Published : 28 Feb 2020 11:25 AM
Last Updated : 28 Feb 2020 11:25 AM

கோடம்பாக்கம் சந்திப்பு: பொம்மையின் அன்பு

தான் மிகவும் நேசிக்கும் டெடி பொம்மைக்கு உயிர் வரவேண்டும் என்று பிரார்த்திக்கும் சிறுவன் ஒருவனைப் பற்றியும் அந்த பொம்மைக்கு உயிர் வந்துவிட்டால் அவனுடைய வாழ்க்கை எப்படி அமையும் என்பதையும் பற்றிய ஃபாண்டஸி கதையாக ஹாலிவுட்டில் மூன்று பாகங்கள் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘டெடி’.

தற்போது அதே தலைப்பில், அந்தப் படத்தின் தாக்கத்தில் சக்தி சௌந்தரராஜன் இயக்கியிருக்கும் படத்தில் ஆர்யா - சாயிஷா நட்சத்திரத் தம்பதி இணைந்து நடித்திருப்பதால் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. இந்தப் படத்துக்காக இமான் இசையில் மதன் கார்க்கி வரிகளில் வெளியாகியிருக்கும் ‘என் இனிய தனிமையே’ பாடல் இணையத்தில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

கவிதாலயாவின் தேர்வு!

ரவிசுப்ரமணியம்

தமிழ் சினிமாவின் போக்கையே மடைமாற்றியவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். வரும் ஜூலை 9 அன்று அவரது 90-ம் பிறந்த நாள். இதையொட்டி, அவரைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டு, அர்த்தபூர்வமாகக் கொண்டாட முடிவு செய்திருக்கிறது கவிதாலயா நிறுவனம். இதற்காகத் திரையுலகுக்கு வெளியே இருந்து தனக்கான ஆவணப்பட இயக்குநரைத் தேர்வு செய்திருக்கிறது கவிதாலயா. தமிழின் முக்கிய பன்முக ஆளுமையும் கவிஞரும் எழுத்தாளருமான ரவிசுப்ரமணியம் பாலசந்தரின் ஆவணப்படத்தை உருவாக்குகிறார்.

ஞானபீட விருதுபெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தனின் எழுத்தாளுமையை நேர்த்தியும் கலாபூர்வமும் மிக்க திரைமொழியில் விரிவாக அறிமுகப்படுத்திய ஆவணப்படத்தை உருவாக்கியவர் இவர். தமிழ்ப் படைப்பாளிகள், கலைஞர்கள் குறித்து இவர் இயக்கிய ஆவணப்படங்கள் தமிழ்ப் பார்வையாளர்களைக் கவர்ந்து அறிவூட்டியவை. இதனால், திரையுலகம், எழுத்துலகம் ஆகிய இரு தளங்களிலும் இந்த ஆவணப்படத்துக்கான எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

ஒரு பூம் பூம் மாட்டுக்காரரின் காதல்!

அமெரிக்காவின் ‘தி கிரேட் சினிமா நவ்’ சர்வதேசப் படவிழாவில் சிறந்த படத்துக்கான விருது, மெக்சிகோவில் செவன் கலர்ஸ் பேச்சிலர்ஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது உட்பட ஆறு சர்வதேச விருதுகளை வென்று திரும்பிருக்கிறது ‘கயிறு’ திரைப்படம்.

இயக்குநர் ஃபாசிலிடம் ‘காதலுக்கு மரியாதை’, வினயனிடம் ‘காசி’ எனப் பல படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய கணேஷ் இயக்கியிருக்கும் படம். அறிமுக நாயகன் குணா, காவ்யா மாதவன், கந்தசாமி, சேரன்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மார்ச் 13 அன்று வெளியாகவிருக்கும் படம் குறித்து இயக்குநரிடம் கேட்டபோது, “தன்னைப் போலவே இளமையான ஒரு காளை மாட்டுடன் வீடு வீடாகச் சென்று குறி சொல்லும் ஒரு பூம் பூம் மாட்டுக்காரனின் காதல்தான் கதை. காதலித்த பெண்ணைக் கைபிடிக்க அவன், தனது தம்பியைப் போல் கருதும் காளை மாட்டையும் அந்தத் தொழிலையும் உதற வேண்டும் என்கிறது சமூகம்.

தன் தந்தை வழிவந்த அத்தொழிலை அவன் உதறினானா இல்லையா என்பதுதான் படம். அழிந்துகொண்டுவரும் நமது தனித்த கலாச்சார அடையாளங்களைப் பாதுகாப்பதைப் பற்றி மட்டுமல்ல; விலங்குகள் மீதான மனித நேயத்தையும் பேசுகிறது இந்தப்

‘சாதக’மான அறிமுகம்!

‘தென்மேற்கு பருவக்காற்று’ தொடங்கி ‘தர்மதுரை’ படம் வரை சுமார் 14 ஆண்டுகள் சீனுராமசாமியிடம் துணை இயக்குநராகப் பணியாற்றிய தயானந்தன் இயக்கியிருக்கும் படம் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’. மதுவுக்கு அடிமையான ஒருவர், தன்னை உணர்ந்து, அதிலிருந்து விடுபட்டு, முன்னெடுக்கும் புரட்சிகரமான நடவடிக்கைகளை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம்.

இதன் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் ‘சாதகப் பறவைகள்’ சங்கர். புகழ்பெற்ற இந்த இசைக்குழுவை நிறுவி இதுவரை 8 ஆயிரம் இசை நிகழ்ச்சிகளைத் தாண்டி நடத்திக்கொண்டிருக்கும் இவர், தமிழிசை தந்த உளுந்தூர்பேட்டை சண்முகத்தின் மகன்.

மூன்று பாடல்கள் இடம்பெறும் இப்படத்திலிருந்து ‘தீரத் தீர்’ என்ற முதல் பாடலை வெளியிட்டு, அது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. சின்மயி பாடியிருக்கும் இப்பாடலை ‘அக்கப்பல்லா’ என்றழைக்கப்படும் பாரம்பரிய முறையில், மிகக் குறைவான இசைக்கருவிகளின் துணையுடன், வாய்மொழியாகவே வடிவமைத்திருக்கிறார்.

சங்கர்

இப்பாடலை வைரபாரதி எழுதியிருக்கிறார். விஜய் டிவி புகழ் பிராஜின், அறிமுக நாயகி ரியாமிகா, இயக்குநர் கே பாக்யராஜ், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படமிது.

நினைவுகளைக் கிளறிய ‘நறுவி

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா குத்துச் சண்டை வீரராக நடித்துவரும் படம் ‘சல்பேட்டா’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ‘நறுவி’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார் இரஞ்சித். “இந்தப் படத்தின் இயக்குநர் போலத்தான் நானும் ‘அட்டக்கத்தி இசை வெளியீட்டு விழாவில் பதற்றமாக இருந்தேன். இந்தப் படத்தின் காட்சிகளைப் பார்த்து வியந்தேன். முதல் படத்திலேயே முதிர்ச்சியும் அழகுணர்ச்சியும் உள்ளன.

 ‘நறுவி’ படத்தில்

இங்கே படத்தை எடுப்பதைவிட வெளியிடுவதுதான் ரொம்பக் கஷ்டம். அந்தத் தடைகளை எல்லாம் தாண்டி இந்தப் படம் வெற்றிபெற வேண்டும். இசை அமைப்பாளர் கிறிஸ்டிக்கும் இயக்குநர் ராஜா முரளிதரனுக்கும் இந்தப் படம் நல்ல வாய்ப்பாக இருக்கும். தகுதியான படத்தைத் தமிழ் சினிமா ரசிகர்கள் கை விடுவதே இல்லை. ஊடகமும் நல்ல படத்தைக் கொண்டாடியே தீரும்.” என்று படக்குழுவினரை வாழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x