Published : 15 Nov 2019 02:17 PM
Last Updated : 15 Nov 2019 02:17 PM
கொரிய சினிமா என்றாலே அது தென்கொரியக் குடியரசு தேசத்திலிருந்து வரும் படங்களைக் குறிப்பதாக இருக்கிறது. வடகொரியாவின் இறுக்கமான வாழ்க்கையையும் திறம்படப் படமாக்கிக் காட்டுகிற கலைத்திறன், ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்ட தென்கொரிய திரைப்படைப்பாளிகளிடம் அதிகமிருக்கிறது. இருப்பினும், தென்கொரிய வெகுஜன சினிமாவில் கொலை, கொள்ளை, கடத்தல் சார்ந்த நிழலுலகம், போதை மருந்து மாபியா, பாலியல் விளைவுக்கு முக்கியத்துவம், விதவிதமான பேய், அமானுஷ்யப் படங்கள் மிகுந்து ரசனையானது ஒருபக்கம் மழுங்கி, வீங்கிக் கிடக்கிறது. இதைச் சமப்படுத்தும் விதமாகக் காலந்தோறும் சிறந்த படைப்பாளிகளைப் பெற்றுக்கொண்டே வந்திருக்கிறது தனது நூற்றாண்டைக் கொண்டாடும் தென்கொரிய சினிமா.
இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவை ஒருங்கிணைத்து வரும் இண்டோ சினி அப்ரிசியேசன் ஃபவுண்டேஷன் திரைப்படச் சங்கத்துடன் இணைந்து, இந்தியாவுக்கான கொரியக் குடியரசின் துணைத் தூதரகம் கொரியத் திரைப்படவிழாவை சென்னையில் உள்ள ரஷ்யக் கலாச்சார மையத் திரையரங்கில் 3 நாட்களுக்கு நடத்துகிறது. வரும் நவம்பர் 21 அன்று தொடங்கி 23-ம் தேதிவரை நடைபெறும் இப்படவிழாவை இந்தியாவுக்கான கொரிய துணைத் தூதர் ஹியூங் டே கிம் தொடங்கிவைக்கிறார்.
கொரிய தேசம் ஜப்பானின் காலனி ஆதிக்கத்தில் கட்டுண்டு கிடந்த காலம் அது. ஜப்பானின் எதேச்சாதிகாரத்தால் நொந்துபோன தேசபக்தர்களில் ஒருவர் பார்க் யோல். ‘பிளாக் வேவ்’ என்ற தீவிரவாத இயக்கத்தில் இணைந்துகொண்ட அவர், அன்றைய ஜப்பானிய இளவரசர் ஹிரோஹிட்டோவைக் கொலை செய்ய முயன்றார். அந்த வரலாற்றுச் சம்பவத்துடன் கற்பனையும் கலந்து 2017-ல் அவல நகைச்சுவைத் திரைப்படமாக வெளியானது ‘அனார்கிஸ்ட் ப்ரம் காலனி’ (Anarchist from Colony). இதைப் படவிழாவின் தொடக்கத் திரைப்படமாகத் திரையிடுகிறார்கள்.
இந்தப் படத்தைக் தொடர்ந்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளிவந்து சர்வதேசப் படவிழாக்களில் கலக்கிய ‘தி ஃபேட்டல் என்கவுண்டர்’ (The Fatal Encounter), ‘வொண்டர்ஃபுல் நைட்மேர்’ (Wonderful Nightmare), ‘எ கொயட் ட்ரீம்’ (A Quiet Dream), ‘அண்டச்சபிள் லாமென்’ (Untouchable Lawmen) ஆகிய படங்கள் அடுத்து வரும் நாட்களில் திரையிடப்பட இருக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT