Published : 21 Feb 2020 09:25 AM
Last Updated : 21 Feb 2020 09:25 AM
கடந்த மாதம் சிங்கப்பூர் சென்று மேடம் டுசாட்ஸ் மெழுகுக்காட்சியகத்தில் தனது மெழுகுச் சிலையை திறந்து வைத்துவிட்டு ‘இந்தியன் 2’ படப்பிடிப்புக்கு மகிழ்ச்சியுடன் திரும்பியிருந்தார் காஜல். அவரது மகிழ்ச்சியைக் காணாமல் அடித்துவிட்டது படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்து.
அதிலிருந்து நூலிழையில் உயிர் தப்பிய அவர், கண் முன்னால் மூன்று மரணங்களைப் பார்த்த மனநிலை குறித்த தனது ட்விட்டில், "என்னுடன் பணியாற்றியவர்களின் எதிர்பாராத மரணம், எனக்குத் தரும் மனவலியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. கிருஷ்ணா, சந்திரன் மற்றும் மது ஆகிய மூன்று பேரின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள், அன்பு.
தனிமையான இந்தத் தருணத்தில் கடவுள் அவர்களுக்கு வலிமையைத் தரட்டும். விபத்துக்குப்பின் அதிர்ச்சி, குழப்பம், ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன். உயிரோடு இருந்து இந்த ட்வீட்டைப் பதிவேற்ற ஒரு நொடி மட்டுமே ஆனது. அந்த ஒரு தருணம், நன்றியுணர்வோடு இருக்கிறேன். நேரம், உயிரின் மதிப்பு குறித்து நிறையக் கற்றுக்கொண்டேன்" என்று தெரிவித்துள்ளார்.
தலைப்பை மாற்றிய படக்குழு!
இயக்குநர் கீராவின் இயக்கத்தில் சமுத்திரக்கனி, முனீஸ்காந்த், சாந்தினி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘பற'. படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து தணிக்கைக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், ‘பற' என்ற தலைப்புக்குத் தணிக்கை குழு எதிர்ப்பு தெரிவித்து, ‘தலைப்பை மாற்றவில்லை என்றால் ‘ஏ' சான்றிதழ் கொடுப்போம்’ எனக் கூறியதாகத் தெரிகிறது. இதனால் படத்தின் வியாபாரத்தை மனதில் வைத்து ‘எட்டுத்திக்கும் பற' எனத் தலைப்பை மாற்றி தணிக்கைப் பணிகளை முடித்துள்ளது படக்குழு.
தலைப்புச் சர்ச்சை குறித்து இயக்குநரிடம் கேட்டபோது, “ ‘பற' என்ற தலைப்பைப் பலரும் சாதியத்தின் குறியீடா என்று கேட்கிறார்கள். அது சாதியத்தின் குறியீடு அல்ல. ‘பற' என்றால் பறத்தல். விடுதலையின் குறியீடாகவே இந்தத் தலைப்பை வைத்தேன்.
இது சாதி வெறிக்கு எதிரான படம். குறிப்பாக ஆணவக் கொலையின் கொடூரத்தை, ரத்தமும் சதையுமாகச் சொல்லியிருக்கிறோம். இந்தக் கொடுமைக்கு ஒரு தீர்வையும் படம் சொல்லியிருக்கிறது. இரு தனிநபர்களுக்கு இடையில் மலரும் காதல் எனும் உணர்வை, தமிழ்நாடே அதிரும்படியான விஷயமாக்குகிறார்கள். அதன் மூலம் எப்படி அரசியல் லாபம் அடைகிறார்கள் என்பதைச் சொல்லும் படமிது” என்கிறார் கீரா.
‘கைதி’யாக மாறும் ஹ்ருத்திக்
‘கைதி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இந்தி மறு ஆக்க உரிமையைப் பெறப் பல பாலிவுட் நிறுவனங்கள் முயன்றன. ஆனால் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ட்ரீம் வாரியர் நிறுவனமே அதைத் தயாரிக்கிறது. இந்திப் பதிப்பில் ஹ்ருத்திக் ரோஷன் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கருதி, அவரிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் இதை அதிகாரபூர்வமாக அறிவிக்க இருக்கிறது படக்குழு.
லாலிபாப் நண்பன்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் இரண்டு படங்களுக்கான ‘முதல் தோற்றங்கள்’ அவரது பிறந்தநாளை ஒட்டி வெளியிடப்பட்டன. இரண்டுமே அவரது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. என்றாலும் ‘அயலான்’ படத்தின் முதல் தோற்றத்தில் வேற்றுக்கிரக வாசியுடன் சிவகார்த்திகேயன் லாலிபாப் சாப்பிடுவது போன்ற முதல் தோற்றம் அவரது ரசிகர்களின் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது.
மனிதனுக்கும் வேற்றுக்கிரக வாசிக்கும் இடையிலான உறவைச் சித்தரிக்கும் அறிவியல் புனைக் கதை இதுவரை தமிழில் முயற்சி செய்யப்படவில்லை. அதை ஹாலிவுட்டுக்கு இணையாகத் தர இருப்பதாக படத்தின் இயக்குநர் ஆர்.ரவிகுமார் தரப்பிலும் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தரப்பிலும் தெரிவிக்கிறார்கள். மனித நேயத்தையும் பிரபஞ்ச நேயத்தையும் முன்னிறுத்தும் இந்தக் கதைக் களத்தில் நகைச்சுவைக்கும் சாகசங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு என்கிறது இயக்குநரின் தரப்பு.
காரணம் அவசியமானது!
கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் மிஷ்கின் - உதயநிதி கூட்டணிக்கு வெற்றியாக அமைந்துவிட்டது ‘சைக்கோ’ திரைப்படம். இந்தப் படத்தில் வில்லன் ஏன் கொலை செய்கிறான் என்பதற்கான காரணம் அழுத்தமாகச் சொல்லப்படவில்லை என்று பெரும்பாலான விமர்சனங்களில் சுட்டிக்காட்டப்பட்டது. தற்போது ‘சைக்கோ’ படத்தின் அலை அடங்குவதற்கு முன் தயாராகியிருக்கும் மற்றுமொரு சைக்கோ கில்லர் படம் ‘மரிஜுவானா’.
ரிஷி ரித்விக் நாயகனாகவும் ஆஷா பாத்தலோம் நாயகியாகவும் நடிக்க எம்.டி.ஆனந்த் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில், கொலைகளுக்கான காரணம் தமிழ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விழிப்புணர்வைக் கொடுப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கிறது என்கிறார் இயக்குநர். அது பற்றி படத்தின் இயக்குநரிடம் கேட்டபோது “உண்மை சம்பவங்களை மையமாக வைத்து ‘மரிஜுவானா’ படத்தை எடுத்துள்ளோம். போதைக்கு அடிமையானவர்களால் சமூகத்தில் நடக்கும் குற்றங்கள், குழந்தைகள் பராமரிப்பில் பெற்றோர்களுக்கு இருக்கும் கடமைகள் ஆகியவற்றைச் சொல்லி இருக்கிறோம்.
ஆனால் தமிழக தணிக்கை குழுவினர் சர்ச்சையான 52 காட்சிகளை நீக்கினால்தான் ‘ஏ’ சான்றிதழ் கொடுக்காமல் இருப்போம் என்றார்கள். அந்தக் காட்சிகளை நீக்கினால் இந்தப் படம் தமிழகப் பெற்றோர்களுக்குத் தரப்போகிற செய்தி சென்று சேராமலேயே போய்விடும். இது பெற்றோர்களுக்கும் இன்றைய இளைஞர்களுக்குமான படம்” என்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT