Published : 05 Aug 2015 11:52 AM
Last Updated : 05 Aug 2015 11:52 AM

சினிமா எடுத்துப் பார் 20- பரவிய தீ!

ஏவி.எம்.சரவணன் சார் ஒருமுறை மும்பை சென்றபோது கிஷோர்குமா ரும், ஒரு சிறு பையனும் இருந்த ஒரு படத்தின் போஸ்ட்டரைப் பார்த்தார். அந்தப் படத்தைப் பற்றி நிர்வாகி சின்னா மேனனிடம் கேட்க, ‘‘அந்தப் படம் சுமா ராக ஓடுது” என்று கூறினார். அதற்கு சரவணன் சார், ‘‘அந்த சிறுவனைப் பார்த்தால் படம் நன்றாக இருக்கும் என்றே தோன்றுகிறது. அந்தப் படத்தை பார்க்க ஏற்பாடு செய்யுங்கள்” என்றார். ஆனால் பார்க்க இயலவில்லை. இதை கேள்விப்பட்ட சென்னை வீனஸ் பிக்சர்ஸ் புரொடக்‌ஷன் மேனேஜர் சுப்ர மணியன், சரவணன் சாரை வந்து பார்த்து ‘‘கிஷோர்குமார் படத்தை பார்க்க விரும்புனீங்கன்னு கேள்விப்பட்டேன். அதோட உரிமை எங்கிட்டத்தான் இருக்கு. அதை விநியோகஸ்தர்களிடம் போட்டுக் காண்பித்தேன். இந்தப் படத் தில், எம்ஜிஆர் நடித்தாலும் ஓடாதுன்னு சொல்லிட்டாங்க. இவ்வளவுக்குப் பிற கும் நீங்க படத்தைப் பார்க்கணும்னா போட்டுக் காண்பிக்கிறேன்’’ என்றார்.

சரவணன் சார் படத்தைப் பார்த்தார். படம் அவருக்குப் பிடித்திருந்தது. ஒரு தொகையை கொடுத்து உரி மையை வாங்கிக் கொண்டார். அந்தப் படத்தை திருலோகசந்தர், கிருஷ்ணன்- பஞ்சு, ஜாவர் சீதாராமனை பார்க்க வைத்தார். அவர்கள் ‘‘திருப்தியாக இல்லையே”என்றனர். அதற்கு சரவணன் சார் ‘‘அந்தச் சிறுவனை படம் முழுக்க பேச இயலாதவனாக் காட்டிட்டாங்க. அந்தப் பையன் பேசுற மாதிரி கதையை உருவாக்கி, பின்னால அவனை பேச முடியாதவனா மாத்தினா மனசில் பதியும்” என்றார். ‘‘நீங்க சொன்னது மாதிரி கதையை மாத்தி தர்றேன்” என்றார் ஜாவர் சீதாராமன். இந்தி கதையை வைத்துக்கொண்டு தமிழில் புதிய திரைக்கதை உருவானது.

அந்த இந்திப் படப் பெயர் ‘‘தூர் கஹான் கி ஜாவோன். தமிழில் ‘ராமு’. ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார். படம் ராமு என்கிற பையனை மையமாக வைத்தே சுழலும். அந்தப் பையனின் பெற் றோராக ஜெமினிகணேசன் - புஷ்பலதா நடித்தார்கள். ராமு ‘‘பச்சை மரம் ஒன்று… இச்சைக் கிளி ரெண்டு” என்று பாடி ஆடும் பாட்டு இன்றும் பலரது மனதில் பசுமையாக இருக்கும்.

படத்தில் ஜெமினி ஒரு ராணுவ வீரர். விடுமுறையில் வந்த அவர் ராணுவத்துக்குத் திரும்பிய பிறகு கொள்ளைக்காரர்கள் அந்த ஊருக்குள் வந்து கொள்ளை அடிப்பதுடன், ஜெமினி வீட்டுக்கும் தீ வைப்பார்கள். அப்போது ராமுவும், அம்மா புஷ்பலதாவும் நெருப் பில் மாட்டிக் கொள்வார்கள். நெருப்பு பிடித்த ஒரு உத்தரம் அம்மாவின் மேல் விழும். அதைப் பார்த்து ராமு ‘அம்மா’ என்று உரக்கக் கத்துவான். அப்போது அவன் பேசும் திறனை இழந்துவிடுவான். அவன் அம்மாவும் இறந்துவிடுவார். ஊர் திரும்பிய ஜெமினி விவரம் அறிந்து துக்கப்படுவார். ராமுவை பேச வைக்க ஜெமினி எடுக்கும் முயற்சிகள் தோல்வி அடைகின்றன.

ஒருமுறை ஜெமினி கோபமாக பையனை ‘‘செத்துப் போ” என்று அடிப்பார். பையன் அழுது கொண்டே ‘‘எனக்கு சாகத் தெரிய லையே அப்பா” என பீச் மணலில் எழுதி வைத்துவிட்டு ஜெமினி பார்க்காத நேரத்தில் கடலில் போய் இறங்குவான். மகன் அலைகளில் முழுகும் சமயத்தில் ஜெமினி பார்த்துவிடுவார். ஓடிப் போய் அவனை காப்பாற்றி, மகனை கட்டிப் பிடித்துக்கொண்டு கதறி அழுவார். அந்த நேரத்தில் அசரீரி போல் ஒரு பாடல்.

அந்தப் பாடலைக் கேட்டுக்கொண்டே கோயிலை நோக்கிப் போவார்கள். அங்கு நடிகர் நாகையா பாடிக்கொண்டிருப்பார். சீர்காழி கோவிந்தராஜனும், டி.எம்.சௌந்தரராஜனும் உணர்வுபூர்வமாக பாடிய அந்தப் பாட்டுதான் ‘கண்ணன் வந்தான்.. அங்கே கண்ணன் வந்தான்… ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்’. கவியரசு கண்ணதாசனின் ஆழமான வரிகள். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி-யின் அழுத்தமான இசை. கதையோடு கலந்தப் பாட்டு பார்ப்பவர் களிடத்தில் கண்ணீரை வரவழைத்தது.

இப்படியான சூழலில் ஜெமினியும் ராமுவும் கே.ஆர்.விஜயாவை சந்திக் கிறார்கள். ராமு மீது கே.ஆர்.விஜயா வுக்கு அதிக பாசம். ஜெமினியின் கதையைக் கேட்டு அவர் மீதும் ஒரு பரிவு. இதனை புரிந்துகொண்ட ஜெமினி ஒரு பாடலை பாடுகிறார். அந்தப் பாடல்தான் ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ பாடல். அதாவது கே.ஆர்.விஜயாவை தன்னிடம் நெருங்க வேண்டாம் என்ற பொருள்படப் பாடுவார்.

அந்தப் பாட்டை பாடியவர், பி.பி.னிவாஸ். மிக அற்புதமாக அவர் பாடியிருப்பார். வாழுங்காலத்தில் அவரை ஓய்வு நேரங்களில் டிரைவ் இன் ஹோட்டலில் பார்க்கலாம். சட்டைப் பை முழுக்க பேனாக்களை வைத்துக்கொண்டு, கை நிறையப் புத்தகங்களுடன் படித்துக்கொண்டே இருப்பார். அல்லது எழுதிக்கொண்டே இருப்பார். நல்ல குரல் மட்டுமல்ல... நல்ல மனிதநேயமுள்ள மனிதர்.

‘ராமு’ படத்தின் இறுதிக் காட்சியில் வில்லன் ஆட்கள் வந்து ராமுவை கல் உரலில் கட்டிப் போட , கே.ஆர்.விஜயா வுக்கு அசோகன் பாலியல் தொந்தரவு கொடுப்பார். அப்போது ஜெமினி வந்து கே.ஆர்.விஜயாவைக் காப்பாற்றுவார். அசோகன் தீ பந்தத்தோடு வந்து சண்டை போடுவார். அப்போது அந்த அறை தீ பிடித்துக்கொள்ளும். அங்கே மயங்கிக் கிடக்கும் கே.ஆர்.விஜயா பக்கத்திலும் கல் உரலில் கட்டப்பட்டுள்ள ராமுவின் பக்கத்திலும் தீ பரவும்.

திடீரென கே.ஆர்.விஜயா மீது ஒரு எரியும் உத்தரம் விழப் போவதைப் பார்த்த ராமு, அவரைக் காப்பாற்ற ‘அம்மா’ என்று உணர்ச்சியில் கத்திவிடுகிறான். முன்பு தாய்மீது எரிந்த உத்தரம் விழுந்தபோது ‘அம்மா’ என்று கத்தியபடி பேசும் திறனை இழந்தான். இப்போது கே.ஆர்.விஜயா மீது எரியும் உத்தரம் விழப் போவதைப் பார்த்து உணர்ச்சிகரமாக ‘அம்மா’ என்று கத்த அவனுக்கு பேச்சு வந்துவிடுகிறது. இதுதான் காட்சி.

இந்தக் காட்சியை திருலோகசந்தர் பரபரப்பாக படமாக்கினார். மயங்கிக் கிடக்கும் கே.ஆர்.விஜயாவை நோக்கி தீ பரவ, கல் உரலில் கட்டிப் போட்டி ருக்கும் ராமுவின் அருகிலும் தீ பரவு கிறது. இந்தக் காட்சி எடுக்கும்போது நெருப்பு குறைய, அங்கிருந்த உதவி யாளர்களிடம், ‘‘கொஞ்சம் மண்ணெண் ணெயை ஊத்துங்க” என்று சொன் னதும், அவர்கள் ஆர்வக் கோளாறி னால் மண்ணெண்ணெயை அதிகம் ஊற்றிவிட்டார்கள். மொத்த அறையும் தீப்பிடித்துக்கொண்டது. நாங்கள் பயந்துவிட்டோம். கே.ஆர்.விஜயாவை நெருப்புக்குள் இருந்து பத்திரமாக வெளியில் கூட்டிவந்தோம்.

ஆனால், கல் உரலில் கட்டப் பட்டிருந்த ராமுவின் கட்டுகளை அவிழ்க்க முடியவில்லை. தீ வேகமாக பரவிக்கொண்டிருந்தது. ராமு கத்த … நாங்கள் கத்த… அங்கே என்ன நடந்தது? அடுத்த வாரம் பார்ப்போமா?

- இன்னும் படம் பார்ப்போம்...

முந்தைய அத்தியாயம்:>சினிமா எடுத்துப் பார் 19- சிவகுமாரின் மேன்மை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x