Published : 01 Nov 2019 12:40 PM
Last Updated : 01 Nov 2019 12:40 PM

தரமணி 07: தலைமுறைகள் மீது ஒளிரும் சாதனை!

ஆர்.சி.ஜெயந்தன்

இந்தி மொழியின் நவீன இலக்கியப் பரப்பில் மிக முக்கியமான கவிஞர் கேதார்நாத் அகர்வால். எழுத்தாளுமையில் அவருக்குச் சற்றும் குறைந்திடாத மற்றொரு முக்கிய இந்திக் கவிஞர் ஹரிவன்ச ராய் பச்சன். இவர்கள் இருவருமே ஆத்ம நண்பர்கள். இவர்களை இணைத்தது கவிதை மட்டுமல்ல; ஊரும்தான். உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத்தில் பிறந்து, வளர்ந்த இருவரில் கவிஞர் ஹரிவன்ச ராய் பச்சனின் மகன் அமிதாப் பச்சன், பின்னாளில் இந்தி சினிமாவில் நடிகராகி சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். கேதார்நாத்தின் மகன் அசோக்குமாரோ தென்னிந்திய சினிமாவில் ஸ்டார் ஒளிப்பதிவாளர் ஆனார். ஒளிப்பதிவை, படப்பதிவுத் தொழில்நுட்பம் என்ற இடத்திலிருந்து கலை என்ற தளத்துக்கு உயர்த்திக் காட்டி, அது குறித்துப் பேசவும் அதற்கு ரசிகர் வட்டத்தை உருவாக்கவும் செய்த ஒளிப்பதிவுக் கலைஞனாக ஒளிர்ந்தார்.

அப்பா கேதார்நாத் கவிஞர் மட்டுமல்ல; புகழ்பெற்ற வழக்கறிஞரும்கூட. தன்னைப் போல் கவிஞன் ஆகாவிட்டாலும் அசோக்குமாரை ஒரு வழக்கறிஞராக உருவாக்கிட விரும்பினார். ஆனால், அம்மா பிறந்தநாள் பரிசாக வாங்கிக் கொடுத்த ‘கிளிக் 3’ கேமரா, சிறுவன் அசோக்குமாரின் வாழ்க்கையைத் திசைமாற்றியது. மெல்ல மெல்ல அடி வைத்துப்போய், தும்பைச் செடிகளின் வெள்ளைப் பூக்களில் அமர்ந்திருந்த மஞ்சள் நிற வண்ணத்துப் பூச்சிகளைப் படம்பிடித்துக்கொண்டிருந்தான். பள்ளிப் படிப்பை முடித்ததும் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் ஒளிப்படக் கலையில் பட்டயப் படிப்பை முடித்தார் அசோக்குமார். பின்னர் புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவைப் பயில்வதற்காக விண்ணப்பித்தார். கவிஞர் கேதார்நாத்தின் மகன் என்ற அடிப்படையில் உடனே அட்மிஷன் கிடைத்தது.

ஆனால், எக்காரணம் கொண்டும் தன் மகன் மும்பைக்கோ, அருகிலிருக்கும் புனேவுக்கோ செல்வதை விரும்பவில்லை. ஆனால் சென்னைக்குச் செல்ல அனுமதித்தார். ‘இந்த அளவுக்காவது தந்தை இறங்கி வந்தாரே’ என்று துள்ளிய அந்த இளைஞன், தனது 22-வது வயதில் சென்னை வந்து 1963-ல் தரமணியில் இருந்த அரசு திரைப்படத் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆறு ஒளிப்பதிவு மாணவர்களில் ஒருவராகச் சேர்ந்தார். அந்த ஆறு பேரில் ஒருவர், பின்னாளில் அசோக்குமார் ஒரு இயக்குநராகப் பரிமாணம் அடைந்தபோது அவருடன் இணைந்து பயணிக்கத் தொடங்கிய கே.ஆர்.பிரபாகர். சென்னையில் வசித்துவரும் அவரைச் சந்தித்தபோது நினைவுகளின் மடியில் ஒரு குழந்தையைப் போல உரையாடினார்.

ஆசிரியரின் அழைப்பு

“அசோக்குமாருக்கு இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்த புதிதில் சுத்தமாகத் தமிழோ தெலுங்கோ தெரியாது. தாய்மொழியான இந்தி மட்டும்தான். ஆனால், முதல் வருடம் முடிவதற்குள்ளாகவே சரளமாகத் தமிழில் பேசத் தொடங்கிவிட்டார். எல்லா பிரிவு மாணவர்களிடமும் நட்போடு பழகுவார். இரண்டாம் ஆண்டில் ‘பிலிம் அப்ரிசியேஷன் அண்ட் இண்டியன் கல்சர்’ என்ற பாடப்பிரிவு இருந்தது. அதை எங்களுக்குப் பயிற்றுவித்த ஆசிரியர் ஜான் சங்கரமங்கலம். அவர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படித்து, அங்கேயே ஆசிரியராகப் பணிபுரிந்தவர். பின்னர் புனே திரைப்படக் கல்லூரியில் படித்து அங்கே ஆசிரியராகவும் அதற்குத் தலைவராகவும் ஆனார். அடூர் கோபாலகிருஷ்ணனின் சகா. அவர் தரமணியில் பணியாற்றிய ஆண்டுகள் மறக்க முடியாதவை.

பிலிம் அப்ரிசியேஷன் வகுப்பில் அவரிடம் அசோக்குமார் ஒளிப்பதிவு பற்றிக் கேட்பதைவிடத் திரைக்கதை பற்றியும் கதாபாத்திரங்கள் பற்றியும் அதிகமாகக் கேட்டுக்கொண்டிருப்பார். இந்தியும் ஆங்கிலமும் சரளமாகப் பேசத் தெரிந்த அசோக்குமாருடன், ஆசிரியர் என்பதைத் தாண்டி ஜான் சங்கரமங்களத்துக்கு தோழமை உருவானது. திரைப்பட இயக்கம் பிரிவில் பயின்ற கேரள மாணவர் பாபு நந்தன் கோடின் டிப்ளமா படத்துக்கு அசோக்குமார்தான் ஒளிப்பதிவாளர்.

அதில் அசோக்குமாரின் திறமையைக் கண்ட ஜான் சங்கரமங்களம், ‘நீ முற்றிய தேங்காய் நெற்று. மலையாள சினிமாவுக்குத் தேவைப்படுவாய்.. எனது படத்துக்கு நீ ஒளிப்பதிவு செய்’ என்று கூறி அழைத்துப்போனார். சினிமா என்கிற கலைக்கு ரசனைதான் தேவையே தவிர, மொழி அல்ல. அப்படித்தான் உத்தரப்பிரதேசத்தின் மைந்தனாகிய அசோக்குமாரை மலையாள சினிமா வரித்துக்கொண்டது. ஜான் சங்கரமங்களம் இயக்க, அசோக்குமார் ஒளிப்பதிவு செய்த முதல் மலையாளப் படம் ‘ஜன்மபூமி’. முதல் படமே குடியரசுத் தலைவர் விருதைப் பெற்றது. சிறந்த ஒளிப்பதிவுக்கான கேரள மாநில அரசின் விருதையும் பெற்றது.

இயக்குநர் அசோக்குமார்

அதன்பிறகு மலையாள யதார்த்த சினிமாவுக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்த பல மலையாள இயக்குநர்களுடன் அவரது பயணம் தொடங்கியது.” என்று நிறுத்திவிட்டு எழுந்துபோய் ஓர் ஒளிப்பட ஆல்பத்தைத் தேடி எடுத்துவந்து காட்டினார். அத்தனையும் ஒர்க்கிங் ஸ்டில்ஸ். “இதோ இந்தப் படம் இருக்கே… இது ‘அபிநந்தனா’ தெலுங்குப் பட ஷூட்டிங். அசோக்குமார் கதை, திரைக்கதை எழுதி, ஒளிப்பதிவு செய்து இயக்கின பெரிய பிளாக் பஸ்டர். சில்வர் ஜூப்ளி கொண்டாடின படம்.

நம்ம கார்த்திக், ஷோபனா, சரத்பாபு நடித்த படம். சென்னை தூர்தர்ஷன்ல சீஃப் கேமராமேனாக வேலையில் இருந்தேன். ஒரு கட்டத்தில உள்ளரங்க ஒளிப்பதிவை விட்டுவிட்டு வெளியே வரணும் என்று தோன்றினப்போ அசோக்குமார் கிட்ட சொன்னேன். ‘வேலைய விட்டுட்டு வந்துடு பிரபா’ என்று அழைத்துக்கொண்டார். ‘அபிநந்தனா’ படத்தில் தொடங்கி, அதன்பிறகு அவருடைய நிழல்போல அவருடைய அசோசியேட்டாக ஆனேன். அதன்பிறகுதான் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைத்தது.

அந்த நாட்கள் திரும்ப வராது. குடும்பத்தின் மீது அவ்வளவு பிடிப்பு கொண்டவர். நண்பர்களைக் கொண்டாடுகிறவர்.
பொதுவாக, ஒளிப்பதிவாளர்கள் இயக்குநர் ஆகும்போது ஒளிப்பதிவுக்கு மட்டும்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்ற புகார் குரல் கேட்கும். அந்தக் குரலை முதன்முதலில் கேட்காமல் செய்தவர் அசோக்குமார்தான். மலையாளப் படவுலகத்துக்கும் அவருக்குமான உறவு அவரை ஒரு சிறந்த இயக்குநராகவும் ஆக்கியது.

யாரும் தொடத் தயங்கிய கதைகளை அவர் திரைக்காக எழுதி, கலாபூர்வமான படங்களைத் தந்தார். ஒருமுறை எழுத்தாளர் ஜெயகாந்தனைச் சந்தித்தபோது, ‘இருபது ஆண்டுகள் கழித்து வரவேண்டிய படங்களை இப்போதே எடுத்துவிட்டீர்கள் என்று நண்பர்கள் சொன்னார்கள். காம்ரேடுகளின் கனெக்‌ஷன் உள்ளவர் அல்லவா; அவர்கள் சொன்னதை நான் நம்புகிறேன்’ என்றார். ஆனால் அசோக்குமார் எடுத்த படங்கள் விருதுகளைப் பெற்றபோதும் அவற்றைக் கொச்சைப்படுத்திப் பார்த்தவர்கள்தான் இங்கே அதிகம்” என்று வருந்தினார்.

அப்பாதான் குரு

மூத்த ஒளிப்பதிவாளர் பிரபாகர் விட்ட இடத்திலிருந்து தொடங்கினார் ஆரென் அசோக்குமார். இன்று இந்தி, வங்களா, நேபாள சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்துவரும் அசோக்குமாரின் இளைய மகன்களில் ஒருவர். “அப்பாவுக்கும் மலையாள சினிமாவுக்குமான கனெக்‌ஷன்தான் அவரை மிகப் பெரிய ஒளிப்பதிவுக் கலைஞராக மாற்றியது. ‘என்னோட லைட்டிங் சென்ஸ் மலையாளப் பட உலகம் எனக்குக் கற்றுக்கொடுத்தது’ என்று அப்பாவே என்கிட்ட பலமுறை பகிர்ந்திருக்கிறார்.

நான் பிறக்கிறதுக்கு முன்னாடியே அப்பா முப்பது மலையாளப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து முடித்துவிட்டார். அப்பாவுக்கு ஓவியங்கள் மீதான ரசனையை உருவாக்கியவர் மூத்த மலையாள இயக்குநரான பி.நாராயண்குட்டி மேனன். அவர் சிறந்த இயக்குநர் மட்டுமில்ல; சிறந்த ஆர்ட் டைரக்டர், போஸ்டர் டிசைனர், ஓவியர். அடூர் சாரின் மாமா. தன்னோட வருமானத்தில் பத்து சதவீதத்தை ஓவியம், போட்டோகிராபி, சினிமட்டோகிராபி, சிறந்த நாவல்கள் வாங்க அப்பா செலவிடுவார். ஓவியப் புத்தகங்களை என் கையில் கொடுத்து ‘நீ பெரிய ஓவியனாக வரவேண்டும் ஆகாஷ்’ என்பார். சென்னை, எழும்பூரில் இருந்த கவின்கலைக் கல்லூரியில் என்னை விருப்பத்துடன் சேர்த்தார். ஓவியம் எனக்குப் பிடித்தது என்றாலும் அப்பாவின் சினிமட்டோகிராபி மீதுதான் எனக்குக் கண்ணாக இருந்தது.

அதைப் புரிந்துகொண்டபின் என்னை அவரது படங்களில் பணிபுரிய அனுமதித்தார். நான்கு தலைமுறை இயக்குநர்களின் கற்பனைக்கு ஈடுகொடுத்து சுமார் 200 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் அவரது சாதனையை இனிவரும் தலைமுறையில் வேறு யாரும் நிகழ்த்த முடியுமா என்பது சந்தேகம்தான். ‘ஜீன்ஸ்’ உட்படப் பல படங்களில் அப்பாவிடம் உதவியாளனாகவும் அசோசியேட்டாகவும் இருந்து பணிபுரிந்த நாட்கள் எனக்குக் கிடைத்த வரம். அவரிடம் சுஹாசினி, பி.ஆர்.விஜயலட்சுமி, நிவாஸ் என்று பல பிரபலங்கள் உதவியாளர்களாகப் பணிபுரிந்திருக்கிறார்கள்.

‘கோவில்பட்டி வீரலட்சுமி’ படத்தின் மூலமாக என்னை அறிமுகப்படுத்தினார். பின்னர் ‘தொட்டால் பூ மலரும்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்தேன். ஏனோ என்னைத் தமிழ் சினிமா தள்ளி நின்று கவனித்துக்கொண்டிருக்கிறது. அப்பா கம்பீரமாக உலவிய தமிழ் சினிமாவில் பணிபுரிய வேண்டும் என்பதுதான் எனது ஆசை, கனவு, லட்சியம் எல்லாமே. அந்த நாட்களுக்காகக் காத்திருக்கிறேன்.

” எனும் ஆரென் அசோக்குமார், “அப்பா மீண்டும் பிறந்தால் எனக்கே மகனாகப் பிறக்க வேண்டும். அவரைப் போன்ற ஒரு அப்பாவை, குருவைப் பார்க்க முடியாது” என்று நெகிழ்ந்துபோகிறார். இந்தியாவின் முதல் 3டி படத்தை ஒளிப்பதிவு செய்தது, தேசிய விருதுக் குழுவில் நடுவராக இருந்தது, பலமுறை தேசிய விருதுகளைப் பெற்றது என அசோக்குமாரின் சாதனைகள் அடுத்த இரண்டு தலைமுறை ஒளிப்பதிவாளர்களுக்கு வெளிச்சம் பாய்ச்சிக்கொண்டிருக்கின்றன.

தொடர்புக்கு:
jesudoss.c@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x