Published : 15 Nov 2019 01:53 PM
Last Updated : 15 Nov 2019 01:53 PM
எம்.ஜி.ஆர் – சிவாஜியின் வசமிருந்த நட்சத்திர சாம்ராஜ்ஜியம், 80-களில் கமல் – ரஜினியின் கைகளுக்கு இடம்பெயர்ந்திருந்தது. கதாபாத்திரங்களில் நடித்து வந்த இருவருமே மசாலா படங்களில் நடிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
இதனால் டூயட், சண்டைக் காட்சிகள், குத்துப் பாடல் என மசாலா நெடி தூக்கலாக வீசிக்கொண்டிருந்த காலகட்டம். ஆனால், அவை அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு தரமான கதைப் படங்களை இசை மற்றும் காட்சிமொழியின் துணையுடன் தரமுடியும் என்று புதுமை படைத்த இயக்குநர்கள் இணை ராபர்ட் – ராஜசேகர்.
கல்லூரிக் காலத்தின் வாழ்க்கையும் அதன் தாக்கமும் இவர்களது கதைகளில் உயிர்பெற்று வந்தன. கதாபாத்திரங்களின் உணர்வுபூர்மான தொடர்ச்சியைத் தங்களது அடுத்தடுத்த படங்களில் துணிந்து கையாண்டார்கள்.
இவர்களுக்கு முன்னோடியாக விளங்கிய இரட்டை இயக்குநர்கள் பலரும் இயக்கத்தில் மட்டுமே இணைந்திருந்தார்கள். ஆனால் ஒளிப்பதிவு, திரைக்கதை, இயக்கம் ஆகிய மூன்று துறைகளில் இணைந்து, புதிய திரை அனுபவத்தைச் சாத்தியமாக்கிய இவர்களிடம், திரைப்படம் ஒரு காட்சிக் கலை என்ற தொழில்நுட்பப் புரிதல் திடமாக இருந்தது. அதை அவர்களுக்கு வழங்கிய இடம், தரமணி திரைப்படக் கல்லூரி.
இணைத்துவைத்த கல்லூரி
ராபர்ட்டின் தந்தை சென்னை பெரம்பூரில் உள்ள இந்தியன் கோச் பேக்டரி என்ற ரயில் பெட்டித் தொழிற்சாலையின் ஊழியர். பெரம்பூரில் பிறந்து வளர்ந்த ராபர்ட், பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பயின்றார். ராயபுரத்தில் பிறந்து வளர்ந்த ராஜசேகரின் தந்தை சென்னைத் துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் ஊழியர். போர்ட் டிரஸ்டின் அதிகாரபூர்வ ஒளிப்படக்காரர். ராஜசேகரின் தாத்தாவும் ஒளிப்படக்காரரே.
தாத்தா, அப்பாவிடமிருந்து விளையாட்டாக ஒளிப்படக் கலையைக் கற்றுக்கொண்டிருந்த ராஜசேகர் பி.யூ.சி (PUC) முடித்திருந்தார். ஒருநாள் ராஜசேகரை அழைத்து கேமராவைக் கொடுத்த அவருடைய அப்பா, பச்சையப்பன் கல்லூரியில் நடக்கும் பட்டமளிப்பு விழாவைப் படமெடுத்துவர அனுப்பினார்.
பட்டமளிப்பு முடிந்தபின் அவரைத் கல்லூரியின் தோட்டப் பகுதிக்கு அழைத்துக் கொண்டு ஓடினார் அந்த மாணவர். ராஜசேகர் கையில் நூறு ரூபாய் ரூபாய் நோட்டைக் கொடுத்தார். மரத்துக்குக் கீழே சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டும், மரத்தில் சாய்ந்துகொண்டும், புல்தரையில் படுத்துக்கொண்டும் தன்னைப் படமெடுக்கும்படி ராஜசேகரிடம் கூறியதுடன் ‘பிரேம்’ எப்படி வர வேண்டும் என்று காம்போஸிஷன் சொல்லிக் கொடுத்த அந்த மாணவர் ராபர்ட். முணுக்கென்று கோபித்த ராஜசேகர், “எனக்கு காம்போஷசன் எல்லாம் சொல்லித் தரக் கூடாது” என்றார். “சாரிப்பா… தெரியாமச் சொல்லிட்டேன்.. லைஃப்ல ஒரு தடவை வர்ற நாள்... படம் நல்லா வரணுமே என்று சொல்லிவிட்டேன்” என்று ராஜசேகரைச் சமாதானப்படுத்தினார்.
படங்களை பிரிண்ட் செய்து எடுத்துக்கொண்டு ராபர்ட்டின் வீட்டுக்குச் சென்றபோது ராஜசேகர் அதிர்ந்தார். ராபர்ட்டின் ஐ.சி.எஃப் ஊழியர் குடியிருப்பு வீட்டில் சுவர் முழுவதும் கண்ணாடிச் சட்டம் இடப்பட்ட கறுப்பு வெள்ளைப் படங்கள். அத்தனையும் ராஜசேகருக்குப் பிடித்த கேண்டிட் தன்மையுடன் இருக்க, அவை ராபர்ட் எடுத்த போட்டோக்கள் என்பதைத் தெரிந்துகொள்கிறார். இந்தமுறை ராபர்ட்டிடன் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார் ராஜசேகர்.
ஜெயபாரதியுடன் அறிமுகம்
இப்படி ஒளிப்படம் வழியே இணைந்த இருவரும், அடுத்த வருடமே திரைப்படக் கல்லூரியில் சந்தித்துக்கொள்வோம் என்று எதிர்பார்க்கவில்லை. நடிப்புப் பயிற்சியில் சேர விரும்பிய ராஜசேகர், தனது அப்பாவின் வற்புறுத்தலால் ஒளிப்பதிவில் சேர்ந்தார். அங்கே ராபர்ட் – ராஜசேகரின் நட்பு இன்னும் உறுதியானது. ஒருமுறை ‘கணையாழி’ பத்திரிகையின் உதவி ஆசிரியரான ஜெயபாரதி, ‘தனது ‘குடிசை’ திரைக்கதையைப் படமாக எடுக்க மத்திய அரசிடம் எப்படி நிதி பெறுவது என்பதை விசாரிப்பதற்காகத் திரைப்படக் கல்லூரிக்கு வந்தபோது, அவரை, இறுதியாண்டு மாணவர்களான ராபர்ட்டும் – ராஜசேகரும் கல்லூரி முதல்வரிடம் அழைத்துக்கொண்டு போனார்கள். பின்னர் ஒளிப்பதிவு பட்டயப் படிப்பு முடிந்து வெளியே வந்தபோது ஜெயபாரதியுடன் நட்பு தொடர்ந்தது. முவரும் இணைந்து பணிபுரிவது என்று முடிவுசெய்தார்கள்.
ராபர்ட் பட்டப்படிப்பு முடித்திருந்ததால் திரைப்படக் கல்லூரியின் ஒளிப்பதிவுத் துறையில் விரிவுரையாளர் வேலை கிடைத்தது. இந்த சமயத்தில் ‘குடிசை’ திரைக்கதைக்குக் கிடைத்திருக்க வேண்டிய மத்திய அரசின் நிதி, சிங்கீதம் சீனிவாச ராவின் ‘திக்கற்ற பார்வதி’ திரைக்கதைக்குக் கிடைத்தது. இனியும் காத்திருக்க முடியாது என்று நினைத்த ஜெயபாரதி, “எனது நட்பு வட்டத்தில் இருபது பேரிடம் தலா 500 ரூபாய் வீதம் பத்தாயிரம் ரூபாய் திரட்டுகிறேன்.
நீங்கள் உங்கள் பங்குக்கு என்ன செய்வீர்கள்?” என்றார். “எனக்குத் தெரிந்த யூனிட்டில் கேமரா, படப்பிடிப்பு உபகரணங்களை நான் கடனாக எடுத்து வருகிறேன். படம் முடித்து விற்பனை ஆனதும் அவர்களுக்கு செட்டில் செய்வோம். நமது கல்லூரியில் எடிட்டிங் சொல்லித்தரும் துரையையே படத்துக்கும் எடிட்டர் ஆக்குவோம்” என்றார் ராபர்ட். வில்லிவாக்கத்தில் எனக்குத் தெரிந்த பண்ணையார் இருக்கிறார்.
அவரது பண்ணையிலேயே படத்தை எடுப்போம், அவரே நமது படக்குழுவுக்கு மூன்றுவேளை சாப்பாடும் போடுவார், விசாலமான அவரது வீட்டின் திண்ணையிலேயே எல்லோரும் படுத்துக்கொள்வோம்” என்றார் ராஜசேகர். ஜெயபாரதி இயக்கி, ராபர்ட் –ராஜசேகர் இருவரும் ஒளிப்பதிவாளர்களாகப் பணிபுரிந்த அந்த முதல் படம் வெறும் 50 ஆயிரம் ரூபாயில் எடுக்கப்பட்ட தமிழின் சிறந்த மாற்று சினிமாக்களில் ஒன்றான ‘குடிசை’.
முகவரி தந்த ‘ராகம்’
‘குடிசை’ படத்தைப் பார்த்த டி.ராஜேந்திரன் எனும் இளைஞர் ராபர்ட் – ராஜசேகரனைத் தேடிவந்தார். ‘ஒரு தலை ராகம்’ எனும் காதல் காவியம் பிறந்தது. ராபர்ட் – ராஜசேகரனுக்குத் திரையுலகில் முகவரி தந்தது. ரசிகர்களையோ சோகத்தை விரும்பி ருசிக்க வைத்தது. காதல் அனுபவமோ, தோல்வியோ இல்லாமலேயே அப்படத்தின் நாயகன் ராஜாவைப் போல் தலைமுடியும் தாடியும் வளர்த்துக்கொண்டு திரியவைத்தது.
‘ஒருதலை ராகம்’ படம் தொடங்கி ராபர்ட் ராஜசேகரின் பயணத்தின் சில பக்கங்களை விவரிக்கிறார் அவர்களின் பல வெள்ளிவிழாப் படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்தவரும் நடிகரும், இயக்குநரும் எழுத்தாளருமான அண்ணாதுரை கண்ணதாசன். “ ‘ஒருதலை ராகம்’ படத்தில், ஒளிப்பதிவாளர்கள் என்ற அளவோடு நின்று விடாமல் அதன், திரைக்கதை, காட்சியாக்கம், படத்தொகுப்பு ஆகியவற்றில் கணிசமானப் பங்கைச் செலுத்தியிருக்கிறார்கள். டி.ராஜேந்தரருக்கு பாடலுக்கான ஆர்க்கெஸ்ட்ரேஷன் அமைக்கத் தெரியாது என்ற நிலை. ‘ஒரு தலை ராக’த்துக்கு ஏ.ஏ.ராஜ் என்பவரை இசைக்கோப்புக்கு அமர்த்தினார்கள்.
‘சின்னப்பூவே மெல்லப்பேசு’ படத்தில் அறிமுகப்படுத்திய எஸ்.ஏ.ராஜ்குமாரும் மெட்டில் வல்லவர், அதனால் வித்யா சாகரை இசைக்கோப்புக்கு அமர்த்திக்கொண்டார்கள். பின்னர் வித்யா சாகரை, தான் இயக்கிய ‘பூமணம்’ படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தினார் ராஜசேகர்.
பிலிம் இன்ஸ்டிடியூட்டில் நடிப்புத் துறையைச் சேர்ந்த ராம்கி, தியாகு உள்ளிட்ட பல மாணவர்களை நடிகர்களாக அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். பிலிம் இன்ஸ்டிடியூட் எடிட்டர் துரையின் மாணவரான ஆர்.டி.அண்ணாதுரைதான் இவர்களுடைய எல்லாப் படங்களுக்கும் எடிட்டர். சுமார் 70 படங்களுக்குமே வசனம் எழுதி முத்திரை பதித்த பிரசன்ன குமார் இவர்களது அறிமுகம்தான்.
ராபர்ட்டும் – ராஜசேகரும் திரையில் புதிய திறமைகளைத் துணிந்து நடவு செய்த சிறந்த இயற்கை விவசாயிகள். அவர்களது சினிமாவில் விஷம் இருக்காது. ‘மனசுக்குள் மத்தாப்பு’ திரைக்கதை விவாதத்தில் ஏற்பட்ட சின்னக் கருத்து வேறுபாடுதான் அவர்கள் இணைந்து இயங்க முடியாமல் பிரித்தது. ஆனால், இறுதிவரை இருவரும் நல்ல நண்பர்களாகவே வாழ்ந்தார்கள். ராபர்ட், படத் தயாரிப்பு, ஒளிப்பதிவு என்று வாழ்க்கையை அமைத்துக்கொண்டார். ராஜசேகர் தாம் விரும்பிய நடிப்புத்துறையில் தன்னைக் கரைத்தார்.
‘ஒரு ஆசிரியர் என்றால் ராபர்ட் போல இருக்க வேண்டும். ஒரு திரைக்கதை ஆசிரியர் என்றால் ராஜசேகர் போல இருக்க வேண்டும்’ என்று பி.சி.ராம் சொல்வார். அது மிகச் சரியான அவதானிப்பு” என்கிறார் அண்ணாதுரை கண்ணதாசன்.
தொடர்புக்கு:
jesudoss.c@hindutamil.co.in
படங்கள் உதவி: ஞானம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT