Published : 14 Feb 2020 11:29 AM
Last Updated : 14 Feb 2020 11:29 AM

பாம்பே வெல்வெட் 22: பாலிவுட்டை வாழ்விக்கும் காதல்

எஸ்.எஸ்.லெனின்

அனைவரின் காதலிலும் ஏதேனுமொரு திரைப்படமும், சில திரைப்பாடல்களும் கரைந்திருக்கும். காதலால் மனிதர்கள் அலைக்கழிந்த நினைவுகளை காட்சி மொழி வாயிலான சினிமாவால் புத்தகங்களைவிட அதிக தாக்கத்துடன் சித்தரிக்க முடிந்தது. அத்தகைய திரைப்படங்களின் வெற்றியும் கூட, திரைக்காதலைத் தூக்கிச் சுமக்கும் நடிகர் - நடிகையர் இடையிலான தனித்துவ ஒத்திசைவில் ஒளிந்திருக்கிறது.

மேற்படி ‘கெமிஸ்ட்ரி’யில் திளைத்த நாயகனும் நாயகியும் காலமெல்லாம் ரசிக நெஞ்சங்களில் நிறைந்திருப்பார்கள். ராசியான ஜோடியாகி அடுத்தடுத்த திரைப்படங்களில் காதல் ரசத்தைத் திகட்டத் திகட்ட பரிமாறவும் செய்வார்கள். அப்படியான வெற்றிகர திரைக்காதல் ஜோடிகளின் மூத்த தலைமுறையினரை இங்கே பார்க்கலாம்.

கே.எல்.சைகல் - குர்ஷித் பேகம், சுரேந்திரா – நூர்ஜஹான், திரிலோக் கபூர் – நிருபமா ராய் எனப் பாடக நடிகர்கள் காலம் தொட்டு, படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் திரைக்காதல் ஜோடிகளின் வசீகரம் தொடங்கியது. அவர்களில் அசோக்குமார் – தேவிகா ராணி ஜோடி மகத்துவமானது. மனைவி தேவிகா ராணியுடன் திரையிலும் ஜோடி சேர்ந்து நடித்த இயக்குநர் ஹிமான்ஷூ ராய், வேறு சிலரைக் கதாநாயகனாக்கியதில் கசப்பான அனுபவங்களைச் சந்தித்தார்.

கதாநாயகனைத் தனது கட்டுப்பாட்டில் வைக்க, அலுவலக உதவியாளரான வங்காள இளைஞர் ஒருவரை நாயகனாக்கினார். தேவிகா ராணியைவிட வயதில் இளையவரும், விசுவாசம் மிக்கவருமான அசோக்குமார் என்ற அந்த இளைஞர், ஹிமான்ஷூவின் எதிர்பார்ப்பை விஞ்சியவராய் தேவிகாவுக்குத் திரையில் பொருத்தமான ஜோடியானார் அசோக்குமார். ‘ஜீவன் நயா’, ‘அச்சுத் கன்யா’ தொடங்கி இரண்டே ஆண்டுகளில் இருவரும் சேர்ந்த 7 திரைப்படங்கள் வரவேற்பைப் பெற்றன.

ஹிமான்ஷூ மறைவுக்குப் பின்னர் தேவிகா பொறுப்பேற்ற பாம்பே டாக்கீஸின் தூணாகவும் அசோக்குமார் மாறினார். பாம்பே டாக்கீஸ் பாணியில் ஏராளமான திரைப்பட நிறுவனங்கள் பம்பாயைச் சுற்றி முளைத்தன. அதுவரை கல்கத்தாவின் ‘டோலிகஞ்ச்’ பகுதியில் தயாரானதால் ‘டோலிவுட்’ என்றழைக்கப்பட்ட இந்தி சினிமாவுலகம், தற்போது பம்பாயை மையங்கொண்டதில் ‘பாலிவுட்’ என்ற அடையாளத்துக்குத் தயாரானது. அந்த வகையில் இன்றைய பாலிவுட்டுக்கு அடித்தளம் தந்ததில், அசோக்குமார் – தேவிகா ராணியின் திரைக்காதல் வெற்றிக்கும் பிரதான பங்குண்டு.

திரையில் கரைசேர்ந்த காதல்கள்

பாம்பே டாக்கீஸில் உதவி இயக்குநராகத் தனது திரைவாழ்க்கையைத் தொடங்கியவர் ராஜ்கபூர். வெற்றிகரமான இயக்குநர், தயாரிப்பாளராக வளர்ந்த ராஜ்கபூர், நடிகை நர்கீஸ் உடனான முதல் சந்தித்திப்பிலேயே சரிந்துவிட்டார். அந்தக் கவித்துவமான சம்பவத்தைப் பின்னாளில் தனது ‘பாபி’ திரைப்படத்தில் ரசனைமிக்க காட்சியாகவும் ராஜ்கபூர் பதிவு செய்திருப்பார். இருவரும் ஜோடி சேர்ந்த ‘பர்சாத்’, ‘ஆவாரா’, ‘ஸ்ரீ420’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் வரலாற்றுச் சாதனை படைத்தன. அப்படங்களில் காதலனிடம் சரணாகதியாகும் அன்றைய பெண்களின் காதல் போக்கை நர்கீஸ் ஆழமாகப் பதிவு செய்திருப்பார்.

திரைக்கு வெளியேயும் காதல் தொடர்ந்ததில், மணமான ராஜ்கபூர் தரப்பில் சங்கடங்கள் எழுந்தன. தங்கள் காதலின் நினைவுகளைத் தனது அடுத்த படங்களின் காதல் காட்சிகள் வழியே ராஜ்கபூரால் கடத்த மட்டுமே முடிந்தது. காதல் காட்சிகள் கற்பனை என்றபோதும் நிஜத்தின் தீவிரத்தால் அவை ரசிகர்களை ஆழ தைத்தன. ராஜ்கபூர் வழியில் இன்னோர் இயக்குநர் - நடிகரான குரு தத்தும் தான் அறிமுகம் செய்த வஹீதா ரஹ்மானிடம் உருகியதில், ‘பியாசா’ தொடங்கி காவியத் தன்மை மிக்க திரைப்படங்கள் உருவாயின.

ராஜ்கபூர் போன்றே தனது வாழ்வின் காதல் சரடுகளைத் திரைப்படங்களில் ரசிக்கும்படி சேர்த்ததுடன், சொந்த அனுபவத்தை ‘காகஸ் கி ஃபூல்’ திரைப்படமாகவும் எடுத்தார் குருதத். இது, இந்தியாவின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக சர்வதேச அளவில் இன்றும் கவனம் பெற்றிருக்கிறது.

பிரதிபலித்த பிரிவின் வலி

திரைக்கலைஞரில் அந்தரங்கமாகக் குடிகொண்ட காதலின் உருக்கம், திரையில் வெகுவாய் எதிரொலிக்கும் என்பதற்கு இன்னோர் உதாரணம் திலீப்குமார் – மதுபாலா ஜோடி. இருவரும் நிஜ வாழ்க்கையில் கரம்சேர மதம் தடையானது என்பார்கள். ஒன்று சேர விரும்பும் காதலின் தவிப்பு மட்டுமல்ல, நிஜமான பிரிவின் வலியையும் திரைப்படத்தில் பிரதிபலிக்க முடியும் என்பதற்கும் ‘முகல்-இ-ஆஸாம்’ திரைப்படம் மூலம் இவர்களே சாட்சியானார்கள்.

திலீப்குமாரின் சமகால நடிகரான தேவ் ஆனந்துக்குப் பொருத்தமான ஜோடியாக, ஜீனத் அமன் வெகு தாமதமாகச் சேர்ந்தார். நாற்பதுகளில் நடிகராக அறிமுகமாகி 30 வருடங்களுக்குப் பின்னர் தேவ் ஆனந்த் இயக்குநரான, ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’வில் அவருடைய தங்கையாக ஜீனத்தின் திரை அறிமுகம் நிகழ்ந்தது. அடுத்தடுத்த படங்களில் காதல் ஜோடிகளாக வலம் வந்தபோதும், வயது வித்தியாசத்தில் இருவருக்குமிடையே ஒரு தலைமுறை இடைவெளி உண்டு.

ஆனபோதும் எழுபதுகளில் இருவரும் சேர்ந்து நடித்த ‘ஹீரா பன்னா’, ‘வாரண்ட்’, ‘காலாபாஸ்’ எனத் தொடங்கி பல படங்களும் வரவேற்பைப் பெற்றன. ‘சத்யம் சிவம் சுந்தரம்’ மூலம் ஜீனத் அமனின் எதிர்காலத்தை ராஜ்கபூர் திருத்தியமைக்கும் வரை இந்த ஜோடியின் திரை ராஜாங்கம் நீடித்தது.

மீறல்களின் தரிசனம்

திரையில் மட்டுமே காதலித்த அபூர்வ ஜோடிகளும் பாலிவுட்டில் உண்டு. அவர்களில் ராஜேஷ் கன்னா - ஷர்மிளா தாகூருக்கு முதலிடம் தரலாம். இருவரும் முதலில் சேர்ந்த ‘ஆராதனா’வின் டூயட் பாடல்கள் இன்றைக்கும் இந்தி சினிமாவின் விருப்பப் பாடலாக இருக்கின்றன. தொடர்ந்து ‘சாஃபர்’, ‘அமர் பிரேம்’, ‘தாக்’ எனப் பல வெற்றிப் படங்களை இந்த ஜோடி தந்தது. சமகாலத்து ஜோடியான தர்மேந்திரா – ஹேமமாலினிக்கு ரசிகர்களே திருமண யோசனையை முன்மொழிந்தனர்.

அமிதாப் பச்சன் உச்சத்திலிருந்த காலத்தில் அவருடன் இணைந்து நடித்தவாறே, அவற்றுக்கு தர்மேந்திராவின் படங்கள் ஈடுகொடுத்து ஓடுவதற்கு ஹேமமாலினி காரணமானார். ‘சீதா ஔர் கீதா’, ‘ஷோலே’, ‘சாச்சா பாதிஜா’, ‘ட்ரீம் கேர்ள்’ எனப் பல படங்களில் நகைச்சுவை கலந்த வித்தியாசமான காதலை இந்த ஜோடி பரிமாறியது. நிஜங்களின் முரண்கள், மீறல்களுக்கு அப்பால் பாலிவுட்டின் வெற்றிகரமான காதல் ஜோடியாக அமிதாப் – ரேகாவை ரசிகர்கள் அங்கீகரித்தனர்.

‘சில்சிலா’ திரைப்படத்தில் தூலிப் தோட்டத்தில் இருவரும் இழைந்த ‘தேக ஏக் காப்’ பாடல் அக்காலத்து காதலர் கீதமானது. அந்தப் படத்துக்குப் பின்னர் இருவரும் சேர்ந்து நடிக்காதபோதும், ‘சூர்யவம்சம்’ போன்ற சில படங்களில் அமிதாப்பின் நாயகியருக்கு ரேகா பின்னணிக் குரல் கொடுத்ததைக்கூட ரசிகர்கள் பெரிதாகக் கொண்டாடினர். பாலிவுட்டில் வேறெந்த திரைக்காதல் ஜோடிக்கும் கிடைக்காத அங்கீகாரம் இது.

பாலிவுட்டின் காதல் பாதை

எழுபதுகள் வரையிலான திரைக்காதலர்களின் இந்த காதல் கெமிஸ்ட்ரியில் வித்தியாசமானவர்களுக்கும் இடமுண்டு. துள்ளாட்டத்தால் ரசிகர்களை வசீகரித்த ஷம்மி கபூர் – ஆஷா பரேக் ஜோடி (தி தேகே தோகோ, தீஸ்ரி மன்ஜில்), மாற்றுத் திரைப்படங்களின் வழியே காதல் பேசிய நசீருதின் ஷா – ஷபனா ஆஸ்மி (மாசூம், ஸ்பார்ஸ்), ஓம் பூரி – ஸ்மிதா பட்டீல் (அர்த் சத்யா, ஆக்ரோஷ்) ஜோடிகளும் இந்தப் பட்டியலில் சேர்வார்கள்.

அதன் பின்னரான எண்பதுகளில் தொடங்கி பாலிவுட் காதல் கதைகளுக்கு உயிர்கொடுத்தவர்களில் அனில் கபூர் – ஸ்ரீதேவி, ஆமிர்கான் – ஜூஹிசாவ்லா, சல்மான் கான் – மாதுரி தீக்ஷித், கோவிந்தா – கரிஷ்மா கபூர், ஷாருக் கான் – கஜோல், ஹ்ரித்திக் ரோஷன் – ஐஸ்வர்யா ராய், அக்ஷய் குமார் – கத்ரீனா கைஃப், ஷாகித் கபூர் – கரீனா கபூர்’... என நீளும் ஜோடிகள் பாலிவுட்டில் நிறைந்திருக்கின்றனர்.

தொடர்புக்கு: leninsuman4k@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x