Published : 29 Nov 2019 01:44 PM
Last Updated : 29 Nov 2019 01:44 PM

அஞ்சலி: பாலாசிங் எனும் அபூர்வம்

நான்கு மாதங்களுக்கு முன்பு பாலா சிங்கை பேட்டி எடுக்கச் சென்றிருந்தேன். ‘நாயகன், நாயகி, இயக்குநர் ஆகியோரைத் தாண்டி குணச்சித்திர வேடத்தில் ஜொலிக்கும் கலைஞர்களைப் பற்றிய பேட்டி’ என்று அறிமுகம் கொடுத்தேன். “துக்கடா வேஷத் தில் நடிக்கும் நடிகர்களைப் பற்றிய பேட்டின்னு சொல்லுங்க தம்பி” என்று யதார்த்தம் குறையாமல் கலகலவென்று சிரித்துக்கொண்டே பேசத் தொடங்கினார் பாலா சிங். சினிமாவில் மாபெரும் கனவோடும் தணியாத தாகத்தோடும் காலடி எடுத்து வைத்த பாலாவை தமிழ் சினிமா வாரி அணைத்துக்கொள்ளவும் இல்லை; தூற்றி விரட்டவும் இல்லை என்பதுதான் நகை முரண்.

வில்லன், குணச்சித்திரம், அரசியல்வாதி என எந்தக் கதாபாத்திரத்திலும் கச்சிதமாகப் பொருந்தும் அற்புதமான கலைஞர்தான் பாலா. சிறு வேடமோ முழு நீள வேடமோ அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடும் அபார ஆற்றல் உடையவர். அவருடைய நடிப்பில் மிகை இருக்காது. கெட்-அப்பை பெரிய அளவில் மாற்றிக்கொள்ளாமல், நடிப்பில் பல பரிமாணங்களை வெளிப்படுத்திய அற்புதமான நடிப்புக் கலைஞர் பாலா சிங்.

நாகர்கோவில் அருகே உள்ள அம்சிக்காகுழி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர் பாலா. படிக்கும் வயதிலிருந்தே நாடகங்கள் என்றால் அவருக்கு ஈர்ப்பு. நாகர்கோவிலில் கோயில்கள், தேவாலயங்களில் நாடகங்கள் போட்டு தன்னை நாடகக் கலைஞராக நிலைநிறுத்திக்கொண்டார். நாடகங்களைப் போடுவதற்காக ஒவ்வோர் ஊருக்கும் பயணப்பட்ட பாலா, மேடை ஏறாத ஊர்களே இல்லை. பெரும் நம்பிக்கையோடும் சினிமா கனவோடும் சென்னை நோக்கி வரும் கலைஞர்களைப்போல் பாலாவும் 80-களின் தொடக்கத்தில் சென்னைக்குள் அடி வைத்தார். சென்னையில் பத்திரிகையாளர் ஞாநியின் பரிக்ஷா நாடக் குழு பாலாவை மேடையேற்றி அழகு பார்த்தது. உளவியல் மருத்துவரான ருத்ரனும் தன் பங்குக்கு அவரை நாடகங்களில் நடிக்க வைத்தார்.

முதல் படம்

நாடகங்களில் நடிப்பதே சினிமாவுக்கான முன்னோட்டம் என்ற அடிப்படையில் சினிமா வாய்ப்புக்காக அலையத் தொடங்கினார் பாலா. சென்னையில் பாலா ஏறி இறங்காத இயக்குநர்களின் வீடுகளே கிடையாது. ஆனால், ஏமாற்றமே அவருடைய வாழ்க்கையானது. சென்னையில் வாழ்க்கையை நகர்த்துவதற்கும் கைதூக்கிவிடவும் ஆள் இல்லை என்ற நிலையில், சினிமாவில் எப்படியும் நடித்துவிடுவது என்ற வைராக்கியம் மட்டும் அவருக்குள் ஆழமாக வேரோடி இருந்தது.

நீண்ட தேடுதலுக்குப் பிறகு 1982-ல் மெளலி இயக்கிய ‘வா இந்த பக்கம்’ என்ற படத்தில் தலைகாட்டினார் பாலா. பிறகு பாலா நடித்தது எல்லாமே ‘துக்கடா’ வேடங்கள்தான். சினிமாவுக்குள் புழங்கிக்கொண்டே இருந்தால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்ற எழுதப்படாத விதிக்கு பாலாவும் விதிவிலக்கல்ல. உதவி இயக்குநர், புரொடெக்‌ஷன் மேனேஜர் எனப் பல அவதாரங்களை எடுத்தார். அப்படிக் கிடைத்த அறிமுகமும் நாடகத்தில் ஈடுபாடு உடைய நாசரின் உதவியும் பாலா சிங் என்ற சிறந்த கலைஞனை ‘அவதாரம்’ மூலம் அரிதாரம் பூச வைத்தது.

1993-ல் நடிகர் நாசர் இயக்கிய ‘அவதாரம்’ படத்தில் அந்த வில்லன் வாய்ப்பு அத்தனை சுலபமாகக் கிடைத்துவிட வில்லை. ‘காமத்தை எப்போதும் கண்களிலும், முதுகில் குத்தும் சூழ்ச்சியை முகத்திலும் காட்டி’ அவர் முன்பாகவே ஒரு காட்சியை நடித்துக்காட்ட ஆடிப்போனாராம் நாசர். அப்படித்தான் அந்த வில்லன் 'பாசி'யாகத் தமிழ் ரசிகர் கள் மனதில் ஒட்டிக்கொண்டார்.

‘அவதார’த்தைத் தொடர்ந்து ‘ராசி’, ‘பொற்காலம்’, 'ஆனந்த பூங்காற்றே’, ‘விருமாண்டி’ என நல்ல படங்கள் பாலாவுக்கு அமைந்தன. ஆனால், பெரிய வில்லன் நடிகராக வந்திருக்க வேண்டிய பாலா, பின்னாளில் வில்லனுக்கு சப்போர்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க நேர்ந்தது துரதிர்ஷ்டம்.

கடைசி வரை நடிப்பு

எந்த சப்போர்ட்டிவ் கதாபாத்திரலும் முத்திரைப் பதித்து ஜொலிக்க பாலா தவறியதில்லை. அதற்கு உதாரணமாக ‘புதுப்பேட்டை’யைச் சொல்லலாம். வில்லனாகவோ, சப்போர்ட்டிவ் வில்லனாகவோ நடிப்பவர்கள் எல்லாம் கத்திக்கொண்டே இருக்கும் காலம் இது. ஆனால், சத்தம் போடாமல் நடிப்பின் மூலம் வில்லன் கதாபாத்திரத்துக்கும் உயிர்கொடுத்தவர் பாலா. இன்றைய தலைமுறையினர் பாலாவிடம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய நடிப்பு உத்தி இது.

என்னதான் நடிப்பில் முத்திரைப் பதித்தாலும், தமிழ் சினிமாவில் கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெறுபவர்களுக்கே மாலை, மரியாதை கிடைக்கும் என்ற நியதி பாலாவின் சினிமா வாழ்க்கையிலும் தொடரவே செய்தது. அதையெல்லாம் மனதில் ஏற்றிக்கொள்ளாமல் எப்போதும்போலவே நடித்துக் கொண்டிருந்தார். அரசியல் படம் என்றால் பாலாவுக்கு எப்போதும் ஓரிடம் இருக்கும் என்று சொல்லும் அளவுக்கு அந்தக் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்தார். அதற்கு சமீபத்திய உதாரணமாகிப் போனது ‘என்.ஜி.கே’ படத்தின் திரைக்கதையில் திருப்புமுனை ஏற்படுத்திய அவருடைய அருணகிரி கதாபாத்திரம்.

நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பாலாவிடம், சினிமாவில் எப்போதும் புழங்கிக்கொண்டிருக்க வேண்டும் என்ற அவருடைய எண்ணம் கடைசிவரை மாறவே இல்லை. கிடைக்கும் வேடங்களைப் பற்றி கவலைப்படாமல், எத்தனை வயதானாலும் நடித்துக்கொண்டிருக்க வேண்டும் என்று மட்டுமே அவர் விரும்பினார். அவருடைய கடைசிக் காலம்வரை அது நடந்தது மட்டுமே தமிழ் சினிமா பாலா சிங்குக்குக் கொடுத்த ஒரே கவுரவம்.

- டி. கார்த்திக், தொடர்புக்கு: karthikeyan.di@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x