Published : 27 Dec 2019 12:56 PM
Last Updated : 27 Dec 2019 12:56 PM
டி. கார்த்திக்
ஒவ்வோர் ஆண்டும் தங்கள் நடிப்பாற்றலின் மூலம் சிறந்த கதாபாத்திரங் களில் நடித்துப் பெயர் பெறும் நட்சத்திரங்களாகப் பெயரெடுப்பவர்கள் சிலரே. அந்த வகையில் இந்த ஆண்டு நடிப்பின் மூலம் வெற்றிக்கொடி கட்டியவர் யார்?
அஜித்
கடந்த ஆண்டில் ஒரு படமும் வரவில்லையே என்ற ரசிகர்களின் ஏக்கத்தை இந்த ஆண்டு இரட்டிப்பாகத் தீர்த்துவைத்தார் அஜித். ஆண்டு தொடக்கத்தில் ‘விஸ்வாசம்’, ஆண்டு மத்தியில் ‘நேர்கொண்ட பார்வை’ என இரு வேறு பரிமாணங்களில் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். பொதுவெளியில் தலை காட்டாத அஜித்தைத் திரையில் பார்ப்பதே ரசிகர்களுக்குக் கொண்டாட்டமான அனுபவம்தான்.
அதற்கேற்ப ‘விஸ்வாச’த்தில் ‘தூக்குதுரை’யாகப் படம் முழுக்க வேட்டி, முறுக்கு மீசை, மதுரை வட்டார மொழியில் வெளுத்து வாங்கினார். பெண்களை அவமதிப்பதில் தான் ஆணின் வீரம் அடங்கியிருப்பதாகத் தமிழ் சினிமா தொடர்ந்து கதைகளைக் கட்டமைத்துவரும் சூழலில், அஜித்தின் நடிப்பில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ அதைத் தகர்த்தது.
பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாக்கப்படும் பெண்களையே குற்றவாளிகளாக்க முயலும் பொதுப்புத்தியைத் தான் ஏற்ற பரத் சுப்ரமணியம் கதாபாத்திரத்தின் மூலம் தோலுரித்துக் காட்டியவிதம் ஈர்த்தது. ‘‘நோ’ என்று சொன்னால் நோதான்’ என்று பெண்களின் பார்வையிலிருந்து நேர்மையான ஆண் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நின்று அவர் பேசியதை அஜித் பேசியதாகவே ரசிகர்கள் எண்ணிக்கொண்டார்கள்.
தான் ஒரு முன்னணிக் கதாநாயகன் என்ற பிம்பத்தைத் தூக்கிப் பிடிக்காமல் ‘நேர்கொண்ட பார்வை’யோடு நடித்த கதாபாத்திரம் அஜித்தைப் பெண்கள் மத்தியில் நிஜக் கதாநாயகனாக உயர்த்தியது. ‘விஸ்வாசம்’, ‘நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரு படங்களும் அஜித்துக்கு வெற்றிப் படங்களாகவும் வசூலைக் குவித்த படங்களாகவும் அமைந்தன.
விஜய்
ஆண்டுக்கு இரு படங்களில் நடித்துவிடும் கொள்கையைப் பின்பற்றும் விஜய், இந்த ஆண்டு நடித்து வெளியான ஒரே படம் ‘பிகில்’. அப்பா - மகன் என இரட்டை அவதாரம் எடுத்த படமும்கூட. அப்பா வேடத்துக்கு விஜய் செட் ஆவாரா என எழுந்த கேள்விகளையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, மிக எளிமையான தோற்ற வேறுபாடு, குரல் மாறுபாடு என அப்பா - மகன் கதாபாத்திரங்களைச் சிறப்பாகவே கடந்துசென்றார் விஜய்.
கால்பந்து வீரராகவும் பயிற்சியாளராகவும் வரும் காட்சிகளில் விஜயின் வழக்கமான துறுதுறுப்பும் இளமைத் துள்ளலும் ரசிகர்களைக் கவர்ந்தன. ஏற்கெனவே வந்த படங்களின் சாயல் கொண்ட படம் என்ற விமர்சனத்தை ‘பிகில்’ பெற்றபோதும், படம் பாக்ஸ் ஆபீஸை வசூல் மழையால் நிரப்பத் தவறவில்லை.
கார்த்தி
முன்னணி வரிசையில் உள்ள நாயகர்கள் ஓரிரு படங்களில் நடித்துவிட்டு பிரம்மாண்ட வெற்றிக்காகக் காத்திருக்கும் வேளையில் கார்த்தியின் கேரியர் கிராஃப் தொடர்ந்து பரமபத ஏணியில் ஏறுவதைப் போல ஏறிக் கொண் டிருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் ‘தேவ்’, ‘கைதி’, ‘தம்பி’ என மூன்று வெவ்வேறுவிதமான கதையம்சங்கள் உள்ள படங்களில் நடித்திருந்தார்.
‘தேவ்’ சறுக்கலை ஏற்படுத்த, ‘கைதி’யில் இறங்கி அடித்தார் கார்த்தி. தீபாவளித் திருநாளில் ‘பிகில்’ ஃபீவர் ரசிகர்களை ஆக்கிரமித்திருந்த வேளையில், ‘கைதி’யில் டில்லியாக கார்த்தி டேக் ஆஃப் ஆனார். படம் முழுவதுமே லுங்கியும் தாடியும் நெற்றியில் திருநீறுமாக அதகளம் செய்திருந்தார். ‘தேவ்’ படத்தின் கதாபாத்திரத்துக்கு நேர்மாறாக கார்த்தி நடிப்பில் கெத்து காட்டியிருந்ததில் ‘கைதி’ கார்த்தியின் சினிமா வாழ்க்கையில் இன்னொரு மைல்கல் ஆனது.
ஆண்டு இறுதியில் வெளியான ‘தம்பி’ படம் கார்த்தியின் நடிப்புத் திறமைக்கு இன்னும் நுட்பமாகத் தீனி போட்டுவிட்டது. தன்னுடைய பாணி நடிப்புடன் துப்பறியும் நடிப்பையும் சேர்த்துக்கொள்ள ரசிகர்களுக்கு வித்தியாசமான வேட்டையாக அமைந்துவிட்டது ‘தம்பி’.
தனுஷ்
கடந்த ஆண்டு இரு படங்களில் நடித்ததுபோல இந்த ஆண்டும் தனுஷ் நடித்து இரு படங்களே வெளி யாயின. ‘அசுரன்’. நீண்ட நாட்களாகக் கிடப்பில் கிடந்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ என இரு படங்களோடு திருப்தியானார் தனுஷ். ‘அசுரன்’ தனுஷின் சினிமா கேரியரில் மேலும் ஒரு முக்கியப் படமான நிலையில் ‘தோட்டா’ சீறிப் பாயாமல் போனது. ஆனால், ‘அசுரன்’ கொடுத்த வெற்றி இன்னும் ஓராண்டுக்குத் தாங்கும் என்று சொல்லுமளவுக்கு முப்பதுகளைக் கடந்த தனுஷ், 50-களைக் கடந்த சிவசாமி கதாபாத்திரத்தில் நடிப்பைக் கொட்டியிருந்தார்.
திருமண வயது மகனுக்கு அப்பாவாக தனுஷ் ஏற்ற வேடம் பொருந்தவில்லையோ என்ற கேள்வியைத் தனது நடிப்பால் பொடிப் பொடியாக்கினார். பிள்ளைகளுக்குப் பாசமான அப்பா, குடும்பத்தைக் காக்கப் போராடும் குடும்பத் தலைவன், ஃபிளாஷ் பேக்கில் அழகான காதலன், சாதிய துவேஷங்களை எதிர்க்கும் ஆக்ரோஷமான இளைஞன் என ஒவ்வொரு காட்சியிலும் தனுஷ் மிளிர்ந்தார். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தனுஷுக்கு ஒரு படம் வெற்றி, ஒரு படம் தோல்வி. அந்த வகையில் தனுஷுக்கு ஃபிப்டி மகிழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது ‘அசுரன்’.
விஜய் சேதுபதி
மசாலா படமா, கிராமத்துப் படமா, பெண்களை மையப்படுத்திய படமா, பீரியட் படமா, நாயகன் பிம்பத்தைப் பார்க்காத படமா என எந்தப் படமாக இருந்தாலும் ஒரே சாய்ஸ் விஜய் சேதுபதி என்ற நிலையைத் தமிழ்த் திரையுலகம் இந்த ஆண்டும் பார்த்தது. விஜய் சேதுபதி நடிப்பில் ‘பேட்ட’, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘சிந்துபாத்’, ‘சைரா’, ‘சங்கத்தமிழின்’ என ஐந்து படங்கள் வெளியாயின. என்றாலும், ‘சூப்பர் டீலக்’ஸில் விஜய் சேதுபதி ஏற்ற திருநங்கை வேடம் பேசப்பட்டது.
எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும், அதில் விஜய்சேதுபதி தனித்துத் தெரிவதைப் போல ஷில்பா என்ற திருநங்கைக் கதாபாத்திரத்திலும் தனித்துத் தெரிந்தார். நாயகன் என்ற பிம்பத்தைத் தூர வைத்துவிட்டு, ஷில்பா என்ற திருநங்கைக் கதாபாத்திரம் மூலம் இயக்குநரின் நடிகராக விஜய் சேதுபதி மாறியிருந்தார்.
காவல் நிலையத்தில் ஷில்பாவுக்கு நேரும் அவலமான சூழ்நிலையைச் சித்தரிக்கும் காட்சியில் நடிக்க வேறு நாயக நடிகர்கள் எவரும் முன்வருவார்களா என்று யோசிக்க வைத்திருந்தார். திருநங்கைகளின் துயரத்தை, மனப் போராட்டத்தை, பொதுவாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்களை இயல் பான உடல்மொழி, முகபாவம், வசன உச்சரிப்பு வழியே பிரமிப்பூட்டும் வகையில் வெளிப்படுத்தியிருந்தார் விஜய் சேதுபதி.
ஆர். பார்த்திபன்
திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகியவற்றில் அழுத்தமான முத்திரை பதித்துவிட்ட பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தாமொரு நடிப்புக் கலைஞனும்தான் என்பதை ‘ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தில் அதிரடியாக நிரூபணம் செய்திருந்தார்.
அபூர்வமானதும் சவாலானதுமான அம்சமாக மாசிலாமணி என்ற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே திரையில் தோன்றுவது என்ற யோசனையை, திரை எழுத்து, தொழில்நுட்பம், நடிப்பு, இசை ஆகிய அம்சங்கள் வழியே பிரமிக்கும் வகையில் சாத்தியமாக்கி தமிழ் சினிமாவில் மீண்டும் ‘புதிய பாதை’ போட்டதில் ‘குடைக்குள் மழை’யாக பார்த்திபன் இந்த ஆண்டு ஜில்லென ரசிக்க வைத்தார்.
ஆர்யா
இந்த ஆண்டு ஆர்யா நடிப்பில் ‘மகாமுனி’, ‘காப்பான்’ என இரு படங்கள் வெளியாகியிருந்தன. ‘காப்பா’னில் துக்கடாவாக வந்துபோனவர், ‘மகாமுனி’யில் தூள் கிளப்பியிருந்தார். இரட்டை வேடங்கள் என்பதே கதாநாயகர்களின் சாகசங்களுக்கான களமாகப் பயன்படுத்திவரும் தமிழ் சினிமாவில், இரட்டை வேடத்தைச் சராசரி மனிதர் களின் வாழ்க்கையை மையப்படுத்தி ஆர்யா ஏற்றிருந்தது ரசிகர்களுக்குப் புதிய அனுபவத்தைக் கொடுத்தது.
நடிக்க வாய்ப்புள்ள படங்கள் என்றால், தன் அவதாரம் வேறுமாதிரி இருக்கும் என்று இன்னொரு முறை அழுத்தமாகப் பதிவுசெய்திருந்தார் ஆர்யா. ‘நான் கடவுள்’ அகோரிபோல ஆர்யாவுக்கு மகா, முனி கதாபாத்திரங்கள் அமைந்துபோயின. அந்தந்தக் கதாபாத்திரங்களின் வார்ப்புக்குக் கச்சிதமாகப் பொருந்தியதோடு மட்டுமல்லாமல், அவற்றின் நுட்பங்களை உணர்ந்து, உடல்மொழி, வசன உச்சரிப்பிலும் நடிப்பை வெளிப்படுத்திய விதத்தில் ஆர்யாவுக்கு ஆயிரம் வாலா பட்டாசு கொளுத்தலாம்.
நாயகர்களுக்கு வெளியே கே.டி. ராமசாமி நாயகர்கள் வயதான வேடத்தில் நடிப்பது தமிழ் சினிமாவுக்குப் புதிதல்ல. ஆனால், வயதான நாடகக் கலைஞரான மு.ராமசாமி முதன்மைக் கதாபாத்திரம் ஏற்று நடித்த படமாக வெளியானது ‘கே.டி. என்கிற கருப்புத்துரை’. உறவுகளால் உதறப்பட்ட முதியவரும் உறவுகள் யார் என்றே தெரியாத ஒரு சிறுவனும் நடத்தும் அன்பு சாம்ராஜ்ஜியம்தான் படத்தின் பயணம். கதைதான் படத்தின் நாயகன் என்பதால், நட்சத்திர அந்தஸ்து எல்லாம் இரண்டாம்பட்சமானது. நாடகங்கள் மூலம் நடிப்பு ஆளுமையாக உருவெடுத்திருக்கும் மு.ராமசாமி, கருப்புத்துரை கதாபாத்திரத்தில் நம் வீட்டுத் தாத்தாவைக் கண்முன்னே கொண்டுவந்தார். ஊட்டி வளர்த்த பிள்ளைகளே தன்னைக் கொல்ல நினைக்கிறார்களே எனும் வேதனையும், குட்டி என்ற சிறுவன் மூலம் கிடைக்கும் அன்பில் நெகிழ்வதிலும் வஞ்சனையே இல்லாமல் நடித்திருந்தார். அதுவும் நல்லி எலும்பைக் கடித்தபடி பிரியாணி சாப்பிடும் காட்சியைப் பார்த்தவர்கள், படம் முடிந்ததும் நேராகப் பிரியாணிக் கடைக்குப் போகும் அளவுக்குத் தத்ரூபமாக நடித்துக் கலக்கியிருந்தார் மு.ராமசாமி. கடைசிக் காலத்தில் கைவிடப்பட்ட முதியவரின் மொத்த வலியையும் பார்வையாளர்களுக்குஅப்படியே கடத்தியதில், மாணவர்களுக்கு நடிப்பைப் பயிற்றுவிக்கும் பேராசிரியர் என்பதை கே.டி. படத்தின் மூலம் ஒரு பாடமாகவே காட்டியிருந்தார் ராமசாமி. |
கட்டுரையாளர், தொடர்புக்கு:
karthikeyan.di@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT