Published : 21 Feb 2020 07:43 AM
Last Updated : 21 Feb 2020 07:43 AM
எஸ்.எஸ்.லெனின்
உலகின் பல மூலைகளில் சினிமாக்கள் தனித்தனிக் குணங்களுடன் தயாராகின்றன. பாலிவுட்டை மையமாகக்கொண்ட இந்தி சினிமாவுக்கும் தனிக் கல்யாண குணங்கள் உண்டு. அதன் காதல், சோகம், பாசம், வசனம், மோதல், பாடல், இசை என ஊடுபாவும் உணர்வுகள் அலாதியானவை. இவையனைத்தும் சிறப்பான உணவுக்கான சேர்மானப் பொருள்களைப் போல் சீராகக் கலந்திருப்பதும் அவசியம்.
எழுபதுகளின் பிரபலமான தயாரிப்பாளர், இயக்குநர் யஷ் சோப்ரா, இந்த மசாலா சேர்மானத்துக்குச் சிறப்பான அஞ்சறைப் பெட்டியாகத் தன்னை முன்னிறுத்தினார். ஐம்பது ஆண்டுகளில் அவர் தயாரித்த, இயக்கிய திரைப்படங்களின் பாணியிலிருந்தே, அதன் பின்னரான வெகுஜன இந்தி சினிமா தன்னை வடித்துக்கொண்டது.
பிரிட்டிஷ் இந்தியாவின் லாகூரில் பிறந்து ஜலந்தரில் படித்தவர் யஷ் ராஜ் சோப்ரா. அவரது பால்ய பருவத்தை தேசப் பிரிவினை வெகுவாகப் பாதித்திருந்தது. தன் அண்ணன் பி.ஆர்.சோப்ராவை அடியொற்றி பம்பாய்ப் படவுலகில் நுழைந்தபோது, இந்தப் பிரிவினையையும் அதற்கு அடிப்படையான இருவேறு சமூகத்தினரின் கொந்தளிப்பையும் படமாக்க விரும்பினார்.
இயக்குநர்கள் ஐ.எஸ்.ஜோஹர், பி.ஆர்.சோப்ராவிடம் உதவி இயக்குநராகத் திரைவாழ்க்கையைத் தொடங்கிய யஷ் சோப்ராவின் முதல் திரைப்படம் ‘தூல் கா ஃபூல்’ (1959). இந்துக் குழந்தை, முஸ்லிம் குடும்பத்தில் வளர்வதை மையமாகக் கொண்ட இந்தத் திரைப்படம் விமர்சிக்கப்பட்டபோதும், வெற்றிபெற்றது.
தனது அடுத்த படத்துக்கு அதிகம் அலட்டிக்கொள்ளாது, முதல் படத்தின் ஒருவரிக் கதையைத் திருப்பிப் போட்டார். முஸ்லிம் குழந்தை இந்துக் குடும்பத்தில் வளர்வதைத் தேசப் பிரிவினையின் பின்னணியில் பதிவுசெய்த ‘தர்ம்புத்ரா’ (1961) தேசிய விருது பெற்றது. ஆனால், திரையிட்ட இடங்களில் வன்முறை வெடித்ததில், அதன் பின்னரான தனது படங்களில் அரசியலைத் தவிர்த்தார்.
புதிய பாணி
சோப்ராவின் ‘வக்த்’ (1965), மிகப் பெரிய வசூலை வாரிக் குவித்ததுடன் பாலிவுட்டின் புதிய வார்ப்புகளுக்கு அடித்தளமிட்டது. ஒரே திரைப்படத்தில் அரை டஜனுக்கும் அதிகமான முன்னணி நட்சத்திரங்களை உலவ விடும் பாலிவுட்டின் போக்கு, ‘வக்த்’ திரைப்படத்திலிருந்தே தொடங்கியது. சுனில் தத், சசி கபூர், ராஜ்குமார், சாதனா, மதன் பூரி, ஷர்மிளா தாகூர், அசலா சச்தேவ், ரெஹ்மான் எனத் திரைகொள்ளாது திரண்ட நட்சத்திரங்கள் ரசிகர்களுக்குக் கிளர்ச்சி தந்தனர்.
மேலும், அசோக்குமாரின் ‘கிஸ்மத்’ தொடங்கிவைத்த ‘குடும்ப உறுப்பினர்கள் தொலைந்து பின்னர் ஒன்றுசேரும்’ கதைக்களத்தை ‘வக்த்’ பிரபலமாக்கியது. அண்ணன் பி.ஆர்.சோப்ரா தயாரிப்பில் அதுவரை ஒரு இயக்குநராக இருந்த யஷ் சோப்ரா, சகோதரனுடனான கருத்து வேற்றுமையில் எழுபதுகளின் தொடக்கத்தில் தனித் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கினார். இன்று இந்தியாவின் மிகப்பெரும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் வளர்ந்திருக்கிறது.
கோப அமிதாப்பின் சகாப்தம்
எழுபதுகளில் யஷ் சோப்ரா உச்சம் தொட்டார். யஷ் ராஜ் ஃபிலிம்ஸின் முதல் திரைப்படமாக ராஜேஷ் கன்னா நடித்த ‘தாக்’ (1973) வெற்றிக் கணக்கைத் தொடங்கி வைத்தது. அடுத்த படமான ‘தீவார்’ (1975) மூலம் ‘கோபக்கார இளைஞன்’ சினிமாவுக்கான சகாப்தம் பாலிவுட்டில் தொடங்கியது. திரையுலகில் தனக்கான இடத்துக்காகத் தத்தளித்து வந்த அமிதாப், ‘தீவார்’ மூலம் ஒரு முன்னணி நடிகராக உயர்ந்தார்.
அதே பாணியில் ‘திரிசூல்’ (1978), தந்ததுடன், காதல் ரசம் சொட்டும் ‘கபி கபி’ (1976), ‘சில்சிலா’ (1981) படங்களை அமிதாப்புடன் கைகோத்து யஷ் சோப்ரா உருவாக்கினார். எண்பதுகளில் சுனில் தத், திலீப் குமார், ராஜேஷ் கன்னா எனப் பெரும் நடிகர்களுடன் கைகோத்தபோதும், யஷ் சோப்ராவின் திரைப்படங்கள் தப்பிப் பிழைத்ததுக்கு அப்பால் தனித்துவ வெற்றியைச் சாதிக்கவில்லை. அதற்காகப் பத்தாண்டுகள் அவர் காத்திருக்க வேண்டியிருந்தது.
வெளியே விரிந்த வர்த்தகம்
எண்பதுகளின் இறுதியில் ஸ்ரீதேவியை முன்னிறுத்தி காதலும் இசையும் கலந்துகட்டிய ‘சாந்தினி’ (1989) மூலம் யஷ் சோப்ரா மீண்டும் எழுந்து நின்றார். இந்தத் திரைப்படத்திலிருந்து வெளிப்புறப் படப்பிடிப்புக்கான யஷ் சோப்ராவின் ரசனை பாலிவுட்டில் பரவலானது. ‘கபி கபி’ திரைப்படத்தில் இமயமலைச் சாரலின் குளுமையை ரசிகர்களுக்குக் கடத்தியவர், ‘சாந்தினி’க்காக சுவிட்சர்லாந்து போனார். அதன் பிறகான அவரது படங்களில் ஒரு சுவிஸ் பாடல் காட்சியேனும் நிச்சயம் இருக்கும்.
சோப்ராவைப் பின்தொடர்ந்து இந்திய சினிமாக்களை சுவிட்சர்லாந்து ஆக்கிரமிக்கத் தொடங்கியது. இந்தியர்களின் விருப்பத்துக்குரிய சர்வதேசச் சுற்றுலாத் தலங்களில் சுவிட்சர்லாந்து முக்கிய இடம் பிடித்ததில், சுவிஸ் ரயில் ஒன்றுக்கு சோப்ராவின் பெயர் சூட்டப்பட்டதுடன், இன்டர்லாகன் என்ற இடத்தில் பின்னர் யஷ் சோப்ராவுக்குச் சிலையும் வைத்தார்கள்.
‘சாந்தினி’யைத் தொடர்ந்து யஷ் சோப்ரா இயக்கிய இசைக்காவியங்கள், முந்தைய பத்தாண்டுகளில் இந்தி சினிமாவை ஆக்கிரமித்திருந்த வன்முறை கலாச்சாரத்துக்கு விடைகொடுத்தன. அனில்கபூர், தேவி ஜோடி சேர்ந்த ‘லாம்ஹே’ (1991) திரைப்படத்தின் வெற்றி மூலம் இந்தியாவுக்கு வெளியே, இந்தி சினிமாவுக்கான வணிக தளத்தையும் யஷ் சோப்ரா வலுவாக்கினார்.
தனியிடம் பிடித்த ஷாருக்
அமிதாப்புக்கு அடுத்தபடியாக, மனோத்துவ திரில்லரான ‘தர்’ (1993) படத்தின் மூலம் ஷாருக்கான் என்ற புதிய இளைஞருக்கு யாஷின் இயக்கம் வாழ்வு தந்தது. அந்தப் படத்தின் நாயகன் சன்னி தியோலைவிட, எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்த ஷாருக்கானை ரசிகர்கள் கொண்டாடினர். அதன் பின்னர் சோப்ரா இயக்கம் மட்டுமன்றி, யஷ் ராஜ் நிறுவனத் தயாரிப்புகளின் ஆஸ்தான நட்சத்திரமாகவும் ஷாருக் மாறினார்.
சுவிட்சர்லாந்திலிருந்து ஜெர்மனிக்கு ஜாகையை மாற்றிய சோப்ராவின் ‘தில் தோ பாகல் ஹை’ (1997) திரைப்படம், 3 தேசிய விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளுடன் உலகெங்கும் வெற்றி நடைபோட்டது. அப்படம் உட்பட ‘வீர்-ஸாரா’ (2004), ‘ஜப் தக் ஹை ஜான்’ (2012) என ஷாருக்கின் வெற்றி வரிசையை அவ்வப்போது சோப்ரா உறுதிசெய்தார். சோப்ரா தயாரிப்பில் அவருடைய மகன்களில் ஒருவரான ஆதித்ய சோப்ரா, அழியாக் காதல் காவியமான ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ திரைப்படத்தை இயக்கினார். சோப்ரா தயாரித்த ‘மொகபதீன்’ திரைப்படத்துக்காக அமிதாப் – ஷாருக் முதல்முறையாக இணைந்தனர்.
பொழுதுபோக்கு சினிமா
பெரும் நட்சத்திரக் கூட்டம், அழகு நட்சத்திரங்களை அலங்கரிக்கும் நவீன ஆடைகள், கண்ணுக்கினிய தலங்களில் படப்பிடிப்பு, மனதை உருக்கும் இசை, நெஞ்சைத் தொடும் பாடல்கள், இவையனைத்தையும் இணைக்கும் அழுத்தமான கதை எனத் தன்னை நம்பி வரும் ரசிகனை ஏமாற்றாத பொழுதுபோக்கைத் திரையில் வடித்துத் தந்தார் சோப்ரா.
அதைப் பின்பற்றி இந்தி சினிமாவில் மட்டுமன்றி இதர இந்திய மொழிகளிலும் திரைப்படங்கள் உருவாயின. சோப்ரா தயாரித்த ‘தில்வாலே துல்ஹனியா’ திரைப்படத்தின் பாதிப்பில் குறைந்தது 25 படங்களேனும் இந்திய மொழிகளில் இதுவரை உருவாகி இருக்கின்றன.
‘ஜப் தக் ஹை ஜான்’ திரைப்படத்துடன் ஓய்வை அறிவித்த சோப்ரா, அப்படத்துக்காகத் தனது விருப்பத்துக்குரிய சுவிட்சர்லாந்தில் ஷாருக் - கத்ரீனா பாடல் காட்சியை ரசித்து படமாக்கியபோது டெங்கு காய்ச்சலில் முடங்கி உயிரிழந்தார். ஆறு தேசிய விருதுகள், பத்ம பூஷன், பால்கே விருதுகள்.
‘பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ்’ சார்பில் வாழ்நாள் உறுப்பினர் தகுதியைப் பெற்ற முதல் இந்தியர் என யஷ் சோப்ராவை அலங்கரித்த அங்கீகாரங்கள் ஏராளம். இவையனைத்தையும்விடக் காதலைத் தனது பாணியில் திரையில் உயிரூட்டியதற்காக சாமானிய ரசிகர்கள் அன்புடன் அழைத்த ‘இந்தி சினிமாவின் காதல் மன்னர்’ என்ற பட்டமே யஷ் சோப்ரா என்றும் விரும்பியது!
தொடர்புக்கு: leninsuman4k@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT