Published : 01 Nov 2019 12:34 PM
Last Updated : 01 Nov 2019 12:34 PM
சு.சுபாஷ்
துரத்தும் துயர், கடும் வேதனைகள், தொடரும் ஏமாற்றங்கள் எனப் பலருக்கும் அன்றாட வாழ்க்கையின் யதார்த்தம் கசப்பால் நிறைந்தது. இவற்றுக்கு மத்தியில், ஒவ்வொரு ஜீவனுக்கும் அடுத்த நாளுக்கான நம்பிக் கையை விதைத்துச் செல்வது, இன்னொரு ஜீவன் மீதான நேசம் மட்டுமே. நவீன காலத்தில், அந்த நேசம் உருக்கொள்ளும் மாற்றங்கள் சுவாரசியமானவை. அப்படியான நேசங்களின் கதம்ப வாசனையை வலைத்தொடராகத் தந்திருக்கிறது அமேசான் பிரைம். ‘மாடர்ன் லவ்’ என்ற தலைப்பில் அக்டோபர் மத்தியில் இந்தத் தொடரின் முதல் சீஸன் வெளியாகி இருக்கிறது.
‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழின் வாராந்திர பத்தி பகுதியில், இதே தலைப்பில் கட்டுரையாக வெளியான வெவ்வேறு நபர்களின் அனுபவபூர்வமான உணர்வுகளின் தொகுப்பை வலைத்தொடராக்கி
இருக்கிறார்கள். தலா அரை மணியில் அடங்கும் தனிக் கதைகள் எட்டு அத்தியா யங்களில் விரிந்துள்ளன. ஒவ்வொன்றும் ஒரு ரகம். இளசுகள் மத்தியிலான நேசம் மட்டுமல்ல, வயதான ஜோடிகள், பாலினச் சிறுபான்மையினர் என அத்தியாயங்கள் அனைத்தும் தனித்துவமாய் அமைந்துள்ளன.
இந்தத் தனித்துவத்துக்கு முதல் அத்தியாயமே சான்று. அடுக்ககம் ஒன்றில் தனி ஒருத்தியாய்க் குடியிருக்கிறாள் ஓர் இளம்பெண். அவரைக் கட்டிடத்தின் வாயில் காவலராகப் பணிபுரியும் நபர் தந்தைக்கு நிகராக அரவணைக்கிறார். அவளின் ஆண் நண்பர்களை எடைபோடுவது முதல், பிரசவிக்கும் குழந்தையை ஆதுரமாய் கொஞ்சுவதுவரை ஒரு மூன்றாம் நபரிடம் அரிதாய் வெளிப்படும் தந்தைமையைக் கனிவோடு பதிவுசெய்திருக்கிறார்கள். அடுத்த அத்தியாயத்தில் தேவ் படேலின் காதல் தொலைந்து மீள்வதும், அவரைப் பேட்டியெடுக்கும் பெண்மணியின் மத்திம வயதுக் காதலும் அத்தனை அழகு.
‘பைபோலார்’ பாதிப்பில் தடுமாறும் இன்னொரு இளம் பெண், உணர்வுப் பெருக்கின் இரு வேறு துருவங்களில் விழுந்து எழுவதும், அதற்குத் தனது காதலைப் பறிகொடுத்துவிட்டு ஏங்குவதும் கவிதையாக வருகிறது. இன்னொரு கதையில் இரு குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது இல்லறப் பயணத்தின் பாதியில், பொலிவிழந்து போகும் நேசத்துக்கு புத்துயிர் தரப் போராடுகிறார்கள். மற்றுமோர் இளஞ்ஜோடியினர், வெற்று உடல் ஈர்ப்புக்கான சரசத்தில் சந்திப்பைத் தொடங்குகிறார்கள். அது மருத்துவமனையில் கொண்டுபோய்ச் சேர்க்க, அங்கே அவர்கள் உடலீர்ப்பைப் பின்தள்ளி நேசப்பயிர் வளர்க்கும் ஐந்தாவது அத்தியாயம் கவிதையாகக் கடக்கிறது.
முதிர்ந்த ஜோடிக்குள் முகிழும் நேசமாய் வரும் கடைசி அத்தியாயம் கண்களைப் பனிக்க வைக்கிறது. தள்ளாமையின் இறுதிப் படிகளில் காத்திருக்கும் இருவரின் சந்திப்பும், அது நேசமாக மாறுவதும் இதர இளசுகளின் கதையை மிஞ்சுகிறது. அதிலும் இணையை இழந்த சோகத்தில் பழைய நினைவுகளை மனதில் சுமந்து நிற்காது ஓடும் மூதாட்டியின் தவிப்பு, வசனங்களால் வாய்க்காத பாதிப்பை உணரச் செய்கிறது.
இன்னொரு உயிர் மீதான நேசம் மட்டுமல்ல, தத்தம் மீது தன்னம்பிக்கை கொள்ளும் சுயநேசத்துக்கும் இதில் இடம் கொடுத்திருக்கிறார்கள். நகைச்சுவை இழைகள் அத்தியாயம் தோறும் தொடர்வதும், அனைத்துமே நேர்மறையாக அமைந்திருப்பதும் பார்வையாளர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவன. தொட்டதற்கெல்லாம் உறவை உடைத்துப்போடும் இளம் தலை முறையினருக்கு இந்த வலைத்தொடரில் உறுத்தாத பாடங்கள் மறைந்திருக்கின்றன.
தேவ் படேல், கேத்ரீன் கீனர், ஆண்ட்ரூ ஸ்காட், அன்னா ஹாத்வே உள்ளிட்ட பலர் நடித்துள்ள வலைத்தொடரை ஜான் கார்னி எழுதி, இயக்கி உள்ளார். பத்திரிகையில் வெளியான பத்திக் கட்டுரைகளை அதன் கனத்துக்குச் சேதாரமின்றிக் காட்சிப்படுத்தியதும், இடையில் குறுக்கிடும் பாடல்களும், குளுமையான ஒளிப்பதிவும் ஈர்ப்பை கூட்டுகின்றன. கேத்ரீன் கீனர், அன்னா ஹாத்வே, கிறிஸ்டின் மிலியோடி போன்ற நடிகையரின் வசீகரமூட்டும் நடிப்பு வலைத் தொடரின் பலமாக இருக்கிறது. நிறைவு அத்தியாயத்தில், சகல கதைகளின் மாந்தர் களையும் சினிமா பாணியில் இசையுடன் ஊடாட விட்டிருப்பதும் ரசிக்கவே வைக்கிறது.
வளர்ந்த பார்வையாளரின் வயது எதுவானாலும், அவரது இணையுடனான உறவு எந்த நிலையில் இருந்தாலும், இந்த வலைத்தொடர் அனுபவம் அவர்களின் இல்லற நேசத்துக்கு இன்னொரு சுற்று நம்பிக்கையை கூட்டும். அவ்வகையில் அவரவர் வாழ்க்கை இணையுடன் இணைந்து பார்ப்பதற்கான தொடர் ‘மாடர்ன் லவ்’.
முன்னோட்டம் காண :
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT