Published : 10 Jan 2020 01:42 PM
Last Updated : 10 Jan 2020 01:42 PM
சு.சுபாஷ்
கடந்த ஆண்டு ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ தந்த நால்வர் இயக்குநர் கூட்டணியை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள் இணையத் திரை ரசிகர்கள். அவர்களுடைய புதிய குறும்படத் தொகுப்பாக, நான்கு பேய்க் கதைகளை மையமாகக் கொண்ட ‘கோஸ்ட் ஸ்டோரீஸ்’, அதே நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி உள்ளது.
புத்தாண்டு நாளன்று இணையத்தில் வெளியாகியிருக்கும் இத்தொகுப்பில், ஸோயா அக்தரின் ‘நர்ஸ்’ குறும்படத்துடன் பயமுறுத்தல் படலம் தொடங்குகிறது. அடுக்குமாடிக் குடியிருப்பில் படுத்த படுக்கையாய்த் தனித்திருக்கும் மூதாட்டியைப் பராமரிக்க வருகிறார் நர்ஸான ஜான்வி கபூர்.
மகன் தொடர்பாக கடந்த காலத்தின் நினைவுகளுடன் மல்லுக்கட்டும் மூதாட்டியைக் கவனித்தபடி, தனது எதிர்காலம் குறித்த கவலைகளுடன், பிடிகொடுக்காத காதலனுக்காக ஜான்வி காத்திருக்கிறார். இரு பெண்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வீட்டுக்குள் திகில் பரவுகிறது. குறும்படத்தின் நிறைவில், மூதாட்டியின் வாயிலாக ஜான்வி கபூர் கண்டடையும் உண்மை நிதர்சனத்தைப் புகட்டிச் செல்கிறது.
அனுராக் காஷ்யப்பின் ‘பேர்ட்’ குறும்படத்தில் அடிக்கடி கருக் கலைவதால் பிரமை பிடித்தார் போலிருக்கிறார் ஷோபிதா துலிபாலா. அவருடைய ஒரே ஆறுதல் சகோதரியின் மகன். தாயற்ற சிறுவனின் ஏக்கமும், குழந்தைக்காக ஏங்கும் பெண்ணுக்கும் இடையே விநோதச் சமன்பாடுகள் கடந்து செல்கின்றன. எளிதில் பிடிபடாத கதைப்போக்கில், சாயம் போன காட்சிகளின் வழியே தனது பாணியில் உறைய வைக்கிறார் அனுராக் காஷ்யப்.
திவாகர் பானர்ஜியின் ‘மான்ஸ்டர்’ குறும்படத்தில், கைவிடப்பட்ட சிறு நகரமொன்றில் மாட்டிக்கொள்கிறார் வழிப்போக்கர் ஒருவர் (சுகந்த் கோயல்). அங்கே தப்பிப் பிழைத்திருக்கும் சிறுவனும் சிறுமியும் அந்த வழிப்போக்கருக்கு உதவ முயல்கிறார்கள்.
மூவருக்கும் சவாலாக ஊரில் வாழும் அனைவரும் ரத்த வெறி பிடித்த ஸோம்பிகளாக அலைகிறார்கள். மேலடுக்கில் ஸோம்பி கதையாகச் சென்றாலும், உள்ளே பல அடுக்குகளில் விரியும் செய்திகள் பார்வையாளரை திடுக்கிட வைக்கும். நாட்டின் தற்போதைய அவலப்போக்கை அப்பட்டமாக விவரிக்கும் இந்தக் குறியீடுகளுக்காகவே ‘மான்ஸ்டர்’ குறும்படத்தை மறுபடியும் பார்க்கலாம்.
இத்தொகுப்பில் கரண் ஜோகரின் குறும்படம் ‘கிரானி’. செல்வந்தர் வீட்டுப் பையனை மணந்துகொள்ளும் மிருணாள் தாகூர், புகுந்த வீட்டின் மர்ம நடவடிக்கைகளால் இயல்பைத் தொலைத்துவிடுகிறார். செத்துப்போன பாட்டியின் அமானுஷ்ய இருப்புக்காக வீட்டிலுள்ள அனைவரும் அடிபணிவதும், முதலிரவில் தொடங்கி சதா தனது பாட்டியிடம் குழந்தையாய் விளையாடும் கணவனும் புதுமனைவியான மிருணாளுக்கு எரிச்சலூட்டுகிறது. பாட்டிக்கு எதிராக அவள் எடுக்கும் நடவடிக்கையும் அதற்குக் கிடைக்கும் பதிலடியும் திடுக்கிட வைத்தாலும், பெரியவர்களைப் பேணுங்கள் என்ற செய்தி ரசிக்கவைக்கிறது.
நான்கு இயக்குநர்களும் தங்களுக்கு அதிகம் பரிச்சயமற்ற அமானுஷ்யக் கதைகளைக் கையாண்டபோதும், தனித்துவத்தை இழக்காதபடி குறும்படங்களைப் படைத்திருக்கிறார்கள். காட்சி அமைப்பும், இசையும் பேய்க் கதைகளுக்கு ஒத்துழைக் கின்றன. ஆங்காங்கே அரதப்பழசான பயமுறுத்தல்கள் மலிந்திருந்த போதும், குறும்படங்கள் உணர்த்தும் மறைபொருள் சேதியில் அவை மறைந்து போகின்றன. கதைகளில் உலாத்தும் பேய்களைவிட, ‘மான்ஸ்டர்’ குறும்படம் போன்று அரசியல் சமூகம் சார்ந்த அப்பட்டமான உண்மைகளின் வீரியம் நிச்சயம் பயமுறுத்தும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT