எல்லாம் “வாடி... நீ படம் இயக்குவேல்ல அப்போ தெரியும் வலி” என்று கிண்டல் பண்ணுவார்கள். இப்போது தெரிகிறது ஒரு இயக்குநருடைய வலி. நான் இயக்கிய பல காட்சிகளை, நல்லாயில்லை என்று தூக்கி எறிந்தேன். கெளதம் மேனன் என் படத்தில் ஒரு பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஒரு எடிட்டராக மன அழுத்தம் ஏற்படும்போது எப்படி அதிலிருந்து விடுபடுகிறீர்கள்?
முதல் விஷயம், நான் தொடர்ச்சியாகப் பணியாற்ற மாட்டேன். கொஞ்சம் நேரம் எடிட் பண்ணுவேன், பிறகு படத்தின் இயக்குநர்கள் மற்றும் உதவியாளர்களோடு கேரம் போர்டு ஆடுவேன். இல்லை என்றால் அரட்டை அடித்துக்கொண்டிருப்பேன். கொஞ்சம் நேரம் கழித்து போய் 3 காட்சிகள் எடிட் பண்ணுவேன். மதியமாகிவிடும், இயக்குநருக்கு நானே சமைத்துப் பரிமாறுவேன். அப்புறம் ஒரு மணி நேரம் ரெஸ்ட், பிறகு எடிட் பண்ணுவேன்.
3 மணி நேரம் கதை சொல்லுதல் என்பது போய், 2:15 மணி நேரத்தில் கதை சொல்லும் முறை வந்துவிட்டது. ஒரு எடிட்டராக இந்த மாற்றத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இப்போது உலகமே ரொம்ப பிஸியாக மாறிவிட்டது. ஒரு ரசிகனோட பார்வையில் உட்கார்ந்தால், படம் சீக்கிரமே முடிந்துவிட்டதே என்று தோன்ற வேண்டும். நான் எடிட் பண்ணிய படங்களே இந்த நேரத்தை தாண்டியிருக்கிறது, காரணம் கதைதான். இது பெரிய கதை, ஆகையால் படம் நீளமாக இருக்கட்டும் என்று இயக்குநர் விரும்பும்போது அதைச் செய்துகொடுக்க வேண்டியது எடிட்டரின் பணி. பெரிய கதையில் குறைக்க வேண்டும் என்று இரண்டு, மூன்று காட்சிகளைத் தூக்க முடியாது. சில காட்சிகளைக் தூக்கினால் படத்தின் கதையே மாறிவிடும்.
இயக்கமா, எடிட்டிங்கா? இனி எதற்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள்?
எனது முக்கியமான பணி எடிட்டிங்தான். சின்னக் கதை, 30 நாள் படப்பிடிப்பு என்று வரும்போதுதான் இயக்கப் போவேன். எனது அடுத்த படத்தை இன்னும் நான் யோசிக்கவில்லை.
ஆண்டனி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT