Published : 31 Jan 2020 12:22 PM
Last Updated : 31 Jan 2020 12:22 PM
சு.சுபாஷ்
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில், மறுக்கப்பட்ட - மறக்கடிக்கப்பட்ட போர்த் தியாகிகளை நினைவுகூர்கிறது, ‘தி ஃபர்காட்டன் ஆர்மி’ வலைத்தொடர். குடியரசு தினத்தை முன்னிட்டு அமேசான் பிரைம் வீடியோ கடந்த வாரம் இதை வெளியிட்டுள்ளது.
தேச விடுதலைக்காக இந்தியாவுக்குள் திரண்ட போராட்டங்களுக்குச் சற்றும் குறைவின்றி, நாட்டுக்கு வெளியிலிருந்தும் முன்னெடுப்புகள் நடந்திருக்கின்றன. அந்த வகையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கட்டமைத்த இந்திய தேசிய ராணுவம், நாட்டு விடுதலைக்காக மேற்கொண்ட தியாக வரலாற்றின் சில பக்கங்களை பாலிவுட் பாணியில் உணர்ச்சிப் பெருக்குடன் பதிவுசெய்ய முயன்றுள்ளது புதிய வலைத்தொடர்.
1996 மற்றும் 1943-45 என இணையான இரு காலச்சட்டகங்களில் கதை ஊடாடிப் பாய்கிறது. நீண்ட இடைவெளியில் தன் சகோதரி குடும்பத்தைச் சந்திக்க, இந்திய தேசிய ராணுவத்தின் முன்னாள் கர்னல் சுரிந்தர் சோதி, சிங்கப்பூர் வருகிறார். அங்கிருந்து சகோதரியின் பேரனான இளம் பத்திரிகையாளனுக்கு உதவுவதற்காக மாணவர் போராட்டம் மூண்ட மியான்மருக்குப் பயணிக்கிறார். அங்கே அரை நூற்றாண்டுக்கு முன்னர் மலேசிய மண்ணில் தான் தொலைத்த காதல், தேசப்பற்றின் சுவடுகளைத் தேடித் தவிக்கிறார். அவருடைய நினைவோடையிலிருந்து பழைய காட்சிகள் அவ்வப்போது அலைபாய்கின்றன.
இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் பிரிட்டிஷ் ராணுவத்தின் விசுவாசமிக்க வீரர்களாக, உலகத்தின் பல போர்முனைகளிலும் இந்திய இளைஞர்கள் தீரத்துடன் போரிடுகிறார்கள். அதே வேளையில் இந்தியாவுக்குள் தேச விடுதலைப் போராட்டமும் அதன் இறுதிக்கட்டத்தை எட்டுகிறது.
தேச விடுதலை குறித்த ஏக்கங்களைச் சுமந்தபடி, தேசத்துக்கு வெளியே யாருக்காகப் போராடுகிறோம்; யாரை எதிர்த்துப் போராடுகிறோம் என்ற குழப்பங்களுடன் அவர்களின் போர்க்களங்கள் நீள்கின்றன. அந்தக் களங்களில் ஒன்றாக, சிங்கப்பூர் போரில் ஜப்பானியர்களை எதிர்த்து நிற்கிறார்கள்.
பிரிட்டிஷ் தளபதிகளின் முட்டாள்தனத்தால், இந்திய வீரர்களின் வெற்றி முகம் ஜப்பானியர்களிடம் சரணடைவதில் கவிழ்கிறது. ஜப்பானிய ராணுவம் தாங்கள் கைதுசெய்த பிரிட்டிஷ் படையின் இந்திய வீரர்களுக்கு ஒரு வாய்ப்பு தருகிறது. அதன்படி ஆயிரக்கணக்கான இந்திய வீரர்கள், ஜப்பானிய ஆதரவுடன் சுபாஷ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் இணைகிறார்கள். இவர்களுடன் தாய்தேசத்தைப் பார்த்தேயிராத சிங்கப்பூர் வாழ் இந்திய வம்சாவளி ஆண் பெண்களும் போர்க்கோலம் பூணுகிறார்கள். இப்படியாக இந்தியாவை ‘மீட்பதற்கான’ போர் தொடங்குகிறது.
