Published : 14 Feb 2020 11:52 AM
Last Updated : 14 Feb 2020 11:52 AM
ஷங்கர்ராமசுப்ரமணியன்
தென்கொரிய சினிமாவின் முகமாகப் பார்க்கப்படும் கிம் கி டுக்கை அடுத்து, தென் கொரியாவிலிருந்து அறியப்பட்டிருக்கும் மற்றுமொரு மாஸ்டர் படைப்பாளி பொங் ஜுன் ஹோ. தற்போது ஆஸ்கர் வழியாகச் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறார். சினிமாவின் பல வகைமைகளை இயல்பாகக் கலப்பதில் வல்லவர். நகைச்சுவை, திரில்லர், திகில், ஃபேண்டசி என ஒரே கதையில் இயல்பாகத் தடம் மாறுவதுதான் ‘பாரசைட்’.
‘கோமாளி இல்லாத நகைச்சுவை, வில்லன்கள் இல்லாத அவலம்’ என்று மிகக் குறைந்த வார்த்தைகளில் தன் திரைப்படம் பற்றிச் சொல்வதை, நாம் வாழும் இன்றைய வாழ்க்கைக்கும் பொருத்திப் பார்க்க முடியும். நமது ஆசையும் சபலங்களும் நம்மைக் கோமாளிகளாகவும் வில்லன்களாகவும் எப்படி மாற்றுகின்றன என்பதை ஒரு நாவல் போல நிதானமாகத் தனது ‘பாரசைட்’ படத்தில் வெளிப்படுத்திவிடுகிறார்.
ஒரு நவீன ஷாப்பிங் மாலுக்குள் நுழைந்து நடப்பதைப் போலத் தான், நம் முன்னர் உலகம் பெரும் சந்தையாக விரித்திருக்கிறது. ஒவ்வொரு கடையின் கண்ணாடி வழியாகவும் தேவை, தேவையின்மையைத் தாண்டி பொருட்கள், அளிக்கப்படும் சேவைகள், வசதிகள் நம்மை வசீகரிக்கின்றன.
நமது கண்களுக்கு முன்னால் நவீனச் சந்தை விரித்திருக்கும் ஆசைக்கு வர்க்க வித்தியாசம் இல்லை. நம் உணர்வுகளுக்குள் நாள்தோறும் தங்குதடையற்று நுழைந்து நம்மைப் பாதிக்கும் நுகர்வுப் பொருட்களையும் வசதிகளையும் அதுசார்ந்த வாழ்க்கையையும் வாழ நினைத்தால் குறுக்கிடும் சுவர் ஒன்று உண்டு; பொருளாதார அடிப்படையிலான வர்க்கம் என்னும் பிரிவினைச் சுவர்தான் அது. அந்தச் மாயச் சுவரை வசதியற்றவர்கள் தாண்ட நினைக்கும்போது ஏற்படும் விபரீதம்தான் ‘பாரசைட்’
ஏழைகளும் கீழ்நடுத்தர வர்க்கத்தினரும் வாழும் குடியிருப்பில் தெருவின் தரைமட்டத்துக்குக் கீழான தளத்தில் வாழும் கிம் குடும்பத்தினர், சியோல் நகரத்தின் மையத்தில் பணக்காரத் தொழிலதிபர் பார்க்ஸ் குடும்பத்தினர் வாழும் உல்லாச வாழ்க்கையைச் சில நாட்களுக்கு வாழ ஆசைப்படுகிறார்கள். அப்போது ஏற்படும் சிக்கல்களும் துயரங்களும் பயங்கரங்களும் தான் ‘பாரசைட்’டின் கதை.
தொடக்கத்தில் நமக்கு கிம் குடும்பம் அறிமுகமாகிறது. அண்ணன் கிம் கி வூவும் தங்கை கிம் கி-ஜங்கும் இலவச வைஃபை வசதியைத் தங்கள் கீழ்த்தள அபார்ட்மெண்டில் பெறுவதற்குப் போராடுகிறார்கள். கடைசியில் அவர்களுக்கு வைஃபை கிடைக்கும் இடம் அவர்கள் வீட்டின் கழிப்பறை.
அங்கிருந்து இருவரும் வாட்ஸ்-அப்பைப் பார்க்கும்போது அது நம்முடைய யதார்த்தமாகவும் ஆகிவிடுகிறது. கிம்மின் வேலையில்லாத அப்பா, அம்மா, தங்கை அனைவரையும் இணைப்பது, எப்படியாவது பொருளாதார வசதியை அடைய வேண்டுமென்ற கனவு ஒன்றே. இப்படியான சூழ்நிலையில் கிம் கி வூவுக்கு, பணக்காரப் பகுதியில் வசிக்கும் பார்க்ஸ் குடும்பத்தில் மூத்த மகள் டே ஹைக்கு ஆங்கில டியூசன் எடுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
ஓவியத்திறன் கொண்ட தன் தங்கையை பார்க் குடும்பத்தில் உள்ள சுட்டிப் பையனுக்கு ஓவிய ஆசிரியையாகச் அறிமுகப்படுத்துகிறான். இப்படியாக கிம் கி-வூவின் அப்பா, அம்மா உட்பட அனைவரும் ஒரே குடும்பம் என்ற தங்களது அடையாளத்தை மறைத்துக்கொண்டு, பார்க் குடும்பத்தில் ஊழியர்களாக இணைகின்றனர். ஒரு ஆள்மாறாட்ட நகைச்சுவைக் கதை என்ற தோற்றத்தில், ஒவ்வொரு காட்சியிலும் சிரிப்பைத் தொற்றவைப்பதில் வெற்றிபெறுகிறார் இயக்குநர்.
மழை வந்தால் சாக்கடை நிறையும் கீழ்தளக் குடியிருப்பில் வசிக்கும் கிம் குடும்பத்தினருக்குள் நிலவும் நெருக்கமும் அன்பும் பார்க்ஸ் குடும்பத்தில் நிலவும் பகட்டு, அந்நியத்தன்மையோடு எதிரெதிராகக் காட்டப்படுகிறது. குடும்பத் தலைவர் பார்க் தன் அதிநவீன பங்களாவில் படிகளில் ஏறுபவராகவே உள்ளார். கிம் குடும்பத்தினரோ தங்கள் வீட்டுக்குச் செல்லப் படிகளில் இறங்கிக் கொண்டிருக்கின்றனர்.
பார்க்கின் குழந்தைகளைப் பராமரித்து பார்க்கின் காரை ஓட்டும் பணியில் நெருக்கமாக இருந்தாலும் அவர்கள் உடலில் இருந்து வரும் ‘ஏழை வாசம்’ பார்க்கின் மூக்கைத் தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறது. கிளைமாக்ஸில் உயிருக்கு அச்சுறுத்தலான நிலை வரும்போதும், அந்த வாசம் காரணமாக பார்க்ஸ் காண்பிக்கும் ஒவ்வாமைதான், ஓட்டுநர் கீ-டெக்கைக் கொலைக்குத் தூண்டுகிறது.
எதிர்பாராமல் வரும் மழைதான் படத்தின் திருப்பத்துக்குக் காரணமாகிறது. திட்டமிட்டபடி சுற்றுலாவைத் தொடர முடியாமல் பார்க்ஸ் குடும்பத்தினர் வீடுதிரும்புகின்றனர். அப்போது அனைத்தும் குழம்பிப் போகிறது. ஒரே இரவில் கிம் குடும்பத்தினர் மாளிகை வாழ்க்கையையும் தெரு வாழ்க்கையையும் அனுபவிக்க நேர்ந்துவிடுகிறது. எதையும் திட்டமிட முடியாது என்பது அங்கே உணர்த்தப்பட்டுவிடுகிறது. படத்தின் தொடக்கத்திலிருந்து அசட்டுத்தனமாகவும், விடலையாகவும் தெரிந்த தந்தை கி-டெக் இப்படிப் பேசுகிறார்.
“நாம் ஒரு திட்டமிட்டால், அதன்படி வாழ்க்கையில் நடப்பதில்லை. சுற்றிலும் பார். இந்த மக்கள் இன்றைக்கு இரவு ஒரு ஜிம்மில் ஒன்றாகப் படுத்து உறங்குவோம் என்று எண்ணியிருப்பார்களா.. திட்டமே தேவையில்லை. திட்டமில்லாவிட்டால், எதுவும் தவறாகப் போய்விடாது. நமது கட்டுப்பாட்டை மீறிப் போனாலும் அதனால் பாதகம் ஒன்றும் இல்லை.”
மிக எளிமையாக அறிமுகமாகிப் பல்வேறு அடுக்குகள் கொண்ட பேய்க்கதையின் தன்மையை ஒளிப்பதிவு, இசை என அனைத்து வெளிப்பாடுகள் வழியாகவும் இயக்குநர் அடைந்துள்ளார்.
மேல்தட்டு வர்க்கம் தொடர்ந்து சௌகரியத்தை அனுபவிக்க, கீழ்தட்டு வர்க்கம் சுமக்கும் வரலாற்றுச் சுமைகளை நகைச்சுவையாகவும் தீவிரமாகவும் சொல்கிறார் இயக்குநர் பொங் ஜுன் ஹோ. இன்னொரு உயிரை ஒட்டித் தன் வாழ்க்கையை வாழும் உயிரைத்தான் ஒட்டுண்ணி என்கிறோம். ‘பாரசைட்’ படத்தைப் பார்த்து முடிக்கும்போது ஒட்டுண்ணி யார் என்பதை நமக்குத் தீவிரமாக இயக்குநர் உணர்த்திவிடுகிறார்.
இந்தியாவுக்கு முன்பாகவே உலகமயமாதல், திறந்த சந்தையால் பண்பாட்டு ரீதியாகத் தலைகீழ் மாற்றங்களை சந்தித்த தென்கொரியச் சமூகத்தின் வர்க்க குறுக்குவெட்டை அசலாகச் சொல்லும் திரைப்படம் இது. ஆனால், இந்தியாவில் தற்போது ஏற்பட்டு வரும் மாற்றங்களைப் பிரதிபலிப்பதால் அது உலகளாவிய சினிமாவும்கூட. அரசியல்ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், வர்த்தகரீதியாகவும் நாம் என்னவிதமான நம்பிக்கைகளின் அடிப்படையில் வாழ்ந்து வருகிறோம் என்பதைச் சிந்திக்கவைக்கும் திரைப்படமும் கூட.
தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT