Published : 24 Jan 2020 12:35 PM
Last Updated : 24 Jan 2020 12:35 PM
ரிஷி
டிசம்பர் 2019-ல் நடைபெற்ற 17-ம் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பெரும் பாலான படங்கள் ‘ஏன்டா படம் பார்க்க வந்தோம்’ என எண்ணவைத்தன. விதிவிலக்காக இருந்தது டிசம்பர் 13 அன்று கேசினோ திரையரங்கில் திரையிடப்பட்ட ஜெர்மனியப் படமான ‘பலூன்’ (2018). மைக்கேல் ஹெர்பிக் இயக்கிய இந்தப் படம் விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தது. இரண்டு மணி நேரம் போனதே தெரியாமல் படத்துடன் படமாக ஒன்ற முடிந்தது.
கிழக்கு ஜெர்மனியிலிருந்து மேற்கு ஜெர்மனிக்குத் தப்பிப்போக கோந்தா, பீட்டா ஆகிய இருவருடைய குடும்பங்களும் முடிவுசெய்கின்றன. பிரம்மாண்டமான வெப்பக் காற்று பலூனை உருவாக்கி அதில் தப்பிச் செல்லலாம் என முடிவுவெடுத்து பலூனை உருவாக்கிவிட்டனர். காற்றின் திசை தங்களுக்குச் சாதகமாகும் நாளுக்காகக் காத்திருக்கின்றனர். அப்படியொரு நாள் வருகிறது. ஆனால், பலூன் எட்டுப் பேரைத் தாங்காது என்பதால் திட்டத்தை நிறைவேற்றுவது கடினம் என்கிறார் கோந்தா.
முன்வைத்த காலைப் பின்வைக்க பீட்டாவுக்கு விருப்பமில்லை. தன் குடும்பத்தினருடன் செல்ல முடிவெடுக்கிறார். யாருமறியாமல் இரவுடன் இரவாகப் புறப்படுகிறார்கள். வனப் பகுதிக்குச் சென்று காரிலிருந்து பலூனை இறக்கி, பறக்கத் தொடங்குகிறார்கள். எல்லாம் கூடிவந்த வேளையில் இயற்கை சதி செய்கிறது. உயரப் பறந்த பலூன் சட்டென்று தாழ்கிறது. சரசரவென்று கீழ் நோக்கி வருகிறது. எரிபொருள் தீர்ந்துபோகிறது. அவர்களது முயற்சி தோல்வியில் முடிகிறது. தரையில் வந்து விழுந்து விடுகிறார்கள்.
அவர்களது கனவு ஒருமுறை முறிந்துபோகிறது. ஆனால், முறிந்த கனவை எண்ணி நொடிந்து போகவில்லை பீட்டா. மீண்டும் முயல விரும்புகிறார். இப்போது நிலைமை முன்பைவிடச் சிக்கலாகிறது. ஒருபுறம் இவர்கள் விட்டுவந்த தடயத்தைப் பின் தொடர்ந்து ராணுவம் அவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறது. மறுபுறம் யாருமறியாமல் மீண்டும் ஒரு பலூனை உருவாக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள். இந்த இரண்டாம் முயற்சி வென்றதா இல்லையா என்பதே படத்தின் கிளைமாக்ஸ்.
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. 1976 முதல் 1988 வரையான காலகட்டத்தில் சுமார் 38,000 தப்புதல் முயற்சிகள் கிழக்கு - மேற்கு ஜெர்மனி இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் சுமார் 462 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கிழக்கு ஜெர்மனியிலிருந்து மேற்கு ஜெர்மனிக்குத் தப்பிப்போக முயன்றவற்களைத் துரோகிகளாகக் கருதியது ஜெர்மனியின் ஜனநாயகக் குடியரசு. எனவே, அது எல்லையில் கண்காணிப்பைப் பலமாக வைத்திருந்தது. அதை மீறித் தப்பித்துப்போவதென்பது பெரிய துணிகரச் செயலே. அந்தச் செயலில் முதல் முறை தோற்றார் பீட்டா.
முதன்முறை இரவில் வீட்டை விட்டு வெளியேறும் வேளையில், மீண்டும் திரும்ப வர மாட்டோம் என்று தெரிந்தும் வீட்டைச் சுத்தமாக வைத்துவிட்டே பீட்டாவுடைய மனைவி தோரிஸ் புறப்படுகிறார். தன்னை யாரும் மோசமான குடும்பப் பெண் என்று சொல்லிவிடக் கூடாது என்பதில் அவர் முனைப்புடன் இருக்கிறார். பலூனில் ஏற மறுக்கும் இளைய மகனிடம் மேற்கே அவன் விரும்பிய பிஎம்எக்ஸ் பைக் வாங்கித் தருவதாகச் சொல்லிச் சம்மதிக்கவைக்கிறார்.
அந்த முயற்சி தோற்றபோது அந்த மகனுக்குத் தனக்கு பிஎம்எக்ஸ் கிடைக்காமல் போய்விட்டது என்பதே கவலை. முதல் மகன் ஃபாங்க், தன் காதலிக்குக் கடிதம் எழுதி அவளுடைய வீட்டின் தபால் பெட்டியில் போட்டுவிட்டுச் செல்கிறான். முயற்சி தோற்றதால், மறுநாள் காலை அதை அவனே வந்து எடுக்க நேர்கிறது. கடிதத்தைத் தபால்பெட்டியில் போடும் செயல் எளிதாக இருந்தது; ஆனால் கடிதத்தை எடுக்கத்தான் சிரமப்படுகிறான்.
இரண்டாம் முயற்சியின் போது நாமே கிழக்கிலிருந்து மேற்குக்குத் தப்பித்துப் போக முயல்வது போன்ற எண்ணத்தை உருவாக்கிவிடுகிறது திரைக்கதையின் போக்கு. பின் தொடர்ந்து வரும் நிழல்போல் ராணுவத்தினர் ஒவ்வொரு துப்பாகத் துலக்கிக்கொண்டே வருகிறார்கள். எந்த நேரத்தில் பீட்டாவின் குடும்பம் ராணுவத்திடம் மாட்டிக்கொள்ளுமோ என்ற பதைபதைப்புடன் திக் திக்கென ஒவ்வொரு நொடியும் நகர்கிறது. முதன்முறை ஒரு குடும்பம் என்றால், இரண்டாம் முறை கோந்தாவின் குடும்பமும் சேர்ந்துகொள்கிறது.
மொத்தம் எட்டுப் பேர். ராணுவத்தினர் கண்ணில் மண்ணைத் தூவி பலூனில் ஏறிவிடுகிறார்கள். மொத்தப் பார்வையாளர்களுக்கும் அவர்கள் எப்படியாவது தப்பிவிட வேண்டுமே என்ற எண்ணம் நெஞ்சில் நிறைந்து கிடக்கிறது. எதிர்பார்ப்பு வீணாகவில்லை. முதலில் இடறிய பீட்டாவின் முயற்சி இறுதியில் துலங்கியது. ஏனெனில், வாழ்வில் சிலவேளை எல்லாச் செயலும் இடறும்; சில நேரம் தொட்டதெல்லாம் துலங்கும். எப்போது இடறும், எப்போது துலங்கும் என்பதை நாமறியாததால் வாழ்வு ருசிகரமாகிறது.
தொடர்புக்கு: chellappa.n@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT