Published : 20 Dec 2019 12:35 PM
Last Updated : 20 Dec 2019 12:35 PM
க.நாகப்பன்
ஜல்லிக்கட்டு மீதான தடையைத் தகர்த்தெறிவதற்காக மெரினாவில் 2017-ல் தன்னெழுச்சியுடன் போராடிய தமிழர்களின் போராட்டம், தேசத்தைக் கடந்து சர்வ தேசத்தையும் திரும்பிப் பார்க்கவைத்தது. அதைத் திரை ஊடகத்தில் பதிவுசெய்யும் விதமாக ‘மெரினா புரட்சி’ படத்தை இயக்கியிருக்கிறார் எம்.எஸ்.ராஜ். தமிழர்களுடைய பண்பாட்டின் ஒரு பகுதியாக நீடிக்கும் பாரம்பரிய அம்சங்களில் புகழ்பெற்றதாக இருக்கும் ஜல்லிக்கட்டின் மீது நிகழ்த்தப்பட்ட தடையை உடைத்த விதம் எப்படிப்பட்டது என்பதை அரசியல் பின்னணியுடன் புலனாய்வுப் பார்வையில் இயக்குநர் பதிவுசெய்திருக்கிறார்.
தொலைக்காட்சி சேனல் ஒன்றை நடத்துகிறார் ராஜ்மோகன். அவரிடம் நவீனும் ஸ்ருதியும் வேலை கேட்கின்றனர். மெரினா போராட்டத்தின் பின்னணி, ஜல்லிக்கட்டின் பின் உள்ள அரசியல் குறித்து 15 நாட்களில் கள ஆய்வு செய்து விவரங்களைச் சமர்ப்பித்தால் வேலை உறுதி என்று அவர்களிடம் நம்பிக்கை விதைக்கிறார் ராஜ்மோகன்.
நவீனும் ஸ்ருதியும் 15 நாட்கள் களத்துக்குச் சென்று தீவிரமாக ஆய்வு செய்கின்றனர். அதனை ராஜ்மோகனிடம் சமர்ப்பிக்கின்றனர். அப்போது ஜல்லிக்கட்டு தொடர்பான பல அதிர்ச்சி கலந்த உண்மைகளை அவர்கள் வெளிச்சத்துக்குக் கொண்டு வருகின்றனர். அவை என்னென்ன உண்மைகள் என்பதைப் படம் விரிவாகப் பேசுகிறது.
ஜல்லிக்கட்டு தடைக்குப் பின் இருக்கும் அரசியல், மெரினா போராட்டத்தின் பின்னணி யில் இருக்கும் அரசியல், போராட்டத்தின் இறுதி நாளில் வன்முறை ஏற்பட்டதற்கான பின்னணி என மூன்று விதமான பார்வைகளும் படத்தில் சரியாகச் சொல்லப்பட்டுள்ளன.
சில உண்மைகள்
* பாஜகவின் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த நடிகை ஹேமமாலினி அப்போதைய மத்திய வனம், சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷிடம் ஜல்லிக்கட்டுக்குத் தடை கோரி ஒரு கோரிக்கை வைக்கிறார். அக்கோரிக்கையை ஏற்ற ஜெய்ராம் ரமேஷ், காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகளின் பட்டியலில் காளையையும் சேர்க்கிறார். அதுவே ஜல்லிக்கட்டுக்கான மிகப் பெரிய தடையாக அமைந்து விடுகிறது. அந்த ஆண்டின் சிறந்த மனிதர்களாக ஜெய்ராம் ரமேஷ், ஹேமமாலினியைத்தான் பீட்டா அமைப்பு தேர்வு செய்தது.
* ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் தமிழர்கள் இருவரே; பீட்டாவுக்கு முன்பாகவே ஜல்லிக்கட்டுத் தடைக்கு அவர்கள்தாம் காரணம் என்கிறது படம். அவர்கள் விலங்குகள் நல அமைப்பின் தலைவரும் சேஷசாயி பேப்பர் நிறுவத்தின் உரிமையாளருமான சின்னி கிருஷ்ணா, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அரியாம சுந்தரம் ஆகியோர் என்பதைச் சான்றுகளுடன் இயக்குநர் நிறுவியிருக்கிறார். மேலும், அன்று இருந்த மாநில அரசுக்கு ‘மெரினா புரட்சி’யில் எத்தகைய பங்கு இருந்தது என்பதையும் படம் எடுத்துக்காட்டுகிறது.
மக்கள் பாதை, நம்மாழ்வார் வழி இயங்கும் அமைப்புகளின் பணி, ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கான காரணகர்த்தாக்களில் ஒருவரான கார்த்திகேய சிவசேனாபதியின் கருத்து ஆகியவை படத்துக்கு வலுச்சேர்க்கின்றன.
ஜல்லிக்கட்டுப் போராட்டம் எட்டுப் பேரால் தொடங்கப்பட்டு 18 பேரால் பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பதை இயக்குநர் போதிய தரவுகளின் மூலம் முழுமையாக நிரூபிக்கவில்லை. அதேபோல், ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரின் கருத்துகளை இயக்குநர் ஏன் தவிர்த்தார் என்பதும் புரியாத புதிர்.
‘மெரினா புரட்சி’யைத் திரைப்படம் என்ற வகைமைக்குள் அடக்கிவிட முடியாது. அதற்கான கூறுகள் அதிக அளவில் இல்லை. ஆவணப்படத்துக்கான அம்சங்களே தூக்கலாக இருக்கின்றன. டாக்கு டிராமா என்றுகூடச் சொல்லலாம். ஆனால், ஒட்டுமொத்தத் தமிழர்களும் இந்த வரலாற்று வெற்றியின் பின் உள்ள நுட்பங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், அனைவரையும் இந்தப் படைப்பு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் திரைப்படத்துக்கான சில நகாசு வேலைகளைச் சேர்த்துள்ளார். சென்சாரில் போராடி வென்று படத்தை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் இயக்குநர் எம்.எஸ்.ராஜின் நோக்கம் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது.
கனடா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட 13 நாடுகளில் திரையிடப்பட்ட படம், தென் கொரியாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப் படம், நார்வே விருது வென்ற படம் என்று பல பெருமைகளைத் தனதாக்கிக் கொண்டுள்ள ‘மெரினா புரட்சி’ நிச்சயம் ஜல்லிக்கட்டுப் போராட்டச் சம்பவத்தை சினிமா வடிவில் பதிவுசெய்த முக்கியமான முயற்சியாகக் காலத்துக்கும் பேசப்படும். வருங்காலத் தலைமுறைக்கு ஓர் அசலான புரட்சியின் காட்சி ஆவணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT