Published : 15 Nov 2019 01:46 PM
Last Updated : 15 Nov 2019 01:46 PM
எஸ்.எஸ்.லெனின்
இயக்கம், நடிப்பு என இந்திய சினிமாவின் உச்சத்திலிருந்த குரு தத் என்ற திரைக் கலைஞன் திடுமென ஒரு நாள் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டார். அப்போது அவருக்கு வயது 39 மட்டுமே. குரு தத் கொண்டிருந்த தீரா துயரத்தின் ஆழத்தை அவரது இறுதி அஞ்சலியில் பங்கேற்ற எவராலும் உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. சக கலைஞரான ராஜ் கபூர் சடலமாகக் கிடந்த குரு தத் முகத்தை வருடி வழியனுப்பி வைக்க, ஆருயிர் நண்பரான தேவ் ஆனந்த் வெடித்துக் கதறினார்.
அனைவரின் வாழ்விலும் துயரம் ஒரு நிழலைப் போலவே தொட்டுத் தொடர்கிறது. மனத்தின் மாயப் பசிக்கும் சோக உணர்வு தனி ருசி தருகிறது. இதுவே கொண்டாட்டமான திரைப்படங்களைவிட சோகத்தைப் பிழியும் படங்களையே காலம் கடந்தும் பேசச் செய்கிறது. ஐம்பதுகளின் அப்படியான படங்களால் நினைவுகூரப்படும் குரு தத்தின் நிஜ வாழ்வையும் சோகமே அதிகம் பீடித்திருந்தது.
அந்தத் துயரங்களில் எல்லாம் மிகப் பெரியது, குரு தத் இறந்த பின்னரே அவரது படைப்புகளில் பலவும் கலை விமர்சகர்களால் பெரிதும் சிலாகிக்கப்பட்டதைச் சொல்லலாம். 40 ஆண்டுகள் கழித்தே ‘பியாசா’, ‘காகஸ் கே ஃபூல்’ போன்ற திரைப்படங்கள் சர்வதேசளவில் அங்கீகாரம் பெற்றன. புத்தாயிரத்தில் அமெரிக்க டைம் இதழ், அனைத்துக் காலத்துக்குமான மிகச் சிறந்த 100 திரைப்படங்களின் பட்டியலில் குரு தத்தின் இந்த இரண்டு திரைப்படங்களையும் சேர்த்தது. அதேபோன்று பிரபல பிரிட்டிஷ் சினிமா இதழான ‘சைட் அண்ட் சவுண்ட்’ வெளியிட்ட , ‘எல்லா காலத்துக்குமான மிகச் சிறந்த திரை இயக்குநர்கள்’ பட்டியலில் குரு தத் கௌரவிக்கப்பட்டதும் நடந்தது.
வாசல் திறந்த நட்பு
தேவ் ஆனந்த் சினிமா வாய்ப்புகளுக்காகக் காத்திருந்த காலம் அது. ஒருமுறை தனது ராசியான சட்டையை ஸ்டுடியோ அருகில் இஸ்திரி செய்யக் கொடுத்திருந்தார். ஆனால், அந்தச் சட்டை வேறொருவரின் துணிகளுடன் சென்றுவிட்டதை அறிந்து கொதித்தார். எதையோ இழந்துவிட்ட ஆற்றாமையுடன் ஸ்டுடியோவுக்குள் நுழைந்தவருக்கு அங்கு நடந்துகொண்டிருந்த பாடல் காட்சி படப்பிடிப்பில் தனது சட்டையை அணிந்து தென்பட்ட ஓர் இளைஞனைக் கண்டதும் ஓடிப்போய் சட்டையைப் பிடித்து உலுக்கி சண்டை போட்டார். காதல் மட்டுமல்ல; சில வேளையில் ஆழ்ந்த நட்பும்கூட மோதலில்தான் முகிழ்கிறது.
அதன் பின்னர் அவர்கள் இருவரும் சட்டைகளை உரிமையுடன் பரிமாறிக்கொள்ளும் இணைபிரியா நண்பர்களாகிப் போனார்கள். கனவுகளுடன் திரை நகரங்களில் திரியும் இளைஞர்கள் அறைகளைப் பகிர்ந்துகொள்வதுபோலவே, தேவ் ஆனந்த் – குரு தத் இடையேயும் எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்றும் உருவானது. திரைத்துறையில் முதலில் நுழைபவர், அடுத்தவருக்கான வாசலாக வேண்டும் என்பதே அந்த அன்பு ஒப்பந்தம். அந்த வகையில் தேவ் ஆனந்த் குடும்ப நிறுவனம் தயாரித்த ‘பாஸி’(1951) படத்தின் இயக்குநராக அறிமுகமானார் குரு தத்.
வாழ்வின் நிழல்!
பெங்களூரு அருகே பிறந்த வசந்த்குமார் சிவசங்கர் படுகோன், நடிப்பு, நடனம், இசை ஆகியவற்றைக் கற்பதற்காக வங்காளத்தில் தங்கியபோது ‘குரு தத்’ ஆனார். பூனாவில் இயங்கிய பிரபாத் சினிமா கம்பெனியில் முழு நேர நடன உதவியாளராகப் பணியில் சேர்ந்தாலும், அவரது கனவு திரைப்படம் இயக்குவதாகவே இருந்தது. வெள்ளி விழா கண்ட ‘பாஸி’ வெளியானபோது குரு தத்தின் வயது 26.
தொடர்ந்து தேவ் ஆனந்தை வைத்தே ‘ஜால்’ படத்தை இயக்கிய குரு தத், தேவ் ஆனந்தின் சகோதரருடனான முரண்பாட்டால் சொந்தமாகத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். நட்பின் கைமாறாக தேவ் ஆனந்தை நாயகனாக்கி ‘சி.ஐ.டி.,’ திரைப்படத்தைத் தயாரித்தார். ‘பாஸ்’ திரைப்படத்துக்கு முன்னணி நடிகர்கள் முன்வராதபோது, தானே கதாநாயகனாக அரிதாரம் பூசிக்கொண்டார்.
முப்பது வயதுக்குள் தயாரிப்பு, இயக்கம், நடிப்பு என உச்சம் தொட்ட குரு தத், தனக்கென பிரத்யேகப் படைப்பு உத்தியையும் உருவாக்கிக் கொண்டார். காதலோ, திரில்லரோ படம் நெடுக இளமை துள்ளும். இசையும் பாடலும் படத்தைப் பேச வைக்கும். “அந்தச் சூட்டிகையான இளைஞரிடமிருந்து சோர்வகற்றும் திரைப்படங்கள் மட்டுமே அப்போது கிடைத்தன” என்பார் தேவ் ஆனந்த். ஆனால், புயலெனப் புகுந்த இரு பெண்களால் குரு தத்தின் வாழ்க்கையைச் சோகம் வளைத்தது. அவரது படைப்புகளிலும் அந்தச் சோக ரசம் கலந்த விசித்திரத்தால், காலத்தால் அழியாத காவிய சினிமாக்கள் உருவாயின.
வங்கத்துக் குயிலும் தமிழகத் தாரகையும்
வங்காளத்தில் பிறந்து இளம் வயதிலேயே வங்காள, இந்தித் திரைப்படங்களில், நடிப்புடன் பின்னணிப் பாடகியாகவும் புகழ் பெற்றவர் கீதாராய் சவுத்ரி. லதா மங்கேஷ்கர் தனது இசைப் பயணத்தில் போட்டியாகக் கருதிய ஒரே பாடகி கீதாதான். குரு தத்தின் முதல் படமான ‘பாஸி’க்காகப் பாட வந்த கீதா ராய், இரண்டாம் வருடத்தில் கீதா தத் ஆகியிருந்தார். ஆனால், அவர்களின் நான்காண்டு மண வாழ்க்கையில் மூன்று குழந்தைகளும் கணக்கற்ற பிணக்குகளும் பிறந்தன.
செங்கல்பட்டில் பிறந்து சில தெலுங்கு, தமிழ் சினிமாக்களில் தனி நடனத் தாரகையாக வளர்ந்து வந்த வஹீதா ரஹ்மானை, முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் அறிமுகம் செய்தார் குரு தத். ‘பியாசா’வில் தொடங்கி குரு தத்தின் முத்திரைத் திரைப்படங்களில் எல்லாம் வஹீதா இருந்தார். வஹீதாவை மனத்தில் வைத்து காதல் கதையையும் சம்பவங்களையும் பின்னும்போது, தனது கற்பனைக்கு அதீத சிறகுகள் முளைப்பதை குரு தத் அறிந்தார். அவற்றை மனைவி கீதா தத்தும் அறிந்தபோது விவகாரமானது. மனைவியைச் சமாதானப்படுத்த ஒரு பாடகியை நாயகியாகக் கொண்ட திரைக்கதையைச் செதுக்கி, ‘கௌரி’ என்ற திரைப்படத்தை குரு தத் தொடங்கினார்.
இந்தியாவின் முதல் சினிமாஸ்கோப் முயற்சியான ‘கௌரி’, தத் தம்பதியின் தீராத பிணக்கால் பாதியில் நின்றுபோனது. வஹீதாவும் மணமான குரு தத்தை மறுதலித்தார். வாழ்க்கையில் வந்த இரு பெண்கள் மீதும் ஒரே நேரத்தில் தீரா நேசம் கொண்ட வித்தியாசமான மனிதராக குரு தத் தடுமாறினார். அந்தத் தடுமாற்றத்தில் தீவிர குடியின் பிடியில் விழுந்தார். அவரது கதாநாயகர்களின் கதையில் இரண்டு பெண்களும் ஏராளமான சோகமும் அதன் பிறகு சேர்ந்தன.
புரட்டிப்போட்ட ‘பியாசா’அப்படியொரு சோகக் கவிஞனின் கதையாக ‘பியாசா’(1957) உருவானது. உதவியாளர் சொன்ன உண்மைச் சம்பவங்களில், குரு தத், தனது சொந்த சோகத்தை ஏற்றி வைத்து உருகியதில் ‘பியாசா’ காவிய படைப்பாகிப் போனது. பாடல், இசை, வசனம் எனக் காட்சிகளில் இருளைப் புதுமையாய் பதிவுசெய்தது... என அமரத்துவம் வாய்ந்த ‘பியாஸா’, இன்றுவரை உலக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
முன்னதாக ‘ஆர் பார்’, ‘மிஸ்டர் & மிஸஸ்’55’ உள்ளிட்ட குரு தத்தின் படங்களும் வெற்றிகரமாகவே ஓடின. ஒரு சோக இயக்குநரின் வாழ்க்கையைத் தழுவிய ‘ககாஸ் கி ஃபூல்’ திரைப்படம் அப்போதைக்குத் தோல்வியடைந்தாலும் குரு தத் காலத்துக்குப் பின்னர் சர்வதேசத் திரைவிழா மேடைகளை அலங்கரித்தது.
எரிந்து வீழ்ந்த நட்சத்திரங்கள்
சொந்த சோகங்களின் பிடியிலிருந்தபோது குரு தத், பல முறை தற்கொலைக்கு முயன்று மீட்கப்பட்டார். தனது திரைப்படங்களின் காட்சிகளைத் திருப்தியடையும் வரை மீண்டும் மீண்டும் படமாக்குவதில் ஈடுபாடு கொண்ட குரு தத், மரணத்திலும் பல முயற்சிகளுக்குப் பின்னரே திருப்தியடைந்தார்.
கணவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்த கீதாவும், தனது இடத்தை லதா-ஆஷா சகோதரிகளிடம் பறிகொடுத்ததுடன், சாதாரண மேடைப் பாடகியாகச் சறுக்கினார். தனது 41 வயதில் கணவரின் பாதையிலே குடியில் வீழ்ந்து உயிரிழந்தார்.
‘சாரதா’ தமிழ்த் திரைப்படத்தின் இந்தி வடிவான ‘சுஹானா’வில் நடிக்க சென்னை வந்து சென்ற குரு தத், சிலப்பதிகாரக் கதையைக் கேட்டுக் கிறங்கிப்போனார். ‘கண்ணகி’யாக கீதா தத், மாதவியாக வஹீதா ரஹ்மான், கோவலனாக குரு தத்’ என சிலப்பதிகாரத்துக்கும் தனது வாழ்க்கைக்கும் இடையில் ஒரு கதையை உருவாக்கினார்.
ஆனால், இலக்கியத்தின் மீதான தமிழர்களின் ஈடுபாட்டையும் நவீனத்தின் பெயரில் அதனைச் சிதைப்பது இங்குக் கொதிப்பை உண்டு பண்ணும் என்பதையும் நண்பர்கள் வாயிலாக அறிந்து அம்முயற்சியைக் கைவிட்டார்.
தொடர்புக்கு:
leninsuman4k@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT