Published : 06 Dec 2019 11:32 AM
Last Updated : 06 Dec 2019 11:32 AM

கோடம்பாக்கம் சந்திப்பு: மீனாவின் ஆர்வம்

‘தர்பார்’ படத்தைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி. அதில் மீனாவும் நடிக்க இருப்பதாக இயக்குநர் வட்டாரம் உறுதி செய்கிறது. மலையாள, தெலுங்குப் படங்களில் நடித்துவந்த மீனா, விவேக் குமார் கண்ணன் இயக்கத்தில் ஜீ5 தயாரிக்கும் ‘கரோலின் காமாட்சி’ என்ற தமிழ் இணையத் தொடரில் காமாட்சி என்ற பெண் சி.பி.ஐ அதிகாரியாக நடித்து முடித்திருக்கிறார்.

அந்தத் தொடரை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த மீனா, “பல பெரிய கட்சிகள் அரசியலுக்கு வரும்படி என்னை அழைத்தன. நான் மறுத்துவிட்டேன். எனக்கு அரசியலில் சுத்தமாக ஆர்வம் இல்லை. ஆனால் தற்போது ரஜினி, கமல் இருவரும் அரசியலில் இறங்கியிருப்பதால் என்ன அதிசயம் நடக்கப்போகிறது என்பதைக் காண நானும் ஆர்வமாக இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

கவிதாலயா குடும்பத்திலிருந்து…



படத்தொகுப்பாளர், தேசியவிருது பெற்ற இயக்குநர் பி.லெனின், கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் புதிய படம் ‘கட்டில்’ என்ற தலைப்பில் உருவாகிவருகிறது. ‘யமுனா’ என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமான நடிகர் கணேஷ் பாபு கதாநாயகனாக நடித்து இயக்கும் படம். இதில் அவருக்கு ஜோடியாக ஸ்ருஷ்டி நடிக்கிறார். இதற்கிடையில் கணேஷ்பாபுவின் அம்மாவாக நடித்து வருகிறார் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மருமகளான கீதா கைலாசம். ரஜினி, கமல் உட்பட நூற்றுக்கணக்கான நடிகர்களை உருவாக்கிய ‘கவிதாலயா’ குடும்பத்திலிருந்து வந்திருக்கும் முதல் நடிகர்.

அது பற்றி அவரிடம் கேட்டபோது, “ எங்கள் தயாரிப்பு நிறுவனமான மின் பிம்பங்கள் சார்பில் தயாரித்த ‘மர்மதேசம்’ தொடங்கி, பல புகழ்பெற்ற மெகா தொடர்கள், நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளராகப் பணிபுரிந்த அனுபவம் எனக்கு உண்டு. நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்திருந்தாலும் திரையில் நடிக்கும் எண்ணம் இல்லாமல் இருந்தது.

ஆனால், ‘கட்டில்’ படத்தின் திரைக்கதையைக் கேட்டதும் கி.ராஜநாராயணன் எழுதிய ‘கதவு’ என்ற கதை நினைவுக்கு வந்தது. ஒரு கட்டிலைப் பிரிய மனமில்லாத குடும்பம் ஒன்றின் பாசப்போராட்டத்தை அழகாகவும் நெகிழ்வாகவும் கூறும் கதை. அதற்காகவே இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பைத் தொடரும் எண்ணம் இருக்கிறது” என்று கூறும் கீதா கைலாசம் ஓர் எழுத்தாளரும்கூட.

எழுவர் கூட்டணி!

தெலுங்கு, மலையாளப் படத் தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவில் புழங்கும் அளவுக்கு கன்னடத் தயாரிப்பாளர்கள் இங்கே வருவதில்லை. அந்தக் குறையைப் போக்க வந்திருக்கிறார் புஷ்கரா மல்லிக்கார்ஜுனையா. இவரது புஷ்கர் பிலிம்ஸ் ‘அவனே மன்நாராயணா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைகிறது. இதுவொரு ஃபாண்டஸி அட்வென்சர் நகைச்சுவைப் படம். அமராவதி எனும் ஒரு பழமையான கிராமம், எடுக்க முடியாத புதையல் ஒன்றால் புகழ்பெற்றுக் கிடக்கிறது. அந்தப் புதையல் மர்மத்தைக் கண்டுபிடிக்கக் கிளம்பும் காவல்துறையில் காமெடி போலீசாகப் பணிபுரியும் நாயகனின் நகைச்சுவை அலப்பறைகளும் அதிரடி ஆக்‌ஷனும்தான் கதைக் களம்.

ரக்ஷித், சந்திரஜித், அபிஜித் மகேஷ், சச்சின் அனிருத்தா கோட்கி, அபிலாஷ், நாகார்ஜுன் ஆகிய ஏழு இளைஞர்களைக் கொண்ட நண்பர்கள் குழு ‘தி செவன் ஆட்ஸ்’ (The Seven Odds) என்ற பெயரில் கன்னட புதிய தலைமுறை சினிமாவில் பிரபலம். அந்தக் குழுவின் பங்களிப்பில் உருவாகும் படம்தான் ‘அவனே மன்நாராயணா’. இந்த எழுவரில் ரஷித் படத்தின் கதாநாயகன், சச்சின் படத்தின் இயக்குநர், நாகார்ஜுன் பாடலாசிரியர், கதை, திரைக்கதை, வசனத்தை அனைவரும் இணைந்து எழுதியிருக்கிறார்களாம்.

மீண்டும் சனம்

‘அம்புலி’ படத்தின் மூலம் அறிமுகமான சனம் ஷெட்டி, ‘எதிர்வினையாற்று’ படத்தின் மூலம் திரும்ப வந்திருக்கிறார். அறிமுகப் படத்துக்குப் பின் தமிழில் ‘பிரேக்’ கிடைக்காத நிலையில், “மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று பிடித்த கதைகளில் மட்டுமே நடித்து வந்தேன். தற்போது நல்ல கதை அமைந்ததால் ‘எதிர்வினையாற்று’ படத்தில் அறிமுக நாயகன் அலெக்ஸுடன் இணைந்து நடித்திருக்கிறேன்.

அலெக்ஸ் ஒரு அலோபதி மருத்துவர். இளமைதாஸ் என்பவருடன் இணைந்து படத்தை எழுதி, இயக்கவும் செய்திருக்கிறார். 24 நாட்களில் படத்தை எடுத்து முடித்துவிட்டார்கள். ஆர்.கே.சுரேஷ், ‘ஆடுகளம்’ நரேன், சம்பத் ராம், அனுபமா குமார் எனப் பெரிய பட்டாளமே எங்களுடன் நடித்திருக்கிறார்கள். தமிழில் எனக்கான இடத்தை இந்தப் படம் பெற்றுத் தரும்.” என்கிறார்.

‘கத்துக்குட்டி’யைத் தொடர்ந்து…

காவேரி டெல்டா பகுதியைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை ‘கத்துக்குட்டி’ படத்தின் மூலம் ஜனரஞ்சகமாகக் கூறியவர் இயக்குநர் இரா.சரவணன். தற்போது தனது இரண்டாம் படத்தை, வலிமையான கூட்டணியுடன் தொடங்கியிருக்கிறார்.

சசிகுமார், சமுத்திரக்கனி, ஜோதிகா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்க, சூரி, கலையரசனும் படத்தில் இணைந்திருக்கிறார்கள். நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம், உறவுகளின் வலிமையை உறக்கச் சொல்லும் கிராமத்துக் காவியமாக உருவாகிறது. இயக்குநர் சரவணன் சொந்த ஊரான தஞ்சையிலேயே படமாக்க இருக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு, இமான் இசை எனக் களைகட்டியிருக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் தலைப்பு சூட்டப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x