Published : 01 Nov 2019 01:22 PM
Last Updated : 01 Nov 2019 01:22 PM

கூட்டாஞ்சோறு: காத்திருக்கும் இருவர்

திருமணத்துக்குப் பின் சமந்தா நடித்த தெலுங்குப் படங்கள் எதுவும் சரியாகப் போகவில்லை. அதேபோல சர்வானந்துக்கும் திருப்புமுனை அமையவில்லை. ‘96’ படத்தின் தெலுங்கு மறு ஆக்கத்தில் நடித்திருக்கும் இந்த இருவரும் அந்தப் படத்தின் முடிவுக்காகக் காத்திருக்கிறார்களாம். ‘96’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அந்தப் படத்தின் தெலுங்கு உரிமையைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வாங்கினார்.

‘96’ படத்தின் இயக்குநர் பிரேம்குமாரே படத்தை இயக்க, விஜய் சேதுபதி நடித்த ராம் கதாபாத்திரத்தில் சர்வானந்தும் த்ரிஷா நடித்த ஜானு கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்து முடித்துவிட்டார்கள். படத்தின் முதல் பிரதியும் தயாராகிவிட்ட நிலையில் படத்தை வெளியிடாமல் அமைதி காத்துவருகிறார் தில் ராஜு. அவரது தயாரிப்பில் மகேஷ் பாபு நடித்து வரும் படம் ஆந்திரப் பொங்கல் பண்டிகையான சங்கராந்திக்கு வெளியாகவுள்ளது. அந்தப் படத்தின் வெளியீட்டுக்குப்பின் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14 தேதி காதலர் தினத்தன்று தெலுங்குப் பதிப்பை வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம்.

திரௌபதியாக தீபிகா!

திருமணத்துக்குப் பிறகு தனக்கான முதல் கதையைத் தேர்வு செய்ததில் ஆச்சரியப்படுத்தினார் தீபிகா படுகோன். ஆசிட் தாக்குதலால் முடங்கிப் பின் மீண்டெழுந்து சாதித்த லட்சுமி அகர்வாலின் உண்மைக் கதையைத் தழுவி உருவாகிவரும் அந்தப் படம் ‘சப்பாக்’. அதில் முதன்மைக் கதாபாத்திரம் ஏற்றதுடன் அதை இணைந்து தயாரித்தும் வருகிறார். இதற்கிடையில் மகாபாரதக் கதையை திரௌபதியின் பார்வையில் பெண்ணியக் கண்ணோட்டத்துடன் அணுகும் புதிய இந்திப் படத்தில் திரௌபதி கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க ஒப்புக்கொண்டிருகிறார் தீபிகா.

முதல் பாகம் 2021 தீபாவளிக்கும் அடுத்த சில பாகங்கள் அடுத்து வரும் ஆண்டுகளிலும் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். திரௌபதி கதாபாத்திரம் ஏற்றிருப்பது குறித்து கூறியிருக்கும் தீபிகா, “என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய கதாபாத்திரம் இது என்று நம்புகிறேன். ஓர் இதிகாசமாக நமது கலாச்சாரத்தில் மகாபாரதம் ஏற்படுத்திய தாக்கத்துக்காக அறியப்பட்டாலும், நிறைய வாழ்க்கைப் பாடங்களை அதிலிருந்து கற்றுக்கொள்ளலாம். முக்கியமாக அதன் ஆண் கதாபாத்திரங்களிலிருந்து. இதைப் புதிய பார்வையில் சொல்லும்போது அது இன்னும் சிறப்புடையதாக ஆகும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

மீண்டும் வரலாறு

வரலாற்றுக் கதாபாத்திரங்களில் நடிப்பதென்றால் மம்மூட்டிக்கு ஏகக் கொண்டாட்டம். வணிகப் படங்களில் வெளிப்படுத்தும் தனது ஸ்டீரியோ டைப் நடிப்பை அப்படியே தள்ளி வைத்துவிட்டு இவற்றில் கதாபாத்திரமாக மாறிவிடும் மாயத்தைச் செய்வார். மம்மூட்டி நடிப்பது வணிகப்படம், ஆஃப் பீட் படம் என எதுவாக இருந்தாலும் அதைக் கொண்டாடிவிடுவதில் அவரது ரசிகர்களும் சளைத்தவர்கள் அல்ல. தற்போது மம்மூட்டி நடிப்பில் உருவாகி வரும் ‘மாமாங்கம்’ என்ற பிரம்மாண்டப் படத்துக்காக காத்திருக்கிறார்கள்.

ஐம்பது கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விரைவில் திரைக்கு வர இருக்கிறது. பிரபல மலையாள இயக்குநர் எம்.பத்மகுமார் இயக்கும் இந்தப் படம், 18-ம் நூற்றாண்டில் பாரதப்புழையில் கொண்டாடப்பட்ட ‘மாமாங்கம்’ என்னும் திருவிழாவைப் பின்னணியாகக் கொண்டது. இதில் முன்னாள் கூடைப்பந்து வீராங்கனை ப்ராச்சி தெஹ்லான் கதாநாயகியாக நடிக்கிறார். கனிகா, உண்ணி முகுந்தன், அனு சித்தாரா, இனியா உள்ளிட்ட பலரும் படத்தில் இருக்கிறார்கள். மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படத்தை வெளியிடுகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x