பிரிட்டிஷ் படையிலிருந்து இந்திய தேசிய ராணுவத்துக்கு அணி மாறியவர்களை ‘துரோகிகளின் சேனை’ என அறிவிக்கும் பிரிட்டிஷ் அரசு, இந்தியாவை நெருங்கும் முன்னர் அவர்களை அழித்தொழிக்க உத்தரவிடுகிறது. காடு,மலை கடந்து இந்திய எல்லையை நெருங்கும் இந்திய தேசிய ராணுவத்தின் தீரத்தையும், இயற்கை, செயற்கை இடர்களால் அவர்களுடைய முயற்சி நிர்மூலமானதையும் உருக்கமான காட்சிகளில் வலைத்தொடர் பதிவுசெய்துள்ளது. கர்னல் சுரிந்தருக்கும், சிங்கப்பூர் தமிழ்ப்பெண்ணான மாயாவுக்கும் இடையிலான காதல், போர்க்களத்தின் போக்கில் பிரத்யேக தன்மையைச் சந்திக்கிறது.
மியான்மரின் கொளுந்து விட்டெரியும் மாணவர் போராட்டமும் அதை நசுக்க முற்படும் அந்நாட்டு ராணுவத்தின் மூர்க்கமுமாக, 1996-ன் நிகழ்காலக் காட்சிகள் அனைத்தும், பழைய கதையின் கண்ணாடிப் பிம்பமாக நகர்வது தொடரின் சுவாரசியத்தை அதிகரிக்கிறது. அப்படியே அந்த இரு காலச்சட்டகங்களும் மூன்றாவதாக, தற்போதைய இந்தியாவின் போராட்டங்களையும் குறியீடுகளாக உணர்த்திச் செல்கின்றன.
இருவேறு காலவெளிகளை இணைக்கும் திரைக்கதையின் கண்ணிகளில், வலைத்தொடரை எழுதி இயக்கியிருக்கும் கபீர்கானின் திறமை பளிச்சிடுகிறது. போர்க்களக் காட்சிகளின் கிராஃபிக்ஸ் சித்தரிப்புகள் உறுத்தியபோதும் பாலிவுட் பிரம்மாண்டம் மிரட்டவே செய்கிறது. ஆவணப் பதிவுக்கும் திரைப்படத்துக்கும் இடையிலான திரிசங்கு தளத்தில் தடுமாற்றங்களுடன் செல்லும் கதை, கலவையான உணர்வுகளைப் பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது. தொடரின் நிறைவில் இந்திய தேசிய ராணுவ வீரர்களின் தீரமும் தியாகமும் சுதந்திர இந்தியாவில் அங்கீகாரம் பெறாததன் சோகத்தையும் வலைத்தொடர் அக்கறையுடன் பதிவுசெய்கிறது.
சன்னி கௌசல், ஸ்ருதி சேத், ரோகித் சௌத்ரி ஆகிய பாலிவுட் முகங்களுடன், நிழல்கள் ரவி, அமலா அக்கினேனி ஆகிய தெற்கத்தி நடிகர்களும் தொடரில் தோன்றுகின்றனர். இந்திப் பதிப்பில் நடிகர் ஷாருக்கான் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். காடு,மலை கடந்து இந்திய எல்லையை நெருங்கும் இந்திய தேசிய ராணுவத்தின் தீரத்தையும், இயற்கை, செயற்கை இடர்களால் அவர்களின் முயற்சி நிர்மூலமானதையும் உருக்கமான காட்சிகளில் வலைத்தொடர் பதிவுசெய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT