Published : 22 Nov 2019 01:17 PM
Last Updated : 22 Nov 2019 01:17 PM

இயக்குநரின் குரல்: ‘சீறு’ம் ஜீவா.. - ரத்தின சிவா நேர்காணல்

மகராசன் மோகன்

“பாரதியார் எழுதிய ‘புதிய ஆத்திசூடி’யில் இடம்பெற்ற ‘சீறுவோர்ச் சீறு’ என்ற எழுச்சிமிகு வாக்கியத்திலிருந்து ‘சீறு’ என்ற வார்த்தையை மட்டும் எடுத்துப் படத்தின் தலைப்பாக்கி இருக்கிறோம்.

அநீதிக்குத் துணை போகும் சமூக எதிரிகளுக்கு எதிர் முனையில் நின்று தனது தார்மிகக் கோபத்தை வெளிக்காட்டும் ஒருவனின் வாழ்க்கைப் போராட்டம் இது” என்று உணர்ச்சியூட்டும் முன்னுரையுடன் உரையாடத் தொடங்கினார் ரத்தின சிவா. விஜய் சேதுபதிக்கு கமர்ஷியல் நாயகன் பிம்பம் தந்த படங்களில் ஒன்றான ‘றெக்க’ படத்தின் இயக்குநர். பாடல்களுக்காகவும் பேசப்பட்ட அந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது ஜீவா நடிப்பில் ‘சீறு’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார்...

கதாநாயகனின் கோபம்தான் கதையின் மையமா?

படத்தில் மயிலாடுதுறையில் வசிக்கும் நாயகன் ஜீவா அங்கே ஒரு கேபிள் தொலைக்காட்சி நடத்துகிறார். அவரைச் சுற்றி நடக்கும் சம்பவங்களால் அவர் எந்த அளவுக்குத் தார்மிகக் கோபம் கொள்கிறார், அவரது கோபம் அவருக்கு ஆபத்தைக் கொண்டுவந்ததா, இல்லை மாற்றத்தைக் கொண்டுவந்ததா என்பது கதை. ஆக்‌ஷன் கதை என்றாலும் அண்ணன், தங்கைப் பாசம் பிரதான விஷயமாக இருக்கும். சென்னை, மயிலாடுதுறை, விருதுநகர் ஆகிய நகரங்களுக்குக் கதை தாவிச் செல்லும்.

சீறும் நாயகன் என்றால் அவரைச் சீறவைக்கும் வில்லன் யார்?

நாயகன் நவ்தீப்பை வில்லனாக்கி இருக்கிறோம். நவ்தீப் ஹீரோவாக நடிக்கும்போது ஒரு காட்சியில் கொஞ்சம் கூர்மையாகப் பார்த்தாலே ஒருவிதமான வில்லத்தனம் வெளிப்படும். அந்த எண்ணத்தில்தான் கதையை அவரிடம் சொன்னேன். நடிக்க ஒப்புக்கொண்டார்.

ஒரு நாயகன் வில்லனாகியிருக்கும் படத்தில் நாம் எந்த மாதிரியான நடிப்பைக் கொடுக்க வேண்டும் என்று ஜீவா தேடத் தொடங்கிவிட்டார். கதை சொன்னபோது தேவையான சந்தேகங்களைக் கேட்டுக்கொண்ட ஜீவா, நான் பரிந்துரைத்த படங்களை எல்லாம் பொறுப்புடன் பார்த்துத் தன் கதாபாத்திரம் எப்படி வெளிப்பட வேண்டும் என்று பயிற்சி எடுத்துக்கொண்டார். அந்த அளவுக்கு இயக்குநர் விரும்பும் கதாபாத்திரத்தைக் கொண்டுவர மெனக்கெடும் நடிகராக ஜீவா இருந்தார்.

இப்படத்துக்காகப் பார்வையற்ற மாற்றுத்திறனாளிப் பாடகரான திருமூர்த்தியை இசையமைப்பாளர் இமான் பாட வைத்தது ஏன்?

‘விஸ்வாசம்’ படத்தில் வரும் ‘கண்ணான கண்ணே’ பாடல் போன்று இதிலும் ஒரு பாடல் வேண்டும் என நினைத்தோம். ‘செவ்வந்தியே மதுவந்தியே’ எனத் தொடங்கும் அந்தப் பாடலைத்தான் அவரைப் பாட வைத்திருக்கிறார். அது பற்றிய செய்தியே வைரல் ஆகிவிட்டது.

நீங்கள் இயக்கிய முதல் படமான ‘வா டீல்’ இன்னும் வெளியாகவில்லையே?

உள்ளுக்குள் வடுவாக அந்த வருத்தம் உறுத்திக்கொண்டேதான் இருக்கிறது. ஒரு இயக்குநராக என் வேலையைச் சரியாகச் செய்தேன். ஒரு படத்தை இயக்குவதைக் கடந்து வியாபாரரீதியாகப் பல வேலைகள் உள்ளன. அந்தப் படம் வெளியாகவில்லையே எனத் தினமும் நினைவுக்கு வந்துவிடும். என்ன செய்வது? எல்லாமும் நம் கைகளில் இல்லையே?

ஜீவாவுக்கு முன்பு இப்படத்தின் கதையை சிம்புவுக்குச் சொன்னதாகத் தகவல் வெளியானதே?

‘றெக்க’ படம் முடிவடைந்ததும் மீண்டும் விஜய் சேதுபதியோடு ஒரு படம் இயக்க பேச்சுவார்த்தை நடந்தது. உடனே வேண்டாம் எனச் சின்ன இடைவெளி எடுத்துக்கொள்ள நினைத்தேன். அந்த இடைவெளியில் சிம்புவுக்குக் கதை சொன்னேன்.

அது இந்தக் கதைதான். ஆனால், இந்தக் கதைக்குள் ஜீவா வந்ததும் கதையின் ஓட்டமும், சில நிகழ்வுகளும் மாறிப்போயின. ஒருவேளை சிம்பு நடித்திருந்தால் அந்தச் சீற்றத்தின் பாணி வேறாக இருந்திருக்கும். இது ஜீவாவின் சீற்றம்.ரத்தின சிவாஇயக்குநரின் குரல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x