Published : 07 Feb 2020 12:19 PM
Last Updated : 07 Feb 2020 12:19 PM

மாற்று களம்: தகுதியானவருக்குக் கிடைத்த விருது!

நரசய்யா

மும்பையில் சமீபத்தில் நடந்து முடிந்தது 16-ம் தெற்காசிய அனிமேஷன் மற்றும் ஆவணப் பட விழா. இதில் பழம்பெரும் திரைப்பட இயக்குனரான வி. சாந்தாராம் பெயரில் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருது ஆவணப்பட உலகில் தொடர்ந்து இயங்கிவருபர்கள் மத்தியில் மிகுந்த மரியாதையுடனும் பெருமிதத்துடனும் பார்க்கப்பட்டு வருகிறது.

அவ்விருது இம்முறை, தமிழின் முக்கிய ஆவணப்பட இயக்குநர்களில் ஒருவரான முனைவர் சு. கிருஷ்ணசுவாமிக்கு வழங்கப்பட்டுள்ளது. திரை, ஆவணப்படங்கள் ஆகிய இரு வடிவங்களிலும் இயங்கிவரும் சிறந்த இந்தியப் படைப்பாளிகளான ஷ்யாம் பெனகல், நரேஷ் பேடி, ஆனந்த் பட்டவர்த்தன், ஃபாலி பில்லிமோரியா முதலானோர் இவ்விருதை இதற்கு முன்னர் பெற்றுள்ளனர்.

சாந்தாராமின் மகன் கிரண் சாந்தாராம் முன்னிலையில், மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ, மகாராஷ்டிர கலாச்சார அமைச்சர் தேஷ்முக் ஆகியோர் கிருஷ்ணசுவாமிக்கு விருதை வழங்கினார்கள். ரூபாய் 10 லட்சம் பொற்கிழியும், கேடயமும் சான்றிதழும் கொண்ட இவ்விருதை மத்திய அரசும் மகாராஷ்டிர அரசும் இணைந்து வழங்கி வருகின்றன.

தேசாபிமான இயக்குநர் என்று பெயரெடுத்த தமிழ் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான |கே. சுப்பிரமணியத்தின் மகன்தான் முனைவர் கிருஷ்ணசுவாமி. வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கிய சுப்பிரமணியம், 1931-ம் ஆண்டிலேயே திரையுலகத்தை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு, அன்றைய நிலைமையில், இந்திய விடுதலைப் போராட்டத்துக்கும் சமூக சீர்திருத்தத்துக்கும் துணையாகப் பலத் திரைப்படங்களைத் தயாரித்து இயக்கினார். இவர் எடுத்த படம் ‘தியாக பூமி’ ஆங்கில அரசால் தடை செய்யப்பட்டபோது, அத்தடை உத்தரவு திரையரங்குகளுக்குச் சென்றடையும் முன்னரே, அப்படத்தை இலவசமாக மக்கள் பார்வைக்கு ஏற்பாடு செய்தவர்!

அப்படிப்பட்டவரின் மகனாகிய கிருஷ்ணசுவாமி, சென்னையின் மாநிலக் கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்றவர். ஒலிப்பதிவாளராகச் சென்னையில் பயிற்சி பெற்று, பின்னர் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தொலைக்காட்சி - திரைப்படத் தொழில்நுட்பக் கல்வி கற்றவர்.

Life time achievement award

அங்குதான் அவருக்கு ஆவணப்படங்களின் மீது ஈர்ப்பு உருவானது. அங்கே, அவர் பார்த்த ‘மார்ச் ஆஃப் டைம்’ என்ற ஆவணப்படத்தில் இந்தியாவைப் பற்றிய பல தவறான கருத்துகள் இடம்பெற்றிருந்தன. அப்படம் திரையிடப்பட்டுக் கொண்டிருந்த நேரத்திலேயே அவர் மேடை மீதேறி, ஒலிவாங்கியைக் கையில் எடுத்து ஆங்கிலத்தில் “This is stupid. The film is nonsense.” என்று முழங்கினார்! அதைக் கண்ட ஒரு பேராசிரியர்.

“இக்கருத்தை மாற்ற நீயே ஒரு ஆவணப்படம் எடுத்துக் காட்ட வேண்டும்” என்றார். அதை ஒரு சவாலாக ஏற்று அன்று முதல் அதையே தனது குறிக்கோளை அமைத்துக் கொண்டு இந்திய நாட்டைப் பற்றி முதலில், பேராசிரியர் எரிக் பார்னோவ் என்பவருடன் இணைந்து, ‘இண்டியன் ஃபிலிம்’ என்ற ஒரு ஆய்வு நூலை வெளியிட்டார். இந்தியா திரும்பியவுடன், தந்தையார் சுப்பிரமணியத்தின் கீழ் அவர் பிரபலத் தயாரிப்பாளராக மாறியிருக்கலாம்.

ஆனால், அவர் கருத்தோ இந்திய நாட்டின் பெருமையை உலகத்துக்கு எடுத்துரைக்க வேண்டுமென்பதாகவே இருந்தது. கிருஷ்ணசுவாமி அசோசியேட்ஸ் என்ற ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, தொடக்கத்தில் குறும் படங்கள், ஆவணப்படங்கள் தயாரிப்பதில் தமது கவனத்தைச் செலுத்தினார். 1976-ல் இவர் எடுத்த ’இண்டஸ் வேலி டூ இந்திரா காந்தி’ (Indus Valley to Indira Gandhi) தொடங்கி இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட ஆவணப்படங்கள் தயாரித்துள்ளார்.

அதேபோல் தொலைக்காட்சிக்காக சுமார் பன்னிரண்டு தொடர்களைத் தயாரித்துள்ளார். அவரது சிறப்பான படங்களில் பல கிழக்காசிய நாடுகளில் காணப்படும் இந்தியாவின் பழங்காலத்து ஆளுமையையும் கலாசார மகிமையையும் போற்றிப் பறைசாற்றுபவை. மாற்றுக் கலை ஊடகத்தில் தொய்வில்லாமல் இயங்கிய தகுதியானவருக்கு இவ்விருது கிடைத்திருப்பது வரவேற்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x