Last Updated : 14 Aug, 2015 10:59 AM

 

Published : 14 Aug 2015 10:59 AM
Last Updated : 14 Aug 2015 10:59 AM

காற்றில் கலந்த இசை 17 - பேரழகின் மர்மப் புன்னகை

கொலை, வைரக் கடத்தல், போலீஸ் துரத்தல் என்று ‘க்ரைம் நாவல்கள்’ பாணியில் அமைந்த கதையை வைத்து பாரதிராஜா இயக்கிய திரைப்படம் ‘டிக் டிக் டிக்’ (1981). ஃபேஷன் புகைப்படக் கலைஞராகக் கமல் ஹாஸனும், மாடலாக மாதவியும் நடித்திருந்த இப்படத்தில் ராதா, ஸ்வப்னா, நிஷா போன்ற 80-களின் தேவதைகளும் நடித்திருந்தார்கள்.

சரிகாவுக்குக் கவுரவ வேடம். டைட்டிலுக்கு முன்பே கொல்லப்பட்டுவிடுவார். மாடலிங் உலகத்தின் மறுபக்கம், தொழிலதிபர்களின் வித்தியாசமான ஆர்வம், காதல், காமம் என்று பல்வேறு விஷயங்களை உள்ளடக்கிய இப்படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களுக்கு முற்றிலும் புது அனுபவத்தைத் தந்தன. மேற்கத்திய இசை மற்றும் பியூஷன் பாணி இசையில் அமைந்த பாடல்களை இப்படத்துக்குத் தந்திருந்தார் பாரதிராஜாவின் இசைத் தோழன் இளையராஜா.

தொடரும் நிழல் உலகத்தின் ஆபத்து அறியாமல் அதில் சிக்கிக்கொள்ளும் கதாபாத்திரங்களின் நிலையை உணர்த்தும் பாடல்கள் திரைப்படங்களில் நிறைய உண்டு. ‘வல்லவன் ஒருவன்’ திரைப்படத்தின் ‘பளிங்கினால் ஒரு மாளிகை’ பாடலுக்கு முன்பிருந்தே இவ்வகைப் பாடல்கள் தனி அந்தஸ்தைப் பெற்றவை. அந்த வகையில் மேலடுக்கில் இனிமையும், உள்ளார்ந்த ரகசியத்தின் மர்மமும் புதைந்திருக்கும் பாடல்களைக் கொண்ட படம் இது. படத்தின் தொடக்கத்தில் மாடல் அழகியின் மர்ம மரணம்; அதன் பின்னணியில் இருக்கும் நிழல் உலகம் என்ற பீடிகைக்குப் பின்னர் ஒலிக்கத் தொடங்கும் பாடல் ‘இது ஒரு நிலாக் காலம்’.

ஓபரா கோரஸ் பாணியில் ஒலிக்கும் ஆண் பெண் குரல்களின் சங்கமத்தின் தொடர்ச்சியாக மெல்ல அதிரும் ட்ரம்ஸ், மென்மையாகக் கசியும் கிளாரிநெட், துள்ளலான கிட்டார் என்று இசைக் கருவிகளின் கலவைக்குப் பின்னர் பல்லவியைத் தொடங்குவார் ஜானகி.

மாதவி, ராதா, ஸ்வப்னா ஆகிய மூன்று மாடலிங் அழகிகள் தோன்றும் இப்பாடலில் பெண்கள் தங்கள் தனித்துவம் மற்றும் வசீகரம் குறித்து பெருமிதம் கொள்வது போன்ற பாடல் வரிகளை எழுதியிருப்பார் வைரமுத்து (‘அழகி பார்த்தாலே அருவி நிமிராதோ’). மெலிதான துள்ளலுடன் நகரும் தாளக்கட்டின் மீது நளினமாகப் பரவும் பாடல் இது. ஈர்க்கும் ரகசியக் குரலில் பாடியிருப்பார் ஜானகி.

வாகனங்கள் விரையும் சாலைகளின் விளிம்பில் உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள், கேளிக்கைக் கொண்டாட்டங்களுக்குப் பின்னே இருக்கும் மர்மம், ஐரோப்பிய மணம் வீசும் அழகு சாதனப் பொருட்கள் என்று பல்வேறு படிமங்களின் இசை வடிவமாக உருவாக்கப்பட்ட இந்தப் பாடலின் இடையே டி.வி. கோபாலகிருஷ்ணனின் குரலில் ஒரு ஜதி கோவையைச் சேர்த்திருப்பார் இளையராஜா.

துள்ளும் ட்ரம்ஸுடன் போட்டிபோடும் ‘நாஹ்ருதன.. தீரனன.. தீரனன..’ எனும் அவரது இந்த ஜதி, இப்பாடலுக்குப் புது நிறத்தைக் கொடுக்கும். பின்னர் இதே பாணியில் ‘சின்ன வீடு’ திரைப்படத்தின் ‘அட மச்சம் உள்ள மச்சான்’ பாடலிலும் டி.வி. கோபாலகிருஷ்ணனின் ஜதியைப் பயன்படுத்தியிருப்பார் இளையராஜா.

பாடல் முழுவதும் ஒலித்துக்கொண்டே இருக்கும் டிரம்ஸ், இரண்டாவது சரணம் முடிந்து பல்லவி தொடங்குவதற்கு முன்னதான இடைவெளியில் சற்றே ஸ்தம்பித்து நின்று மீண்டும் ஒலிக்கும். இப்பாடலின் தனிச்சிறப்பு இது. இரண்டாவது நிரவல் இசையில் ஆண் குரலின் சாயலில் ஜானகியின் ஹம்மிங் ஒலிக்கும்.

இசைக் கருவிகளில் நிகழ்த்திய பரிசோதனைகளுக்கு நிகராக ஜானகியின் குரலில் வெவ்வேறு ஒலிகளைக் கொண்டுவந்தவர் இளையராஜா. இளையராஜாவின் கற்பனை வடிவங்களை உள்வாங்கிக்கொள்ளும் திறன் ஜானகியிடமும், ஜானகியின் பன்முகத் தன்மையை உணர்ந்துகொள்ளும் திறன் இளையராஜாவிடமும் இருந்தது. இருவரின் இந்தப் பரஸ்பரப் புரிதல் தமிழர்களின் ரசனைக்கு ராஜ விருந்து படைத்தது.

கிட்டத்தட்ட இதேபோன்ற மர்மங்கள் நிறைந்த ‘பார்ட்டி சாங்’காக ஒலிக்கும் ‘நேற்று இந்த நேரம் ஆற்றங்கரையோரம்’ பாடலை லதா ரஜினிகாந்த் பாடியிருப்பார். இப்படத்தின் ஒரே டூயட் பாடல் ‘பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே’. ஜேசுதாஸும் ஜென்ஸியும் பாடிய இப்பாடல், பரதநாட்டியத்துக்கான ஜதியுடன் தொடங்கும். பாடலின் தொடக்கத்தில் கர்நாடக இசைப் பாணியில் மிருதங்கத்தின் தாள நடைக்கேற்ப `ஐ லவ் யூ’ என்று பாடுவார் ஜேசுதாஸ்.

இப்பாடல் காட்சியில் பரதநாட்டியமாடும் மாதவியின் அகன்ற கண்கள் காட்டும் பாவங்களில் மயங்கும் கமல் ஹாஸன் செயலற்று அமர்ந்திருப்பார். கர்நாடக இசையையும் மெல்லிசையையும் கலந்து உருவாக்கிய இப்பாடலில் குழையும் வயலின் இசையை ஆங்காங்கே இழைய விட்டிருப்பார் இளையராஜா.

இப்படம் ‘கரிஷ்மா’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. புகழ்பெற்ற இசைமேதை ஆர்.டி. பர்மன் இசையமைத்திருந்தார். எனினும் ‘டிக் டிக் டிக்’ படத்தின் பாடல்களுக்கு இணையாக ஒரு பாடலைக்கூட அவரால் தர முடியவில்லை. கதைக் கருவுக்கு இணையான இசையை உருவாக்குவதில் இளையராஜாவுக்கு இருக்கும் ஈடுபாடுதான் இப்படத்தின் பாடல்களைத் தனித்துவத்துடன் மிளிரச் செய்கிறது.

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x