Published : 10 Jan 2020 01:25 PM
Last Updated : 10 Jan 2020 01:25 PM

பாம்பே வெல்வெட் 17:  கோபக்கார இளைஞனின் பிரவேசம்

எஸ்.எஸ்.லெனின்

அண்மையில் இந்திய சினிமாவின் மிக உயரிய அங்கீகாரமான தாதாசாகேப் பால்கே விருது பெற்றார் அமிதாப் பச்சன். அமிதாப் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள தத்தளித்த எழுதுபதுகளின் தொடக்கத்தில், அவருக்கு தனி அடையாளம் தந்த திரைப்படம் ‘ஸாஞ்சீர்’ (1973). ராஜ்கபூரின் ‘பாபி’, ராஜேஷ் கன்னா நடித்த ’தக்’ ஆகிய திரைப்படங்களும் அதே ஆண்டில்தான் வெளிவந்தன.

வெவ்வேறு பாணியில் வெளியான இந்த மூன்று திரைப்படங்களுமே வெற்றி பெற்றன. ஆனாலும் அமிதாப் நடித்த ‘ஸாஞ்சீர்’ திரைப்படத்தின் வெற்றி, இதர இரு திரைப்படங்களின் பாணியை முடக்கி, பாலிவுட் வரலாற்றில் புதிய அலையை வீச செய்தது. அந்த புதிய அலையை ‘கோபக்கார இளைஞன்’ என்று அழைத்தார்கள்.

நவீனத்தை செரித்த கோபாவேசம்

ஐம்பதுகளின் பாலிவுட் பொற்காலத்தை தொடர்ந்து, அறுபதுகளில் நவீனத்தை பறைசாற்றும் திரைப்படங்கள் கோலோச்சின. எழுபதுகளின் தொடக்க ஆண்டுகளிலும் அதன் தாக்கம் தொடர்ந்தது. ராஜேஷ் கன்னா தனது திரைவாழ்வின் உச்சத்திலிருந்தார். அவருக்காகவே வெளியான திரைப்படங்களை ரசிகர்கள் உச்சிமுகர்ந்து வெற்றி பெறச் செய்தனர்.

அப்படியாக வெளியான ‘தக்’ திரைப்படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தது. தனது கனவு திரைப்படமான ‘மேரா நாம் ஜோக்கர்’ (1970) தோல்வியடைந்ததில் துவண்டிருந்த ராஜ்கபூர், குறைந்த முதலீட்டில் ஒரு வெற்றிப்படம் கொடுக்க வேண்டிய நெருக்கடியில் இருந்தார். அந்த வகையில் ரிஷி கபூர், டிம்பிள் கபாடியா நடிப்பில் பதின்ம வயதின் காதலைப் பேசும் ‘பாபி’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்த இரு படங்களுக்கும் இடையில் அவற்றுக்கு சற்றும் பொருந்தாது வெளியானது ‘ஸாஞ்சீர்’.

அறிமுகமாகி ஐந்தாண்டுகளாக வெற்றியை ருசித்திராத அமிதாப் பச்சனுக்கு முதல் வெற்றிப் படையலானது ‘ஸாஞ்சீர்’. மேலும், உடன் வெளியான ராஜேஷ் கன்னாவின் ‘தக்’, ராஜ்கபூரின் ‘பாபி’ உள்ளிட்ட பாவனை நவீனம் பேசிய திரைப்படங்களின் போக்கிற்கு முடிவும் கட்டியது. ‘ஸாஞ்சீர்’ திரைப்படத்தின் வெற்றியை முன்வைத்து, அதே பாணியிலான திரைப்படங்கள் வெளியாகத் தொடங்கின. அமிதாப் நடிப்பில் தொடர்ந்து வெளியான ‘தீவார்’, ‘திரிசூல்’, ‘காலா பதர்’, ‘ஷக்தி’ ‘ஷோலே’ போன்ற திரைப்படங்களும் இந்த கோபாவேச இளைஞனைக்கொண்டே வெற்றியடைந்தன.

‘தீவார்’ பட இயக்குநர் யாஷ் சோப்ராவுடன் கோபாக்கார இளைஞராக அமிதாப்

சினத்தை சீண்டிய சூழல்

எழுபதுகளின் தொடக்கத்தில் இந்தி சினிமாவில் உதித்த ‘கோபக்கார இளைஞன்’ அவதாரம், அதற்கு முந்தைய இருபதாண்டுகளில் பிரிட்டிஷ் சினிமா நடை பழகிய கதைக் களமாகும். பிரிட்டிஷ் சினிமாவில் அதன் அலை ஓய்வதற்கும், இந்தியாவின் சமூகச் சூழல் ‘கோபக்காரனை’ வரவேற்பதற்கும் சரியாக இருந்தது.

மெகபூப் கானின் ‘மதர் இந்தியா’ திரைப்படத்தில் சுனில் தத் தோன்றிய பிர்ஜூ கதாபாத்திரம் உட்பட ஒரு சில திரைப்படங்கள் முன்னதாக வெளியாகி இருந்தாலும், முழுமுதல் கோபாவேசம் ‘ஸாஞ்சீர்’ திரைப்படத்துக்குப் பின்னரே தோன்றியது. திரைப்படங்கள் காலத்தின் கண்ணாடி என்பதால், நாட்டில் அப்போது நிலவிய சூழலும் கோபாவேச இளைஞனுடைய காத்திரத்துக்கு அடித்தளமிட்டன.

அப்போதுதான் இந்தியா -பாகிஸ்தான் போர் முடிந்திருந்தது. உள்நாட்டிலும் பல்வேறு காரணங்களை முன்வைத்து உதிரிகளாய் அதிருப்தியெனும் போர்மேகங்கள் கவியத் தொடங்கியிருந்தன. வளர்ச்சி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத் தன்னிறைவு குறித்த எதிர்பார்ப்புகள் பொய்க்க தொடங்கியதில் மக்கள் அதிருப்தியடைந்தனர்.

நாட்டில் பெருகிய வேலையின்மை பிரச்சினை, பொருளாதாரத் தேக்கம், ஊழல் புகார்கள், மாணவர் எழுச்சி, அவர்களுக்கு எதிரான அரசியல்வாதிகளின் அதிகார ஆணவம், சீர்திருத்தம் என்ற பெயரில் பொதுமக்களை வதைத்தது என எழுபதுகளின் மத்தியில் நாட்டு மக்களின் சீற்றங்களுக்கு வடிகால் தேவைப்பட்டது.

அலையடித்த அந்த கோபாவேச மனநிலையை பிரதிபலிக்கும் திரைப்படங்களுக்கு வரவேற்பும் கிடைத்தன. அனைத்துக்கும் மேலாக நாட்டில் பிரகடனமான நெருக்கடி நிலையும், அதையொட்டிய மக்களின் சீற்றமும் சினிமா உள்ளிட்ட அனைத்துக் கலை வடிவங்களிலும் பிரதிபலித்தன.

தீயாய் பரவிய கோபம்

அரசியல், சமூக சூழலில் தென்பட்ட கொதிநிலையை திரைப்படங்கள் எதிரொலித்ததில், ‘கோபக்கார இளைஞ’னின் ஆவேச அடையாளத்தை பாலிவுட் கதாநாயகர்கள் பலரும் கைக்கொள்ளத் தொடங்கினர். அமிதாப் மட்டுமன்றி நசீருதீன் ஷா, தர்மேந்திரா உள்ளிட்டோரும் ‘கோபம்’ கொண்டனர். மேட்டுக்குடியினரால் நசுக்கப்படும் ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் குரலாக ‘மாந்தன்’(1976) திரைப்படத்தில் நடித்தார் நசீருதீன். தொடர்ந்து ‘ஜூனூன்’ (1978) படத்தில் புரட்சியாளனாகவும் உருவெடுத்தார். ‘ஆக்ரோஷ்’ (1980) படத்துக்காக ஓம் பூரி ஆங்கார அவதாரம் எடுத்தார்.

கோபக்கார இளைஞனின் முகம் - மறுமுகம்

உழைக்கும் மக்களின் உரிமைக்குரல், அநீதிக்கு எதிராக பொங்கும் இளைஞர்கள் என நாட்டில் எழுந்த ‘இடது’ சாய்வும் பாலிவுட் கதைகளை ஊடுருவின. அல்லலுறும் மக்களின் மீட்பர், தீயவர்களை அழிப்பதில் அசுரன், அபலைகளுக்கு உதவுவதில் ரட்சகன்.. என வாழ்வின் தரிசனங்களுக்கு அப்பால், பிரம்மாண்ட வடிவெடுத்தான் புதிய நாயகன். இந்த பொதுத்தள ஊடாட்டங்கள் மத்தியில் அந்தரங்கமாக நாயகி மீதான நேசம், தாய் மீதான பாசம் என உருகவும் வைத்தான்.

கதாநாயகனின் பிம்பத்தை ஊதிப் பெருக்குவதற்காக கதாநாயகிகள் ஊறுகாயாக வந்து போனார்கள். கோபாவேச இளைஞனிடம் வலியச்சென்று காதலில் விழுந்தார்கள். அவனுடைய பாடுகள் கண்டு அழகிகள் கண்ணீர் உகுத்தனர். அவனுடைய பழிவாங்கும் படலத்துக்காக, பலாத்காரத்துக்கும் ஆளானார்கள். கோபாவேச இளைஞனின் பரிதாப மறுபக்கத்துக்காக அவனுடைய தாயார்கள் விதவையானார்கள். இப்படி பெண்ணியத்தை சீண்டிய அத்தனைக்கும் அப்போதைய திரைப் பெண்கள் ஆளானார்கள். எண்பதுகளின் இறுதியில் குல்சார், ஷியாம் பெனகலின், பெண்களை மையங்கொண்ட மாற்றுத் திரைப்படங்கள் உருவாகும்வரை, பாலிவுட்டின் திரைப்பெண்கள் சத்தமின்றி புறக்கணிக்கப்பட்டதும் நடந்தது.

கோபாவேசத்தை செதுக்கிய இரட்டையர்

பாலிவுட் சினிமாவின் கோபாவேச இளைஞனின் பிம்பத்தை செதுக்கியதில் சலிம்-ஜாவேத் என்ற கதாசிரிய இரட்டையரின் பங்கு பிரதானமானது. கதைக்கான தீப்பொறியை உள்வாங்கும் தயாரிப்பாளர் (பெரும்பாலும் அவரே இயக்குநராகவும் இருப்பார்), வணிக வாய்ப்புள்ள கதாநாயகனை உத்தேசித்து, தகுதியான இயக்குநருக்கு அனைத்தையும் கடத்துவார். அடுத்த நிலையிலே கதைக்கு ஏற்ற திரைமொழியை வடிக்கும் திரைக்கதை-வசன தளகர்த்தர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். அப்போது பிரபலமாயிருந்த இந்த முறையை சலிம்-ஜாவேத் ஜோடி முதலில் உடைத்தனர்.

அமிதாப் பச்சனை மையப்படுத்தி உருவான கதைக்கு முதலில் அமிதாப்பிடமே சம்மதம் பெற்றார்கள். அதன் பின்னர் இயக்குநர் யாஷ் சோப்ராவிடம் கதையை விவரித்து, கடைசியாய் தயாரிப்பாளரிடம் சரணடைந்தார்கள். இப்படி வித்தியாசமாய் அடியெடுத்த ‘தீவார்’ திரைப்படமே, ‘ஸாஞ்சீர்’ திரைப்படத்தின் கோபக்கார இளைஞனை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது.

அடுத்து வரும் ஆறு வாரங்களும் இந்த கோபாவேச நாயகர்கள் மட்டுமன்றி, பாலிவுட் போக்கின் அப்போதைய ஆழத்தையும், அவற்றைத் தீர்மானித்த இதர ஆளுமைகளையும், ‘பாம்பே வெல்வெட்’ பாதையில் தரிசிக்க இருக்கிறோம்.

‘தீவார்’(1975), ஆண்டின் சிறந்த திரைப்படமாக பிலிம்பேர் விருது பெற்றது. அந்த வெற்றி ஹாங்காங்வரை எதிரொலித்ததில், ‘தி பிரதர்ஸ்’ என்ற ஹாங்காங் மறுஆக்கம் உருவானது. மேலும், தெலுங்கில் என்.டி.ஆர் நடிக்க ‘மகாடு’, மலையாளத்தில் மம்மூட்டி நடிப்பில் ‘நதி முதல் நதி வரே’, தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் ‘தீ’ என தென்னக மொழிகள் பலவற்றிலும் ‘தீவார்’ மறு ஆக்கமானது. தமிழ் திரையுலகில் ரஜினியை கோபக்கார இளைஞன் கதாபாத்திரத்தில் வார்த்து, அவருடைய தொடர் வெற்றிப்படங்களுக்கு அடித்தளமிட்டதில் ‘தீவார்’ படத்துக்கும் பங்குண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x