Published : 08 Nov 2019 11:42 AM
Last Updated : 08 Nov 2019 11:42 AM
ஆர்.ஜெய்குமார்
சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது ‘மீக்கு மாத்ரமே செப்தா’ (உனக்கு மட்டும் சொல்றேன்). ‘உன்கிட்ட ஒண்ணு சொல்லணும் மச்சான்’ என்னும் தமிழ்க் குறும்படம் மூலம் அறியப்பட்ட ஷமீர் சுல்தான், இந்த முழுநீளப் படத்தின் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியாகியுள்ளதால் படத்துக்குக் கூடுதல் கவனம் கிடைத்துள்ளது.
படத்தின் துணைத் தலைப்பான ‘என் நண்பனின் ரகசியம்’ தான் இதன் ஒரு வரிக் கதை. ஒரு சுமாரான சேனலில் டி.ஆர்.பி. ரேட்டிங்குகளுக்கு இடையில் தொகுப்பாளராகப் போராடிவருகிறான் படத்தின் நாயகன். மிகுந்த சிரமத்துக்கு இடையில் ஒரு டாக்டர் பெண்ணைக் காதல் வயப்படுத்தி விடுகிறான். காதலை ஏற்றுக்கொள்ளும் முன்பு, சில உண்மைகளைக் கேட்கிறாள். ஆனால், நாயகன் பொய்களாகச் சொல்கிறான்.
படத்தின் இரண்டாம் பாதியில் நண்பனின் அக்கா, நாயகனிடம், ‘பொய் சொல்லாதே’ என்கிறாள். இன்னொரு நண்பனோ ‘உண்மையைச் சொல்லாதே’ என்று சொல்லிவிட்டு, இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்ற ரீதியில் பேசுகிறான். இந்தப் படமே உண்மைக்கும் பொய்க்கும் இடையில்தான் அலைக்கழிகிறது. இந்த வலுவான திரைக்கதையின் மீதுள்ள நம்பிக்கையில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை, தெலுங்கின் புதிய அலைவரிசைப் படங்களுள் ஒன்று எனலாம்.
ஒரு உணவு விடுதியில் நடக்கும் காதல் பரீட்சையில், தன் நண்பன் விளையாட்டாக எடுத்த ஒரு வீடியோவால் நாயகியிடம் மாட்டிக்கொள்கிறான் நாயகன். மது அருந்தியபடி சிகரெட் பிடிக்கும் வீடியோ அது. பின்னால் நடக்கப்போகும் பெரிய ஆபத்துக்கான முன்னோட்டமாக இந்தக் காட்சி வந்துபோகிறது. இது நல்ல படத்துக்கான லட்சணங்களுள் ஒன்று.
திருமணத்துக்கு ஒரு நாள் முன்பு, அந்தப் பலான வீடியோ இணையத்தில் பதிவேற்றப்படுகிறது. அதைத் தேடி அலையும் நாயகனையும் நண்பனையும் போல் படம் பரபரப்பாக ஓடுகிறது. இதற்கிடையில் அந்த வீடியோவுக்கு எத்தனை பார்வைகள் கிட்டியிருக்கின்றன என்பதைக் காட்சிக்கு ஊடே கிராபிக்ஸ் மூலம் சொல்லியிருக்கிறார்கள். பார்வைகள் கூடக் கூடப் பதற்றமும் அதிகரிக்கிறது.
இந்த ஓட்டத்தைச் சிறு நகைச்சுவையுடன் நகர்த்தியிருக்கிறார்கள். நகைச்சுவை வசனத்துக்கு ரொம்பவும் மெனக்கெடல் இல்லாமல், யதார்த்தமான பேச்சு, பாவனைகளைக் கொண்டே அதைச் சாதித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் நாயகனான தருண் பாஸ்கர்தான் இதன் வசன கர்த்தா. விஜய் தேவரகொண்டாவுக்கு நாயக அந்தஸ்து வழங்கிய ‘பெல்லி சூப்புலு’ படத்தின் இயக்குநரும் இவர்தான்.
பதற்றமும் குற்றவுணர்வும் கலந்த இந்தக் கதாபாத்திரத்தை தருண் சிறப்பாகக் கையாண்டுள்ளார். அவரது நண்பனாக நடித்துள்ள அபினவ் கோமத்தும் அவருக்கு இணையாகப் படத்தில் குறும்புத் தனத்துடன் வருகிறார். தமிழ் சீரியல் நாயகியான ‘தெய்வமகள்’ புகழ் வாணி போஜன் இதில் நாயகியாக நடித்திருக்கிறார். இன்னும் சில தமிழ் முகங்களும் படத்தில் உண்டு.
இடைவேளைக்கு முன்பே ஒரு முடிவுக்கான முனைப்புடன் படம் விரைந்து முழுமை அடைகிறது. ஆனால், அதற்குப் பிறகு படம் இரு வேறு சுவாரசியக் குழப்பங்களைப் புத்திசாலித்தனமாக உருவாக்கிக்கொள்கிறது. இந்தச் சுவாரசியக் குழப்பங்கள் படத்தை இரண்டாம் பாதிவரை இழுத்துச் செல்கின்றன.
செய்யாறு ரவி இயக்கத்தில் கார்த்திக் - மீனா நடிப்பில் 1998-ல் வெளிவந்த ‘ஹரிச்சந்திரா’ படத்தை நினைவூட்டும் காட்சிகள் இந்தப் படத்தில் உண்டு. கதையின் மையச் சரடும் இதேதான். ஒரு உண்மைக்கும் பொய்க்குமான காதலாக அந்தப் படம் மிகை யதார்த்தமாக இருக்கும். இந்தப் படத்தை ஷமீர், யதார்த்தத்துக்கு அருகில் வைத்திருக்கிறார். திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு உண்டாகும் குழப்பத்தைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதத்தில், இந்தப் படம், பாலாஜி தரணிதரனின் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை ஞாபகப்படுத்துகிறது.
விவரிப்பாகச் சொல்லப்படும் இந்தக் கதை, இன்றைய காலகட்டத்தின் ரகசியம் அற்ற தன்மையைக் காட்சிகள் வழி சொல்கிறது. அதேபோல் நாம் அறிந்துகொள்ள ஆவலாகப் பரபரக்கும் அடுத்தவரின் ரகசியத்தின் உண்மைத் தன்மையையும் படம் கேள்விக்கு உட்படுத்துகிறது. பொய், உண்மையைப் போல் பளபளக்கும் இந்தக் காலகட்டத்தில், உண்மைக்கு உள்ளே ஒளிந்துள்ள பொய்யை ஷமீர் சுல்தானின் இந்தப் படத்தின் முடிவு திரைவிலக்கிக் காட்டுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT