Published : 03 Jan 2020 11:45 AM
Last Updated : 03 Jan 2020 11:45 AM
சு.சுபாஷ்
இந்தியாவில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட் டல்ல. கிரிக்கெட் வீரர்களை கடவுளராகத் தொழும் இளைஞர்கள் நிறைந்த தேசம் இது. சினிமாவுக்கு அடுத்தபடியாக, கோடிக்கணக்கான பணம் புழங்குவதிலும், மக்களை ஈர்ப்பதிலும் முக்கிய பொழுதுபோக்கு சக்தியாக கிரிக்கெட் திகழ்கிறது.
புனைவு என்ற போர்வையில், கனவான்களின் ஆட்டமாக வர்ணிக்கப்படும் கிரிக்கெட் உலகின் கறுப்புப் பக்கங்களில் வெளிச்ச மடித்தது அமேசான் பிரைம் வீடியோவின் ‘இன்சைட் எட்ஜ்’ வலைத்தொடர். இதன் முதல் சீஸன் 2017 மத்தியில் வெளியானது. தற்போது டிசம்பர் முதல் வாரத்தில் இரண்டாவது சீஸன் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் பெயரை பிபிஎல் என்று மாற்றியது உட்பட, நிஜத்துக்கும் புனைவுக்கும் பெரிய வேறுபாடின்றி 20:20 ஆட்டங்களின் சகல கசடுகளையும் தோலுரிக்கிறது ‘இன்சைட் எட்ஜ்’. பாலிவுட் நடிகை ஜரினா மாலிக் (ரிச்சா சந்தா), ‘மும்பை மேட்ரிக்ஸ்’ அணியின் உரிமையாளராக இருக்கிறார். அவர் உட்பட அணியின் அத்தனை பேரும் கிரிக்கெட்டை ஆழமாக நேசிக்கிறார்கள். கடுமையான நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் அணிக்கு உகந்த முதலீட்டாளரை ஜரினா தேடுகிறார். அப்போது, ஆபத்பாந்தவனாய் கரம் நீட்டுகிறார் தொழிலதிபர் விக்ராந்த் (விவேக் ஓபராய்).
அழகிய அசுரனான விக்ராந்தின் சுயரூபத்தை அறிய நேரும்போது, ஜரீனாவின் மறுதலிப்பைப் புறக்கணித்து, அணியின் முதன்மை உரிமையாளராகிறார் விக்ராந்த். கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட சர்வதேச சூதாட்டத்தை கட்டமைத்திருக்கும் விக்ராந்த், அதற்காக மும்பை அணியின் வீரர்களை அடுத்தடுத்து வளைக்கி றார். ஜரீனாவும் நேர்மையான கிரிக்கெட் வீரர்கள் சிலரும் சேர்ந்து விக்ராந்தை எப்படிச் சமாளிக்கிறார்கள் என்பதை ‘இன்சைட் எட்ஜ்’ தொடரின் முதல் சீஸன் அலசியது.
கிரிக்கெட் சூதாட்ட ரகமான ஸ்பாட் ஃபிக்சிங், புக்கிகளின் லீலைகள், விளையாட்டு வீரர்களை மடக்கும் அவர்களின் உத்திகள், ‘பெட்டிங்’ வலைப்பின்னல் என நம்மைக் கடக்கும் சாதாரண செய்திகளின் பின்னிருக்கும் குற்றச் செயல்களின் தீவிரத்தை விரிவாகக் காட்டியது இன்சைட் எட்ஜ் தொடர்.
போதை, பாலியல், சாதிபேதம், ஊழல், அதிகார அத்துமீறல் என கிரிக்கெட்டின் தறிகெட்ட மறுபக்கங்கள் ஒவ்வொன்றும் அதிர வைக்கின்றன. எவர் நல்லவர், எவர் மோசமானவர் என்பதை அறியமுடியாதபடி கறுப்பாடுகள் கலந்தாடும் ‘மங்காத்தா’ ஆட்டம், டி20 விளையாட்டு போலவே விறுவிறுப்பாகவே சென்றது. முதல் சீஸன் முழுக்க, சூதாட்டத்தின் முக்கிய நகர்வுகளை ரிமோட் கண்ட்ரோலில் இயக்கும் ’பாய்சாப்’ என்பவரின் அறிமுகத்துடன் முதல் சீஸன் முடிவடைந்தது.
இரண்டாவது சீஸனில் கிரிக்கெட்டுடன் பின்னிப் பிணைந்திருக்கும் பாலிவுட் சினிமா, அரசியல் வேர், அதிகார மையங்கள், நிழலுலகம் என ஏனையவற்றை அம்பலப்படுத்துகிறார்கள். மறைந்திருந்து ஆட்டிப்படைத்த ‘பாய்சாப்’ (ஆமிர் பஷிர்) இந்திய கிரிக்கெட் கழகத்தின் தலைவராக சதாய்க்கிறார். அவரது சாம்ராஜ்யம் கிரிக்கெட் அபிமானிகளின் கனவுகளை நிர்மூலம் செய்ய முயல்கிறது.
மும்பை மேட்ரிக்ஸ் அணியின் கேப்டன் ‘ஹரியனா ஹரிக்கேன்’ அணிக்குத் தாவி, தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழி தீர்க்க முயற்சிக்கிறார். இறுதியாட்டத்தில் மோதும் இரு அணிகளின் தலைவர்களும் கைகோத்து, அனைத்து ரகசியங்களையும் வெளிப்படுத்த திட்டமிடுகையில் எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்கின்றன. கூடவே விவேக் ஓபராய் மீண்டும் துளிர்த்து, மற்றுமொரு சீஸனுக்கான எதிர்பார்ப்பைக் கிளறுவதுடன் இரண்டாம் சீஸன் முடிவடைகிறது. வலைத்தொடரை உருவாக்கி, பெரும்பாலான அத்தியாயங்களை இயக்கியுள்ளார் கரன் அன்சுமன்.
இன்சைட் எட்ஜ் தொடரின் முதல் சீஸன் 46-வது சர்வதேச எம்மி விருதுக்குப் பரிந்துரையானது. முதல் சீஸன் அளவுக்கு அடுத்த சீஸனில் விறுவிறுப்பு குறைந்திருந்தாலும், விளையாட்டை விரும்பும் ரசிகர்களை ஏமாற்றாத அத்தியாயங்களை தந்திருக்கிறார்கள்.
கிரிக்கெட் ஆர்வமற்ற சாமானிய ரசிகருக்கு தொடர் அலுப்பு தட்டலாம். கதையின் உள்ளடக்கத்தில் சுருங்கினாலும், இறுதிப் போட்டி போன்ற நிறைவு அத்தியாயத்தின் மைதானக் காட்சிகளின் தீவிரம் பிரமிப்பூட்டுகிறது.
தலா 10 அத்தியாயங்களில், ஒவ்வொன்றும் சுமார் 45 நிமிடங் களுக்கு நீளுகிறது. கிரிக்கெட்டை முன்வைத்த ‘இன்சைட் எட்ஜ்’, இந்திய வலைத்தொடர் வரிசையில் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT