Published : 25 Nov 2019 11:43 AM
Last Updated : 25 Nov 2019 11:43 AM

எண்ணித் துணிக: ஏழாவது அறிவுதரும் பாதுகாப்பான முதலீடு!

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
satheeshkrishnamurthy@gmail.com

முதலீடு செய்கிறேன், உங்கள் ஸ்டார்ட் அப்பை பல்க்காய் வாங்குகிறேன் என்று அழகாய் வந்து அன்பாய் பேசி உங்கள் கம்பெனி டேட்டாவை ஆட்டையை போடும் அசகாயசூரர்கள் பற்றி போன வாரம் பேசினோம். உங்களுக்கு ஒரு பக்கம் முதலீடும் வேண்டும், முடிந்தால் மொத்த ஸ்டார்ட் அப்பையும் விற்க முடிந்தாலும் ஓகே என்ற பட்சத்
தில் பணத்தோடு பவ்யமாய் பேச வருபவர்களிடம் முகத்தில் அடிப்பது போல் டேட்டா, விவரங்கள் எல்லாம் தரமுடியாது, பணத்தை மட்டும் பட்டுவாடா செய் என்று சொன்னால் அசிங்கமாக திட்டி அடிக்கவும் செய்வார்கள். டப்பும் வேண்டும், டேட்டாவையும் பாதுக்காக்க வேண்டும் என்று பெரிய மீசையும் வைத்துக்கொண்டு கூழ் குடிக்கும் வழி பற்றி பேசுவோம்.

உங்கள் ஸ்டார்ட் அப் அறிவுசார் சொத்து என்ற வகையில் அமைந்தால் மற்ற சொத்துகளை பாதுகாக்க என்ன செய்வீர்களோ அதை செய்யத் தவறாதீர்கள். சம்பந்தப்பட்ட அரசு துறையிலிருந்து காப்புரிமை, பதிப்புரிமை, முத்திரை பெற முடியுமா என்று ஆராயுங்கள். உங்கள் ஐடியாவை மற்றவர் பயன்படுத்தாமல் தடுக்க முடிந்தால் பிரச்சினை இல்லை. நல்ல டிரேட்மார்க் லாயராய் பார்த்து இதைப் பற்றிய விவரங்களை தெரிந்துகொண்டு அவர் அறிவுரைப்படி நடங்கள். குறைந்தபட்சம் உங்கள் ஸ்டார்ட் அப் பிராண்ட் பெயரை முதல் காரியமாய் ரிஜிஸ்டர் செய்யுங்கள்.

கம்பெனியை வாங்குகிறேன் என்று வந்தருக்கு காபி, டீ கொடுங்கள். கேட்டார் என்று எடுத்தவுடனயே போட்டிருக்கும் பேண்ட், சட்டையைத் தவிர எல்லாவற்றையும் கழட்டி தராதீர்கள். என்ன கேட்கிறார்கள், ஏன் கேட்கிறார்கள், இவைகளைத்தான் இது போன்று முதலீடு செய்பவர்கள் கேட்பார்களா என்று நான்கு பேரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். வந்த கம்பெனியைப் பற்றி தீர விசாரியுங்கள். அவர்கள் ஏற்கெனவே முதலீடு செய்த ஸ்டார்ட் அப் ஓனர்களை சென்று சந்தியுங்கள்.

அவர்கள் எப்பேற்பட்டவர்கள், என்ன கேள்விகள் கேட்டார்கள், எப்படி நடந்துகொண்டார்கள், வாங்கியபின் எப்படி நடத்துகிறார்கள் என்பதை யெல்லாம் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் மகளை கட்டிக்கொடுக்கும் முன் மாப்பிள்ளை குடும்பத்தைப் பற்றி எத்தனை கேட்பீர்கள். உங்கள் ஸ்டார்ட் அப் உங்கள் செல்ல குழந்தை தானே. தப்பில்லை, கேள்வி கேட்டு குடாயுங்கள்.

சென்ற வாரம் நாம் பார்த்தோமே அந்த ‘அகிஷ்டு’ கம்பெனி, அது பல ஸ்டார்ட் அப்பை வாங்குகிறேன் என்று பலரிடம் பேசி கழண்டு கொண்ட கம்பெனி. ஏதேனும் ஒரு ஸ்டார்ட் அப் இந்த கம்பெனியில் பவுசை பற்றி மற்றவர்களிடம் விசாரித்திருந்தால் இவர்கள் இதையே ஒரு தொழிலாய் செய்து வருவது தெரிந்திருக்கும். ஒரு சில ஸ்டார்ட் அப்பாவது உஷாராயிருக்கும். ஓரம் கட்டி ஒதுங்கியும் இருக்கும்.

உங்கள் ஸ்டார்ட் அப்பில் முதலீடு செய்கிறேன் என்று வந்து நிற்கும் கம்பெனி நீங்கள் விற்கும் பொருளைப் போன்ற அல்லது அதற்கு சம்பந்தப்பட்ட பொருளை ஏற்கெனவே விற்றுக்கொண்டிருக்கிறதா என்பதை பாருங்கள். அப்படி அமைந்திருந்தால் உங்கள் டேட்டா அவர்களுக்கு பெரிதும் பயன்படும். அந்த கர்மத்துக்குத் தான் வருகிறார்கள் என்று தெரிந்தால் வாசல் கதைவை சாத்தி அறையில் உள்ள அத்தனை லைட்டையும் அனைத்து இருட்டு அறையில் முரட்டு குத்து குத்தி அனுப்புங்கள். அவர்களைப் பற்றி மற்ற ஸ்டார்ட் அப் ஓனர்களிடமும் சொல்லுங்கள். உங்களுக்கும் புண்ணியம், பல ஸ்டார்ட் அப்புகளும் பிழைக்கும்.

நாம் பார்த்த அகிஷ்டு கம்பெனி ஏற்கெனவே சில தொழில்கள் செய்துகொண்டுதான் இருந்தது. அந்த தொழில்களை போன்று மற்ற தொழில்களை தொடங்கும் எண்ணத்தோடுதான் முதலீடு செய்கிறேன், வாங்குகிறேன் என்று சில ஸ்டார்ட் அப்புகளை அணுகி அவர்கள் டேட்டாவை பெற முயற்சித்தது. ஆஹா பணம் வரும் போலிருக்கிறதே என்ற ஆசை கண்ணை மறைக்க பல ஸ்டார்ட் அப்புகள் அவசரப்பட்டு தங்கள் டேட்டாவை அள்ளித் தந்துவிட்டு இன்று ஆபீஸுக்கும் கோர்ட்டுக்கும் அலைந்துகொண்டிருக்கின்றன.

முதலீடு செய்கிறேன், உன் ஸ்டார்ட் அப்பை வாங்குகிறேன் என்று வரும் கம்பெனியிடம் ஒரு கான்ட்ராக்ட் கைழுத்திட முடியுமா என்று பாருங்கள். முதலீடு பேச்சு வார்த்தையின் போதும், ட்யூ டிலிஜன்ஸ் நடக்கும் போது தரப்படும் டேட்டா, கம்பெனி மற்றும் கஸ்டமர் விவரங்கள் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படும், ஒரு வேளை பேச்சு வார்த்தை முறிந்தாலும் கூட அந்த டேட்டா டெலீட் செய்யப்பட வேண்டும், அல்லது வேறு வழிகளில் பயன்படுத்தப்படக் கூடாது என்ற ஷரத்துக்களை கான்ட்ராக்டில் கட் அண்டு ரைட்டாக சேர்க்க முடியுமா என்பதையெல்லாம் ஆராயுங்கள்.

மேலை நாடுகளில் ‘நான் டிஸ்க்ளோஷர் அக்ரீமென்ட்’ என்ற ஒரு சமாச்சாரம் உண்டு. ஒரு கால கட்டம் வரை உங்களிடமிருந்து பெறப்படும் டேட்டா வேறு யாரிடமும் பகிரப்படவோ பயன்படுத்தப்படவோ கூடாது என்ற சமாச்சாரம்.

நல்ல லாயராய் பார்த்து இதைப் பற்றியும் தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். முதலீடு அவசியம் தான், சமயத்தில் உங்கள் ஸ்டார்ட் அப்பையே விற்கவும் வேண்டியதுதான். அதற்காக பிளாஸ்டிக் சாமான் விற்பவர் போல் தெருத் தெருவாக ‘முதலீடு செய்யலையோ முதலீடு’ என்று கத்திக் கொண்டே செல்லாமல் தேடிப் பார்த்து விசாரித்து யார் சரியான முதலீட்டாளர், எந்த கம்பெனி நம்பகமானது என்று விசாரித்து அவர்களை அணுகுங்கள். அப்படி தேடி வருபவர்களையும் விசாரியுங்கள்.

இதெல்லாம் இருந்தாலும் தொழில திபர்களுக்கென்று ஒரு ஏழாவது அறிவு ஒன்று உண்டு. ஆங்கிலத்தில் கட் (Gut) என்பார்கள். உள்ளுணர்வு. அது என்ன சொல்கிறது என்பதை கவனியுங்கள். உங்கள் தொழிலுக்கு நீங்களே உற்ற நண்பன் என்பதை உணருங்கள். உஷாராய் இருங்கள். முதலீடு செய்யப்போகிறவர் உங்கள் பார்ட்னராக போகிறவர். பார்த்து தேர்ந்தெடுங்கள். பாதுகாப்பாய் தேர்ந்தெடுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x