Published : 07 Aug 2015 12:20 PM
Last Updated : 07 Aug 2015 12:20 PM
காதலனைப் பிரிந்து வாடும் நாயகி சந்திரனைப் பார்த்துத் தன் பிரிவாற்றாமையைப் பாடுவது இந்தியத் திரை மரபு. இந்தச் சூழலில் அமைந்த இந்தி - தமிழ் கதாநாயகிகளின் பார்வைகளைக் காண்போம்.
‘நாம் மகிழ்வோடு இருந்தபோது உதித்த சந்திரன் வானில் எழும்பிவிட்டதே, நீ இன்னும் வரவில்லையே’ என்ற இந்திப் பாடலையும் ‘எங்களுடன் இணைந்திருந்த நிலாவே இப்பொழுது என் தலைவன் இங்கு இல்லை, எனவே நீ இன்று போய்விடு; நாளை இதே நேரம் அவன் இருக்கும்பொழுது வா’என்று கோரும் தமிழ்ப் பாடலையும் பார்ப்போம்.
இந்திப் பாடல்
படம்: பேயிங் கெஸ்ட். பாடியவர்: லதா மங்கேஷ்கர்.
பாடலாசிரியர்: மஜ்ரூர் சுல்தான் பூரி. இசை: எஸ்.டிபர்மன்.
பாடல்
சாந்த் ஃபிர் நிக்லா மகர் தும் ந ஆயே ஜலாஃபிர் மேரி தில், கரூங்கி யா மே ஹாய்யே ராத் கஹத்திஹை வோ தின் க யே தேரே யே ஜாண்த்தா ஹை தில் கே தும் நஹீன் மேரே
பொருள்
நிலா மீண்டும் வந்ததே வானில் – ஆனால்
நீ இன்னும் வரவில்லை
எரிகிறது மீண்டும் என் இதயம்
என்ன செய்வேன் அய்யோ நான்
இந்த இரவு சொல்கிறது உனது அந்த
இன்பமான நாள் எங்கோ சென்றுவிட்டது
இதயம் எனது அறிந்து கொண்டுவிட்டது
இனி நீ என்னுடையவனில்லை என
இருந்தும் நிற்கிறேன் என் இமை விரித்து
என்ன செய்வேன் ஐயோ நான்
எழுகிறதே உன் நினைவு
இந்த இரவு சொல்கிறது உன் அருமை
அந்த நாட்கள் அகன்றுவிட்டன
அறிந்துகொண்டது (என்) உள்ளம் அல்ல
நீ எனது என நிற்கிறேன் கண் இமை விரித்து
என் செய்வேன் நான் எழுகிறதே உன் நினைவு
தகிக்கும் நெஞ்சின் கரும் புகை சூழும்
சகிக்க நான் இயலேன் சடுதியில் கிளம்பி வா
எரித்துவிட்டது எனை இந்த வசந்தத்தின் நிழல்
இருந்தும் நிற்கிறேன் என் இமை விரித்து
என்ன செய்வேன் ஐயோ நான்
நிலா மீண்டும் வந்ததே வானில் – ஆனால்
நீ இன்னும் வரவில்லை.
தமிழ்ப் பாடல்
படம்: உயர்ந்த மனிதன். பாடலாசிரியர்: வாலி.
பாடியவர்: பி.சுசிலா. இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பால் போலவே வான் மீதிலே
யார் காணவே நீ காய்கிறாய் ?
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு
வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான்
கன்னியழகைப் பாடவோ அவன் கவிஞன் ஆகினான்
பெண்மையே உன் மென்மை கண்டு கலைஞன் ஆகினான்... ( நாளை )
சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்?
சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்?
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்?
மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்? ( நாளை )
சிறந்த பாடலுக்கான தேசிய விருது பெற்ற பாடல் இது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT