Last Updated : 28 Feb, 2020 09:19 AM

 

Published : 28 Feb 2020 09:19 AM
Last Updated : 28 Feb 2020 09:19 AM

பாம்பே வெல்வெட் - 24: அமிதாப் என்றோர் அதிசய நடிகர்!

ஆறு அடி இரண்டு அங்குல உயர அமிதாப் பச்சன் தற்போது தமிழில் நேரடியாக அறிமுகமாகும் திரைப்படத்தின் பெயர் ‘உயர்ந்த மனிதன்’. 50 வருடங்களுக்கு முன்னர் அப்போதைய பம்பாய் பட கம்பெனிகளில் வாய்ப்புத் தேடியலைந்தபோது, அமிதாப்புக்கு இந்த உயரமே பிரச்சினையானது. அதீத உயரம் மட்டுமல்ல, முகவெட்டு உட்பட அப்போதைய நாயகர்களுக்கு இணையான தகுதிகள் இல்லையென்று நிராகரிக்கப்பட்டார். ஆனால், அடுத்த பத்தாண்டுகளில் பாலிவுட்டில் அமிதாப்பை முன்னிறுத்தி ஓர் அதிசயம் நிகழ்ந்தது.

இந்திய சினிமாவின் நாயக முகமாக வெளிநாட்டு ஊடகங்களில் அமிதாப் பச்சனை அலங்கரிக்கும் அளவுக்கு உச்சம் தொட்டார். அதில் ஒரு பிரெஞ்சு ஊடகம், அமிதாப்பை முன்னிறுத்தி ‘தனி நபர் தொழிற்கூடம்’ என பாலிவுட்டை வர்ணித்தது. திரைப் பயணத்தின் ஏராளமான ஏற்றங்களையும் சரிவுகளையும் கடந்து, 77 வயதில் இன்றைக்கும் தனது வசீகர அதிசயங்களைத் தொடர்கிறார் அமிதாப்.

தோல்விகளில் தொடங்கினார்

அமிதாப்பின் தந்தை ஹரிவன்ஸ் ராய் பச்சன் ஒரு கவிஞர். நாடகங்களில் ஈடுபாடு கொண்ட தாய் தேஜி, இளம் அமிதாப்பின் திரைக் கனவுகளுக்குக் காரணமானார். கல்லூரி முடித்து கல்கத்தா கப்பல் நிறுவனமொன்றில் பணியாற்றிய அமிதாப்பை சினிமா கனவு துரத்த, மும்பைக்கு வந்துசேர்ந்தார். அங்கே உயரத்தை முன்னிட்டு நிராகரிப்புகளை சந்தித்தபோதும் அவர் அசரவிலை. மிருணாள் சென்னின் ‘புவன் ஷோம்’ (1969) திரைப்படத்தில் பின்னணி விவரணையாளராகக் குரல் நடிப்பில் திரை வாழ்க்கையைத் தொடங்கினார். கே.ஏ.அப்பாஸின் ‘சாத் ஹிந்துஸ்தானி’யின் 7 நாயகர்களில் ஒருவராக அமிதாப்பின் திரைப்பிரவேசம் அமைந்தது. அதன் பிறகு ஒரு டஜன் திரைப்படங்களில் தலைகாட்டியபோதும் தோல்விகளே அலைக்கழித்தன. ராஜேஷ் கன்னாவின் ‘ஆனந்த்’ திரைப்படத்தில் துணை நடிகர், ‘பர்வானா’வில் எதிர் நாயகன் என ஒரு சிலவற்றில் கவனம் ஈர்த்தார்.

திருப்புமுனை தந்தவர்கள்

கதை இலாகா இணையர்களான சலீம்-ஜாவித், அப்போதைய பாலிவுட் கதைகளின் போக்கில் அல்லாத புதிய கதை ஒன்றை உருவாக்கி வைத்திருந்தார்கள். அதற்கான திரைக்கதை, வசனத்தை வாசித்ததும் இயக்குநர் பிரகாஷ் மெஹ்ரா தானே தயாரிப்பதாகவும் சொல்லிவிட்டார். ஆனால், கதையை தூக்கிச் சுமக்கும் கோபக்கார இளைஞனின் ரூபம் கொண்ட நாயகனை வலைவீசித் தேட வேண்டியதாயிற்று. அப்போது இந்தி சினிமாவில் தட்டுப்பட்ட முகங்கள் எல்லாம் காதல் கதைக்கான பழங்களாக இருந்தன. அமிதாப்பைக் கண்டதும் சலீம்-ஜாவித் இருவரும் உற்சாகமானார்கள். அதுவரை பாராமுகமான அந்த முகவெட்டும் கண்களும் உயரமும் குரல் வனப்பும் அமிதாப் பச்சனை நாயகனாக்கின. அப்படித்தான் ‘ஸாஞ்சீர்’ (1973) திரைப்படத்தின் அதிரிபுதிரி வெற்றி சாத்தியமானது. பாலிவுட்டில் ‘கோபக்கார இளைஞன்’ என்ற அலை உருவானது. அடுத்தடுத்த அமிதாப்பின் வெற்றித் திரைப்படங்களிலும் சலீம்-ஜாவித் கூட்டணி தொடர்ந்தது.

ஒரு நாயகன் உருவாகிறான்

எழுபதுகளின் தொடக்கம் என்பது நாட்டு விடுதலைக்குப் பின்னரான முதல் தலைமுறை இளைஞர்களின் எதிர்பார்ப்புகளால் நிரம்பியிருந்தது. அப்போது நிலவிவந்த வறுமை, உணவுப் பொருள் தட்டுப்பாடு, தலைவிரித்தாடிய லஞ்ச ஊழல், வேலையில்லாத் திண்டாட்டம், நாட்டின் நெருக்கடி நிலைப் பிரகடனம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் இந்திய இளைஞர்களை வெகுவாக அலைக்கழித்தன. அவர்களுடைய ஆற்றாமை ரௌத்திரமாக வெடித்ததை, அப்பட்டமாகத் திரையில் பிரதிபலித்தார் அமிதாப். ‘கோபக்கார இளைஞ’னாகத் தோன்றியபோது அமிதாப்புக்கு வயது முப்பதைத் தாண்டியிருந்தது. ‘இளைஞன்’ அவரிடமிருந்து நழுவத் தொடங்கியபோதும், தனது துடிப்பான நடிப்பால் கதையின் தேவைக்கு நியாயம் சேர்த்தார். இடையில் ‘அபிமான்’, ‘நமக் ஹராம்’, ‘மஜ்பூர்’ படங்களில் சற்று விலகினாலும், 1975-ன் ‘தீவார்’, ‘ஷோலே’ ஆகிய திரைப்படங்கள் அமிதாப்பின் உக்கிர பிம்பத்தை ஒரு நட்சத்திரமாக உயர்த்தின.

‘தீவார்’ படத்தில் கோபக்கார அவதாரம் தந்த இயக்குநர் யஷ் சோப்ரா, ‘கபி கபி’ (1976) போன்ற படங்களின் மூலம் அமிதாப்பைக் காதல் நாயகனாக்கினார். ‘அதாலத்’, ‘அமர் அக்பர் அந்தோணி’ படங்களில் தோன்றிய அமிதாப்புக்கு 1978 வரமாக வந்தது. ‘முகாதர் கா சிக்கந்தர்’, ‘டான்’, ‘திரிசூல்’ எனத் தொடங்கி ஒரே ஆண்டின் 6 திரைப்படங்கள் வெளியாகி இந்திய சினிமாவில் முன்மாதிரி வெற்றியைத் தந்தன. ரேகாவுடன் ஜோடி சேர்ந்த ‘மிஸ்டர்.நர்ட்வர்லால்’ (1979) திரைப்படத்தின் மூலம் பின்னணிப் பாடகராவும் உருவெடுத்தார்.

வலி தந்த ‘கூலி’

பெங்களூருலில் நடைபெற்ற ‘கூலி’ படப்பிடிப்பில், சண்டைக் காட்சிக்கு ‘டூப்’ மறுத்ததில் அமிதாப் பெரும் விலை கொடுக்க வேண்டியதானது. வயிற்றைப் பிளந்த ஆழக்காயம், அறுவை சிகிச்சை, பல மாத மருத்துவமனை வாசம் என அமிதாப்பைச் செத்துப் பிழைக்கச் செய்தது. அந்த நெருக்கடி, ஒரு நட்சத்திரத்தைக் கொண்டாடும் ரசிக மனப்பான்மையின் தீவிரத்தை பாலிவுட் அறியவும் வாய்ப்பானது. பெரும் ரசிகர் பட்டாளம் புற்றீசலாகப் புறப்பட்டு மருத்துவமனையில் தவமிருந்தது. வழிபாட்டுத் தலங்களில் கூட்டுப் பிரார்த்தனைகள் நடந்தன. நேருவுக்குப் பின்னர் நாட்டை உலுக்கிய பிரபலத்தின் மருத்துவமனைப் போராட்டமாக அதை ஊடகங்கள் பதிவுசெய்தன. இந்த ரசிகர்களுக்காக ‘கூலி’யில் இறந்துவிடும் அமிதாப்பின் கதாபாத்திரத்தைத் திருத்தி, உயிர்பிக்கச் செய்தார் இயக்குநர் மன்மோஹன் தேசாய்.

‘கூலி’ பட விபத்து அமிதாப்பின் நாயக பிம்பத்தை ஊதிப் பெருக்கினாலும் தனிப்பட்ட வகையில் உலை வைத்தது. தசை, நரம்பு மண்டலத்தைத் தீவிரமாகப் பாதித்ததில், உடல், மனத்தின் அடிப்படை உறுதி குலைந்தது. அது அவரது திரைவாழ்க்கைக்கு முடிவு கட்டி, பிரபல்யத்தை அரசியலில் தொடருமளவுக்கு அமிதாப்பை மாற்றியது. 3 ஆண்டு அரசியல் கசப்பனுபவத்தில் மீண்டும் பாலிவுட்டுக்கே திரும்பினார். அப்படி உருவான ‘ஷாகின்ஷா’ (1988) திரைப்படம் வெற்றியடைந்தாலும் அடுத்து வந்த பலதும், வெற்றி தோல்விக்கு இடையே ஊசலாடின. ‘அக்னீபத்’ (1990) திரைபடத்துக்காகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தபோதும், ‘இன்சானியத்’ (1994) போன்ற படங்களின் தோல்வியால் சினிமாவுக்கு ஐந்தாண்டு இடைவேளை விட்டார் அமிதாப்.

வயதுக்கேற்ற வேடங்கள்

மீள் பிரவேசத்தின்போது ‘அமிதாப் பச்சன் கார்பரேஷன்’ நிறுவனம் வாயிலாகத் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார். ஆனால், கையைச் சுட்டுக்கொண்டு சட்ட நெருக்கடிக்கு ஆளானார். தொடர்ந்து கதாநாயகனாக நடித்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தராமல் போகவே, புத்தாயிரத்தில் வயதுக்கேற்ற வேடங்களை ஏற்கத் தொடங்கினார். அந்த முடிவு அமிதாப் இன்னொரு சுற்று வலம் வரக் காரணமானது. யஷ் சோப்ரா தயாரிப்பில் ஷாருக்கானுடன் இணைந்த ‘மொஹப்பதேன்’ (2000) தொடங்கி ‘கபி குஷி கபி கம்’ (2001) என வயதைப் பிரதிபலிக்கும் வேடங்கள் வரவேற்பைப் பெற்றன. நாயகனாகத் தோன்றாதபோதும் தலைகாட்டிய படங்களில் எல்லாம் ஒரு நடிகனாகத் தனது திரை இருப்பை நிரூபித்துக்கொண்டே இருந்தார். தொடர்ந்து ‘அக்ஸ்’ (2001), ‘காக்கி’, ‘தேவ்’ (2004), சஞ்சய் லீலா பன்சாலியின் ‘பிளாக்’ (2005) ஆகியவை அமிதாப்பின் புதிய பரிமாணத்தைப் பிரகாசிக்கச் செய்தன. அதன் பிறகு அறுபது வயதின் மத்தியில் அமிதாப்புக்கு அடுத்த சிகரம் சாத்தியமானது. அதிகமான திரைப்படங்கள் மட்டுமன்றி 2 டஜனுக்கும் மேலான விளம்பரங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என ரசிகர்களின் வரவேற்பறையை நிறைத்தார்.

சளைக்காத அமிதாப்

பேயாகத் தோன்றிய ‘பூத்நாத்’ (2008), அபிஷேக் பச்சனின் 13 வயது மரபு நோயுற்ற மகனாகத் தோன்றிய ‘பா’ (2009), நகைச்சுவை பிளிறலான ‘பிக்கு’ (2015), பெண்ணியம் பேசும் வழக்கறிஞரான ‘பிங்க்’ (2016), 102 வயது கிழவராகத் தோன்றிய ‘102 நாட் அவுட்’ (2018) என அமிதாப்பின் அடுத்தடுத்த படங்கள் இந்தியாவின் வேறெந்த நடிகருக்கும் வாய்க்காதவை. 50 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அமிதாப், ‘தி கிரேட் கேட்ஸ்பி’ (2013) ஆங்கிலப் படத்தின் மூலமாக ஹாலிவுட்டிலும் தோன்றினார். 3 பத்ம விருதுகள், சிறந்த நடிகருக்கான 4 தேசிய விருதுகள், கடந்த ஆண்டின் இறுதியில் பால்கே விருது போன்ற அங்கீகாரங்களைத் தலைக்கு ஏற்றாத அமிதாப், சளைக்காது அடுத்த சுற்றுக்குத் தயாராகி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x